எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்
- நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்க உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.
- கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்!
- அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
- சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!
- வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
- வன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான் அதற்குப் பரிசாக்க் கிடைக்கும் என்பது நிச்சயம்.
- எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.
- எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை.
- எழுத்தாளர் என்றால் எழுத்தை ஆள்பவர்கள் என்று கருதுவதால் அந்த எழுத்துக்கு அவர்கள் உரிமையுள்ளவர்கள்.
- உழைப்பே உயர்வு தரும்; உழைப்போம் உயர்வோம்; உழைப்போரே உயர்ந்தோர்; உழைப்பவராலே உலகம் உயர்ந்திடும்.
- நமது சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும்; சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.
- அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா அவர்கள்.
- சமத்துவச் சமுதாயம் காண்பதே உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான இலட்சியம் எனும் மூலக் கருத்திற்கு முதலிடம் தாருங்கள்.
- உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் த்துதவத்தை நிலைநாட்டுவீர்.
- ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை தேவை. மகிழ்ச்சி தேவை. இந்தத் தேவைகளுக்கு அடிப்படை வளரவும் வாழவும் தடையில்லாமல் இருப்பதுதான்.
- தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் நலன்களைக் காப்பாற்றி அவர்களை மேம்படுத்தப் பாடுபடுவோம்.
- சமுதாயத்தில் மக்கள் வாழ்வதற்காக ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்.
- சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பதுஅவசியம்.
- தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமழ்ச் சமுதாயம் தமிழ் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.
- ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.
- மது அருந்துவது மக்கள் அறியாமலேயே எத்தகைய கேடுகளை அவர்களுக்கு உண்டாக்குமோ, அது போல மக்கள் தொகைப் பெருக்கமும் நாம் அறியாமலேயே சமுதாயத்திற்கு கேடு உண்டாக்கக் கூடியவை.
- கூட்டுறவு என்பது மனிதனுக்கு மனிதன் தகுதியை உணர்வது மட்டுமல்ல – தரத்தை மட்டுமல்ல. அவர்களை மதிக்கக் கூடிய பணியைப் பெறுவது மட்டுமல்ல, தங்களுக்கு முடிவதைப் பிறர் இயலாமையை எண்ணி அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய அந்த எண்ணமே கூட்டுறவு இயக்கத்தின் அடிப்படை மூலதனமாகும்.
- கோபதாபம் மனிதர்களுக்கு மட்டுமல்ல இசைக்கும் உண்டு. இசையின் மூலம் அமைதியைக் காட்ட முடியும். கோபதாபத்தையும் காட்ட முடியும்.
- மனிதர்களுக்குச் சில குணங்கள் உண்டு. அவர்களைக் கட்டுப்படுத்தி வாழ்ந்தால் சரியான முறையில் தங்களது சந்ததியினரை வழி நடத்திச சென்றால் அழகான குடும்பத்தினரை உருவாக்க முடியும்.
- கடவுளை இரண்டு வழிகளில் அணுக முடியும். ஒன்று இசையால், மற்றொன்று கடுமையான தவத்தால்.
- ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் அமைதியில்தான் ஆரம்பமாகிறது. பிறகு இறுதியில் உச்சக்கட்டம் ஏற்பட்டு முடிகிறது.
- பாடல் முதலில் தனக்காகப் பாடப்பட வேண்டும். தான் ரசிப்பதற்காகப் பாட வேண்டும். பிறர் ரசிப்பதற்காக அல்ல! ஆடலும் பாடலும் அதுபோலத்தான். ஆடுபவர்கள் தமக்காகத்தான் ஆட வேண்டும். பிறர் மகிழ்வதற்காக அல்ல.
- குழந்தை எந்தத் தொழிலை விரும்புகிறதோ அதையே நாம் கற்றுக் கொடுக்க வேண்டும்.
- கலை எப்போதும் இருக்கும். ஆனால் கலைஞர்கள் இருக்கமாட்டார்கள்.
- இன்றைக்கு வாழ்கின்ற நாம் நமது கடமையைச் சரியாகச் செய்தால்தான் எதிர் காலத்தில் வரும் நமது சந்ததியினர் நல்வாழ்வு வாழமுடியும்.
- சிலர் மக்களை ஏமாளிகள் என்று கருதுகிறார்கள். அவர்கள் இன்னும் மக்களைப் புரிந்துகொள்ளாத்தே இதற்குக் காரணம்.
- பதவிகள் எல்லாம் வந்தால் வரும்; போனால் போகும். நான் நடிகனாக இருந்தவன்; அந்த உணர்வை என்னால் மாற்றிக் கொள்ள முடியாது.
- கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படுவது சிக்கலை ஏற்படுத்துவதற்காக அல்ல; அவசியமான நன்மைகளைப் பெறுவதற்கும் தேசிய ஒருமைப்பாடு வலுப்பெருவதற்குமேயாகும்.
