கவிஞர்கள் பார்வையில் காமராஜர்

கருப்புக் காந்தியும் நெருப்புக் கவிதையும்

-கவிஞர் மு. மேத்தா

ஒரு தீர்க்க தரிசியை
நேசிப்பதைப் போல்
உன்னை நேசிக்கிறேன்…
உன்னால்தான் முடிந்தது
தாயையும் பார்க்காமல்
தாய்நாட்டைப் பார்ப்பதற்கு!

நீ நினைத்திருந்தால்
கரன்ஸி நோட்டுகளால்
விருதுநகரில்
இன்னொரு இமயமே
எழுந்திருக்கும்!

நீ
லட்சுமியை அனுப்பி
சரஸ்வதியை வரவழைத்தாய்.
இவர்களோ
சரஸ்வதியையே
லட்சுமியாக்கிக் கொண்டிருக்கிறார்கள்!

ஆமாம்… நீ
கல்விக்கண் திறந்தாய்!
இவர்களோ
கல்விக் கடை திறந்தார்கள்!
என்னால்
கள்ளுக்கடை
வைத்திருப்பவர்களைக் கூட
மன்னிக்க முடிகிறது.
கல்விக் கடை வைத்திருப்பவர்களை
மன்னிக்க முடியவில்லை.
நிஜத்தைச் சொல்லுகிறேன்
நேரு குடும்பத்தின் மீது நீ
பாசம் வைத்திருத்திருந்தால்
இந்தியாவின் பாரிணாமமே வேறு!

கருப்புதான் நீயும்…
கருப்புக் காந்தி!
மகாத்மா காந்தியோ
சிரிக்கும் நெருப்பு.

நீ
சிரிக்கத் தெரியாத
நெருப்பு.
அந்த நெருப்பு
திருநீறாகி விட்டது.
உன் சாம்பலுக்குள்ளும்
தணல் தகிக்கிறது.

பெரியாரின் பல்கலைக்கழகத்தில்
‘பச்சைத் தமிழன்’ எனும்
பட்டம் பெற்றவனே!

இன்று நீ இருந்திருந்தால்
இங்கிருக்கும்
காய்ந்த தமழர்களைக்
கண்டித்திருப்பாய்!

இன உணர்வு
தமிழனுக்கு இருந்திருந்தால்
இந்தியாவின் ஸ்டாலினாய்
இருந்திருக்க வேண்டியவன் நீ!

மணி முடி உன்முன்
வைக்கப்பட்டது.
ஆனால் நீ
காளிக்குத்
தலையை வெட்டித் தந்த
கபாலிகனாகவே காலத்தை முடித்தாய்!

மலர்கிறது காமராஜர் நூற்றாண்டு

-பேராசிரியர் டாக்டர்.க. இராமச்சந்திரன்

கர்மவீரரே
காமராஜரே
நீ படித்தது ஆறு
இப்போது உனக்கு வயது நூறு?

பிறந்த போது
நீயும் அழுதாய்
பாலுக்காக அல்ல…
பாழ்பட்டுக் கிடந்த
பாரத தேசத்தைப் பார்த்து!

உன் வீட்டு
அடுப்பில் நெருப்பில்லை
நெஞ்சில் மட்டும்
விடுதலை நெருப்பு!

மூவாயிரம் நாள்கள்
சிறைக் கம்பிக்குள் வாசம்…
உன் நினைவெல்லாம்
இந்திய தேசம்!

பதவியைத் தேடி
பலபேர் வந்தார்கள்
உன்னை நாடி…

உனக்காக
எவரையும் நாடியதில்லை.
நீதான்
”நாடா” ராயிற்றே

நீ எந்தப் பக்கமும்
சாய்ந்த தில்லை
சின்ன வயதிலேயே
சரியாக தராசைப் பிடித்திருந்ததால்!

பெரியாரின் பல்கலைக் கழகத்தில்
”பச்சைத் தமிழர்”
பட்டம் பெற்றாய்…
உன் கொச்சைத்
தமிழால்
எங்கள் இதயங்களில் இடம்பிடித்தாய்.

படிக்காத மேதையே
தடுக்கி விழுந்தால்
தொடக்கப் பள்ளி
ஓடி விழுந்தால்
உயர்நிலைப் பள்ளி
சாலைகள் எங்கும்
கலவிச் சாலைகள் திறந்தாய்…

அரியாசனத்தின் மீது
ஆசையில்லை….
உன் ஆசையெல்லாம்
”அறியா” சனங்களின் மீது?

இந்தியாவே
உன்னிடம் இருந்தது
நீ இருந்தபோது…
சட்டைப்
காலியாகவே இருந்தது
நீ இறந்தபோது!

நினைத்துப் பார்க்கிறேன்
நெஞ்சம் நெகிழ்கிறது
உன் சாதனைச் சரித்திரம
நூறு ஆண்டுகளல்ல
நூறு நூறு ஆண்டுகள் தொடரும்.

முதல் தலைவன்

-கவிஞர் பா. விஜய்

காமராஜர்!

இந்திய அரசியலில்
தமிழனின் ஒரே ஒரு
தலைக்கிரீடம்!

கருப்பு மனிதன்
ஆனால்
வெள்ளை மனம்!

கதர்ச் சட்டை அணிந்து வந்த
கங்கை நதி!
செங்கோட்டை வரை பாய்ந்த
திருநெல்வேலி தீ!
ஆறடி உயர
மெழுகுவர்த்தி!

பாமரன்தான்
ஆனால் இந்தப் பாமரனின்
ஆட்காட்டி விரலுக்குள்
பிரதமர்களை உருவாக்கும்
பிரவாகம் இருந்தது.!

படிக்காதவர் தான்!
ஆனால் இந்தப் பட்டமில்லாதவரின்
அகத்துக்குள் இருந்தது
ஒரு பல்கலைக் கழகத்தின்
அறிவு!

இந்த நூற்றாண்டில்
சராசரி மனிதனாலும்
சந்திக்க முடிந்த
ஒரே ஒரு முதலமைச்சர்!

இந்திய அரசியல் கப்பல்
கரை தெரியாமல்
கதிகலங்கிய போது
தமிழகத்தில் தோன்றிய
கதர்ச்சட்டை
கலங்கரை விளக்கம்!

காமராஜர்!

