பெரியார் ஒரு முழுப்புரட்சியாளர்

பெரியார் யார்?

உலகம் கண்ட ஒப்புயர்வற்ற சிந்தனையாளர் சிலரில் ஒருவர். அச்சிலரில் பலருக்கு இல்லாச் சிந்தனை வளமும், செயற்பாட்டு வளமும் மிக்குச் சிறந்து மிகுபுகழ் ஈட்டிய மேன்மையாளர். இப்பெரியாரின் அன்றாட வாழ்வும் அருந்தமிழ்ப் பேச்சும் உலகில் ஒரு மூலையில் நிகழ்ந்தன. ஆனால், வாழ்வின் நடைமுறைகளும், பழக்க வழக்கங்களும், பேச்சில் எழுத்தில் வெளிப்பட்ட கருத்துக்களும், சிந்தனைகளும் உலகம் தழுவும் உயர்திறத்தன. பிறந்த நாடு, பேசும் மொழி, வாழும் சூழ்நிலை, இவைகட்கு ஆட்பட்டு அறிவுரை வழங்கியோர் உலகில் பலர். ஆனால், மேற்குறிப்பிட்ட செயற்கைப் பிடிப்புகட்கு ஆட்படாது, அப்பால் நின்று, அறிவுரை வழங்கிய ஆன்றோர் இவர்!

தன்குறை, தம்குறை காணாது பிறர்குறை கண்டும் பெருக்கிப் பேசியும் திரியும் உலகில் தன்குறை தம்குறை கண்டு திருந்துவதே தக்க வழியெனக் காட்டிய தக்கார். அஞ்சாமை, ஊக்கம், அறிவுடைமை என்ற மூன்றின் ஒருமித்த வடிவமாக விளங்கி ஊரையும் நாட்டையும் உலகையும் ஆளாது ஆண்ட ஆண்டகை. ஏட்டறிவும் துய்ப்பறிவும் இணைந்து விளங்கிய ஏந்தல். உலகம் விரும்பியதைக் கூறாது உலகுக்கு வேண்டியதைக் கூறிய வித்தகர். உலகியலில் தாழ்வொடுபட்ட ஆசைகட்கு ஆட்பட்டு வாழாது வாழ்ந்த வளர்புகழாளர்.

புகழ்ச்சியை வேண்டியும், இகழ்ச்சியை வெறுத்தும் பேசியறியாப் பெருந்தகை. தன்பெண்டு தன் பிள்ளை, தன்சுற்றம் என்று வாழும் உலகில் மானிடம் வாழ வாழ்ந்த மாபெரும் மனிதர். புளியம் பழமும் ஓடும் போல எந்த ஒன்றோடும் ஒன்றியும் ஒன்றாது இருந்து, உண்ம பல கண்ட உயர் பெரும் ஞானி.

செல்வராக பிறந்தும், செல்வராக வளர்ந்தும் செல்வச் செழிப்பிலும் செல்வக் களிப்பிலும் சிக்கிச் சீரழியாது சிக்கனமாக வாழ்ந்து செல்வம் அனைத்தையும் பொதுச் சொத்தாக்கிப் புதுப்புகழ் பூண்ட புத்தர்.
கல்லூரி காணாதவராயினும், கற்றோர் அறியா அறிவும், கற்றோர்க்குத் தாம் வரம்பனத் தகும் தலைமையும் வாய்ந்த சான்றோர்.

வல்லன், சோர்விலன், அஞ்சான் ஆகிய இயல்புள்ளவனை இகலில், வெல்லுதல் யாராலும் இயலாது என்றார் வள்ளுவர். இத்தகைய மனிதன் இருப்பானா? என்று எண்ண அளவில் ஏங்கிக் கிடந்த எமக்குத் தமது பேச்சாலும், எழுத்தாலும், செயலாலும், வெற்றியல்லாது வீழ்ச்சியறியா விறலோராக விளங்கிய வேந்தர்.

நீதி மன்றின் நீதிக்கும் நீதி சொன்ன நேர்மையாளர்.

