ஜீவாவின் சாதனை – தமிழ் வரலாற்றில் ஒரு பொன்னேடு

– எஸ். ராமகிருஷ்ணன்*

தமக்கென வாழா பிறர்க்கு உரியவராகச் சிறந்து, தமிழகத்தின் புத்தெழுச்சிக்காகப் பாடுபட்ட சான்றோர் வரிசையில் பெருமைக்குரிய நிலையை மேவியவர் ஜீவா.

அன்னிய ஆதிக்கமென்ற அந்தகாரத்தில் ஆழ்ந்து, ஆற்றலிழந்து, அவலமுற்ற பாரதத்தின் மறுமலர்ச்சிக்கு விடிவெள்ளியாக விளங்கினார் விவேகானந்தர். அந்த ஞானியிடம் ஒளியும் ஊற்றமும் பெற்று விடுதலை இயக்கத்துக்கு வீரமும் விவேகமும் ஊட்டினார் திலகர். திலகர் சகாப்தத்தின் முன்னறிவிப்பாக ஓங்கி, பொதுவுடைமைச் சகாப்தத்துக்கு அடிகோலிச் சிறந்தார் பாரதி. பாரதி மண்டலப் பெரியோர்களில், தனக்குவமையில்லாதவராக வளர்ந்தார் ஜீவா.

ஏகாதிபத்திய – எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழகம் கண்ட தியாகிகள் பலர். அந்தத் தூயவர்களின் அணியில் இடம் பெறுவது ஜீவாவின் தனிச்சிறப்பாகாது. தமிழகத்தின் தொழிலாளி, விவசாய மக்களைத் தேசிய இயக்கத்தில் திரட்டியதே ஜீவாவின் ஒப்புவமை இல்லாப் பணி என்பேன். நடுத்தரவர்க்க மக்களைத் திரட்டுவதில் வேறு தலைவர்கள் பெரும்பங்கு பற்றினார்களென்பது மெய். ஆனால் பாடுபடும் ஏழை மக்களைத் தேசிய உணர்வு கொண்டு எழச்செய்தவதில் ஜீவா ஆற்றிய பணிக்கு ஈடாக வேறு எந்தத் தமிழகத் தலைவரது தொண்டினையும் குறிப்பிட முடியாது. ஏகாதிபத்திய தாசர்களாக விளங்கிய புல்லுருவிக் கூட்டத்தின் காட்டு ராஜ தர்பாருக்கு அறைகூவி, அந்தச் சமீன்தார்கள், நிலப்பிரபுக்களது பட்டி தொட்டிகளிலெல்லாம் தேசிய முழக்கம் செய்து வாகை மாலை சூடிய அஞ்சாநெஞ்சன் ஜீவா. 1936-37ல் நீதிக்கட்சிக்கு எதிராகக் காங்கிரஸ் சார்பில் நடந்த தேர்தல் இயக்கத்தின் வெற்றியை உறுதிப்படுத்தியது அவரது பணியே எனலாம்.
“சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பாரதி நெறியில் உரம் பெற்றவர் ஜீவா. எனவே காந்திஜியின் வழியில் நிகழ்ந்த தீண்டாமை ஒழிப்பு இயக்கம் அவரை ஈர்த்தது. சாதி ஒழிப்பு ஆர்வமே அவரைத தன்மான இயக்கத்திலும் உந்தித்தள்ளியது. ஜீவா தன்மான இயக்கத்தில் ஈடுபட்டதும் தமிழகத்துக்கு நலமாயிற்று எனலாம். சாதிக்கொடுமைக்கு எதிராகக் கனன்று எழுந்த பல்லாயிரம் இளைஞர்கள் அவ்வியக்கத்தில் சேர்ந்தனர். அவர்களது சாதி எதிர்ப்பு உணர்வே, சுரண்டல் எதிர்ப்பு உணர்ச்சியாகவும் வளர்ந்தது. அவர்களது முற்போக்கான ஆர்வத்துக்கு மெய்யான வெளியீடாக விளங்கினார் ஜீவா. ஆனால் தன்மான மெய்யான வெளியீடாக விளங்கினார் ஜீவா. ஆனால் தன்மான இயக்கத்தின் தலைமை, சமுதாயப் புரட்சியைப் பற்றிப் பரப்பிக்கொண்டே, நீதிக்கட்சியின் பிற்போக்குக் கூட்டத்துக்குப்பணியாளாகச் செயல்பட்டது. தேச விடுதலைக்காகப் பாடுபட்ட காங்கிரஸ் மகாசபையைப் பார்ப்பனீய சூழ்ச்சியின் விளைவாகச் சித்தரித்துக் தூற்றியது. சமுதாய விடுதலை வேட்கைகொண்ட வாலிபர்களைக் காங்கிரஸ் எதிர்ப்புச் சூறாவளிப்படையாக, பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பல்லாண்டு பாடி ஏவல் கூவல் தொண்டு முற்பட்டது. தன்மான இயக்க முகாமில் நின்று கொண்டே இந்த வஞ்சனையை அம்பலப்படுத்தினார் ஜீவா. “சாதி ஒழிப்பின் பெயரால் பார்ப்பன – எதிர்ப்பின்; பார்ப்பன எதிர்ப்பின் பெயரால் காங்கிரஸ் – எதிர்ப்பு; காங்கிரஸ் – எதிர்ப்பின் மூலம் ஏகாதிபத்திய ஆட்சிக்கு ஆதரவு” – இதுவே தன்மான இயக்கத்தலைமையின் துரோகப்பாதை என்பதைக் கறாராகவும் திட்டவட்டமாகவும் தோலுரித்துக் காட்டிய பெருமை ஜீவாவைச் சார்ந்தது. இவ்வாறு நெஞ்சுரம் படைத்த நாணயமான இளைஞர்களைத் திரட்டி ஈ.வெ.ரா. தலைமைக்கு எதிராகக் கலகக் கொடி உயர்த்தினார். அந்த இளைஞர்களே பின்னர் சுயமரியாதைச் சோஷலிஸ்ட் கட்சி அமைத்தனர். அதன்பின் காங்கிரஸில் சேர்ந்து, தொழிற்சங்க இயக்கத்தில் ஈடுபட்டனர். தமிழ் நாட்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டிவளர்ப்பதில் அவர்கள் வகித்த பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