கடவுளுக்காக வாதம் நடந்த
காலகட்டத்தில்
மக்களுக்காக வாதம் செய்த
முதல் வக்கீல்!

முதலாளிகளுக்கு பாதுகாப்புத் தந்த
காவல் துறை மத்தியில்
பாமரர்களுக்கு பாதுகாப்பளித்த
முதல் போலீஸ்!

ஓட்டு வேட்டைக்காக
உழைத்த
அரசியல் வாதிகளுக்கு மத்தியில்
மக்களின்
ஓட்டு வீடுகளுக்காக உழைத்த
முதல் அரசியல்வாதி!

மூன்று வேட்டி சட்டை
முன்னூறு ரூபாய் ரொக்கத்தோடும்
வாழ்ந்து முடித்து விட்ட
முதல் ஏழை!

எப்படி ஆள வேண்டும்?
எப்படி வாழ வேண்டும்?
என்பதற்கு உதாரணமாய் இருந்த
முதல் தலைவன்!

”ஆகட்டும் பார்க்கலாம்”

-புதுவை. தமிழ்நெஞ்சன்

அவரின் வண்ணம் கருப்பு – அவர்
அறிவு தந்தது படிப்பு – மக்கள்
தொண்டு ஒன்றே
வாழ்க்கை என்று
துயிலா துழைத்தார் உழைப்பு!

பள்ளிப் படிப்பு ஆறு – வாழ்க்கை
பள்ளிப் படிப்பு நூறு – அவர்போல்
செயற்கரிய செயல்
செய்த திங்கே
அரசியல் களத்தில் யாரு?

சிற்றூர் எங்கும் பள்ளி – அவர்
சிந்தனை ஏற்றது கல்வி – பசிக்கு
முற்றுப் புள்ளி
முதலில் இட்டு
மனுவிற்கு வைத்தார் கொள்ளி!

‘பச்சைத் தமிழர்’ ஆனார் – பெரியார்
மெச்சும் தமிழால் வென்றார் – பண
இச்சை இன்றி
இரவும் பகலும்
இறவாப் புகழால் நின்றார்!

தன்னலம் இன்றி உழைத்தார் – தாய்த்
தமிழில் படிக்க அழைத்தார – எந்த
இன்னல் தொடர்ந்து
வந்த போதும்
கொள்கை காக்க உழைத்தார்.

எளிமை நேர்மை உழைப்பு – அவர்
இல்லாது போனது இழப்பு – அவர்
தூய்மை;ஈகம்;
தொண்டு உள்ளம்
தொடர வில்லை பிழைப்பு!

கருப்பு அணியா பெரியார் – மடமைக்கு
நெருப்பு ஆகும் உரியார் – அவர்
பொறுப்பு ஏற்ற
போது எல்லாம்
சரியாய்ச் செய்த நெறியாய்!

தலைமை அமைச்சர் யாரு? – காம
ராசர்விரலைப் பாரு – அவர்
சுட்டு விரலின்
திசையில் உள்ளவரே
அமர்ந்தார் எனபது வரலாறு!

இன்னுமோர் நூற்றாண்டு வாழ்க!

-கவிஞர். வரத கோவிந்தராசன்

ஏசுபிரான் மீண்டுதித்து
‘காந்தி’யானார்!
எந்தைஉயிர்த் தந்துரிமை
வாங்கித் தந்தார்!

பேசுபுகழ் நபிகளவர்
‘நேரு’வானார்!
பேணிநல்ல சுதந்திரத்தைக்
காத்து நின்றார்!

தேசுடைய புத்தபிரான்
தெற்கு நாட்டுத்
தேன்தமிழான் ‘சிவகாமி’
மைந்த னாகித்

தேசிகத்தொல் பாரத்த்தை
மீண்டும் காக்கும்
தேசிகன்சீர் ‘காமராச’
ஞானி வாழி!

குமரிமலை தமிழகத்தின்
தெற்கே முன்னாள்
கோடுயர்ந்த இமயம்போ
லிருந்த நாளில்

எவருமே பார்த்ததில்லை,
இன்றோ தெற்கின்
ஏற்றமுறைக் கின்றமிகப்
பெருமை வாய்ந்த

குமரிமலை ஒன்றுண்டு,
காந்தி யத்தில்
கவலயமே வியக்கும்நல்
லாற்ற லாண்மை,

துவரிதழில் ஒலிக்கின்ற
சொல்லோ சொற்பம்,
துவக்குகின்ற செய்கைகளோ
கோடி; முற்றும்!

கல்விதரும மெய்ப்பொருளை
இழந்த மக்கள்
கண்திறந்து வைத்தவரின்
வயிற்ப சிக்கு

நல்விருந்தும் அளித்தன்னோர்
மானம் காக்கும்
நல்லாடை தந்துவந்தோன்;
அரசுக் கட்டில்

சொல்விளங்க ஏறிநின்று
தமிழ கத்தைச்
செப்பனிட்ட ராசதந்திரி;
ஏழை மக்கள்

நல்வாழ்விற்கு குறுதுணையாய்
ஆவ தெல்லாம்
ந்வநவமாய் செயலாற்றும்
முயற்சி மிக்கோன்;

இதயத்தின் பெருந்தலைமை
யேற்று நாட்டில்
இயன்றமட்டும் உழைக்கின்ற
நல்லோ ராக்கும்

மந்திரத்தை நன்கறிந்த
மேதை; தும்பை
மனமிருக்கும் உடையிருக்கும்
மற்றோன் றில்லா

சுந்தரஞ்சேர் ‘காமராசன்’
கரும வீரன்,
தூயவன்பல் நூற்றாண்டு
துலங்கி வாழ்க!

காமராஜர் புகழ் நிலைத்திருக்கும்!