தமிழ்நாட்டின் – ஏன்? இந்தியத் துணைக்கண்டத்தின் தாழ்மைக்கு நாம் பன்னூறு ஆண்டுகளாக்க்கைக்கொண்டு போற்றிப் பாதுகாத்து வரும் பழக்கங்களும் வழக்கங்களும் நடைமுறைகளுமே காரணம் என்று முற்றக் கண்டு முடிவு கட்டி விளக்கிய மூதறிஞர்.

உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆண்டான்-அடிமை என்னும் பேத நிலைகளைப் போக்கி ஒப்புடைமைச் சமுதாயம் காணப் பிறப்பினிலே பெரியாராகப் பிறந்து வந்த பெரியார்.

தோன்றும் பொழுதே மணமுடன் தோன்றும் துளசிச் செடி போல எதனையும் அறிதற்கு வேண்டிய அறிவையும் செய்தற்கு வேண்டிய செயல் திறத்தையும் தோன்றியபொழுதே ஒக்கப் பெற்று உயர்புகழ் நிறுவிய உரவோர்.

மக்கள் நெஞ்சில் மலிவுப் பதிப்பாக எளிமையும், வஞ்சகர்க்குக் கொடிய நெருப்பாக அருமையும் ஒக்கப்பெற்ற ஒண்புகழாளர்.

எண்ணியதைச் சொல்லியும், சொல்லியதை எழுதியும், எழுதியதைச் செய்து காட்டியும், உலகுக்கோர் தனி எடுத்துக்காட்டாக விளங்கிய ஏந்தல்.

நின்ற சொல்லராய் நீடு தோன்றினியராய் உலகில் நீண்ட நாள் உலவிய நேர்மையாளர். சூழ்ச்சியினை, வஞ்சகத்தை பொறாமை தன்னைத் தொகையாக எதிர்நிறுத்தித் தூள் தூளாகச் செய்யும் காழ்ச்சிந்தை மறச்செயல்கள் கொண்ட காவலர்.

இவ்வாறு பெரியாரின் பெருமை இயல்புகளைப்பேசப்புகின் அது விரிப்பின் அகலும். தொகுப்பின் எஞ்சும் ஆகலின் இவை இவ்வளவில் நிற்க, எடுத்துக்கொண்ட தலைப்பிற்கு வருவோம்.

முழுப்புரட்சி என்பது என்ன?

புரட்சி யென்பது கீழுள்ளது மேலாகவும், மேலுள்ளது கீழாகவும் புரளுகின்ற செயலுக்குத் தொழிற் பெயராக முதலில் வழங்கிப் பின்னர் இதனைப் போன்றே அரசியல் சமுதாய இயல் போன்றவற்றில் தலைகீழான மாறுதல் ஏற்படுதலைப் புரட்சி என்ற கருத்தில் இப்போது வழங்குகின்றோம். முழுப்புரட்சி என்பது அரசியல் – வாழ்வியல் கூறுகளில், எச்சம் சொச்சம் இன்றி, முழுமையாக அடியோடு எல்லாவற்றையும் மாற்றுதல் என்னும் கருத்துடைய மொழியாகும். இத்தகைய முழுமையான புரட்சியைத் தமிழக மக்களின் எண்ணத்திலும் பேச்சிலும் செயலிலும் விளைவிக்க வெண்டுமெனக் கடந்த 60 ஆண்டுகட்கும்மேலாக தன்னை இடும்பைக்கே கொள்கலமாக ஆக்கிக்கொண்டு பொதுப்பணி புரிந்தார் பெரியார்.

பெரியார் மேற்கொண்ட முழுப்புரட்சியின் இயல்.

