எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர்
சிங்கம் வளர்த்த சீமான்!
ஆயிரம் யுகங்கள் ஆனாலும் அம்மா என்கிற அமுதச் சொல் அலுத்துப் போய்விடுமோ? அதேபோல் ஆயிரம் கைகள் மறைத்து திரை போட்டாலும் ஆதவனை அப்புறப்படுத்தி விட முடியுமோ! அப்படித்தான் ஒப்புவமையில்லாத, ஈடு இணையற்ற இதிகாச நாயகன் நம் எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். இப்படிப்பட்ட, காலம் வழங்கிய இந்த கற்பக விருட்சத்தை, காணக்கிடைக்காத கனகமணி பெட்டகத்தை அலுப்பில்லாமல் காலம் உள்ளவரை கைவலிக்க எழுதிக்கொண்டே இருக்கலாம். நடிப்பதை தொழிலாகவும், கொடுப்பதை கொள்கையாகவும் கொண்டிருந்தவர் நம் கோமான். எல்லோருக்கும் தசைகளால் மட்டுமே, உடல் இருக்கும். நம் வள்ளலுக்கு மட்டுமே தங்கம் கரைத்து, வார்த்து பிரம்மன் பிரத்யேகமாக இதயத்தால் மேனி செய்தான். எதிரிகளை மட்டுமல்லாமல் எமனைக்கூட ஏழெட்டுத் தடவை பந்தாடி, தன் இழுத்த இழுப்பில் வைத்திருந்த வாகை மலர் எம்மன்னன். எல்லோரும் வீட்டில் பூனைகளையும், புறாக்களையும், வளர்த்தபோது நம் வள்ளல், வீட்டில் சிங்கம் வளர்த்த சீமான், எல்லோரும் பொன்னையும், பொருளையும் மட்டுமே சேமித்துக்கொண்டிருந்த பொழுது, நம் வள்ளல் புகழையும்,புண்ணியத்தையும், சேமித்து வைத்த பூமான். சிலர் கிளைகளுக்கு வெந்நீர் பாய்ச்சியபோது நம் வள்ளல் வேர்களுக்கு வியர்வையைப் பாய்ச்சியவர். உலை பொங்க, உத்தரவாதம் இல்லாதபோது, நம் மன்னன் இலை போட்டு பரிமாறிய பரங்கிமலை பாரி.
பரம்புமலை பாரி மன்னனுக்குகூட, முல்லைக்கு தேர் கொடுத்த தயாள குணம் மட்டுமே வரலாற்றில் பதிவாகி இருந்ததது. ஆனால் நம் வள்ளலோ நாலு கோடி மக்களுக்கு மட்டுமல்ல. அறுபத்தி ஐந்து லட்சம் பிள்ளைகளுக்கு சோறூட்டி மகிழ்ந்த மன்னாதி மன்னன். சாதனைகள் நிகழ்த்தி, சரித்திரம் படைத்தவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் அற்புதம் நிகழ்த்தி அவதாரமாக நிகழ்ந்தவர் நம் வள்ளல் மட்டுமே.
ஏசுபிரான் ஏரோது மன்னனை எதிர்க்கும் பொழுது போராளியாகத்தான பேசப்பட்டார். சிலுவையில் அறைந்தபோதுதான் அவர் நிகழ்த்தியதெல்லாம் அற்புதம் என்று உலகம் ஒப்புக் கொண்டது. ஆனால் நம் வள்ளல், நடிகராக இருந்தபொழுது சரி, நாடாளும் மன்னனாக இருந்தபொழுதும் சரி, நம் அண்ணலின் அனைத்து செயல்பாடுகளுமே அவதாரங்கள் நிகழ்த்திய அற்புதங்களாகவே அங்கீகரிக்கப்பட்டது. அரசியலில் கூட சாணக்கியத்தனத்தைவிட, சத்தியத்தை அதிக சதவிகிதத்தில வைத்திருந்தவர். அதனால்தான் இருபதாம் நூற்றாண்டில் மனித நேயத்திற்கும், மாவீரத்துக்கும் உதாரண பிம்பமாக திகழ்ந்து வருகிறார். அதனால்தான் மக்கள் இன்னமும், அநதத் தூயவரை தொடர்ந்து தொழுது மகிழ்கிறார்கள்.
அன்று சென்னை அண்ணாநகரில் உயர்ந்து ஓங்கி நிற்கும் டவர் திறப்பு விழா. விழாவுக்குச் சென்ற வள்ளல் விண்ணைத் தொடும், உயரத்தில் இருந்த டவர் மேலே நின்று சென்னை மாநகரத்தை கேமிரா கோணத்தில் நாலாப்புறமும் பார்க்கிறார். தரையில் இருந்து பார்க்கும்பொழுது,மாடி வீடுகளும், மண் குடிசைகளும் பசுமையான மரங்களால்…குறிப்பாக தென்னை மரங்களால் மறைக்கப்பட்டு, பச்சைக்கம்பளம் விரித்தது போல் காட்சியளித்தது. நம் சென்னை மாநகரத்தைக் கூட “தென்னை மாநகரம்” என்று அழைக்கும் அளவுக்கு திட்டம் தீட்டினால் என்ன?” என்று வள்ளல் ஆலோசனை கேட்க அமைச்சரும் ‘அருமையான திட்டம்’ என்று ஆமோதிக்கிறார்.
அடுத்த நாளே சென்னை ‘மாநகர சென்னை புனரமைப்பு திட்டம்’ என்ற தனிப்பிரிவு ஒன்றை உருவாக்கி முதல் கட்டமாக இருபத்தி ஐந்து பேரை அரசுப்பணியில் அமர்த்துகிறார் நம் வள்ளல். அனைறைய தினம் சென்னை நகரில் மட்டும் 65 லட்சம் மக்களும், 11 லட்சம் வீடுகளும், இதில் தெருவோர பிளாட்பார குடிசைகள் இரண்டரை லட்சமும், இவர்களுக்கு வாரத்துக்கு சராசரி இரண்டு தேங்காய்கள் தேவைப்படுகின்றன என்ற, புள்ளி விபரமும் வள்ளலுக்குத் தரப்படுகிறது.