சுயமரியாதை இயக்கம் நீதிக்கட்சிகளின் ‘வெகுஜன முன்னணி’யாகச் செயல்பட்டதைக் கண்டு ஜீவாவின் உள்ளம் குமுறியதென்றால், சமுதாயப் பிச்சனைகளில் தடுமாறும் போக்குகளுக்குக் காங்கிரஸ் இடமளித்ததைக் கண்டு அவரது நெஞ்சம் கொந்தளித்தது. இந்த நிலையில்தான் அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்திடம் முழுமையான பார்வையினைப் பெற்றார். ஏகாதிபத்திய – எதிர்ப்புக் கூட்டணியாகக் காங்கிரஸைக் கட்ட வேண்டுமென்றும் தொழிற்சங்க, விவசாய சங்கங்களைச் சுயேச்சையான ஸ்தாபனங்களாக உருவாக்க வேண்டுமென்றும்,சோஷலிஸ்ட் கருத்தைப் பிரசாரம் செய்ய வேண்டுமென்றும், இவ்வாறாகவே காங்கிரஸை இடதுசாரிப் பாதையில் தீவிரமாக நடைபோடச் செய்ய முடியுமென்றும் கம்யூனிஸ்ட் இயக்கம் கற்பித்தது. அனைத்துக் கொடமைகளுக்கும் அடிப்படையானது பொருளாதாரச் சுரண்டலாகும். அதனை ஒழிப்பதற்கான போராட்டம்.மனிதனை மனிதன் சுரண்டும் முறைக்கு முடிவுகட்டும் சோஷலிஸத்தையே லட்சியமாக் கொள்ளமுடியும். நவீன விஞ்ஞானத்தால் உருவாகும் தொழில் வளர்ச்சியானது சோஷலிஸத்தின் வெற்றியை உறுதிப்படுத்தும் வரலாற்று நிகழ்ச்சியாகும். பாரதம் போன்ற பிற்பட்ட நாடுகள், விடுதலைப் போரில் வெற்றி காணும் போதே, சோஷலிஸத்தை குறிக்கோளாக் கொண்ட தொழில்வளர்ச்சிப் பாதையை வகுத்துக் கொள்ள முடியும். பாடுபடும் மக்கள் அரசியல் போராட்டத்தில் அறிவுத் தெளிவோடு ஈடுபட்டால், அரசியல் பாரதம் முதலாளிதுதுவப் பாதையைத் தவிர்க்க முடியும். தவிர, அந்த வெகு ஜன இயக்கமே சாதிக்கொடுமை முதலிய தீமைகளுக்கும் முடிவுகாண முடியும். சுருங்கச் சொன்னால், அரசியல், பொருளாதாரம், சமுதாயம் என்று தனித்தனி கோணங்களில் பிரச்சனைகள் நோக்கும் துண்டுப்பார்வைக்குப் பதிலாக, அனைத்துப் பிரச்சனைகளையும் ஒன்றோடொன்று பொருத்திப் பார்க்கும் முழுப்பார்வையை அளித்தது மார்க்ஸியம். மார்க்ஸியத்தைத் தழுவியதால், ஜீவாவின் பணி பன்மடங்கு சிறந்தது.

சோஷலிஸக் கருத்து இந்திய மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளச் செய்வதில் தலைமையான பாத்திரம் வகித்தவர் நேருவே ஆகும். அதே போல், தமிழ் நாட்டில், சோஷலிஸத்துக்கு வெகு ஜன ஆதரவைத் திரட்டுவதில் தலைசிறந்த பிரசாரகராக விளங்கியவர் ஜீவாவே ஆகும். ஜீவா சோஷலிச பிரசாரகராக இருந்ததோடு சோஷலிஸ்ட் இயக்கத்தை உருவாக்கவும் பாடுபட்டார். தமிழகத்தின் தொழிற்சங்க இயக்கத்தை உருவாக்கிய சிற்பிகளில் முதன்மையானவர் ஜீவா.

மார்க்ஸியம் கற்பித்த ஒருமை நோக்கைப் பாரதியிடம் கண்டார் ஜீவா. பாரதி மார்க்ஸிய வாதி அல்ல. அத்வைத வேதாந்தி. விவேகானந்தர் வழியில் நின்று வேதாந்த வெளிச்சம் பெற்ற பாரதி யுகப்புரட்சி வீர்ராகச்சிறந்ததை உணர்ந்தார் ஜீவா. எனவே, பகுத்தறிவின் பெயரால் பரம்பரையிலிருந்து முறித்துக் கொள்ளும் புல்லிய இயல்பைக் கொண்டு நாணியது அவரது நெஞ்சம். ஆகி வந்த சமுதாயம், தொன்மையான தேசம். தொடர்பு முறியாத மரபு, காலத்துக்கேற்ற மாற்றம் கண்ட பண்பாடு, ஆகப்பெரிய நினைவாற்றல் முதலிய இந்திய நாகரிக இயல்புகளைத் தேர்ந்து தெளிந்தார் ஜீவா. வாழ்வும் சமயமும் இரண்டறக்கலந்த மாநாட்டில், சமய நூல்களைக் கண்மூடித்தனமாக வெறுக்கும் போக்கு அறியாமையின் பாற்பட்டதாகுமென்பதை உணர்ந்த அவர் தேவார திருவாசகங்களில் திளைத்தார்; ஆண்டாள் பாசுரத்தில் ஈடுபட்டார்; வள்ளலார் வாக்கில் இதயத்தைப் பறி கொடுத்தார். சமயக்குரவர்களின் ஆத்ம தூய்மையும் மனிதப்பண்பும் சான்றாண்மையும் அவரது நாவில் புது விளக்கம் பெற்றன. சங்ககாலச் சான்றோர்களும் வள்ளுவரும் இளங்கோ அடிகளும் அவரை ஈர்த்தனர். தமிழை வாழ்வித்த உலக மகா கவியான கம்பனது இராமாயணத்தின் சிறப்புக்களில் மெய்மறந்து ஈடுபட்டார். மாணாகர் ஜீவா முதலில் எழுதிய கவிதையில் (தாமரை பக்கம் 100) விவேகானந்தரே முதலிடம் பெற்றாரென்பதும், அவர் கடைசியில் தாமரையில் எழுதிய கட்டுரை விவேகானந்தரைப பற்றியதே என்பதும் பொருட்செறிவுள்ள உண்மைகளாகும்.