-குறிஞ்சிச் செல்வர் கொ. மா.கோதண்டம்

ஒன்பது ஆண்டுகள் முதலமைச்சர்
ஒருவீ டேதும் கட்டவில்லை
நன்றென காரெதும் வாங்கவில்லை
நாளும் கைக்கடி காரமில்லை

சட்டைப் பையில் ஒரு பேனா
தனக்கென வைத்துக் கொள்ளவில்லை
பட்டம் பதவியில் ஆசையில்லை
பணத்தைச் சேர்க்க எண்ணவில்லை

நேர்மை எளிமை தியாகமுடன்
நிதானம் கருணை அன்புள்ளம்
ஆர்வ முடனே ஏழையரை
அணைத்துச் செல்லும் பேருள்ளம்

கல்லா ஏழைச் சிறவர்களின்
கண்கள் திறக்கச் செய்த உள்ளம்
எல்லோ ருக்கும் கல்வியென
ஏட்டைத் தந்த நல்லுள்ளம்

‘மதிய உணவு’ பள்ளிகளில்
வழங்கின் யாவரும் கற்பார்கள்
புதிய திட்டம் முதன்முதலில்
போட்டுத் தந்த கருணையுள்ளம்

எளிய வீட்டில் பிறந்தாலும்
இந்திய நாட்டை வழிநடத்தத்
தெளிவாய் பற்பல தலைவர்களை
தேர்ந்தே உருவாக் கியஉள்ளம்

அரிசிய லென்றால் நல்லொழுக்கம்
ஆசை விருப்பம் இல்லாமை
கரங்களில் கரைபடி யாத்தன்மை
காத்த மானுட நல்லுள்ளம்

அரசிய லார்க்கே ஒருபதவி
அதனை உலகம் பாராட்ட
முரசு கொட்டிய முதல்திட்டம்
முனைந்து தந்த ஆண்மையுள்ளம்

தனக்கென வாழாப் பெருந்தகைமை
தமிழக காந்தி இவரன்றோ
மனத்தால் அவர் மகாத்மாவே
மக்கள் தலைவர் காமராஜர்

புதிய சரித்திரம் படைத்தவராம்
பொதுவாய் நற்பெயர் பெற்றவராம்
அதிசய மனிதர் காமராஜர்
அவர்புகழ் என்றும் நிலைத்திருக்கும்.

கல்வி வள்ளல் இசைக் கும்மி

– கவிஞர். அரிமதி. தென்னகன்

கல்விக்கண் தந்தார்க்கு நூற்றாண்டு – விழா
காமரா சர்க்கிங்கே நூற்றாண்டு ! – வல்ல,
நல்ல மனிதர்க்கு நூற்றாண்டு – கூடி
நாடியே கும்மி அடித்திடுவோம்!

ஏழையை ஏற்றிய ஏணியவர் – வாழ்வின்
இன்பக் கரைசேர்த்த தோணியவர் – அஞ்சும்
கோழைத் தனமில்லாத் தீரரவர்- நல்ல
கொள்கைக்குப் போரிட்ட வீரரவர்!

இந்தியத் தேர்க்கிவர் அச்சாணி – என
ஏற்ற வரலாற்றை நாமறிவோம் – என்றும்
சொந்தமே இந்திய மக்களென – யார்க்கும்
சொல்லிய மானுட நேயரவர்!

தந்தலம் அற்ற தலைவரிவர் – நாடே
தாயெனப் போற்றிய தூயரிவர் – என்றுமே
இந்திய ஒற்றுமை மூச்செனவே – கொண்ட
ஏந்த லிவர், புகழ் ஏத்துவமே!

பெற்ற விடுதலை வெற்றிவிழா – கல்விப்
பேற்றின் உயர்வினைப் போற்றுவிழா – அஞ்சிப்
பற்றும் நெருப்புப் பசிப்பிணிதான் – அன்று
பள்ளிவிட் டோடிய வெற்றிவிழா

காமரா சர், கண்ட நூற்றாண்டெனக் – கும்மி
கைகள் சிவக்கட்டும் கொட்டுகவே! – என்றும்
நாமாக நாமே உயர்வுபெறச் – செய்த
நாயகர் சீர்போற்றித் தட்டுகவே!

கருணை வடிவினர் காமராசர் – நாட்டைக்
கட்டியே காத்த, நல் கர்மவீர்ர்! – நேர்மை
அரசினை ஆண்டுமே காட்டியவர் – துன்பம்
அற்ற திருநாளை நாட்டியவர்!

கருப்பு நிறக்காந்தி காமராசர் – எனக்
கைக்கூப்பி ஞாலமே போற்றியநாள் – இனித்
திரும்பும் உயர்நிலை யார்தருவார்? – அந்தத்
தித்திப்பு நாளை வரவழைப்போம்!

தில்லியில் ஆள எவர்வருவார் – எனத்
தேடி வருவார்க்கு காமராசர் – உடன்
‘நல்லார் இவர்!’ என்ற காலத்தினை – இனி
நம்மவர் காண வழிவகுப்போம்!

வெற்று விளையாட்டு நூற்றாண்டே – எனும்
வேதனை வேண்டாம், பெருந்தலைவர் – வழி
கற்றுமை காக்க மதவெறியை – நீக்கும்
கங்கு புகழ்ப்பணி ஆற்றிடுவோம்!.

வானம்போல் வாழ்வார் !

– கவிஞர் துறவி

வெளிச்சத்தால் விளக்கிற்கு
கீர்த்தி, செந்நெல்
விளைச்சிலினால் வயலுக்குக்
கீர்த்தி, கீதம்
அளிப்பதனால் வீணைக்குக்
கீர்த்தி, வான
அரங்கத்திற்குக் கதிர்மதியால்
கீர்த்தி நாட்டில்
தளர்வுற்றார் நிமிர்வதற்குத்
தொண்டு செய்து
தமுஇரை முடிப்பவரால்
ஒருநாட் டிற்கு
அளவற்ற கீர்த்திவந்து
சேரும், அந்த
ஆற்றலர்கள் புகழுடம்போ
நிலையாய் வாழும் !

சிறுவயது முதற்கொண்டே
தனது வாழ்வைச்
சேவைக்கே அர்ப்பணித்துக்
காம ராஜர்

சுறுசுறுப்பாய் எத்தனையோ
காரி யங்கள்
செய்துவைத்து நம்நாட்டை
உயர் வைத்தார் !

சறுக்கல்கள் ஏற்பட்டு
நமது நாடு
சஞ்சலித்த சமயமெல்லாம்
இவர்பு ரிந்த

பொறுப்பான செயல்களினால்
வீழ்ச்சி இன்றிப்
புதுப்பாதை கண்டபடி
போன துண்டு!

பாரத்த்தை யேதனது
வீடாய் ஏற்கும்
பாக்கியத்தை இவர்பெற்ற
தாலே, வேறு

தாரத்தை மணமுடித்துக்
குடும்ப மென்ற
தனிவீட்டை இவர் அமைத்து
வாழ வில்லை!