வரலாறு தெரியாத காலம் தொடங்கி, வரலாறு தெரிந்த காலம் வரை சுமார் மூவாயிரம் ஆண்டுகளாக பொதுவாக இந்திய நாடும் சிறப்பாகத் தமிழ்நாடும் இவைகளில் வாழ்ந்த – வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களின் வாழ்வு முறைகள் அவ்வளவும் எல்லாவகையிலும் குறையுடையவை என்பதைத் தெள்ளத் தெளியக் கண்டவர் பெரியோரேயாவர். பெரியார் ஏற்றுக்கொண்டு பாராட்டும் அளவுக்கு இந்த நாட்டு மக்களின் வாழ்வுத்துறை பற்றிய ஒரு நடவடிக்கைகூட இல்லை என்று அவரே எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல. இந்த நாட்டு மக்களின் பொது வாழ்க்கையையொட்டிய நடவடிக்கைகளைக் காணும் போது நாம் குறைபடுத்திப் பேசியதும், எழுதியதும் போதாது. இன்னும் சற்றுக் கடுமையாக்க் குறைபடுத்திப் பேச வேண்டுமென்றே தோன்றுகிறது என்று குறித்துள்ளார். அவருடைய சொற்களைக்கொண்டே அவர் மேற்கொண்ட புரட்சி எத்தகையது என்பதை நான் நன்குணரலாம்.

………”எனது வார்த்தைகளும், எழுத்துக்களும், செய்கைகளும் தேசத்துரோகமென்றும், வகுப்புத் துவேஈமென்றும், சிலர் சொல்லவும், ஆத்திரப்படவும் ஆளானேன். அரசியல் தலைவர்கள், தேசாபிமானிகள், தேச பக்தர்கள் என்பவர்கள் என்னை வையவும், என்னைக்கண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளானேன். இந்த இன்பமற்ற காரியங்களை நான் ஏன் செய்ய வேண்டும்? என்று யானே யோசிப்பதுண்டு.

சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ போகட்டும்! நாம் ஏன் இக்கவலையும் தொல்லையும் அடைய வேண்டும்? நமக்கென்ன இதனால் ஜீவனமா? பணம், புகழ், கீர்த்தி, சம்பாதனையா? ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவி உண்டா? ஒரு தலைவராவது உதவி உண்டா? ஒரு தேச பக்தராவது உதவி உண்டா?

இமயமலை வெய்யிலில் காய்கிறது என்று குடைபிடிப்பதுபோல் இருக்கிறது என்பதாக்க்கருதி விலகி விடலாமா? என்று யோசிப்பதுண்டு.

ஆனால், விலகுவதில்தான் என்ன லாபம்? ஏறக்குறைய நமது ஆயுட்காலமும் தீர்ந்துவிட்டது. இனி நாலோ, அய்ந்தோ அதிகமாக இருந்தால் பத்து வயதுக்காலமோ இருக்கலாம். இந்தக் கொஞ்சக் காலத்தையும் ஏன் நமது மனசாட்சிக்கு கொஞ்சக் காலத்தையும் ஏன் நமது மனசாட்சிக்கு விட்டுவிடக்கூடாது? விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப்போகின்றோம்? என்பதாகக் கருதி உழன்று கொண்டிருக்கிறோமேயல்லாது வேறில்லை.

இக்கஷ்டமானதும் மனதுக்கு இன்பத்தைக்கொடுக்கக் கூடியதுமான காரியத்தில் இறங்கிவிட்டோம். உலகம் ஒப்புக்கொண்டாலும் சரி, தள்ளிவிட்டாலும் சரி. நமக்கு அதைப்பற்றி கவலையில்லை”.

-என்று பெரியார் எழுதியிருப்பது, அவருக்கிருந்த ஒட்டு மொத்தமான எதிர்ப்பைக் காட்டுகின்றன. சமுதாயத்தின் மேல் தட்டில் இருந்துகொண்டு நாட்டை இயக்கிக் கொண்டிருந்தோர்.அனைவரும் எச்சம் சொச்சம் இல்லாமல் எதிர்த்தனர். இந்த உண்மையை மிகத் தெளிவாக விளக்கும் பெரியாரின் இத்தலையங்கத்தை உலகப்புகழ் வாய்ந்த தன்னிலை விளக்கக் கட்டுரைகளில் தலைசிறந்ததாக்க் குறிக்கலாம். கற்றவர், அறிந்தவர், தெரிந்தவர், பொதுநலத் தொண்டர் யாவரும் முழுமையாக எதிர்த்தனர். என்றால், மற்றவர் நிலையை நாம் என்ன எண்ண முடியும்.