சாதனைகள் நிறைந்த வாழ்வுக்கு முத்தாய்ப்பு வைப்பதாக அமைந்தது ஜீவாவின் சீனப்படையெடுப்பு எதிர்ப்பு. சோஷலிஸ்ட் அமைப்பைச் சமைத்த தேசம். அந்த அடிப்படைக்கே குழு பறிகும் வகையில், அண்டை நாட்டை ஆக்கிரமிக்கும் பாதையில் செல்வதைக் கண்டு பதறியத ஜீவா நெஞ்சம். பாண்டவர்களைத் தோற்றுவித்த குரு குலத்திலேயே துரியோதனாதியரும் பிறந்ததைப் போல, அவனி வாழ்வோர் அனைவரையும் தோழராக வகுக்கும் பொதுவுடமையர் அனைவரையும் தோழராக வகுக்கும் பொதுவுடைமையர் குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக் காம்பாகச் சீனத் தலைமை அச்சுறுத்துவதை எதிர்க்கத் துணிந்தார் ஜீஆ. தொழிலாளி வர்க்க சர்வதேசியத்தையும் இந்திய தேசபக்தியையும் ஒருங்கே நிறுத்துவதற்குச்சீனத் தலைமையின் தேசியவெறியை எதிர்த்து நிற்பது அவசியம் என்பதைப் புரிந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சித்தலைமை தன் தீர்மானத்தை உருவாக்குவதில் ஜீவா ஆற்றிய பங்கு மகத்தானது. அந்தத் தீர்மானத்தை நடைமுறையில் நிறைவேற்றுவதில் அவர் புலப்படுத்திய கொள்கைப் பிடிப்பைப் போற்றாதவரும் இல்லை.

கொள்கைத் தெளிவால், இடைவிடா உழைப்பால், அலாதியான நாவன்மையால், எழுத்துத் திறனால், வீர வைராக்கியப் பண்புகளால், அனைவரையும் தழுவும் இனிய சுபாவத்தால், தமிழ்நாட்டின் புத்தெழுச்சியில் பீமனாகப் பணியாற்றிய ஜீவா மறைந்துவிட்டார். ஆயினும் அவரது லட்சியங்கள் வெற்றிமேல் வெற்றி பெற்று வருகின்றன.

தொகுப்புரை

இந்திய விடுதலைக்காகப் பாடுபட்ட ஜீவா, சுதந்திர பாரதத்தின் உயிராற்றலைக் கண்ட பின்பே பூதவுடலை நீத்தார்.

பிரிவினைக் கிளர்ச்சிகளைக் கண்டு பதறிய ஜீவா, சீன ஆக்கிரமிப்புக்கு எதிரான எழுச்சியில் தேசி ஒருமைப்பாடு கண்ட புது விளக்கத்தை அனுபவித்த பின்பே நம்மைப் பிரிந்தார்.

சோஷலிஸத்துக்காக அரும்பாடுபட்ட ஜஷவா, சோஷலிஸம் தேசத்தின் குறிக்கோளான பின்பே காலமானார்.

காங்கிரஸ்வாதியாக தொண்டாற்றிக் கம்யூனிஸ்ட் தலைவராக வளர்ந்த ஜீவா காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கிடையே நிமிர்ந்து நின்ற செயற்கைச் சுவர் நொறுங்கி விழுந்ததைக் கண்டு இறும்பூதெய்திய பின்பே இறந்தார். கங்கையும் யமுனையும் கலப்பதுபோல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட இயக்கங்கள் சங்கமமாகிச் சோசலிஸத் திசைவழியில் நடைபோடும் நாள் நெருங்கி வருவதைக் கண்டு களித்த பின்பே அவர் மண்ணுலக வாழ்வை நீத்தார்.

சோவியத் யூனியனுடன் பாரதமும் இணை பிரியாத துணைவர்களாகச் சேர்ந்து வாழ வேண்டுமென்று விரும்பிய ஜீவா, இந்திய – சோவியத் நட்பின் திட்பத்தைக் கண்டபின்பே இயற்கை எய்தினார். சீன ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட சோதனையிலும், அந்த நட்பு புதுவலுப் பெற்று விளங்குவதைக் கண்டு மனமகிழ்ந்தவர் ஜீவா.

அணுகுண்டுப் போரால் அவனி அழிவதைத் தடுத்துச் சாந்தி மயமான சமதர்ம உலகத்தைச் சிருஷ்டிக்க விரும்பிய ஜீவா, உலக சமாதான இயக்கத்தின் பேராற்றலை மாஸ்கோ மாநாட்டில் கண்ட பின்பே மரித்தார். நேருவும் குருஷ்சேவும் உலக சமாதான ரட்சகர்களாக விளங்கும் சூழலே, பிரகாசமான எதிர்காலத்துக்கு உறுதிப்பாடாக உள்ளது என்பதை உணர்ந்து உவகை கொண்டவர் ஜீவா.