- ஒரே கட்சி ஆட்சிதான் இந்தியாவில் இருக்க வேண்டுமென்று யார் விரும்பினாலும் சரி, அது இந்த நாட்டிற்கு ஒத்து வராது என்பதை நான் கண்டிப்பாக்க் கூற விரும்புகிறேன்.
- சுயநலமில்லாத நம்பிக்கை வெற்றி பெறும்.
- எல்லோரும் ஒத்துழைத்தால் மக்களைத் தயார்ப்படுத்த முடியும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
- மக்களுக்கு எதுதேவையோ அதைச் செய்வதற்குத்தான் அரசு. அந்த அரசைத் தேர்ந்தெடுப்பது மக்கள்.
- சீர்திருத்தக்காரன் என்றால் கடவுளை நம்பாதவன், பண்பில்லாதவன், அடக்கமில்லாதவன், அகந்தையுடையவன் என்றெல்லாம் பொருள் கொள்ளுதல் கூடாது.
- உயர்ந்த கல்வி கற்கும்போதே உழைக்கும் கல்வியையும் மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இசைத்தட்டுகளின் மூலம் ஒலித்தால் மட்டும் போதாது. மாணவர்களுக்கும் அந்தப் பாடல் பாடம் ஆக வேண்டும்.
- நம்முடைய குழந்தை மூக்கு வடித்துக் கொண்டு நின்றால் நாம் அதைத் துடைக்கிறோம்; ஆனால் அடுத்தவர்களின் குழந்தை அவ்வாறு இருந்தால் நாம் துடைப்பதில்லை.
- கலைஞர்கள் நாட்டுக்காகப் பாடுபடவேண்டும்; அப்போதுதான் அவர்கள் சிரஞ்சீவியாக இருப்பார்கள்.
- மத்த்தின் பெயரால் பிரச்சினைகள் இல்லை. அவர்கள் செய்கின்ற செயல்களினால்தான் பிரச்சினைகள் வருகின்றன.
- உள்ளத்தில் லட்சியத்தை வைத்துக் கொண்டால் இறுதிவரை அதற்காகப் பாடுபட வேண்டும்.
- நமக்குள் பல்வேறு பிரச்சினைகள் இருக்கலாம்; ஆனால் அந்த நேரத்தில் இந்தியாவைப் பிரிக்க எந்த சக்தி வந்தாலும் அதை எதிர்த்தே ஆகவேண்டும்.
- கடமையைச் செய்கின்ற ஒவ்வொருவரும் ஒன்றே குலம் என்ற கொள்கைக்குச் சொந்தக்கார்ர்கள்தான்.
- இளைஞர்கள் அரசியலைத் தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிகளாக இருக்கக்கூடாது.
- நீதித் துறையில் அரசியல் கட்சி வரக்கூடாது; வந்துவிட்டால் நீதி செத்துவிடும்.
- நாட்டின் தற்காப்புக்காக உயிரையும் பணயம் வைத்துப் போராட வேண்டியது நம் ஒவ்வொருவரது கடமையாகும்.
- நாம் வந்த வழியை மறந்துவிட்டோமானால் போகும் வழி நம்க்குப் புரியாமல் போய்விடும்.
- சக்தி குறைந்தவர்களிடம் வீரத்தைக் காட்டுவது சரியல்ல.
- அரசியல் கட்சிகளில் சேருபவர்கள் எந்தத் தொழிலும் செய்யக்கூடாது என்பதல்ல; அவர்கள் செய்யும் தொழிலில் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும்.
- நல்லவன் என்று பேர் எடுப்பது மிகவும் சிரம்மான காரியம்.
- புகழை நாம் தேடிச் செல்லக்கூடாது. அதுதான் நம்மைத் தேடி வரவேண்டும்.
- நல்ல நிலைக்கு வந்த பிறகும் நாம் அனுபவித்த துன்ப, துயரங்களை நினைவில் கொண்டால்தான் நமது கடமையைச் சரிவர நிறைவேற்ற முடியும்.
- சொந்தக் காலில் நிற்பது மட்டுமல்ல, நடைமுறைக்குத் தேவையானதும் ஆகும்.
- தமிழுக்காக, தமிழ் இன்த்திற்காகப் பாடுபட்டு கொள்கைக்காக இருக்கின்ற தியாகம் செய்த நல்லவர்களை நான் என்றும் மறக்க மாட்டேன். விட்டுவிடவும் மாட்டேன்.
- மத, இன, சாதி, மொழி, முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும், ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும்.
- மக்கள் தொகைப் பெருக்கம் மதுவைப் போலக் கேடு பயக்கும்
- ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை; வசதி இருக்கும்போது எளிமையாக இருப்பதுதான் தியாகம்.
- இந்த மக்களிடமிருந்து என்னைப் பிரித்திடவோ, என்னிடமிருந்து இந்த மக்களைப் பிரித்திடவோ எந்த சக்தியாலும் முடியாது.
- உழைக்கும் வர்க்கத்திற்கே இந்த உலகம் உரிமையானது என்பதை உணர்த்தும் நாள தான் இந்த மே நாள் ஆகும்.