நேரத்தை நினைப்பையெல்லாம்
நாட்டிற் காக
நாள்தோறும் செலவழித்து
ஏழை மக்கள்

பாரத்தைத் தம்தோளில்
சுமந்த வாறு
பாடுபட்டுச் சரித்திரத்தில்
நிலைத்து நின்றார்

சேமிப்பாய்ச் செல்வத்தை
இவர்தன் வாழ்வில்
சேகரித்து வைக்கவில்லை.
அழிவே இல்லாப்

பூமியிலே இவர்சேர்த்து
வைத்த தெல்லாம்
பிறர்கவர முடியாத
கீர்த்தி ஒன்றே!

ஊமைகளாய்க் கிடந்தோரின்
நெஞ்சில் கல்வி
உணர்ச்சிகளைத்
தூண்டிவிட்ட கார ணத்தால்
பாமர்கள் இதயத்தில்
காம ராஜர்
பூசைசெய்யும் சாமியைப்போல்
கொலுவி ருப்பார்!

தமிழகத்துச் சோலையிலே
சிலபேர் நச்சுத
தன்மையுற்ற மரம்போல்
இருந்த வாறு
அமைதியினை அழிப்பதற்கு
முயற்சி செய்து
அரசியலில் பங்குபெறும்
இந்நே ரத்தில்
தமதுழைப்பால் மருந்துமரம்
போன்று நாட்டில்
தொண்டுசெய்த பெருந்தலைவர்
காம ராஜர்
கமழுகின்ற ந்ந்தவனப்
பூவைப் போல
காமெல்லாம் மனிதநெஞ்சில்
வாசம் செய்வார் !

இவர் உடம்ஐ அழிப்பதிலே
வெற்றி கொண்ட
இறப்பாலே இவர்
புகழை அழிப்ப தற்குத்

தவம்செய்து முயன்றாலும்
ஊழி தோறும்
தோல்வியைத்தான் இறுதியிலே
காணக் கூடும்!

நவநவமாய் நம்நாடு
உயர்வ தற்கு
நாளதோறும் சிந்தித்து
உழைத்து நாட்டின்

கவனத்தைக் கவர்ந்துவிட்ட
காம ராஜர்
கட்டாயம் வானம்போல்
நிலைத்து வாழ்வார்!

என்று வரும் அந்த நிலை?

குழந்தை இலக்கியமாமணி. – பாவலர் ரா. பொன்ராசன்.

வருநாள் உலக வரலாறாய்
வளரும் இளைய திலகங்களே,
கரும வீர்ர் நம்தலைவர்
காம ராசரை அறிவீரா!

அன்னை நாட்டின் விடுதலைக்காய்
அண்ணல் காந்தி வழிநின்று
தன்னலம் துறந்த உழைத்தவர்தாம்
தலைவர் காம ராசர் அவர்!

வறுமைக் கோட்டின் கீழிருந்தே
வாழ்க்கை தொடங்கிய நம்தலைவர்
வாழ்நாள் முழுவதும் எளியோரின்
வளத்தை வளர்க்க உழைத்தாராம்!

எளமை தூய்மை தொண்டுக்கே
இலக்கண மாகத் திகழ்ந்திருந்த
புனிதர் நமது பெருந்தலைவர்
புகழின் சிகரம் ஆனாரே!

ஏழைச் சிறுவர் எல்லாரும்
எளிதாய்க் கல்வி பெறுவதற்கு,
எல்லாம் செய்த புனிதர்தம்
இனிய தலைவர் காமராசர்!

அரசியல் தன்னைச் சாக்கடையாய்
ஆக்கித் தன்னை வளர்க்காமல்,
அன்னை நாட்டை மேம்படுத்த
அனைத்தும் செய்தவர் நம்தலைவர்!

கருப்புக் காந்தி என்றார்கள்
கரும வீரர் என்றார்கள்,
அனைத்துச் சிறப்பும் பெற்றிருந்தும்
அடக்க வடிவாய் அவர்திகழ்ந்தார்!

காமராசப் பெருமானை,
கடவுள் நமக்கு மீட்டளித்தால்…
இந்திய நாடே சொர்க்கம்என
எவரும் போற்றும் நிலைவருமே!…

சுட்டுவிரல் அசைவில்

– கவிஞர். செ.தமிழ்ராஜ்

விருதுநகர்
முதல் முதலாய்
ஒரு கவிதை
பெற்றெடுத்தது.
அந்த விருதே
விருது நகருக்கு
விலாசத்தைப்
பெற்றுத் தந்தது…!

இந்த
படிக்காத மேதையின்
பாதம்பட்ட இதமெல்லாம்
பள்ளிக் கூடங்கள்
பின் தொடர்ந்தன.

தமிழக மெங்கும்
பாடசாலைகளைப்
பதியம் போட்ட
முதல் பாமரர்.

ஏழைகளின்
இரைப்பையை
நிரப்பிய பின்தான்
புத்தகப்பையைத் தூக்க
உத்தரவிட்டார்

இவரால்
அறிவுப் பசியும்
அடிவயிற்றுப் பசியும்
ஒருசேர மாணவர்க்கு நீங்கியது.
மேலைவீட்டுக் கல்வியை
கூரைவீட்டு ஏழைக்கும்
கூட்டி வந்தார்.
தீண்டத் தகாதவராய்
பிறப்பெடுத்தாலும்
உலகே தீண்டும்படி
வாழ்வெடுத்தார்.

கற்கால ஆட்சிகளை
கண்ட பின்தான்
இவர் நடத்தியது
பொற்கால ஆட்சி என்று
புரிகிறது.

கர்மவீரரை
தமிழக முதல்வராக்கி
மகுதமெல்லாம்
மகிழ்ச்சி கொண்டன.

பதவிகளும்
பட்டங்களும்
பரிவட்டம் சூட்ட
படையெடுத்தாலும்
தன் ண்டு விரலால்
சுண்டி எறிந்தார்.
பிரதமர் நாற்காலி ஆயினும்…

எளிமை
எப்போதும் இவரை
ஆரவாரமாய்
உடுத்திக் கொண்டது

அதிகாரத்தில்
அமர்ந்த போதும்
அன்னைக்குக் கூட
சலுகை தர சம்மதிக்காத
கர்ம வீரர்!