ஏற்கனவே தனது ராமாவரம் இல்லத்து எட்டு ஏக்கர் தோட்டத்தில், மாந்தோப்பு, தென்னந்தோப்பு, ஆட்டுப் பண்ணை, மாட்டுப்பண்ணை, கோழிப்பண்ணை, மீன் பண்ணை, பூந்தோட்டம், புள்ளிமான் கூட்டம், கீரைத்தோட்டம், நெல், வயல், நீச்சல் குளம், பறவைகள் வளர குட்டி வேடந்தாங்கல், மன்னர் காலத்து அரண்மனையைச் சுற்றி அகழி இருப்பது போல நம் பொன்மனச் செம்மலின் மாளிகை இயற்கையாகவே அகழி அமைந்திருக்கும் எழில்மிகு தோற்றம் கொண்டது. இந்த அழகிய பிருந்தாவனத்திலேயே சென்னை மாநகர தென்னை புனரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்திப் பார்க்க, அந்த ஊழியர்களில் சிலரை ஈடுபடுத்துகிறார், நம் வள்ளல்.
ஒருநாள், இன்றும் சோழவரத்தில் வேளாண்மை வளர்ச்சித் துறை அலுவலராக பணியாற்றி வரும் ப.ஜெயபால், அன்றைய தினம், ராமாவரம் தோட்டத்தில் தினம் ஒரு கீரை சாப்பிட்டு, மற்றவர்களையும் சாப்பிடவைக்கும் சத்துணவு தந்த நாயகன் வளர்த்த பதினான்கு வகை கீரைகளுக்கு தண்ணீர் பாயச்சிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது வாக்கிங் வந்து கொண்டிருந்த நம வள்ளல் என்றைக்கும் இல்லாத அளவுக்கு ஜெயபாலை உற்று உற்றுக் கவனிக்கிறார்.
வள்ளலின் இந்த பார்வைக்கு அர்த்தம் புரியாத ஜெயபாலுக்கு கூச்சமும் பயமும் ஏற்படுகிறது. எப்படியோ வேலையை ஒரு வழியாய் முடித்துக்கொண்டு ஜெயபால் கிளம்பும்பொழுது, அங்கிருந்த அப்பு அவர்கள் ஓடிவந்து, ‘காலை டிபன் சாப்பிட்டுவிட்டு உங்களை ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்குப் போகச் சொன்னார் தலைவரு’ என்று ஜெயபாலிடம் சொல்கிறார். ஏற்கனவே பயத்தில் இருந்த ஜெயபாலுக்கு இன்னும் பயம் கூடுதலாகிறது. ‘ஏன் அப்படி வள்ளல், வைத்த கண் வாங்காமல் நம்மையே பார்த்துக் கொண்டிருந்தார்? இப்பொழுது எதற்காக ஒரு மணி நேரம் காத்திருக்கச் சொல்லியிருக்கிறார். அந்த ஒரு மணி நேரத்துக்குள் என்ன நடக்கப்போகிறதோ?’ என்ற படபடப்புடன் சாப்பிட்டு முடித்தவுடன் ஜெயபால், தோட்டத்தைச்சுற்றி, நடந்து கொண்டே மண்டையை குழப்பிக் கொண்டிருக்கிறார். ஒரு மணி நேரம் வரை ஒரு அழைப்பும் வராததால், அதே பீதியுடன் தி.நகரில் உள்ள தன் வீட்டிற்கு வந்து சேருகிறார்.
ஆனால் ஜெயப்பாலின் மனைவியோ அன்று என்றும் இல்லாத அளவுக்கு அக்கம் பக்கத்து வீட்டுப் பெண்கள் சூழ்ந்திருக்க மகிழ்ச்சியோடு தன் கணவரை வரவேற்கிறார். தோட்டத்தில் நடந்ததுக்கும், வீட்டில் நடந்து கொண்டிருப்பதற்கும் அரத்தம்விளங்காத ஜெயப்பாலிடம், அவரது துணைவியார், மேஜை மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஆறு ஜோடி புது பேண்ட், சர்ட்டுகளை காண்பித்து ‘தோட்டத்திலிருந்து அய்யா கொடுத்தனுப்பி இருக்காங்க’ என்று சொல்கிறார். ஆனாலும் ஜெயபாலுக்கு சந்தோஷம் ஒருபுறம் இருந்தாலும், குழப்பம் தீரவில்லை. உடனே அப்பு அவர்களிடம் போனில் தொடர்பு கொண்டு, “அண்ணே காலையில் இருந்து, ‘நடக்கிறது என்னவென்றே தெரியவில்லை?’ என்று நடந்ததைக் கூறுகிறார். அதற்கு அப்பு, நீங்கள் காலையில் கீரைப் பாத்தியில் வேலை செய்து கொண்டிருந்தபொழுது நீங்கள் அணிந்திருந்த சட்டையில் இரண்டு கம்கட்டிலும் கிழிந்துபோய் இருந்தது. நம் வள்ளலின் கண்ணில் பட்டுவிட்டிருக்கிறது. பிறகுதான் என்னைக் கூப்பிட்டு ‘ஒரு மணி நேரத்துக்குள்ள ஜெயபால் வீட்டுக்கு ஆறு ஜோடி பேண்ட் சர்ட் போய் சேரணும்’னு சொல்லிட்டார். அப்புறம் நான்தான் போய் வாங்கி வந்து உங்க வீட்ல கொடுத்துட்டு வந்தேன்’, என்கிறார். இப்பொழுதுதான் ஜெயபால் அதிர்ச்சியில் இருந்து மீண்டு இன்ப அதிர்ச்சியில் மூழ்கிப் போகிறார்.