- நம்மை நாமே ஆண்டு கொள்கிற மக்களாட்சியின் வேலைநிறுத்தங்களால் ஏற்படும் இழப்புகள் இறுதியில் உழைக்கும் வர்க்கத்திற்கே பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்.
- சமத்துவ சமுதாம் காண்பதே உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான இலட்சியம் ஆகும்.
- உழைப்போம்! உயர்வோம்! உழைப்பால் உலகை உயர்த்துவோம்! உழைக்கும் மக்கள் அனைவரும் ஒருதாய் மக்கள் என்பதை உலகிற்கு உணர்த்துவோம்.
- படித்தவன் புத்திசாலியாகிறான் என்ற சொன்னால் மட்டும் போதாது. தன்னை வாழவைத்துக் கொள்கிற தகுதியுள்ளவனாக வெளியே வருகிறான்; தொழில் பயின்றவனாக வருகிறான் என்கிற உரிமை – தகுதி இருக்க வேண்டும்.
- மக்கள் தரும் வரிப்பணத்திலிருந்து நமக்குச் சம்பளம் கொடுக்கிறார்கள். ஆகவே மக்களுக்குத் தொண்டு செய்கிறோமே தவிர மக்கள் எஜமானர்கள் அல்ல என்ற வகையில் அரசு அலுவலர்களும், மற்றவர்களும் அந்தப் பணியைச் செய்தால்தான் நீலைமை சீர்படும்; எந்தத் திட்டமும் நிறைவேறும்.
- நேற்று சொன்னதை இன்று மறப்பது அண்ணாவின் அகராதியில் இல்லை. முடியாத்தை முடியவில்லை என்று துணிச்சலாகச் சொல்லுவோம். தவறான வழிகளில் செல்லமாட்டோம். எந்தச் சமயத்தில் எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யப் பின்வாங்கமாட்டோம்.
- மாணவர்களாக இருந்தால் படிப்பு முடிந்து வெளிவரும் வரை அரசியலில் நேரடித் தொடர்பு கொள்ளாமல் இருப்பது; சாதி மதப் பிரிவுளைக் களையும் மனப் பக்குவம் பெறுவது நீந்தக் கற்றுக் கொள்வது போன்றவற்றைக் கடமையாக்க் கொள்ள வேண்டும்.
- உடலைப் பேணிக் காப்பது, தேகப்பயிற்சி செய்வது உண்மைக்கு மட்டுமே மதிப்பளிப்பது, உள்ளத்தூய்மைப் பெறுவது, எவ்வளவு அதிகமாக விஞ்ஞானத்தையும், உலக வரலாற்றையும் கற்க முடியுமோ அத்தனையையும் கற்பது; தற்காப்புக் கேற்ற ஒரு கலையைக் கற்பது இவைகள் எல்லாமே மாணவர்களின் கடமையாகும்.
- எதையும் உண்மையின் அடிப்படையில் விமர்சியுங்கள். முடிவில் உண்மைதான் நிலைக்கும் என்பதை மனதிற்கொண்டு விமர்சியுங்கள்.
- அறிமுகம் என்பது பரஸ்பரம் செய்யபட வேண்டிய காரியம் ஆகும்.
- அண்ணா தி.மு.க.வின் கொள்கையின் பெயர் அண்ணாயிஸம்.
- திராவிடர் இயக்கம் என்பது ஓர் இலட்சியம், குறிக்கோள், எந்த வகையான தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் மலைவாழ் மக்களும் எல்லோரும் சமம் என்பதுதான் திராவிடர் இயக்கம்.
- மக்களை மகிழ்விக்கவே நடிக்கிறோம். அவர்களால்தான் கலைஞர்களின் வாழ்க்கைச சக்கரமே சுழல்கிறது. அவர்களிடமிருந்து ஒதுங்கி வாழ்ந்தால் அவர்கள் ஒதுக்கிவிடுவார்கள்.
- ஜனநாயகத்தின் அடிப்படையே சிந்திப்பதும், பேசுவதும், எழுதுவதும் ஆகும். ஆனால் ஜனநாயகத்திற்கு ஆபத்து ஏற்பதுவதற்குச் சிந்திக்கவும், பேசவும், எழுதவும் உள்ள உரிமையைப் பயன்படுத்த அதே ஜனநாயகம் அனுமதிக்காது.
- சராசரி மனிதனின் எண்ணங்களையும், அவன் தேவைகளின் வற்புறுத்தலையும், அவன் உள்ளத்தின் உரிமை ஒலியையும் எதிரொலிக்காத எவனும் ஒரு அரசியல் கட்சிக்குச் சொந்தம் கொண்டாடத் தகுதியோ உரிமையோ கிடையாது.
- வதந்தி எந்த நேரத்திலும் பரப்பக்கூடாத ஒரு ஆபத்தான , பயங்கர விஷவாயு ஆகும்.