மற்றவர்கள் பெரியாருடைய கூட்டங்களை நடத்த விடாமல் கலகம் செய்யும் நிலையில் தொடங்கிப் பெரியாரை அடிக்கின்ற அளவுக்கு முன்னேறி நின்றனர். இந்திய நாட்டில் பொது வாழ்வில் ஈடுபட்ட எவரும் இவ்வளவு பெரிய எதிர்ப்பைச் சந்திக்கவில்லை. தன்னுடைய கைப்பணதைச் செலவு செய்து கொண்டுதான் அவருடைய கருத்துக்களை விளக்கினார். படித்த இளைஞரின் சிலர் அவ்வப்போது பெரியாருடன் சேருவதும் பிறகு பிரிந்து போவதும் எதிரணியில் சேர்ந்து கொள்ளுவதுமாக இருந்தனர். பொட்டுப் பூச்சிகளாய்ப் புன்மைத் தேரைகளாய் ஆமையைப் போல அடங்கி ஒடுங்கிக் கிடந்த கோடானுகோடி கண்மூடி மக்களின் எதிர்ப்பைப்பெரியார் பக்கம் திருப்பிவிடப் பகைவரால் எளிதில் முடிந்தது.

“கடவுள் இல்லை” என்கிறான்.

“மதமில்லை” என்கிறான்.

“சாத்திரங்கள் பொய்” என்கிறான்.

“சாதியில்லை” என்கிறான்.

“கடவுளின் அமைப்பான மேல் கீழ் நிலைகளைக் கண்மூடி வழக்கம்” என்கிறான்.

“முன்னோர் சொன்னது; முன்னோர் நடந்தது; அவ்வளவும் முழுப்புரட்டு” என்கிறான் – என்று பெரியாருக்கு எதிராக முழங்கினார்; பேசினார்; இவைகளைக் கேட்ட கண்மூடி மக்கள் தேள் கொட்டி நெறி ஏறுவது போல ஆத்திரப்பட்டுப் பெரியார் போகிற இடமெல்லாம் கும்பல் கும்பலாகத் திரண்டு நின்று எதிர்த்தனர். வாயில் வந்தபடி வசைபாடினர். சின்னாளப்பட்டி என்னும் ஊர்மக்கள் பெரியாரை அடித்தும் போட்டனர். இத்தகைய எதிர்ப்பைப்பெரியார் வானொலியின் சார்பில் இத்தகைய பேட்டி கண்ட திரு. மாறனிடம் பின்வருமாறு கூறுகிறார்.

மாறன்: அந்த காலத்திலே உங்களுக்கு ஆதரவு அபூர்வமாக
இருந்ததே! முக்கியமான ஆதரவு எது?
பெரியார்: பிள்ளைகளைச் சேர்த்துக்கிட்டுச் சத்தம் போட்டேன்.
பெரிய மனுசங்க ஒருத்தரும் எங்களுக்கு ஆதரவு
இல்லே. உண்மையா எல்லாம் பையங்கதான்.
மத்தவங்க ரொம்ப ரெலிஜியஸ் -வேஷம்.
பயந்தவங்க. அரசியலிலே தங்களுக்கு ஓட்டு
வேணும் என்கிறவங்க ஆகையினாலே ஆதரவு
கம்மிதான். பிள்ளைகள் உற்சாகமாக பின்னே
வருவாங்க. இப்ப பணம் கொடுத்துக் கூப்பிடுறாங்களே.
அப்போ எங்க பணம்தான் செலவு.
கல்லடியெல்லாம் அடிச்சிருச்சாங்க. இங்க
அடிச்ச அடி இந்தக் கையை ஆட்டி விட்டுது.
மாறன்: எந்த இடத்தில்-எந்த ஊரிலே அய்யா?
பெரியார்: ம்…சின்னாளப்பட்டின்னு தேவாங்கர் இருக்கிற ஊரு.
மாறன்: ஆமா…! அது நெசவுக்கு பெயர்போன இடம்.
பெரியார்: அடியோட அவுங்க காங்கிரசு-அப்போ-நான்
பிரச்சாரம் பண்ணப்போனேன்.
மாறன்: ஆமா-! எத்தனை வரும் இருக்கும்?
பெரியார்: அது நாற்பத்தி அஞ்சு… நாற்பத்தி நாலா இருக்கும்.
நல்ல அடிச்சுட்டாங்க.”