பண்டித மொழி, பாமர மொழி என்ற வேறுபாட்டை நீக்கித் தமிழின் வளமெல்லாம் அனைத்து மக்களும் துய்க்கவும், காலத்துக்கேற்ற ஆற்றலுடன் தமிழ் ஏற்றம் பெறவும், அவர் ஆற்றிய பணி வெற்றிமுகம் காணும் சூழலிலேயே அவர் நம்மைப் பிரிந்தார்.

‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்ற சான்றோர் நெறியில் ஊன்றி நின்று உலகத்தோடு உறவாடும்போதே, நாட்டையும் சுதந்திரத்தையும் பங்கமில்லாமல் பாதுகாக்கவும், சோஷலிச பாரதத்தின் (பெருமையாக) விளங்கும் சோசலிஸ்ட் தமிழகத்தைப் படைக்கவும், தேசபக்தர்களை ஒரு சேரத் திரட்டும் ஈர்ப்பு மையமாக ஜீவா நினைவு விளங்குமென்பது ஒருதலை.

-‘தாமரை’ ஜீவா சிறப்பு மலர், 1963

பகுத்தறிவுக்கு ஒரு பாதிரி

– பி.ஸ்ரீ

‘தனித் தமிழ் தந்தையாகிய’ மறைமலையடிகளின் வாழ்க்கைத் துணுக்குகள் தமிழ்நாடெங்கும் பரவியிருந்த காலம் அது. அவரைக் கர்வம் பிடித்தவர் என்று சொல்லத் துணிந்தார் ஒருவர். அவர் காதிலே விழும்படி. மறைமலை அடிகளுக்குக் கோபம் வரவில்லை. “அந்தோ! இவருக்கு என்னைத் திட்டுவதற்குக்கூட ஒரு தனித்தமிழ்ச் சொல் கிடைக்கவில்லையா?” என்றுதான் வருந்தினார். “கர்வத்திற்குப் பதில் ஆணவம் என்ற சொல்லை உபயோகித்து வைத்திருக்கலாமே!” என்று கூறினார்.’முத்தமிழால் வைதாரையும் வாழ வைப்பாய்’ என்று முருகக் கடவுளைப் போற்றுவதுண்டு. தூய தனித்தமிழால் வைதாரையும் வாழ்த்தலாம் எனக் கருதியது மறைமலையடிகளின் உள்ளம் இத்தகைய துணுக்குகளைக் கேட்டுப் பரவசமாயின சில தமிழுள்ளங்கள். ஒரு காலத்தில் நானும் (சொற்ப காலத்திற்குத்தான்) அக் குழுவினருள் இடம் பெற்றிருக்கிறேன்.

மேலே சொன்ன துணுக்கு, தனி உடைமையின் தனிப் பெரும் பகைவரான ஜீவாவின் காதிலும் விழுந்தது. “இத்தகைய தனித்தமிழரைப் பார்க்க வேண்டும்!” என்ற ஆசை எழுந்தது. இவர் தமது பெயரையும் தனித் தமிழில் ‘உயிர் இன்பன்’ என்று மாற்றி வைத்துக்கொண்டார்.

அடிகளின் தரிசனம்

மறைமலையடிகள் பல்லவரத்தில் வசித்து வந்தார். தனித் தமிழார்வம் கொண்டிருந்த ஜீவா, தமது லட்சியத் தலைவரைச் சந்திப்பதற்கு, 1927-ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் சுயமரியாதை மகாநாட்டை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். அம் மகாநாட்டில் கலந்து கொண்ட பின் சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கூட்டத்திற்கும போயிருந்தார். அந்நாளில்,

‘பார்ப்பானை அய்யரென்ற
கலாமும் போச்சே – வெள்ளைப்
பரங்கியரைத் துறைஎன்ற
காலமும் போச்சே!

என்ற பாரதி கொள்கையை ஜீவா முழுக்க முழுக்க ஒப்புக்கொண்டிருந்தார்.

மறைமலை அடிகளோ பார்ப்பானை எறுத்தார் – பரங்கியன் ஆட்சியை மனமுவந்து ஏற்றுக் கொண்டிருந்தார். அப்படியிருந்தும் ஜீவாவின் அன்றைய தனித்தமிழ் ஓசை மறைமலை அடிகளை இயன்ற வரை சந்திக்குமாறு தூண்டியது. அவரையும் ஒரு தலைவராக – தனித் தமிழ் தலைவராக மதித்திருந்தது ஜீவாவின் உள்ளம்.

மறைமலையடிகளின் வீட்டு வாசற்படியில் அடியெடுத்து வைத்தார் ஜீவா. இனி இக்கதையை அன்பர் கே. பாலதண்டாயுதம் சொல்லட்டும். ஆனால் அது தனித் தமிழாக இருக்கவில்லை. “யாரது? போஸ்ட்மேனா?” என்றது. தனித்தமித் தந்தையின் கீச்சுக் குரல். ஜீவாவுக்குத் தூக்கிவாரிப்போட்டது. சுவாமி வேதாசலம் (மறைமலைஅடிகள்) சமஸ்கிருத எதிர்ப்பாளரே தவிர ஆங்கில எதிர்ப்பாளர் அல்ல. அதற்குப் பிறகும் ஆவலுடன் மறைமலை அடிகளைச் சந்தித்து உரையாடியபோது ஜீவாவுக்கு மற்றோர் அதிர்ச்சியும் காத்திருந்தது?

தனித்தமிழ் குருநாதர், சீடராக வந்த ஜீவாவை “என்ன காரணம் பற்றி வந்தீர்கள்?” என்று வினவினார். உடனே ஜீவா திடுக்கிட்ட, “காரணம் என்பது தமிழ்ச் சொல்லோ?” என்று எதிர்க்கேள்வி போட்டார். அதற்கு அடிகள், “எம்மொழிச் சொல் என்பது இன்னும் முடிவு கட்டப்படவில்லை” என்று பதில் சொன்னார்.