இன்னும் அந்த இனிய நினைவிலிருந்து மீள முடியாத ஜெயபால், ‘வேலைக்கார நாய்க்கு டிப்டாப் டிரஸ் கேட்குதோ’ என்று கோவணத்தை கொடுக்க நினைக்கும் இந்த உலகத்தில், உழைப்பவனை உண்ண வைத்து, உடுக்க வைத்து அழகு பார்க்கும், அதிசயப்பிறவி நம் பொன்மனச் செம்மல் ஒருவர்தான். அதனால்தான் “திருமணத்திற்கு நான் அணிந்த பட்டு வேஷ்டியை, பட்டு சட்டையைக் கூட நான் பாதுகாத்து வைக்கவில்லை. ஆனால் வள்ளல் வாங்கிக் கொடுத்த உடைகளை நைந்து போன நிலையில் கூட இன்னமும் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருக்கிறேன்” என்று சிலிர்த்து சொல்கிறார் ஜெயபால்.
பஞ்சுக்குள் நூலை எடுத்து
பட்டாடை கொடுத்து-
தன்மானத்தைக் காத்து நிற்க!
மண்ணுக்குள் வெட்டியெடுத்து
பொன்கட்டி எடுத்து
தன் தேவைக்கு சேர்த்திருக்க
பாடுபட்ட கை அது பாட்டாளி கை!
என்ன வேண்டும் என்னால் உனக்கு என்ன ஆக வேண்டும்?
முப்பது ஆண்டுகளுக்கு முன்…
சத்யா ஸ்டுடியோ வாசல்…….
பளபளக்கும் சிவப்பு நிற சில்க் சட்டை,பழுப்பேறிய வெள்ளை வேஷ்டி சகிதமாய், எண்ணெயும் தண்ணீரும் கலந்து சீவிய தலை, தான் அணிந்திருந்த சில்க் சட்டைக் காலருக்குள் எண்ணெயும் தண்ணீரும் கலந்த கசடு இறங்கி விடாமல் இருக்க கழுத்தைச்சுற்றிக் கைக்குட்டைத் தூவாளை இப்படி சுத்தமான கிராமத்து மண்வாசணை மணக்க நின்ற அந்த இருபது வயது இளைஞன் திருவிழா கூட்டத்தில் காணாமல் போன குழந்தையைத் தேடும் ஒரு தகப்பனைப் போலவும், ஆபரேஷன் தியேட்டருக்குள் ஆசை மனைவியை அனுப்பி வைத்து விட்டு, வராந்தாவில் காத்துக் கிடக்கும் அன்புக் கணவனைப் போலவும், ஸ்ரீரங்க சொர்க்கவாசலில் ரங்கநாத பெருமாளின் தரிசனத்துக்காக காத்து நிற்கும் பக்தனைப் போலவும், ஸ்டுடியோ வாசலுக்குள் நுழையும் கார்களுக்குள் கண்களை நுழைத்துத் துருவிப் பார்ப்பதும், துழாவிப் பார்ப்பதும் பிறகு தலைகவிழ்ந்து சோகப்பட்டும், அந்த இளைஞன் நின்று கொண்டிருந்தான்.
கோடி மின்னலை குழைத்தெடுத்த அந்த குளிர் நிலவு, கோமேதகப் பெட்டகம், பெட்டகம். குற்றால அருவி, குறிவஞ்சிப்பாட்டு, அகம்கொண்ட எதிரிகளை புறம் கண்ட எரிமலை, வாரிக் கொடுக்கிற கார்மேகம், கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு வந்தகடைசி வள்ளலான எம் மன்னன் எந்த காரில் வருவார். என்று எதிரில் தென்பட்டவர்களிடமெல்லாம் ஒரு பிச்சைக்காரனைப்போல் யாசித்து, விசாரித்து, எல்லோருக்கும் அவன் வேடிக்கைப் பொருளானான்.
அதில் ஒரு இரக்கவான் மட்டும், நீ நேசிக்கற நினைத்ததை முடிக்கும் நீதியின் நாயகன், பச்சை நிற அம்பாசிடரில்தான் வருவார் என்று, சீதைக்கு அனுமன், ராமனின் கணையாழியைக் காட்டி அடையாளம் சொன்னதைப் போல் கூறியவுடன், அந்தச் சீதையை விட, ஆயிரம் மடங்கு ஆனந்தம் அடைந்தான்; அந்த இளைஞன்.
இனி பச்சை நிறத்தில் எது வந்தாலும் ஒரு கை பார்த்து விடுவதென்ற தீர்மானத்துடன், அந்த இளைஞன் நின்றான். நீண்ட நேர பதட்டத்துக்குப் பிறகு, தொலை தூரத்தில் ஒருபசுமை தென்பட்டது. ஆம் அது நம் கலியுக கர்ண்னின் தேர்தான். நம் காவிய நாயகனின் பச்சைநிறக் கார்தான். பச்சை நிறத்தில் மின்னலா? ஓ.. காருக்குள் இருப்பது ஒளிவீசும் பகலவனாயிற்றே! பரவசம் தாளவில்லை. அந்தப் பச்சை நிறக் கார் சர்ரென்று வாசலை கிழித்து நுழைய, அனும் குறுக்கேபாய, கார் கன அடி பிசகி நின்று, பிறகு பின்னோக்கி வருகிறது. எப்படிப் பயமில்லாமல் விழுந்தானோ, அதே வேகத்தில் எழுந்து காரின் கண்ணாடிப் பக்கம் ஓடிவந்து நின்று கொண்டான் அந்த இளைஞன்.