- என்னை எதிரியாக நினைக்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டவர்கள் கூட என்னை நேரில் சந்திக்கும்போது அன்போடு பேசுவதற்கு காரணமே, அவர்களது ஒலிகளையும், எதிரொலிகளையும் நான் என்றும் தடுக்க முயலாதவன் என்பதோடு, அத்தகைய எண்ணத்திற்கும், எனக்கும் வெகுதூரம என்பதனாலும்தான்.
- அரசியல்வாதிகள் ஒரு நாட்டுக்குத்தான் சொந்தம்; கலைஞர்கள் உலகத்திற்கே சொந்தமானவர்கள்.
- செய்யும் தொழிலே தெய்வம் என்கிற உணர்வோடு முயற்சி திருவினையாக்கும் என்கிற நம்பிக்கயோடு பாடுபட்டால் வெற்றி நிச்சயம்.
- மாணவர்களே உங்களுடைய தேவைகளுக்காக பெற்றோர்கள் துன்புறத்துக்கூடாது. உங்கள் ஆசைகளுக்காக அவர்கள் கஷ்டப்படுத்தக்கூடாது. நீங்களே உழைத்து உங்களது விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்.
- கருணையே இல்லாத இடத்தில் எவ்வளவு நிதி இருந்தாலும் பயனில்லை.
- சோதனைகள் வந்தால் பின்னாலேயே சுகம் தேடி வரும். சிரமங்களைக்கொண்டு மனம் இடிந்து விடக்கூடாது. தைரியமாக இரு. எதுவாக இருந்தாலும், என்ன நடந்தாலும் கவலைப்படாதே. நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நினைத்துக்கொள்.
- திருமணம் என்பது சாதாரண வாழ்வில் நடக்குமஒரு நிகழ்ச்சி என்று அலட்சியமாக இருந்துவிடாதே. எதிர்காலத்தில் உனது நிம்மதிக்கு அதுதான் அஸ்திவாரம்.
- ஒரு மனிதன் இறந்தபிறகு அவனை அந்த நாடு மறக்காமல் போற்றினால்தான் அவன் புகழ் பெற்றவனாகின்றான்.
- நீங்கள் உண்பவற்றில் மிகச் சிறந்தது நீங்கள் உழைத்து உண்பதே ஆகும்.
- எவ்வளவு செல்வம் வந்தாலும் நம் வேலையை நாமே செய்துகொள்ள வேண்டும். இதை மக்கள் கட்டளையாக எடுத்துக்கொண்டாலும் சரி, உபதேசமாக எடுத்துக்கொண்டாலும் சரி.
- உழைத்துச் சம்பாதிப்பவர்களே உயர்ந்தவர்கள் என்றலட்சிய்ப பிடிப்பலே அவர்கள் வாழ வேண்டும்.
- கணவன் – மனைவி ஒருவருக்கொருவர் உள்ளன்போடு நேசிக்கவேண்டும். அவர்கள் இருவர் இதயமும் அன்பு நிறைந்திருக்க வேண்டும். ஒருவருக்கொருவர் பாச உணர்வு கொண்டிருக்க வேண்டும். இவைகளை எல்லாம் பண்பாட்டில்தான் பெற முடியுமே தவிர பணத்தினால் அல்ல.
- வீண் ஆடம்பரம் இல்லாமல் மணமக்கள் வாழவேண்டும். பிறர் மெச்ச வேண்டும்என்பதற்காக ஊதாரித்தனமாக யாருக்கும் எந்தவித லாபமும் இல்லாமல் செலவு செய்யக்கூடாது.
- மணமக்கள் எவ்வளவு செல்வத்தோடு வாழ்ந்தாலும் எளிமையோடு இருக்க வேண்டும். பதவி வரும்பொழுது பணிவு வரவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். மணமக்கள் அதைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்களை வளர்த்த பெற்றோரை, உறவினர்களை, உங்களை உயர்த்திவிட்டவர்களை நீங்கள் என்றென்றும் மறக்காமல் இருக்க வேண்டும்.
- எல்லோரும் நமக்கு வேண்டியவர்கள்தான்; ஆனால் எங்கே யாரை வைக்கவேண்டும் என்று பார்க்க வேண்டும். குடும்பத்தில் கழகம் விளைவிப்பவர்களோடு தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது.
- நல்ல நண்பர்களை பெற வேண்டும். எவ்வளவு சொத்து இருக்கிறது அவருக்கு என்று பார்த்து நண்பனைத் தேடினால் அது நட்பைத் தேடுவதாக அமையாது.
- உழைத்துப்பிழைக்கிற அனைவரும் இந்த நாட்டில் மதிக்கப்படுவர். எவ்வளவு படிப்புப்ப படித்தாலும் மேலும் வீட்டில் இருந்து படிக்க வேண்டும் என்று மணமக்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன். ஒரு குடும்பத்தின் தலைவனாகிவிட்டோம் என்று கருதாமல் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
- உங்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டவன் நான். உங்கள் முன்னேற்றத்திற்காக என் வாழ்நாள் முழுவதும் பாடுபடுவேன். நான் போடும் திட்டங்களுக்கு முழுமையான பலன் கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவன் நான்.