உடனே ஜீவா அது பற்றி மேலும் விவரிக்கத் தொடங்கினார். மறைமலை அடிகளோ அப்பேச்சை வேறு திசையில் திருப்பி, நூல் நூற்பதையும், கதர் அணிவதையும் கடுமையாகத் தாக்கிப் பேசத் தொடங்கிவிட்டார். தனித்தமிழ் தலைவராலேயே தனித்தமிழைச் சரியாகப் பேச முடியவில்லை என்பதை ஜீவா கண்டு கொண்டார் என்ற பொருள்பட, நண்பர் பாலதண்டாயுதம் ‘ஜீவா வாழ்க்கை வரலாறு’ என்ற தமது அருமையான புத்தகத்தில் கூறியுள்ளார்.

ஜீவாவும் – வ.ரா.வும்

பிரபல எழுத்தாளரான வ.ரா.வும் ஜீவாவின் குருநாதராவார். ஜீவாவின் தனித்தமிழ் மோகத்தைப் போக்கியவர் வ.ரா. என்பது பலரும் அறிந்ததே. ஒரு சமயம் ஜீவாவின் தனித்தமிழ் சொற்பொழிவு ஒன்றை வ.ரா. கேட்க நேர்ந்தது. தனித்தமிழில் பேச முடியாது என்று அதுவரை நம்பியிருந்த வ.ரா. பிரமித்துப் போனார். பிறமொழிக் கலப்பு ஒரு சிறிதும் இன்றி ஜீவாவால் பேச முடிந்ததே என்ற ஆச்சர்யப் பரவசத்தில் மூழ்கிப் போனார் வ.ரா. ஆனால் உடனே சமாளித்துக் கொண்டார்.

“இவை தேவையா? இவ்வளவு சிரம்ப்பட்டு தனித்தமிழில் சிலம்பம் வீச வேண்டுமா?” என்ற கேள்வியை வ.ரா. ஜீவாவை நோக்கி கேட்டார். “தமிழ் நாட்டின் நன்மையை உத்தேசித்து, தமிழ் மொழியின் வளர்ச்சியை உத்தேசித்து, தயவு செய்து இத்தனித்தமிழை விட்டு விடுங்கள்” என்று வ.ரா. ஜீவாவிடம் வேண்டிக் கொண்டதாகக் கூறுகிறார். திரு கே. பாலதண்டாயுதம். “அது ஜனங்களுடைய மொழி அல்ல” என்றும் வ.ரா. அழுத்திக் கூறினாராம்.

இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்பும் ஜீவா தமது தனித் தமிழ்க் கொள்கையை உடனே மாற்றிக்கொள்ள வில்லையாம். இதற்குப்பின் நிகழ்ந்தது தான் மறைமலை அடிகளின் சந்திப்பு என்றும் திரு. கே. பாலதண்டாயுதம் தெரிவிக்கிறார்.

நாளடைவில் ஜீவாவின் தமிழ் உள்ளம் உண்மை நிலையை உணர்ந்து கொண்டது. பிறகு தம் கருத்துகளை வன்மையாக எடுத்துரைக்க பிறமொழிக் கலப்பு இன்றியமையாத்து என்ற முடிவுக்கு வந்துவிட்டார் ஜீவா. ஜீவாவின் பல சொற்பொழிவுகளையும் நான் கேட்டு அனுபவித்திருக்கிறேன் – ஆனால் அவரது தனித்தமிழ் சொற்பொழிவு ஒன்றையும் நான் கேட்டதில்லை. சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் ஜீவா என்பதை நான் நன்றாக அறிந்திருக்கிறேன்.

பேச்சாளர் ஜீவா

ஜீவாவின் பேச்சு ஜீவனுள்ள பேச்சு, “மாற்றார்க்கு வாள் வீச்சு” என்கிறார் அருகில் உள்ள தோழர் (காஞ்சி அமிழ்தனார்). தனித்தமிழ் தென்றலென வீசும். ஆனால் வாளாகுமா? சில சமயங்களில் பேச்சிலே பீரங்கிகள் வெடித்து முழங்குவதையும் கேட்கலாம்.

சாதிக் கொடுமையைச் சாடும் போதும், ஏகாதிபத்தியத்தின் முதலைப் பிடிப்பை சின்னாபின்னமாக்கிப் பேசும் போதும், “இதில் எது தமிழ் எது வட சொல்?” என்று நினைக்கத்தான் நேரம் எங்கே? எல்லாவற்றுக்கும் மேலாக தொழிலாளி – முதலாளி வர்க்கப் போராட்டத்தை அகக் கண்ணுக்கு இலக்காக்கும்போது இவரது பகுத்தறிவு பளிச்பளிச்சென்று மின்வெட்டும்; சொற்கள் ஜீவ வேகத்துடன் (ஜீவாவிற்கே உரிய தனி வேகத்துடன்) பூசலிட்டு ஓசையிடும்!

ஜீவாவுக்கு ஒருவித கவித்துவ சக்தியும் உண்டு. ஆனால் அது ஒரு முரட்டுக் கவிதை! அனலைக் கக்கும் கவிதை- அமிழ்தம் பொழியாது அத்தகைய கற்பனைச்சிறப்புடன் போராடும் இவரத பேச்சுத் தமிழுக்குச் சீராடத் தெரியாது. இத்தகைய நடையில் தொழிலாளியின் உழைப்பு வருணிக்கப் படுவதையும், இந்த உழைப்பால் நாகரிகம் வளர்ச்சி பெற்றிருப்பதையும், அத்தகைய பாட்டாளி மக்கள் உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி, படுக்க இடமின்றி தவிப்பதையும் கண்டு, கேட்டு அப்படியே உருகிப் போயிருக்கிறேன் பல சமயங்களில்.