பால்! நிலவை மூடியிருந்த, மேகப் பனி மூட்டம் துளித்துளியாய்க் கரைவது போலவும், பளிங்கு மாளிகையின் மணிமண்டப பட்டுத் திரைச் சேலை மெல்ல, மெல்ல இறங்குவது போலவும், காரின் கண்ணாடிக் கதவுகள் மெதுவாக இறங்குகிறது. அவனுடைய முகமெல்லாம் வியர்வைத்துளிகள்.முதலில் நம் வெற்றித் திருமகனின் நெற்றி மட்டும் தெரிகிறது. பிறகு ஈரமும், வீரமும கலந்த இருவிழிகள் தெரிகிறது. பிறகு வடிவான மூக்குத் தெரிகிறது. பிறகு, தாமரை மலரின் இரண்டு இதழ்களை பிய்த்து பதித்தது போன்ற செம்பவள வாய் தெரிகிறது. இப்பொழுது வட்ட வடிவமான முழு சந்திர பிம்ப முகத்தைப் பார்க்கிறான்.
இப்படி ஒரு பிறைநிலவு மெல்ல, மெல்ல முழு நிலவாய் மாறுகிற அதிசயத்தை ஒருமொட்டு முழு மலராக மலர்ந்து விரிகின்ற, அதிசயத்தை தன் வாழ்நாளில் முதன் முதலாக பார்த்து அனுபவிக்கிறான். ஒரு தாயின் மணி வயிற்றில் உருவான கரு, அழகிய சிசுவாக மாறுகிற அதிசயத்தை அப்படியே அவன் மட்டும் பார்த்ததாக ஆனந்தப்படுகிறான். இப்படி பார்த்து, பார்த்து, அப்படியே அவன் மூர்ச்சையாகிப் போனான். அவனுக்குப்பேச்சு வரவில்லை. இப்பொழுது பொன்மனச் செம்மலின் பொற்கரம் சன்னலுக்கு வெளியே வந்து, அவனது புழுதி மண் தோளை தொட்டு மட்டும் உலக்கிற்றது. சிலிர்க்கிறான்.
தனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தும், தனக்கு நினைவே தெரியாமல் நோய்வாய்ப்பட்ட போதும், அந்த வீரத் திருமகனை! வாரிக்கொடுக்கிற அந்த வள்ளலை! வந்து சந்தித்தாலும், வேதமொழியாக முதலில் அவர்களிடம் கேட்கும் விசாரிப்பை, அந்த இளைஞனிடமும் அவதாரத் திருமகனான நம் வள்ளல், கேட்கிறார்-
“உனக்கு என்ன வேண்டும்? என்னால் உனக்கு என்ன ஆக வேண்டும்?-பக்தன் பதறிப்போனான்.
“ஒன்றும் வேண்டாம்”
“ஆபத்து காலத்தில் என்னிடம் வா. நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொன்ன ஏசுபிரானுக்குப்பிறகு,
“எல்லாம் நானே” “நான் பார்த்துக்கொள்கிறே” என்று கீதை சொன்ன கண்ணனுக்குப் பிறகு, நபிகள் நாயகத்துக்குப் பிறகு- இந்த வேத வார்த்தையை வள்ளல் சொன்னவுடன், இளைஞனின் இதயம் கனத்து, கண்களில் நீர் மட்டும் வழிகிறது. வள்ளலன் வலதுகரம் அந்த வியர்வை ஜாதியின் முகம் தொட்டு துடைத்து விடுகிறது. அந்த வித்தக விரல்களின் ஸ்பரிசத்தில், அந்த இளைஞனுக்கு தைரியம் பிறக்கிறது.
“எனக்குத் திருமணம் செய்து வைக்க, இரண்டு வருடங்களாக என் பெற்றோர்கள் ஏற்பாடு செய்து வருகிறார்கள். செய்தால் உங்கள் தலைமையில்தான் திருமணம் செய்து கொள்வேன்” என்று சொல்லி இரண்டு வருடங்களாக உங்களைச் சந்திக்க முயற்சி செய்து வருகிறேன். ஆனால் இன்றுதான் எனக்கு அந்த பாக்கியம் கிடைத்திருக்கிறது.
“எந்தத் தேதியில் உன் திருமணம்?”
“நீங்க சொல்ற தேதியில தான்”
“இல்லே…இல்லே…திருமணங்கறது பெரியவங்க பார்த்து வைக்கிற தேதி, அவுங்க நிச்சயத்த தேதியோட வா!”
இரண்டு கால்களில் நடந்து வந்த அந்த இளைஞன், இப்பொழுது, இரண்டு இறக்கைகளோடு போரூருக்கு அருகில் உள்ள தன் கிராமத்திறகுப் பறந்து செல்கிறான்.
மூன்று நாள் கழித்து திருமணப் பத்திரிக்கையுடன் சத்யா ஸ்டுடியோ வாசலில் அந்த இளைஞன் நிற்கிறான்.
இப்பொழுது வாட்சுமேனே வரவேற்று வாஞ்சையுடன், அந்த இளைஞனை, “உழைத்து வாழ வேண்டும்” படப்பிடிப்பில் வாள் வீச்சில் இருந்த வள்ளலிடம் அழைத்துச் செல்கிறார். அடையாளம் கண்டு கொண்ட வள்ளல், அருகில் வரச் சொல்கிறார்.
இளைஞன் மெல்லியதான குரலில், “வருகிற ஒன்பதாம் தேதி, ஒன்பதரை மணிக்குக் கல்யாணம்”
பத்திரிகையை வாங்கிய வள்ளல் தன்னுடைய மேக்கப் பெட்டிக்குள் சொருகிக்கொண்டே, பக்கத்தில் நின்ற உதவியாளரிடன், ஒன்பதாம் தேதியை ஞாபகப்படுத்தச்சொல்கிறார்.
ஒன்பதாம் தேதி மணி ஒன்பதேகால். அந்தத் திருமணப் பந்தலில் ‘குய்யோ முறையோ’ என்று ஒரே கூச்சல்.