- நான் உங்களில் ஒருவன். உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவன். என் உயிர் மூச்சு உள்ளவரை உங்களுக்காகவே உழைப்பேன். எந்த சக்தியும் என்னை உங்களிடமிருந்து பிரிக்க முடியாது.
- நான் ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். நம்பிக்கையில்லாத் தீர்மானம் போன்றவைகளை, கண்டனத் தீர்மானம் முதலியவைகள், ஒரு நாட்டின் மேல்மக்களின் மேல் நம்பிக்கையைப் பாதுகாக்கவும், முன்னால் இருந்த தவறுகள் மீண்டும் தொடர்ந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தினாலும் தவறுகளைச் செய்தவர்களுக்கு மக்கள் என்ன முடிவைத் தந்திருக்கிறார்களோ அதே முடிவு இப்பொழுது இருப்பவர்களுக்கு வந்துவிடக்கூடாதே என்ற நல்ல எண்ண்த்துடன் சொல்லப்படுகின்றன.
- அரசாட்சிபுரிபவர்கள் தீர்மானங்கள் கொண்டு வருவது தேவையானது. அவர்கள் எந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்துஇருக்கிறார்களோ அந்த் மக்களக்கு அவர்கள் செய்யும், ஆற்றும் கடமை என்கிற எண்ணத்தில் இந்தத் தீர்மானங்கள் கொண்டுவரப்படுகின்றன.
- சில நேரங்களில் அரசியல்வாதிகள்தான் ஏதோ தவிர்க்க முடியாத சூழ்நிலையின் விளைவாகத் தங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்திக கொள்வதற்குச் சில சூழ் நிலைகளைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.
- ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்ற நிலைமை நாட்டிலே உருவாக்கப்படும் என்றால் அதைப்பற்றி நிச்சயமாக இந்த அரசு வரவேற்கும், ஒத்துழைக்கும்.
- வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றவர்கள் வன்முறைக்காக ஈடுபடுவதில்லை. வேலைநிறுத்ததிலே ஈடுபடுவர்களுக்கு இனி மேல் பட்டினி கிடப்பது முடியாது எத்தனை நாள்களுக்குத்தான் வருமானம் இல்லாமல் இருப்பது என்ற முறையிலே எண்ணம் ஏற்பட்டு வளர்ந்து, வெறுப்பு மனப்பான்மையாக அது வளரும்போதுதான் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்.
- சட்டங்களைப் பயன்படுத்திக் கொண்டு ஒப்பந்தங்களைச் செய்துகொண்டு அதன் விளைவாக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக கொண்டு பிறகு ஒப்பந்தங்கள் பாதகமாக இருக்கிறது அல்லது சாதகமாக இல்லை என்ற நிலையில் மாறுபாடான நிலைமையை அமைத்துக் கொள்ளக் கூடிய வேதனை தோன்றுகிறதுபோது சட்டத்திற்குப் புறம்பாக ஏதாவது ஒரு வழியைக் கடைபிடித்தாவது ஒரு நன்மையைப் பெறலாமா என்று முயற்சிப்பது சரியல்ல.
- கோபம் வருவதற்கு அடிப்படை நியாயத்தை வைத்துக் கொள்ளல் வேண்டும்.
- சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுத்துப் பயன்படுத்தி உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியுமோ அந்த அளவிற்கு எதையும் செய்யலாம்.
- எந்த அளவிற்கு உங்களைப் பற்றிச் சந்தேகப்படுகிறார்கள் அல்லது குறை கூறுகிறார்கள் எங்களிடம் குற்றம் காணுகிறார்கள். குற்றம் காணுகிறவர்கள் எவ்வளவு அதிகமாக இருக்கிறார்களோ அவ்வளவு அதிகமாக எங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.
- பேரறிஞர்களை இருக்கும்போது பாராட்டுவது இல்லை. மறைந்தபின் பாராட்டி வருகிறோம்.
- நம்மை நாமே ஆண்டுகொள்கிற மக்களாட்சியின் வேலை நிறுத்தங்களால் ஏற்படும் இழப்புகள் இறுதியில் உழைக்கும் வர்க்கத்திற்கே பாதகமான விளைவுகள் ஏற்படுத்தும்.
- சமத்துவச் சமுதாயம் காண்பதே உழைக்கும் வர்கத்தின் உண்மையான இலட்சியம் எனும் மூலக் கருத்திற்கு முதலிடம் தாருங்கள்; நம்மைக் காட்டிலும் நலிந்துள்ள தமது உடன்பிறப்புகளை முன்னேற்றக் கூடிய பொருளாதார மாற்றத்திற்கு அடிப்படை அமைத்திடுங்கள். புது யுகத்தின் ஈட்டி முனைகளாக முன்னோடிகளாக விளங்குங்கள்.
- உழைக்கும் கரங்கள், நாளைய புது உலகை உருவாக்கும் கரங்கள் என்பதையே வரலாறாக எழுதிக்காட்ட உழைக்கும் உடன்பிறப்புக்கள் அனைவரையும் அழைக்கிறேன்.