ஜீவாவின் பேச்சிலே சப்த ஜாலங்கள் ஓலமிடுவதேயில்லை. இடியும் மின்னலுமாகி வெள்ளமிட்டுக் கருத்தாழத்தோடும் உணர்ச்சிப் பிரளயமாகப் பொங்கி வரும் சொற்களும் சொற்றொடர்களுமாக வெளியிடப்பட்ட வண்ணமாக இருக்கும்.

ஜீவாவின் பேச்சை காங்கிரஸ் மேடைகளிலும் கேட்டிருக்கிறேன்; சுயமரியாதை மேடைகளிலும் கேட்டிருக்கிறேன். இவரது தனி ராச்சியமான பொது உடைமை அரங்குகளிலும் கேட்டிருக்கிறேன். பெரும்பாலும், தரம் குன்றாத பேச்சுகள் அவை. இடிக்குரலில் போலி வாதங்களை அநாவசியமாக சிதறடிப்பார். கேட்போரை ஒரே உலுக்காக உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உலுக்கிக் குலுக்கி விடுவார். ஜீவா தமிழ் சூறாவளிக் காற்று. கொதித்து கொந்தளித்து எரிமலை கக்கும் நெருப்புக்குழம்பு!

வாழ்க்கையும் தொண்டுகளும்

தமிழகத்தின் தென்கோடியில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குக்கிராமத்திலே பிறந்தவர் ‘சொரிமுத்து’ என்ற வினோதப் பெயருடன் வளர்ந்தவர் – ஜீவானந்தம் என்ற பெயரால் புகழ் பரப்பியவர். தொழிலாளர் இயக்கத்திற்கும பொதுவுடைமைத் தத்துவத்திற்கும் ஜீவ நாடியாக துடித்து, சமதர்ம்ப் பெருந்தொண்டுகள் புரிந்து, தம் கொள்கைகளுக்காகப் போராடி வாழ்கைக் களத்தில் வீர மரணம் எய்தினார். இது ஒரே வாக்கியத்தில் ஜீவாவின் கதை.

இவரது அரசியல் பிரவேசமும், தனித்தமிழ் முழக்கமும் சுயமரியாதைக் கர்ச்சனையும், தேசீய ஆவேசமும் எல்லாம் இவரைக் கம்யூனிசப் பாதையில் திரும்பிச் சமதர்ம சமுதாயக் குறிக்கோளை நோக்கிச் செலுத்தி விட்டன. இதற்குப் பரிசு தடியடியும் மாறி மாறி சிறைவாசமும், நாடு கடத்தலும் ஆகிய ஒரே பயங்கர வாழ்வு! பயங்கரம் பார்ப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும்தான்; இவருக்கல்ல.
இவரது மற நெஞ்சு சிறைச்சாலையையும் தவச்சாலையாக்கிக் கொண்டது. சித்திரவதைகளையும் இலக்கியச் சித்திரங்களாகக் காட்டியது. இத்தகைய வாழ்க்கையில் தோல்விக்கு இடமெங்கே?

-‘நான் அறிந்த தமிழ்மணிகள்'(கட்டுரை’, ‘சுதேசமித்திரன்’,
ஆகஸ்டு 9, 1969.

கேண்மையின் கோ

– கங்கை வளவன்

பதினேழு ஆண்டுகட்கு முன்பு என் உள்ளத்தைக் கவர்ந்த ஓர் பாட்டு. அப்பொழுது கோயமுத்தூர் ஸ்டேன்ஸ் மில் தொழிலாளர் வேலை நிறுத்தமும், தொடர்ந்து துப்பாக்கி பிரயோகமும் நடைபெற்றன. தடை உத்தரவு நீங்கிய பின்னர் நடைபெற்ற முதல் பொதுக்கூட்டம் சிதம்பரம் பூங்காவில் கூடியது. தோழர் ராமதாஜ் “காலுக்குச் செருப்பும் இல்லை’ என்ற பாடலைக் கணீரென்று குரல் எடுத்துப் பாடிக் கொண்டிருந்தார். அது நாள் வரையிலும் பல தேசிய மேடைகளிலும் கேட்டு வந்த பாடல்களினின்றும் இந்தப் பாட்டுச் சற்று விலகி தொழிலாளி வர்க்கத்தின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்திருந்ததை உணர்ந்தேன். கூட்டம் முடிந்ததும் தோழர் ராமதாஸா அணுகி அவர் பாடிய பாட்டின் ஆசிரியரைப் பற்றித் தெரிவிக்குமாறு வேண்டினேன். முன்பொருசமயம் இதே ஸ்டேன்ஸ் மில் தொழிலாளரின் வேலை நிறுத்தத்தின் பொழுது, 1935-ல் ஜீவானந்தம் அவர்கள் இயற்றித் தந்ததாகச் சொன்னார். காலத்தின் வளர்ச்சியில் இந்தப் பாடலின் ஆசிரியரே பாரதியைய விளக்கிக் காட்டும் திசைவழி காட்டியாக வந்து சேர்ந்தார். தமிழ் இலக்கியத்துறையில் வடக்கிலே, குறிப்பாக வங்கத்தின் தலைநகரிலே அவரது அன்பின் பிணைப்புடன்தான் என் கடையையும் மேற்கொண்டேன்.