“நான் அப்பவே சொன்னேன் கேட்டியா நீ அவருக்குச் சொந்தமா பந்தமா? இல்லை நீ வட்டமா? மாவட்டமா? இல்லை நீ எம்.எல்.ஏவா, எம்.பி.யா? உன்னை மாதிரி சாதாரண ரசிகன் வீட்டுத் திருமணத்துக்கெல்லாம் அவர் வர்றதுக்கு” என்று பெற்றோர்கள் பேசித் தீர்த்தார்கள்.
மூகூர்த்தம் நெருங்கி விட்டதால், உறவுக்காரர்கள் மாப்பிள்ளையை மணவறையில் அமர்ந்து தாலி கட்டச் சொல்கிறார்கள். ஆனால் இளைஞன், வள்ளல் வந்தால்தான் தாலி கட்டுவேன் என்று மறுக்கிறான். ஆனால் ஊர்க்காரர்கள் மாப்பிள்ளையை குண்டுகட்டாகத் தூக்கி, மணவறையில் உட்கார வைக்கிறார்கள் ஆனால் எகிறிப் பாய்ந்து , அந்த இளைஞன் தாலி கட்டமாட்டேன். நானே நேரில் போய் தலைவரைப் பார்க்கிறேன்” என்று ஓட்டமும் நடையுமாய் பஸ் பிடித்து, சத்யா ஸ்டுடியோ நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறான்.!
அதே நேரத்தில்,சத்யா ஸ்டுடியோ உழைக்கும் கரங்கள் படப்பிடிப்பில் மேக்கப்பை சரி செய்ய, பொன்மனச் செம்மல் மேக்கப் அறைக்கு வருகிறார். அப்பொழுதுதான் மேக்கப் பெட்டியில் துருத்திக்கொண்டு தெரிந்த கல்யாணப் பத்திரிக்கை வள்ளலின் கண்களில் படுகிறது. பிரித்துப் பார்க்கிறார். பதறிப்போய்விடுகிறார் வள்ளல்! அருகில் இருந்த உதவியாளரிடம், “ஏன் ஞாபகப்படுத்தவில்லை; என்று ஏசுகிறார். டிரைவரை கூப்பிட்டு காரை எடு” என்கிறார். தார்பாச்சி ஸ்டைலில் கட்டிய வேஷ்டி , ஜிப்பா சகிதமாய் மேக்கப்பைக்கூட கலைக்காமல் காரில் ஏறுகிறார். கார் பறக்கிறது. போரூரைத் தாண்டி, அந்த இளைஞனின் கிராமத்தை விசாரிக்க்கிறார். வள்ளல். அந்த ஊருக்கு கார் போக வழியில்லை என்கிறார்கள்.
காரை விட்டு இறங்குகிறார்; வள்ளல். அந்த உச்சி வெய்யிலில் கால் முளைத்த சூரிய பிம்பமாய் உடன் வந்தவர்கள் எல்லாம் ஓடி வர, ஒரு கிலோமீட்டர் தூரம் வீர நடை போடுகிறார்; வள்ளல்.
வானத்து தேவகுமாரனே தரை இறங்கி வந்தது போல், நம் கருணை வள்ளலின் கால் மலர்கள், அந்தக் கிராமத்துக்குள் பட்டவுடன் , அந்தக் கிராம மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் தம்மை மறந்து திகைத்து நின்றார்கள்.
பொன்மனச் செம்மல் மண மேடைக்குச் செல்கிறார். அங்கே மணப்பெண் இருக்கிறாள் ஆனால் மணமகனைக் காணவில்லை. எங்கே? என்று கேட்கிறார் வள்ளல்.
உங்களைத் தான் தேடி ஓடி விட்டான்” என்று ஊரார் சொல்கிறார்கள்.
உடனே வள்ளல் அந்த இளைஞனை அழைத்து வர காரை அனுப்புகிறார். சத்யா ஸ்டுடியோ வாசலை நெருங்கிக் கொண்டிருந்த இளைஞனை காரில் தூக்கிப் போடுகிறார்கள்.
மாப்பிள்ளை மணவறைக்கு வந்தாகிவிட்டது. மக்கள் திலகம் மாங்கல்யம் எடுத்துத் தருகிறார். திருமணம் இனிதாக முடிந்த பிறகு, தன் ஜிப்பா பாக்கெட்டுக்களில் இருந்து இரண்டு நோட்டுக் கட்டுக்களை கையில் கொடுத்து, மாப்பிள்ளையின் காதில் ஏதோ சொல்லிவிட்டு, வள்ளல் கைகூப்பி விடைபெற்றுச் செல்கிறார்.
மறுநாள் அதே சத்யா ஸ்டுடியோ! அதே படப்பிடிப்பு. அங்கு பணியாற்றிய அத்தனை பேரிடமும், மதியம் என் செலவில் விருந்து என்கறார், நம் வள்ளல்.
மதியம் ஒரு மணியாகிவிட்டது. ஷாமியானா பந்தலில் மூன்று சிம்மாசனம் போன்ற சேர். மூன்று சேர் யாருக்காக? எதற்காக இந்த விருந்து? என்று எவருக்குமே புரியவில்லை.
சரியாக ஒரு மணிக்கு ஷாமியானா பந்தலை ஒட்டி ஒரு கார் வந்து நிற்கிறது. நேற்று திருமணமான அதே தம்பதியர், காரில் இருந்து இறங்குகிறார்கள். நடுவில் போடப்பட்டிருந்த நாற்காலியில் தான் உட்கார்ந்து கொண்டு, இடதுபுறம் மணமகளையும், வலதுபுறம் மணமகனையும், உட்கார வைத்து, உண்ண வைத்து அழகு பார்க்கிறார் சத்துணவு தந்த நாயகன் நம் வள்ளல். விருந்து முடிகிறது. ஒரு வேன் வந்து நிறகிறது. அதில் கட்டில்,பீரோ, பாத்திரங்கள், இப்பொழுதான் யூனிட்டில் இருந்தவர்களுக்குப் புரிந்தது. வள்ளல் நேற்று மணமேடையில் மாப்பிள்ளையின் காதில் விருந்துக்கு, வரச்சொன்ன விஷயம்.