- தேசிய ஒருமைப்பாடும், ஒற்றுமை மனப்பான்மையும் நம் அனைவருக்கும் மிகவும் இன்றியமையாதவையாகும். மத, இன, சாதி, மொழி, முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தேசியக் கண்ணோட்டமும் ஒற்றுமை மனப்பான்மையும்தான் நம் நாட்டை வளமிக்கதாக உருவாக்க வழி வகுக்கும்.
- மக்களாட்சித் த்ததுவம் நம் நாட்டில் வேரூன்றி நிலைத்து மிளிர்கிறது. நமக்குள் எந்தப் பிரச்சினை,கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும பேச்சுவார்த்தை மூலமாகவே தீர்த்துக்கொள்ள முடியும். வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது.
- அமைதி, ஒற்றுமை, முன்னேற்றம், என்ற முப்பெரும் முழக்கங்களை உயிர் மூச்சாகக் கொண்டு உழைப்போம். நாட்டை உயர்த்திடக் கடமையாற்றுவோம்.
- சரித்திரத்தில் திருப்புமுனைகளை முன் கூட்டியே ஊகித்துச் சொல்வது எல்லோராலும் இயலாத காரியம். தீர்க்க தரிசனம் படைத்தவர்கள் என்று யாரைக் கூறுகிறோம் என்றால் வருங்காலத் தலைமுறைகளுக்கும் பயன்படுகிற நெறிமுறைகளை வாழ்வாலும், வாக்காலும் உணர்த்திவிட்டுச் செல்கிறவர்களைத்தான் அப்படிக் குறிப்பிடுகிறோம்.
- நமது ஆதரவு என்பது அரசுக்கு மட்டுமல்ல. தேசத்தின் வலிமையைக் காக்கும் அதன் முயற்சிகளுக்கு என்பதைக் காலம் உணர்த்தும்.
- மக்களுக்கும் அரசுக்கும் இடையே நெருக்ககமான தொடர்பு அமைவதைப் பொறுத்தே மக்கள் ஆட்சியின் வெற்றியும் அமைந்திடும்.
- இந்தியத் துணைக்கண்டத்தை ஒன்றாக இணைத்து அதன் வாழ்வுக்காகவும் வளர்ச்சிக்காகவும் ஓயாது உழைத்துக் கொண்டிருந்த மகத்தான சக்தியே நேரு.
- ஏழ்மை, வறுமையில் எளிமையாக இருப்பது தியாகம் இல்லை; வசதி இருக்கும் போது எளிமையாக இருபதுதான் தியாகம்.
- உழைக்கும் வர்க்கம் எடுத்துக்கொள்ளும் நிலைக்கு வந்தால் தடுக்க முடியாது; ஆனால் அதற்கு முன்பு நாமே கொடுக்கக் கூடிய நிலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது. செயலும் , பண்பாட்டுடன் இருக்க வேண்டும் இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.
- ஒரு மொழியை நாம் புரிந்துகொள்ள முடியாதபோது அந்த மொழியைக் கட்டாயப் படுத்தக்கூடாது.
- ஜாதி என்பது மனிதரால் உருவாக்கப்பட்டது. கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல.
- இன்றைக்கு ஆண்களின் பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் இருக்கிறது.ஆனால் பெண்களின் பெயருக்கு பின்னால் இல்லை. பெண்கள் தான் ஜாதி ஒழிப்பில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
- ஜாதி என்பது அதிகமாகப் பேசப்பட வேண்டியதில்லை.
- மத மாற்ற நிலை ஏற்படக் காரணம் வறுமை, ஏழ்மை.
- என்னைப் பொறுத்தவரையில் ஜாதி கிடையாது; மதம் கிடையாது. ஒன்றே குலம். ஒருவனே தேவன் என்பதுதான் எனது கடவுட்கொள்கை. நாமே நம்மவர்களைப் பார்த்து, தொடக்கூடாது என்றால் என்ன அர்த்தம்?
- அரசியலை ஒதுக்கிவிட்டு வாழ முடியாது. வாக்குரிமை எப்போது தரப்படுகிறதோ அப்போதே ஒவ்வொருவரும் அரசியல்வாதி ஆகிவிடுகிறார்கள்.
- உயர்வு, தாழ்வு என்ற நிலை சமூகத்தில் இல்லாதபடி செய்ய வேண்டும். அதற்குரிய சட்டங்களைச் செய்ய வேண்டும். சமூக சீர்திருத்தம் பேசிப் பயனில்லை.
- தியாகம் செய்கிறவர்கள் தியாகத்திற்கு மட்டும்தான் சொந்தக்கார்ர்கள் என்கிற வரலாறு மாற்றப்படும்போதுதான் சாரணர் இயக்கத்தின் முதல் கொடி பறக்கவிடப்படும்.
- நடை, நடத்தை என்பதை நாம் பிரித்துப் பார்க்ககூடாது. நடைதான் நடத்தையாகிறது.