“தமிழ் மக்களிடையில், விருப்பு வெறுப்பற்ற இலக்கியத் திறனாய்வுக் கண்ணோட்டத்தை வளர்க்கும் பணியில் முன்னின்று வருபவர் ஜீவா” என்பதாகப் பல அறிஞர்களும் அடிக்கடி கூறிவந்தார்கள். எனவே கங்கைக்கரையில் காவிரித் தமிழைப் புதிய கண்ணோட்டத்தில், “பாரதி” என்ற காண்ணாடியை அணிந்து கொண்டு பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிடுவதற்காகவே ஜீவா அவர்களை இங்கு அழைத்து வந்தேன். ஜீவா கல்கத்தாவிற்கு வந்து சேர்ந்தார் என்றால் அது எளிதாகிவிடும். அப்பொழுது ஜீவா தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து தந்திமேல் தந்தியாகப் போய்க்கொண்டிருந்தது. இறுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மீரத் வந்து சேர்ந்தார். எல்லாத் தந்திகளின் செய்திகளும் மீரத் போய்ச் சேர்ந்தன. தோழர்கள் டாக்டர் ரனேன் சென். பாவனி சென், சோமநாத் லாகிரி முதலானவர்கள் வழியாக ஜீவா அவர்களைக் கையுடன் அழைத்து வரவும் ஏற்பாடுகள் நடைபெற்றன. ஏனென்றால் அச்சமயத்தில் தமிழகத்தில் விலைவாசிப் போராட்டத்தில் தலைமை தாங்க உடனடியாத் தமிழகம் செல்லத் திட்டமிட்டிருந்தார். நட்பின் பிணைப்பு இறுதியில் வெற்றியைத் தந்தது.

தோழர் ஜீவா அவர்கள் வந்தநாள் முதலாக அவரச் சூழ்ந்திருந்த அன்பர்களின் கூட்டத்தைப் பிரித்துச் சொல்வது என்பது அவ்வளவு எளிதன்று. இங்கெல்லாம் கூட்டம் முடிந்தது என்றால் உடனே வந்தவர்கள் கலைந்து சென்றுவிடுவார்கள். ஆனால் இந்த வழக்கத்தை மாற்றிவிட பெருமை ஜீவாவிற்கே சாரும்.

நட்புமுறை முறியாமல் எத்தனையோ பல நல்ல செய்திகளையும், கருத்துகளையும் இலைமறை காய்போல் எடுத்துச் சொல்லித் திருத்தம் காண்பதில் ஈடு இணையற்றவர் ஜீவா. எடுத்துக்காட்டுகளாக இரண்டொன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

தமிழ் மாணவர் மன்றத்தில் ஆறாவது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. “பாரதியின் கடவுட் கொள்கை” என்ற தலைப்பில் ஜீவா அவர்கள் முழுக்க முழுக்க அறிவு வாதம் செய்து பேசினார்கள். கூட்டம் என்றால் இங்கு இத்தகைய கூட்டத்தை வேறு எவருக்கும் பார்த்ததாகச் சொல்ல முடியாது. தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் தாய்மார்கள், பெரியோர் இவர்களேயன்றி, வைதீகத் துறையைச் சேர்ந்தவர்கள் உட்பட பலதுறை அன்பர்களும் வந்து கூடி இருந்தனர். ஜீவா அவர்கட்காக 1957-தேர்தலில் நன்னிலம் தொகுதியில் பணியாற்றிய நாகப்பட்டினம் ராஜூ சாஸ்திரிகள் ஒருவராவர். கூட்டம் முடிந்ததும் ஜீவாவை அவர் அப்படியே அரவணைத்துக் கட்டிக கொண்டு கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரிய நின்ற காட்சி இன்னும் அப்படியே தெரிகின்றது. இதே ராஜூ சாஸ்திரிகள். ஜீவாவின் மறைவைக் கேட்டபொழுது சொன்னதாவது:- “ஜீவா மட்டும் சற்று விழிப்பாக உடம்பைப் பார்த்துக் கொண்டிருந்தால் யமனைக் கூடத் தமது பேச்சில் மயங்க வைத்து இரண்டாம் முறை திரும்பி வரச் செய்து விடுவாரே” என்று வாய்விட்டுச் சொன்னார். நட்பிற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டாகும்.

பாரதி தமிழச் சங்கத்தின் சார்பில் வரவேற்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்ட ஆரம்பத்தில் ஒரு அன்பர் தெலுங்கில் இறை வணக்கம் பாடினார். ஜீவா அவர்கள் இதனைக் கருத்தில் கொண்டார். பல்கலைக் கழகத்தில் தமிழ் போதனாமொழியாக ஆவதுபற்றிய சர்ச்சைகள் சென்னையில் தொடங்கியிருந்த சமயமாதலால், பாரதியின் “யாமறிந்த மொழிகளிலே” என்ற பாடலை எடுத்துக்கொண்டு, நீண்ட முன்னுரையுடன், தமிழ்ப் பணி செய்வது எப்படி என்பதை விளக்கிக் காட்டி, பாரதியின் பெயரால் அமைந்திருக்கும் தமிழ்ச் சங்கம் பாரதி சொன்ன வழியைப் பின்பற்ற வேண்டுவதுதான் முதற் கடமை என்று எடுத்துக்காட்டினார். இதற்காக அவர் மீது எவரும் குறை சொல்லத் துணியவில்லை. அது மட்டுமன்று, அதுநாள் வரை இத்தகை சில பல குறைகளைக் கவனியாது விட்டு வந்த தமிழ்ச் சங்கம் நன்முறையில் வளரவும் தொடங்கியது.

கல்கத்தா மலையாளி சமாஜம், தென் இந்திய சமூக நல சங்கம், பரக்பூர் கண்டோன்மென்ட், தேசிய வாலிபர் கழகம், லோயர் சித்பூர் சாலை கைலி கைத்தறி விற்பனை தமிழ் இளைஞர்கள், பாரதீய கலா நிகேதன், திருவள்ளுவர் கலைமன்றம், ஜனநாயக வாலிபர் சங்கம் முதலான அமைப்புக்களைச் சார்ந்தவர்கள் அவரிடம் காட்டிய பரிவும் பாசமும் வங்கத் தெருக்களில் எல்லாம் எதிரொலி செய்து நின்றன.