வெற்றிமுழக்கமிட்ட விருதுநாயகர்

– கவிஞர் இரா. முருகேசன்

‘பட்டி’யில் வீடு – சிந்தனையில்
பாரத நாடு
பட்டம் பெறாத ‘மாமேதை’
பண்பாளரின் சொல்லே ‘பகவத்கீதை’
வஞ்சனை யில்லாத நெஞ்சம்
‘சடு குடு’ விளையாட்டே தஞ்சம்

ஆறுமுறை சிறைசென்றாலும்
ஆங்கிலேயனை
”வெள்ளையனே வெளியேறென”
வெற்றி முழக்கமிட்ட ‘விருத நாயகரே’

‘அன்னை பூமியின் விடுதலைக்காக – அன்பு
அன்னையின் திருமண ஆணையை மறுத்த
‘தீவிர தேசபக்தி’ தொண்டரே!
வீரத்தாலும் விவேகத்தாலும்
திருடனையும், யானையையும்
அடக்கிய அறிவுச் சுடரே!

காந்தியின் உண்மைத் தொண்டரே!
‘கல்விக்குக் கண்’ திறந்த கவிமானே!
காங்கிரஸ் கூட்டங்கள் நடத்த
காசுஇல்லாமையால் பொது இடங்களில்
‘காந்தி உண்டியல்’ குலுக்கிய
கர்ம வீரரே, காமராஜரே!

‘வந்தே மாதரம்’ என்ற மந்திரத்தை
‘விருதுப்பட்டியில்’ பறை சாற்றிய
விருதுநாயகரே, வெற்றி நாயகரே!

‘தேய்ந்த காங்கிரசை’
மக்கள் நெஞ்சிலே – மீண்டும்
தழைத்திடச் செய்த தன்மானத் தமிழரே!
‘பசித் தீ அடங்காமல்
பகுத்தறிவுத் தீ பரவாது’ என்று உணர்ந்த
பகுத்தறிவாளரே!

சுத்தமான கதர் ஆடையணிந்த ராசரே – உம்
புத்தியை மிஞ்சும் சக்தி
விஞ்ஞானத்திற்கில்லையே!

வாழ்வின் மாற்றம் தன்னம்பிக்கை
விதியைத் தூற்றும் தன்னம்பிக்கை
அரசியல் மாற்றம் தன்னம்பிக்கை
அகிலம் போற்றம் கர்மவீர்ர்
காமராஜரே அந்த நம்பிக்கை!

தமிழகத்தை ஆண்ட பெருந்தலைவரே – இது
என்றும் பொற்காலமே !
”நித்தமும், எங்கள் நெஞ்சங்களில் நீங்கள்
வாழ, ஆள வாழ்த்துகிறோம்.

காமராஜருக்கு ஒரு கடிதம்

– கவிஞர். கவிபாரதி

நீ மட்டும் எப்படி
ஆடையைப்போலவே வெண்ணிறமாக
அதையேன் இப்போதுள்ள
தலைவர்களுக்குச் சொல்ல மறந்தாய்?

உன் பிறந்தநாள் கொண்டாட
எங்கள் தலைவர்கள்
பிரியப்படுகிறார்கள் – ஆனால்
உன் கொள்கையைப் புதைத்துவிட்டார்கள்!
உன் குறட்டைச் சத்தத்தால்
நேருவின் துயில் கலைந்து விட்டதாம் – உத்தரவிட்டார்
இரவு நேரத்தில் உன்னை
வெளியே வீசினார்கள்!

பிறகு எப்படி உனக்கு
மரியாதை செலுத்தினார் நேருமாமா?
எங்கள் தலைவர்களை
வெளியே வீசினாலும்
வலியபோய் காலில் விழுகிறார்கள்

நீ திருமணம் செய்துகொள்ள
வில்லையாம் – அதனால் என்ன
தமிழகமே உன் பிள்ளையாகிவிட்டதே!…

வருவாயோ மீண்டும்,,,,,?

– கவிஞர் தேனி, கண்ணன்

எத்தனை மனிதர் இங்கு வந்தார் – ஒரு
புத்தனைப் போல யாருமில்லை! – அவன்
தத்துவம் போல எதுவுமில்லை!
எத்தனை தலைவர் இங்கு வந்தார்
உத்தமன் உன்போல் எவருமில்லை!-இது
சத்தியம்! சொல்வதில் தவுறுமில்லை.!

பள்ளி செல்லும் பிள்ளை வயிற்றின்
பசியறிந்தே நீ உணவளித்தாய்!
பரிவில் தாய்மை உணவளித்தாய்!
பாமரன் உந்தன் பாதச்சுவட் டினைப்…
பாரதம் தன்னைப் படிக்க வைத்தாய்! – உன்
பாதையில் தேசத்தை நடக்க வைத்தாய்!

ஏழைகள் வாழ்வை மேம்படச் செய்யவே
இயற்றியதுநம் சட்டமென்றாய்!
(இ)ல்லையென்றால் அது குற்றமென்றாய்!
அரியாசனத்தில் அமர்ந்தபோதும் – ஏதும்
அறியா சனத்தையே அரவணைத்தாய்!- அவர்
சரியாய்வாழ தினம் உழைத்தாய்!

நடையாய் நடந்துநீ நாளும் உழைத்தாய்
பாலை நிலமும் பயிர் முளைத்ததய்யா!
பாத நிழலும் இளைத்ததய்யா!
அன்னை பூமியை நெஞ்சில் சுமந்தே…
ஆனாய் நீயோ பிரம்மச்சாரி!- வாரிக் கொடுப்பதில் வள்ளல் பாரி!

புத்தகம் படித்து பட்டங்கள் பெற்றதும் – சிலர்க்கு
புத்தியில் எதுவும் நிற்கவில்லை!- உன்
வித்தகமும் யாருக்கும் வாய்க்கவில்லை!
தாழ்ந்து கிடந்த தமிழக மக்களின்
தலையை நீயே நிமிரவைத்தாய்! – புகழ்
இமயம் தாண்டி உயரவைத்தாய்!

வெண்ணிற ஆடை உடுத்தி வந்த நீ
முற்றும் துறந்த ஞானியய்யா! – பணப்
பற்றைக் கடந்த ஏணிய்ய்யா!
வீர்ரென்றார் உனை மேதையென்றார் – நீ
மனிதனென்றே அவர்க்குப் புரியவைத்தாய்! இந்த
உன் தடம் பதியவைத்தாய்!