- நம்மைப் பெற்ற தாய் தந்தையரிடம் மட்டும் எந்தப் பொய்யும் சொல்லக்கூடாது. மற்றவர்களிடம் சொல்ல்லாமா என்றால் சில சமயங்களில் அந்த நிலை ஏற்படும்.
- நாட்டைக் காப்பாற வேண்டிய இளைஞர்கள் நல்ல கட்டுப்பாடுகளைக் கொண்டு விளங்க வேண்டும்.
- நாம் எந்தக் காரியங்கள் செய்தாலும் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் வகையில் பணியாற்ற வேண்டும்.
- நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படித்துத் தெரிந்துகொள்வதைவிட கேட்டுத் தெரிதல் என்பது மகிழ்ச்சிக்குரியதாகும்.
- சமத்துவம் என்பதற்கு முன்னால், உள்ளத்தில் சமநிலை ஏற்படவேண்டும்.
- சாதிகள் தேவையில்லை; மதப்பிரச்சினை தேவையில்லை; மனிதர்களாக நாம் வாழ வேண்டுமென்றால் சாதி, மதப் பிரச்சினைகளை வைத்துப் பேசக்கூடாது.
- மனிதனின் கஷ்டம் தீரவேண்டுமென்றால் புனிதப் பணிகள் செய்ய நாம் ஒன்றுபட்டாக வேண்டும்.
- தேசம் என்றால் அதன் உறுப்புகள் எல்லாம் நல்லபடியாக இருக்க வேண்டும். ஒரு பக்கம் வறுமை ஒரு பக்கம் வளமை என்ற நிலை கூடாது.
- நல்ல பணிகளுக்கு நாம் செலவு செய்யத் தாராளமாக முன்வர வேண்டும்.
- நமது முன்னோர் பெரும் தியாகம் செய்து விடுதலையை நமக்குப் பெற்றுத் தந்தார்கள். இந்த விடுதலை நமக்கு நிலைத்து நிற்க நாட்டு ஒற்றுமைதான் முதல் தேவை.
- மதம், சாதி, இனம் இவற்றின் பெயரால் தீய சக்திகள் ஒற்றுமையைச் சிதைத்து வருகின்றன. இத்தீய சக்திகளை எதிர்த்து உறுதியுடன் போராடுவோம்.
- நாட்டு ஒற்றுமைக்கு கேடு விளைவிப்பவர்கள் மக்களின் விரோதிகள். அவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கித் தள்ளுவோம்.
- அளவிலும், எண்ணிக்கையிலும் உற்பத்தியைப் பெருக்குவது மட்டுமின்றி உயர்ந்த தரமுள்ள பொருள்களை உற்பத்தி செய்வதை நமது தேசியக்கடமையாக்க் கொள்ள வேண்டும்.
- சாத, மத, இன பேதங்களையெல்லாம் கடந்து நின்று தமிழக மக்கள் கொண்டாடும் தனிச்சிறப்புடைய திருநாள் பொங்கல் திருநாள். உழவரும் பிற துறைகளில் உழைப்போரும் ஒன்றுகூடி உழைப்பால் விளைந்த செல்வங்களைப் பகிர்ந்து உண்டு மகிழும் திருநாள் இது.
- மனித வள மேம்பாடு என்பது குழந்தைப் பருவத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்பதால் குழந்தைகள் மதிய சத்துணவுத்திட்டம் தொடங்கப்பட்டது.
- நமது பணிகளில் தாமதம் கூடாது. நமது பயணத்தில் தயக்கம் இருத்தலாகாது. நமது உழைப்பில் குறைபாடு இருத்தல் ஆகாது.
- சின்னஞ்சிறு பிரச்சினைகளைப் பெரிது படுத்தி மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு இடையூறு விளைவிக்க எவர் முயன்றாலும் அவர்களை மக்கள் மன்னிக்கமாட்டார்கள்.
- வாழ்வின் சுவை எதையும் அறியாதிருக்கிற, லட்சக்கணக்கான நலிந்தோருக்காக, வருங்காலத் தலைமுறைக்காக இப்போதே இன்றே ஏதாவது செய்தாக வேண்டும் என்கிற துடிப்பு எல்லோரிடமும் இடம்பெற வேண்டும்.
- விதை செத்துத்தான் பயிர் முளைக்கும். விதை சாகாமல் பயிர் முளைப்பதில்லை. விதையை அப்படியே நாம் உண்டுவிட்டோமானால் பயிர் கிடையாது. அதைப்போல உற்பத்தியாகிற செல்வம் அவ்வளவையும் இந்தத் தலைமுறையில் தின்று தீர்த்துவிடுவதென்றால் அடுத்த தலைமுறைக்கு மிச்சம் எதுவும் இராது.
- நாம் உழைக்கிற உழைப்பு நம்முடைய நல்வாழ்வுக்கு மட்டுமல்ல. வருங்கால தலைமுறைக்காகவும் உழைக்கிறோம். நாம் இந்துத் தலைமுறையில் சில சங்கடங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதைத் தேசியக் கடமையாக ஒவ்வொரு வரும் கருத வேண்டும்.