பொன்மனச் செம்மல் சம்பந்தி விருந்துண்ட அந்த இளைஞன் யார்?
அந்த இளைஞன்தான, வள்ளல் நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது, வள்ளல் மீண்டும் உயிர் பெற தீ மிதித்து, தன்னுடை ஒரு கையை வெட்டிக்கொண்டான் என்று பத்திரிகையில், பரப்பரப்பாகப் பேசப்பட்டவன்!
வள்ளலே! இன்றைக்கு மக்களின் மனதில் இடம் பிடிக்க, மார்க்கம் தெரியாமல் அகநானூறு, புறநானூற்றில் இருந்து அரிஸ்டாட்டில், காரல் மார்க்ஸ் வரை கரைத்துக் குடித்துவிட்டேன் என்கிற தகுதியோடு, மேடைகளில் பேசிக் கைதட்டல் மட்டும் வாங்கியவர்களெல்லாம், இன்று உனது திசை நோக்கி வாழ்கிறார்கள். அதனால் தான் கடையேழு வள்ளல்களுக்குப் பிறகு வந்த கடைசி வள்ளலாய், எட்டாவது வள்ளல் என்று இன்று வரலாறு உன்னை இணைத்துக்கொண்டது.
அள்ளிக் கொடுத்து வாழ்பவர் நெஞ்சம்
ஆனந்தப் பூந்தோப்பு – வாழ்வில்
நல்லவர் என்றும் கெடுவதில்லை – இது
நான்குமறைத் தீர்ப்பு.
எம்.ஜி.ஆரா….எனக்குத் தெரியாது!
ஒரு கார்த்திகை மாதக் கருக்கிருட்டு! செங்கற்பட்டிலிருந்து படப்பிடிப்பை முடித்துக்கொண்டு வள்ளல், நடுநிசி பன்னிரெண்டு மணிவாக்கில் காரில் வந்து கொண்டிருக்கிறார்.
கண்விழித்தவாறே வள்ளல் வந்து கொண்டிருந்த பொழுது, வழியில் போலீஸ் உடையில் நின்ற ஒருவரைப் பார்க்கிறார். வள்ளலின் கார் அவரைக் கடந்து செல்கிற போது, வள்ளலின் நெஞ்சில் பொறி தட்டுகிறது. ஆள் நடமாட்டமே இல்லாத இந்த அர்த்த ராத்திரியில், அந்தப் போலீஸ்காரர் பஸ்ஸூக்காக காத்து நிற்கிறார்; என்பதை புரிந்து கொள்கிறார்.
உடனே கார் டிரைவரிடம் காரை நிறுத்தச்சொல்கிறார். கார் பின்னோக்கி வருகிறது. போலீஸ்காரர் அருகில் காரை நிறுத்தி கதவைத் திறந்து “ஏறுங்கள், எங்கே போக வேண்டும்” என்கிறார்.
“பரவாயில்லை. நான் பஸ்ஸிலேயே வந்து விடுகிறேன்” என்கிறார் அந்தப் போலீஸ்காரர்.
நேரம் ஆகிவிட்டது. இனி இந்த ரூட்டில் பஸ் கிடையாது. ஏறிக்கொள்ளுங்கள்” என்று வள்ளல் வலுக்கட்டாயம் செய்ய, போலீஸ்காரர் வேண்டா வெறுப்பாக ஏறுகிறார்.!
லைட்டைப் போட்டு, “சாப்பிட்டீங்களா?” என்று கேட்டுக்கொண்டே, சீட்டுக்கு பின்னால் இருந்த பிஸ்கட், பழங்களை எடுத்துக் கொடுக்கிறார்.
“இப்படி ஓசியில் பயணம் செய்வதே எனக்கு உடன் பாடில்லை. இன்னும் நீங்கள் உண்ணச் சொல்லி வேறு என்னை இழிவு படுத்தாதீர்கள்” என்று போலீஸ்காரர் மறுக்கிறார். பொன்மனச் செம்மல் பூரிக்கிறார். இருப்பவனில் இருந்து, இல்லாதவன் வரை படித்து பதவியில் இருக்கும் எத்தனையோ பேர் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று நம் வள்ளலிடம், வேண்டியதை பெற்றுச் சென்றிருக்கிறார்கள். ஆனால் சாதாரண பொறுப்பில் இருக்கும் இந்தப் போலீஸ்காரனின் நேர்மை, செம்மலை சிலிரக்க வைத்து விட்டது.!
வள்ளலின் கார் காத தூரத்தில் வந்து கொண்டிருந்தாலும், காரின் நிறத்தையும், ஒலியையும் மணம் கமழும் ஓடிகான் வாசனையையும், வைத்து, இது வள்ளலின் கார் என்றும், கார் சென்ற தடத்தை தொட்டு வணங்குகிற அளவுக்கு, புகழுடன் திகழ்ந்த நேரம் அது!
அரைமணி நேரம் கார் சென்று கொண்டிருக்கிறது! ஆனால், அது வரை வள்ளலைப் பற்றிப் பெரிதாகப் போற்றிப் புகழ்ந்து பேசாமல் அந்த போலீஸ்காரர் பொருட்படுத்தாமல் வந்ததே, புரட்சித்தலைவருக்கு அந்த போலீஸ்காரர் மீது மரியாதையைக் கூடுதலாக்கியது.
“நான் தான் எம்.ஜி.ஆர்”
“கேள்விப்பட்டிருக்கிறேன்”
பொன்மனச் செம்மலின் முகத்தில் கோபம் இல்லை, பதிலுக்கு புன்முறுவல் மலர்கிறது.
“என் படங்களைப் பார்த்து இருக்கிறீர்களா?”
“நான் சினிமாவே பார்ப்பதில்லை. “புரட்சித்தலைர் இன்னும் பிரம்மிக்கிறார். இப்பொழுது கார் சத்தத்தைத் தவிர ஒரே நிசப்தம்.