நிறத்தால் பார்த்தால் உன்மேனியும் கருப்பு – அறிவின்
திறத்தால் பார்த்தோம் இந்தபூமி உன் விருப்பு?
பச்சைத்தமிழா! அதுவே உன் சிறப்பு!
உன்போல் தலைவன் மண்மேல் வரவே
எம்இருகண் தவம்செய்யுதய்யா! – மனம்
உன் நினைவில் தினம் ஏங்குதய்யா!

காந்திக்கு கடைசி வாரிசு

– கவிஞர். பாஸ்கரதாசன்

தவமாகத் தவமிருந்து
சிவகாமி பெற்ற மைந்தன்
தவமாக அவனிருந்து
தமிழகத்தை ஆண்ட முதல்வன்

படிக்காத எளியோரும்
படித்துப் பட்டம் பெறச் செய்தவன்
படிக்காத மேதையென்றே
பாரினில் பட்டம் பெற்றன்

மதிய உணவு அளித்து – பள்ளி
மழலையரின் பசிபோக்ககும்
புதியதொரு திட்டத்தினைப்
புகுத்தி வெற்றியும் கண்டவன்

நாடார், பொன் பொருள்நாடார்
புகழ் அதையும் நாடார் – காமராஜ்
நாடார் பதவி சுகம் நாடார் – அதனாலே
நாடார் நாடாண்டார் நலமாகவே!

அரசியலில் பீஷ்மாச்சாரி – வாழ்வில்
அவரோ வெறும்பிரம்மச்சாரி
கதராடை அணிந்த காந்தியவாதி
கற்புநெறிதவறா அரசியல்வாதி

ஆகட்டும் பார்க்கலாமென்றால்
அது முடியும் என்றே பொருளாம்
வேண்டாங்கறேன் என்றுரைத்தால்
வேறுவேலை பார்ப்பதுநலமாம்

மனிதராய் வாழ்வதரிது – அதனினும்
உத்தமனாய் வாழ்வதரிதினும் அரிது!
புனிதனாய் புத்தனாய் ஆண்டியாய்
புவியில் அவன்போல் காண்பதரிது

கோடியில் ஒருவனென்று – உம்மை
கோடிமுறை பாடினாலும்
‘கோடியில் நீ ஒருவன்’ தான் – ஒரு
‘கோடி’யுடன் சென்றவன் தான்

பெருந்தலைவர் என்று சொன்னால் – உன்
பெயர் என்ன சொல்ல?
கருப்புக்காந்தி உன்னையன்றி – காந்திக்கும்
கடைசிவாரிசு வேறுயாரைச் சொல்ல?

எண்ணலும் செய்தலும் ஒன்றேயாகி – ஏழைக்கும்
எழுத்தறிவித்த ஏந்தலே
இன்னமும் பலநூற்றாண்டு நிலையாய்
நின்புகழ் நிலைத்து நிற்கவே!

வரலாற்று நாயகரை வாழ்த்து

– கவிமாமணி. பூவை அமுதன்

பள்ளிப் படிப்பறிவால்
பாராட்டைப் பெற்றறியார்
உள்ளம் தியாகத்தின்
ஊற்றாகக் – கள்ளமின்றி
நல்லதொண்டால் ‘கர்மவீரர்’
என்றுபேர் நாட்டியே
வல்லவராய் வாழ்ந்தாரை வாழ்த்து!

நாட்டுத் தலைவர்கள்
நம்பிக்கைக் கேற்றவராய்
ஆட்டங்கள் போட்டிருந்த
ஆங்கிலேயர் – மூட்டை கட்டி
ஓட்டம் பிடிக்க ஓயாமல் போராடி
நாட்டுக் குழைத்தார் நவில்.

எத்துணையோ போராட்டம்
ஏற்றவரே முன்நின்றார்
சித்தமெல்லாம் நாட்டிற்குச்
சேவைசெயும் -உத்தமர்தம்
எண்ணம்சொல் செய்கையினால்
ஏழையர்க்கு நன்மைசெய்தார்
பண்பட்ட மாந்தரெனப் பாடு!

படிக்காத மேதையாய்ப்
பாமரரும் போற்ற
நடிக்காமல்
உண்மை
நடத்தடைப் – பிடிப்போடு
தொண்டர்கள் அன்பாய்த்
தோடர்ந்துவர வெற்றிகளைக்
கொண்டார் குணக்குன்றே கூறு!

முதலமைச்ச ராய்ப்பலரை
முன்னுயர்த்தி எந்தப்
பதவிசுகம் காணவும்
பாயா(து) – உதவி
பிரதமராய் ஆக்குவதற்குப்
பேருள்ளம் கொண்டவரே!
வரலாற்று நாயகரை வாழ்த்து!

காட்சிக் கெளியராய்க்
காண்பவர்க் கன்பராய்
ஆட்சியில் வீற்றிருந்தும்
ஆணவமே – காட்டாமல்
நாட்டவர் நன்மை
நாடிட்டார் காமராசர்
ஏட்டில் அவர்புகழை ஏற்று!

முதலமைச்ச ராயமர்ந்து
முன்னேற்றத் திட்டம்
விதவிதமாய் ஏழையர்க்கு
வேண்டி- யது செய்தார்
தன்வீடு மக்களென
தன்னலத்தில் சிக்காமல்
முன்நின்றார் சான்றாய் மொழி!

கல்விக்கண் தந்தவர்
காமராசர் என்றவரை
எல்லோரும் அன்புடனே
என்றென்றும் – சொல்லாராம்
சுட்டப புகழ்ந்திடவே
சொந்தம்கொண் டாடவே
நாட்டியது தொண்டே நவில்!

நாட்டிலுள்ள ஏழைமக்கள்
நல்வாழ்வு காணவழி
காட்டக் கருணையாய்க்
கல்வியறி- வூட்டிட்டார்
பள்ளிப் பகலுணவுப் பாலர்கள் உண்டனர்நம்
உள்ளம் புகுந்தார் உணர்!

கன்னித் தமிழ்நாட்டார்
‘கார்வண்ணக காந்தி’யென
என்றுமே போற்ற
இதயத்துள் – நின்றிருப்பார்
காமராசர் கொள்கையினைக்
கண்காட்சித் தேர்ஓட்டி
தீமையெல்லாம் நீங்கும் தெளி!