- மாற்றங்களின்றி முன்னேற்றமில்லை; முன்னேற்றமில்லையேல் வரலாறு இல்லை. மாறுதல் என்பது சிறப்பாக அமையும் போதுதான் அதுவே முன்னேற்றத்திற்கான சீரான பாதையினையும் அமைத்துக் கொடுத்துவிடுகிறது. சமூக முன்னேற்றமும் பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை எளிய மக்களுக்குக்குக் கிடைப்பது அவசியம்.
- பதட்டத்தோடு எந்த முடிவுக்கும் வராமல் ஆராய்ச்சி அறிவோடு ஆழ்ந்து அமைதியாகச் சிந்தித்தால் என்றும் வெற்றி கிட்டும்.
- அகமும் புறமும் ஒன்றுபட்டு இயங்க்ப்பகுத்தறியும் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் அதைப் பயன்படுத்தத் தவறுவதனாலேயே மக்களிடையே மாறுபட்ட தன்மைகள் இடம்பெறுகின்றன.
- ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு நாம் போக வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அப்படிப் போவதற்கு ஏற்ற பாதை வேண்டுமல்லவா? பாதையே இல்லாத பகுதியில் அடியெடுத்து வைத்து அல்லற்பட்டு நடந்து மற்ற இடத்தை அடையவும் கூடும். ஏன் மலைமேல் ஏறி இறங்கிப் போகலாம். காட்டுவெளிகளில் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து செல்ல்லாம். தண்ணீரில் நீந்தியும் செல்ல்லாம்! ஆனால் இப்படிப் போய்ச் சேருவதற்கெனத் தேர்ந்தெடுக்கும் பாதைகள் ஒழுங்கற்றவைகளாக இருப்பதால், பாதசாரிகளுக்கு அந்தப் பாதைகள் தொல்லைகளையும், இடர்ப்பாடுகளையும் உண்டாக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை தேவை; மகிழ்ச்சி தேவை; இந்தத் தேவைகளுக்கு அடிப்படை வளரவும் வாழவும் தடை இல்லாமல் இருப்பதுதான்.
- சமுதாயத்தின் கட்டுப்பாடுகள், ஒவ்வொரு மனிதனுடைய உள்ளத்தின் கட்டுப்பாடுகளாக அமைய வேண்டும்.
- தன்னலம் தேவைதான். ஆனால் அது பொதுநலமகப் பரிணமிக்க வேண்டும்.
- எனக்கு என்ற எண்ணம் வராமல் நமக்கு என்ற எண்ணம் வரவேண்டும். அப்படிப் பட்ட எண்ணம் வளர்ந்தால் நாட்டில் ஒற்றுமை வளரும். சாதிக் கொள்கை ஒற்றுமையை ஏற்படுத்தாது. மத்த்தில் பெயரால் தூய்மை தெரியவில்லை. தாழ்வு தான் தெரிகிறது. இத்தகைய சாதி உணர்வுகளை அகற்றச் சூளுரை ஏற்போம்.
- மொழி, இனம், கலாச்சாரம், நாகரிகம் போன்றவற்றை மக்களை ஒன்று சேர்ப்பதற்கும் சமுதாயத்தை உயர்த்துவதற்கும் மேம்மைப் படுத்துவதற்கும் பயன்படவேண்டும். இந்த உயரிய குறிக்கோள்தான் தமிழ்ச் சமுதாயத்தின் குறிக்கோளாகும்.
- முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகளாக விளங்கும் சக்திகளை நமது ஒற்றுமையாலும், உழைப்பாலும் முறியடிக்க அனைத்துப் பிரிவினரையும் அழைக்கிறேன். வறுமைக்கும், அறியாமைக்கும், சமூகத் தீமைகளுக்கும், பிளவு மனப்பான்மைகளுக்கும் எதிராக நாம் தொடங்கியுள்ள ஆக்க வழி, அற வழி புனிதப் போரின் வெற்றிக்கு நம்மை முழுமையாக ஒப்படைத்துக் கொள்ள உத்வேகம் பெறுவோம்.
- நமது மாநில மக்களை முன்னேற்றுவது இந்திய ஒருமைப்பாட்டுக்குப் பக்கபலமாக நிற்பது என்கிற புனிதக் குறிக்கோள்களை நோக்கி நமது லட்சியப் பயணம் அமைந்திருக்கிறது. ஆனால் இந்தக்குறிக்கோள்களுக்கு கூடத் தடைகள் ஏற்படலாம் என்பதை வரலாறு காட்டுகிறது.
- உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளி விடுவீர். உழைப்பவரே உயர்ந்தவர் எனும் தத்துவத்தை நிலை நாட்டுவீர்! புதிய சமதர்ம சமத்துவச் சமுதாய அமைப்புக்கு முன்னேறும் சக்தியாகத் தலைமை தாங்கிடுவீர்.