போலீஸ்காரர் தனது வீட்டிற்கு அரை கிலோமீட்டர் தூரத்துக்கு முன்பே காரை நிறுத்தச்சொல்லி, “இங்கேயே இறங்கிக் கொள்கிறேன்”என்கிறார்.
“ஏன் நீங்கள் குறிப்பிட்ட அந்த விலாசம் இன்னும் அரை கிலோ மீட்டர் தூரம் இருக்கிறதே”
“சாதாரண போலீஸ் உத்தியோகத்தில் இருக்கும் நான் காரில் வந்து இறங்கினால்: என் வீட்டிற்கு அருகில் உள்ளவர்கள் என்னைத் தவறாக நினைத்துக்கொள்வார்கள். இதுவரை இப்படி நான் யார் காரிலும் ஓசியில் வந்த பழக்கமில்லை. “நீங்கள் இவ்வளவு தூரம் செய்த உபகாரத்திற்கு நன்றி.
வள்ளல் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. ‘அவர் எந்த போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிகிறார் என்பதை மட்டும் கேட்டுத் தெரிந்து கொண்டு கிளம்புகிறார்.
அடுத்த நாள் செங்கல் பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து” நான் எம்.ஜி.ஆர். பேசுகிறேன்” என்கிறார் வள்ளல்.
இரவு சந்தித்த போலீஸ்காரரைப் பற்றி விசாரிக்கிறார்.
டி.எஸ்.பி. சொல்கிறார், “நீங்கள் குறிப்பிடும் அவர் இன்று விடுப்பில் இருக்கிறார். அவர் கையூட்டு வாங்காதவர். கடமை தவறாதவர். காவல் துறையின் நேர்மைக்கு இவரே இலக்கணம். வெற்றிலை பாக்கு, பீடி, சிகரெட் போன்ற லாகிரி வஸ்தோ, நாடகம், சினிமா போன்ற பொழுது போக்கு அம்சங்களெல்லாம் இவர் அறியாதவர்! கல்யாண வயதில் உள்ள மூன்று பெண்களையும், கரை சேர்க்க முடியாமல் கஷ்டத்தில் இருக்கிறார்’ என்கிற விபரங்கள் டி.எஸ்.பியால் சொல்லப்படுகிறது.
கேட்டுக்கொண்ட டி.எஸ்.பி, “உங்களோடு போனில் ஆளுக்கொரு வார்த்தைப் பேச ஆசைப்படுகிறார்கள். “போனை அவர்களிடம் கொடுக்கலாமா? என்கிறார். வள்ளலும் கொடுங்கள்; என்கிறார். பேசுகிறார். அந்தப் போலீஸ் ஸ்டேஷனே புண்ணியம் பெற்றதாக புளகாங்கிதம் அடைந்தனர். அந்த போலீஸ்காரர்கள்.
மறுநாள் அந்தப் போலீஸ்காரர் ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து வரப்படுகிறார். அவரிடம் பேப்பரில் மடித்த பெரிய பணக்கட்டை கொடுத்து “இதை வைத்து உங்கள் பெண்களின் கல்யாணத்தை நடத்துங்கள்” என்கிறார் வள்ளல், போலீஸ்காரர் மறுக்கிறார்.
“நான் ஏதாவது உங்களிடம் காரியமாற்றச் சொல்லி அதற்காக கொடுத்தால், அது தவறு. என்னால் ஆக வேண்டியது உங்களுக்கும், உங்களால் ஆக வேண்டியது எனக்கும், ஏதும் இல்லை. நான் உங்கள், கூடப் பிறந்த ஒரு சகோதரனாக நினைத்துக் கொடுக்கிறேன். பெற்றுக்கொள்ளுங்கள்” என்று சொன்னபிறகு, கேட்டும் கூட கிள்ளிக்கொடுக்காத கனவான்கள் வாழும் இந்த உலகில், ரோட்டில் நின்றவனை அழைத்துச் சென்று அள்ளிக் கொடுத்த வள்ளலின் கருணையில், நெகிழ்ந்து போய் பெற்றுக் கொள்கிறார் போலீஸ்காரர். பிறகொரு தேதியில் புரட்சித்தலைவரே சென்று, அந்த போலீஸ்காரரின் மூன்று பெண்களின் திருமணத்தையும் நடத்தி வைத்து, வாழ்த்தி இருக்கிறார்.
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்
மாபெரும் வீரர் மானம் காப்போர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்
இல்லை என்ற சொல்லை இல்லாமலாக்கியவர்!
நடிகர்தானே! நாலாங்கிளாஸ் வரை படிக்காதவர்தானே என்று புரட்சித் தலைவரைப் பற்றி சிலர் நாக்கூசாமல் எள்ளி நகையாடிய நேரம் அது. புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக்கழகமாய் தன்னை மாற்றிக்கொண்டவர்.
அதனால்தான் அந்த வள்ளல் பெருந்தகை, சென்னை தியாகராயர் கலைக்கல்லூரியின் சேர்மனாக சிம்மாசனத்தில் அமர முடிந்தது.
பொன்மச் செம்மல் வாரிக்கொடுக்கிற வள்ளல் மட்டுமல்ல. தன் வாசல் தேடி வந்தவன், வானவில்லைக் கேட்டால்கூட, வளைத்துக் கொடுக்கிற வல்லமை பெற்றவர். அன்று ஏ.வி.எம்மில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு கார் வாசலை நெருங்கும்போது, திடீரென்று டிரைவரிடம் காரை நிறுத்தச் சொல்கிறார். கார் கண்ணாடியை இறக்கி,
“ஹலோ செல்வம்”
அந்தப் பெயருக்குரியவர் திகைத்துப் போய், கார் அருகே வருகிறார்.
“உங்களைத்தான் பார்க்க வந்தேன்” என்கிறார் சினிமா மக்கள் தொடர்பாளர் சினிநியூஸ் செல்வம்.