தலைமைக்கு விளக்கம் தந்தவர்

– கவியரசு பழனி இளங்கம்பன்

தலைமைக்கு விளக்கம் தந்தவர – நம்
தமிழ்செய்த தவத்தில் வந்தவர்
விலையிலா மாணிக்கம் ஒத்தவர் – ஆம்
வியப்புறு ஆறல்கள் பெற்றவ்ர

ஒளிகொண்ட நாட்டை அமைத்தவர் – சிறிய
ஊரெல்லாம் பள்ளி அமைத்தவர்
எளிமைக்குப் புகழைச் சேர்த்தவர் – மக்கள்
எல்லோரையும் ஒன்றாய்ப் பார்த்தவர்

பேச்சைச் சுருக்கி உழைத்தவர் – நம்
பேதங்கள் நீங்க அழைத்தவர்
ஆச்சரிய வாழ்க்கை வாழ்ந்தவர் – பல
ஆக்கச் செயல்கள் புரிந்தவர்

அன்பின் வழிநின்ற மாமணி – நம்
அண்ணல் காந்தி தந்த தூமணி
இன்பமான் வாழ்வை மறந்தவர் – சுக
இல்லற வாழ்வைத் துறந்தவர்

தாயகப் பற்றிலே ஆழ்ந்தவர் – என்றும்
தன்னல மில்லாமல் வாழ்ந்தவர்
நேயப் பணிகளில் வென்றவர் – ஓங்கு
நிகரின் இமயமாய் நின்றவர்

ஆடையில் சிக்கனம் கொண்டவர் – நல்
அமைதியில் வெற்றிகள் கண்டவர்
மேடைக் கவர்ச்சியை விட்டவர் – அதில்
மேலாம் உயர்வினைத் தொட்டவர்

நாமெல்லாம் போற்றிடும் நல்லவர் – இந்த
நாட்டை உயர்த்திய வல்லவர
காமராஜ் பெற்றதானம் நற்புகழ்- எந்தக்
காலத்தும் ஓங்கியே நிற்குமே!

கர்மவீரர் காமராசர்

– கவிஞர் கலைமதியன்

படிக்காத மேதையவர்,
கிராம்ம் தோறும்
பள்ளிகளைத் திறந்துவைத்த
கல்வி யாளர்,

துடிப்போடு ஏருழவர்
உயர்வ தற்காய்
துறைதோறும் மாற்றங்கள்
செய்த செம்மல்,

அடி -நாத மாகஇங்கு
கிராமம் வாழ
அழகான சாலைகளைப்
போட்ட மேதை,

நடிக்காது அரசியலில்
நேர்மை சேர்த்த
நற்ற லைவர் காமராசர்
நாமம் வாழ்க!

செய்தொழிலின் கூடங்கள்
நாட்டி லெங்கும்
சீரான முறையினிலே
பொருளா தாரம்

உய்வதற்கு வழியினையே
கண்ட மேலோன்,
உயர் அறிவால் தொலைநோக்குப்
பார்வை யோடு

அய்யனவர் செய்ததெல்லாம்
அன்று, இன்றின்
அடிப்படையாய் இருப்பதனைக்
காணு கின்றோம்

செய்வளரும் செந்நெல்லின்
விளைச்சல் கண்டு
சிந்தைமகிழ் உழவனென
உளம்மகிழ்ந்தார்

சொல்வீச்சு வீரர் அல்ல
அமைதி யாகச்
சொல்லாமல் பணிசெய்த
கர்ம வீரர்.

கல்வீச்சு அரசியலில்
இவரோ அன்று
கடமைதனை மூச்சாகக்
கொண்ட ஏந்தல்.

நல்பேச்சும் நாகரீக
அரசி யல்தான்
நற்றலைவர் தம்முடைய
ஒழுக லாறு,

பல்வளங்கள் காண்பதற்கு
நமது நாடு
படைத்திட்ட திட்டங்கள்
சரிதம் கூறும்

ஊற்றான கருணையினால்,
மதிய வேளை
உண்டிடுக ஏழைமகன்,
பின்னர் கல்வி

ஏற்கட்டும் என்றஒரு
திட்டம் தந்து
ஏழைக்காய் சிந்தித்த
நற்ற லைவர்,

நூற்றாண்டு அவருக்கு
இன்று, காலம்
நூவலுதற்கு மடியேந்தும்
வரலாற் றேட்டில்,

காற்றண்டு உலவுகின்ற
திசைகள் எட்டும்
காமராசர் புகழ்பாடக்
காத்திருக்கும்

தலைவர்களை ஆக்கிவிட்ட
பெருந்த லைவன்
தர்மத்தின் வழிச்சென்ற
புனிதன் காந்தி

மலையளவு உள்ளத்தின்
அடிச்சு வட்டில்
மண்ணகத்தில் வழிநடந்த
திண்மை யாளன்,

அலைவருடும் பாரத்த்தாய்
பாதம் போற்றி
அரசியலில் நடைப்பயின்ற
மேன்மை மிக்கோன்,

சிலையெனவே நிற்கின்றான்,
பூச்சொ ரிந்து
செம்மாந்த தலைவன்புகழ்
பாடு வோமே.

மன்னவா வா!

– அருப்புக் கோட்டை செல்வம்

வாழையின் பயனைப் போலே
வாழ்ந்தவர் காம ராசர்
பாலையைப் பசுமை யாக்கும்
பைந்தமிழ் நாட்டின் ஊற்று
நாளைய தலைவர் கட்கும்
நல்வழிப் பாடம் ஆனார்
நூலிலே படித்தோம் நாமும்
நுண்ணிய அறிவே வாழி!