1962-ஜனவரியில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஜீவா அவர்களின் திருஉருவப் படத்திறப்பு விழா நடைபெற்றது. தோழர் நிரஞ்சன் சென், ஜீவாவைப பற்றி கூறியவைகள் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. பாரதிக்கும், தாகூருக்கும் இடையில் கலை இலக்கியப் பாலமாக அமைந்து விளங்கினார். தாகூர் நூற்றாண்டு விழா சமாதானக் குழுவில் தமிழகத்தன் கலைஞர்களை அழைத்து வந்த ஜீவாவின் கலை வளர்ச்சித் துறை ஆர்வத்தை அனைவரும் வியந்து பாராட்டினார். வங்கத்தின் சிறந்த முற்போக்கு எழுத்தாளரும் தாகூர் விழாவின் செயலாளருமான திரு. கோபால் ஹால்டர் விழா மேடையில் ஜீவா அவர்களை அன்பு பெருக்கினால் அப்படியே தழுவிக் கொண்டார். கொட்டும் பனியிலும் சிறியதொரு கைச்சட்டையுடன் மட்டும் உலவிக் கொண்டிருந்த ஜீவாவைப் பார்த்துவிட்ட டாக்டர் ரானேன் சென் அவர்கள் தமது ஸ்வெட்டரைக் கழற்றி எடுத்து ஜீவாவிற்கு அணிவித்து மகிழ்ந்தார்.

ஜீவாவின் பழங்கால நண்பரும், தேசபக்தரும், இந்திப் பண்டிதருமான திரு. ஜகத்ரட்சகன் அவர்கள், “காலுக்குச் செருப்பும் இல்லை”, கோடிக்கால் பூதமடா”, முதலான பாடல்களை இங்கு பாடிக்காட்டி அனைவரையும் மகிழ்வித்தார். அந்த இன்பம் வளரத் தொடங்குமுன்பு, ஜீவாவின் மறைவுத் துன்பம் அனைவரையும் சூழ்ந்தது.

இத்தகைய தலைசிறந்த நண்பரைப் பெற்ற கங்கைக்கரை, மக்கள் ஜீவாவின்பால் கொண்ட அன்பைக் குறிப்பிடுவது என்றால் அது வளர் கதையாகிவிடும்.

“அன்பின் உருவமாய், பண்பின் களமாய், தியாகத்தின் சின்னமாய், உழைப்பின் உறைவிடமாய் விளங்கிய ஜீவா அவர்களைக் கண்ட கண்கள், பேச்சினைக் கேட்ட செவிகள், வளர்ந்த சிந்தனைகள் உண்மையிலேயே மண்ணில் பயனுற்றனவாகும். அவர் புகழ் போற்றி, ஜீவாவின் கருத்துக்களைப் பரப்புவோமாக,” என்று ஜீவாவைப் பற்றி டாக்டர் ஹால்டர் குறிப்பிட்டவை உண்மை. உறுதியும் கூட.

எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது ஒரு நூலைப் படித்துக் கொண்டிருக்கும் வழக்கமுடைய ஜீவா, தான் இறப்பதற்குச் சில நாட்கள் முன்பு கூட கிடைத்தற்கரிய, போலோநாத் தாஸ்குப்தா எழுதிய “மார்க்ஸிசம், மெட்டீரியலிஸம் அண்டு டயலக்டிஸம்” என்ற நூலை வாங்கி அனுப்புமாறு கேட்டிருந்தார். ஆனால் அதைப் படிக்காமலே அவர் மறைந்து விட்டார். இத்தகைய அறிஞர் அனைவரிடமும் நட்பிற் சிறந்தவராகக் கேண்மையின் கோ என விளங்கியதை கங்கைக் கரையினர் என்றும் மறக்கமாட்டார்கள்.

“குளிரும் சுடுதலும் உயிருக்கு இல்லை;
சோர்வு வீழ்ச்சிகள் தொண்டருக்கு இல்லை;
எடுமினோ அறப்போரினை”
– பாரதி

– ‘தாமரை’, ஜீவா சிறப்பு மலர, 1963

‘சாரதா’ திரைப்படமும் ஜீவாவும்’

– டைரக்டர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்

‘சாரதா’ தமிழமெங்கும் திரையிடப்பட்டது. ‘தெய்வப் பிறவி’ யிலிருந்து நான் கதை – திரைக்கதை – உரையாடல் எழுதிய அத்தனை படங்களும் திரையிடப்படும் நாளில் முதல் காட்சியைப் பார்க்க நான் தவறாமல் மதுரைக்குச் சென்று விடுவேன். அதற்குக் காரணம் மதுரை மாநகர மக்கள் பாரபட்சமின்றி ஒரு படத்திற்குண்டான குறைநிறைகளை வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்கள். அவர்களது கருத்துத்தான் தமிழ்நாடு முழுவதும் பிரதிபலிக்கும்.
என்னுடைய முதல் டைரக்ஷனைப் பற்றி மதுரை மக்கள் என்ன சொல்கிறார்களென்பதை நேரடியாக கேட்தற்காக முதல் நாளன்று முதல் காட்சியை ரசிகர்களோடு அமர்ந்து பார்ப்பதற்குச் சென்றேன். என்னுடைய கார் மேலூரை நெருங்கும் தருணத்தில் லேசான ரிப்பேராகிவிட்டதால்… பகல் காட்சி முடிந்தவுடன்தான் நான் தியேட்டரை அணுக முடிந்தது.

முதல் காட்சி பார்த்து விட்டு வந்த ரசிகர்களிடம் இரண்டாவது காட்சிக்காகக் காத்திருந்தவர்கள் படத்தைப் பற்றி கருத்துக்கேட்டபோது அவர்கள் சொன்ன வார்த்தையே “அபாரமான