“என்ன வேண்டும் சொல்லுங்கள்!”
“என் நண்பரின் தம்பிக்கு தியாகராய கல்லூரியில் இடம் வேண்டும். பர்ஸ்ட் லிஸ்ட், செகண்ட் லிஸ்ட்டெல்லாம் போட்டாகிவிட்டது”
பெயர், தகுதியெல்லாம் கேட்கிறார்; வள்ளல் அருகில் இருந்த திருப்பதிசாமி, எல்லாவற்றையும் குறித்துக் கொள்கிறார்.
தன் வாழ்நாளில் “முடியாது” “இல்லை” என்கிற இரண்டு வார்த்தைகளையும், தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள், என்று அப்புறப்படுத்தியவர் பொன்மனச் செம்மல்.
அதனால்தான், அவரால் மட்டுமே ஒரு அவதார புருஷனைப்போல் என்ன வேண்டும்? நானிருக்கிறேன், நான் பார்த்துக்கொள்கிறேன், கலங்காதீர்கள் கவலைப்படாதீர்கள், கண்ணீரை நான் துடைக்கிறேன்” என்றெல்லாம் சொல்லி செயல்பட முடிந்தது.
இரண்டு நாள் கழித்து, சத்யா ஸ்டுடியோவில் புரட்சித் தலைவரை காலேஜ் சீட் விஷயமாக விபரம் கேடக்ச் செல்கிறார் செல்வம்.
தான் யாரென்ற குறிப்புடன் ஸ்லிப், உள்ளே செல்கிறது. ஆனால், புரட்சித் தலைவரைப் பார்க்க இயலாது என்று, அவரின் பார்வைக்கே செல்லாமல் திருப்பதிசாமி என்பவரால், ஸ்லிப் திருப்பி அனுப்பப்படுகிறது.
தான்அவமானப்படுத்தப்பட்டு விட்டதாக, வேதனையுடன் செல்வம் திரும்புகிறபொழுது, சொல்லி வைத்தாற்போல் சூட்டிங்கை முடித்துக் கொண்டு, செட்டை விட்டு வெளியில் வந்த கொண்டிருந்த வள்ளல், செல்வத்தைப் பார்த்து விடுகிறார்.
“ஸ்டுடியோவுக்கு வந்துவிட்டு, என்னை ஏன் பார்க்காமல் செல்கிறீர்கள்?”
நடந்தவைகளைச் சொல்கிறார் செல்வம். திருப்பதிசாமி திருதிருவென்று விழிக்கிறா. மீண்டும் சொல்கிறார்
“நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் தைரியமாக புறப்படுங்கள்”
நாளை கடைசி நாள் நம்பிக்கை இழந்து செல்கிறார் செல்வம்.
மறுநாள் ஏ.வி.எம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் தயாரிப்பாளர் ஜி.என்.வேலுமணி அவர்களுடைய மகன் சரவணனின் திருமணம். வாழ்த்த வந்த வள்ளல், மண்டப ஓரமாக இருந்த புல்தரையில் வட்ட வரிசையில் போடப்பட்டிருந்த சேரில், பத்திரிகை நண்பர்களுடனும், திரையுலக பிரமுகர்களுடனும் பேசிக் கொண்டிருக்கிறார். தாமதமாக வந்த செல்வம். உட்காரச் சேர் இல்லாமல், சுற்றி வருகிறார்.. இதைப் பார்த்த வள்ளல்.
“சீட் கிடைக்கலேன்னு டென்ஷன் ஆகாதீங்க செல்வம்.. நான் சீட் தர்றேன்” என்று தான் உட்கார்ந்திருந்த சேரிலேயே நகர்ந்து உட்கார்ந்து, இடமளிக்கிறார் வள்ளல். இரு பொருளில் பேசிய வள்ளலின் போக்கு, அப்பொழுது கூட செல்வம் அவர்களுக்கு புரிந்தும், புரியாமல் இருந்தது.
மறுநாள் காலையில், சீட் கேட்ட நண்பருக்கு போன் செய்து,
“உன் தம்பியின் சீட் விஷயம் என்னாச்சு?” என்று செல்வம் கேட்கிறார்.
“இன்றிலிருந்து தம்பி காலேஜூக்குப் போகிறான். இதைச் சொல்ல இரண்டு நாளா ட்ரை பன்றேன். உங்களை பார்க்க முடியல” என்ற நண்பரிடன் இருந்து பதில் வருகிறது. செல்வம் சிந்தை குளிர்ந்து போகிறார்.
வள்ளல் நிகழ்த்திய அற்புதங்களில் இதுவும் ஒன்றோ! என்று சிலகித்துப்போன சினி நியூஸ் செல்வம், நேற்று இருபொருளில் வள்ளல் பேசியதைப் புரிந்துகொண்டு, ராமாவரம் தோட்டத்தை நோக்கி, நன்றி சொல்லக் கிளம்பினார்.
“பத்துத் திங்கள் சுமந்தாளே – அவள்
பெருமைப்பட வேண்டும் – உன்னை
பெற்றதனால் அவள் மற்றவராலே
போற்றப்பட வேண்டும்
கற்றவர் சபையில் உனக்காக – தனி
இடமும் தரவேண்டும் – உன்
கண்ணில் ஒரு துளி நீர் வந்தாலும்
உலகம் அழ வேண்டும்”
காகித அம்புகள்…
நம் காவிய நாயகன், கல்வெட்டு என்று தெரியாமலேயே, தன்னுடைய காகித அம்புகளால் தகர்த்து விடலாம் என்று நினைத்து, தாங்களே தகர்ந்து போனார்கள். மக்களின் இதய சிம்மாசனத்தில் மட்டுமே வீற்றிருந்த வள்ளல், அரசு சிம்மாசனத்தில் அமராத நேரமது. புதுக் கட்சித் தொடங்கி, புறப்பட்டு புயலா