ஆண்டுகள் ஆயின நூறு
ஆயிரம் ஆயினும் என்ன?
தோன்றிட வில்லை இங்கும்
தூய்மையே உன்போல் எங்கும்
தோன்றிய தெல்லாம் உன்னுள்
தமழகம் சிறப்புறும் எண்ணம்
வான்நிலமு உள்ளம் மட்டும்
உன்புகழ் நிலைக்கம் திண்ணம்

ஒன்பது ஆண்டுக் காலம்
உண்மையில் அதுபொற் காலம்
இன்முகத் தோடே தொண்டர்
இனிதுரை கேட்ட ஞாலம்
கண்ணெனத் தந்தாய் கல்வி
கிராமமே உன்பெயர் சொல்லி!
மன்னவா நீஇறந் தாயா?
மகனென மறுபடி வா!வா!!…

அரசியல் பொற்காலம்

– கவிதாயினி. நா. ஜெயிமா பேகம்

அரசியல் பூந்தோட்டமாய் இருந்தது
நீங்கள் வேராய் இருந்ததால்.
அரசியல் மாளிகையாய் நிமிர்ந்தது
நீங்கள் அடித்தளமாய் இருந்ததால்.

அரசியல் மக்களின் ஒளியாய் இருந்தது
நீர், வழங்குவதில் பாரியாய் இருந்ததால்.
அரசியல் புனிதமாய் இருந்தது
நீர், மனிதமாய் இருந்ததால்.

அரசியல் தூய்மையாய் இருந்தது
நீர், கதராடையை உடுத்தியிருந்ததால்.
அரசியல் இமயமலையாய் இருந்தது
நீர், பண்பின் இமயமாய் இருந்ததால்.

அரசியல் ஏழையின் கோவிலாய் இருந்தது
நீர், இலவசக்கல்வியின் தீபமாய் இருந்ததால்.
அரசியல் விண்மீனாய் இருந்தது
நீர், வானமாய் இருந்ததால்.

அரசியல் வைரமாளிகையாய் இருந்தது
நீர், வாடகைவீட்டில் இருந்ததால்.
அரசியல் பொற்காலமாய் இருந்தது
நீர், சொக்கத்தங்கமாய் இருந்ததால்.

கல்விச் சூரியன் காமராஜர்

– ந. சந்திரவேல் எம்.ஏ.எம்.பில்

‘காமராசர்’
என்ற பெயர்
ஒலிக்காத தமிழ்
இல்லமும் இல்லை
நல்ல
உள்ளமும் இல்லை

நீ
இறந்தபோது
பையில்
கையில்
ஒன்றும் இல்லை
அதனால் தான்
அன்றும்
இன்றும்
எங்கள் மனதில்
இருக்கின்றாய் என்றும்

ஆங்கிலச்சேனையை
அகிம்சைத் தானையால்
வென்ற
அண்ணலின்
அடிச்சுவட்டில்
வந்த ராஜாவே!

இந்திய சுதந்திரத்திற்காக
மூவாயிரம் நாள்கள்
சிறைக்கம்பியை
முத்தமிட்ட ரோஜாவே!

சுதந்திர இந்தியாவில்
பதவியைத் தேடி – நீ
ஓடவில்லை
வாடவில்லை
உனக்கு
ஏழைகள் மீது பித்து
அதனால் போட்டாய்
கல்வி வித்து

இந்தக்கல்வித்தரம்
நீ போட்ட அடித்தளம்
உன்னால் கிடைத்த அரிய வரம்
ஏழைகளுக்குக்
கல்வி வெளிச்சத்தை
கதிராய்ப் பரப்பிய
கல்விச் சூரியனே!
காமராசரே!
வாழ்க நீ!

காமராஜருக்கு வேண்டுதல்

– மாணவர், மா.பெ. சப்பாணிமுத்து

கருப்புச் சூரியனே!
உன் உதயத்தால்
உன்னதமானது
தமிழ்நாடு…

கருப்பு நிலாவே!
உன் ஒளியால்
தூய்மையானது
தமிழக அரசு…

கர்ம வீரரே
காலம் கடந்து வாழும்
காவிய நாயகரே
காமராசரே!
காம்ம் தனை
வென்றவரும்
நீர் தானைய்யா!..

டிசம்பர் 25
புனிதர் இயேசு தோன்றிய நாள்

இயேசுவின் தோற்றத்தால்
பாவ இருள் நீங்கியது…
கமராஜரின் தோற்றத்தால்
கல்லாமை இருள் நீங்கியது…

மனிதம் என்ற
மகத்துவத்தை
மறையாது
மண்ணில் நிறுத்தினாய்….

மன்னிதகுல மாணிக்கமாக
மகுடத்தில் மின்னினாய்
கண்ணொலி வழங்கிய
காமராசரே
காலமெல்லாம் போற்றுகிறேன்
வாழி!

காமராஜர் ஒரு காலச் சரித்திரம்?….

– கவிமுரசு சு. இலக்குமணசுவாமி

விருதுப்பட்டியில் பிறந்தவர்
உலகப் புகழின்
விருது பெற்ற வீராதி வீரர்

பிடியரிசி பள்ளியில் படித்தவர்
தம் பள்ளியையே
பாடமாக்க எப்போதும் துடித்தவர்

இலவசக் கல்வித் திட்டமிட்டவர்
ஏழைபலரின் இதயத்தைக்
குளிர வைத்துத் தன் வசமாக்கியவர்

உழைப்பாலும் தியாகத்தாலும்
அணையா விளக்கிவர்
தழைத்திடும் பாரதம் முன்னேற
கலங்கரை விளக்கிவர்

தன் பாட்டி மரணத்திற்குப் பின்
தோளில் துண்டு அணிந்தவர்
தன் நாட்டின் வறுமைக்கு
வளங் கண்டு விட்டவர்
பதவியில் இருக்கும்போது
கடமையாற்றச் சொல்பவர்

உதவிபல மக்களிடையே செய்ய
குறைகள் கேட்கச் சொன்னவர்
கொள்கையில் உறுதிகொள்வதற்கே
தன்னருமைக்கோட்பாட்டில்
தொண்டர்களை இட்டுச் செல்பவர்

வடக்கே காந்தி – தெற்கே காமராஜ்
மக்கள் வாசகமிது
வரும் உயர் பதவி
தென்னாட்டுக் காந்தியின் புகழ்வாசகமிது

எதிரியை மன்னிக்கும்
நல்ல பண்பாளர்
நற்குணத்தால் உதிர்த்திடும்
இனிய சொற்களின் அன்பானவர்

காமராஜரின் எளிமையில்
ஓர் வலிமை
அவர்காட்டும் புதுமையில்
ஓர் இனிமை

இவர் ஒரு
காலச் சரித்திரம்
பதிவு செய்த்தோ பொற்காலம்!

தென்னாட்டுக் காந்தி
– கவிஞர். இரா . இரவி

வி