பெரியாரின் இந்த வானொலிப்பேட்டி உரை எவ்வளவு சிறந்தது, எந்த அளவுகு உண்மையொடு பட்டது. என்பதனைப்பெரியாரின் கடந்த கால நண்பர் பெரியாரோடு காங்கிரசில் பல ஆண்டுகள் நெருங்கிப் பழகியவர்; பெரியார் கதர்போர்டு தலைவராக இருந்தபோது, காரியதரிசியாக இருந்து பணிபுரிந்தவர்; பெரியாரின் சுயமரியாதைக்கொள்கைகளை ஒத்துக்கொண்டவர்; “மேயோ கூற்று மெய்யா? பொய்யா? ” என்னும் நல்ல நூலை எழுதியவர்; கோவை சி.எ. அய்யாமுத்து என்னும் பெயருடையவர். பெரியாரின் வானொலி உரையைத் தன் மனைவியும் தானுமாக இருந்த கேட்டுவிட்டுப்பெரியாரை வாழ்த்திச் சில பாடலங்களை வரைந்து, நமது மதிப்பிற்குரிய திராவிடர் கழகப்பொதுச் செயலாளர் திரு. கி. வீரமணியவர்கட்கு அனுப்பி வைத்தார். அப்பாடல்களையும், வானொலிப் பாராட்டுவதற்கு உரியதாகும். நம் மதிப்பிற்குரிய அய்யா அவர்களின் உண்மையொடுபட்ட உரைக்கு முத்திரை குத்தியதுபோல அப்பாடல்கள் விளங்குகின்றன. அய்யா அவர்களின் தன்னலம் மறந்த தூய்மையான பொதுவாழ்வும், குடும்ப வாழ்வும், திண்ணிய மனநிலையும், நல்லவண்ணம் உணர்ச்சியோடு கலந்து நிழற்படம் போலப் பாடியிருக்கும் பாங்கை என்னால் உணர முடிகின்றது.

இவர் ஒரு நல்ல எழுத்தாளர் என்பதை அறிவேன். இவர் நல கருத்தமைந்த இசைப்பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளார் என்பதைப் பிறகு கேள்விப்பட்டேன். கடைசி வரையில் காங்கிரசுக்கார்ராக இருந்தவர். வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டவர். அய்யாவைப் பற்றி, “நான் கண்ட பெரியார்” என்னும் நூலை எழுதியவர். அய்யா அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றைச் சுவைபட எழுதியவர்.

இத்தகைய பெரியவர்க்கு வானொலியின் பேட்டியைக்கேட்டதும் பாட்டாகப் பாடி அனுப்பி வைத்தார் என்றால், அதற்குக்காரணமான அந்தப்பேட்டி உரையில் அய்யா அவர்கள் கையாண்ட உண்மையும், நேர்மையும், உணர்ச்சியும் கலந்த பாங்கு என்பதை நாம் தெளிவாக உணரமுடிகிறது. அப்பாடல்களில் சிலவறை காண்போம்.


வானொலி தன்னில் மாறன்
வழுத்திய கேள்விக்கெல்லாம்
வான்மழைபோன்று தாங்கள்
வழங்கிய சொற்கள் கேட்டு
நானும் என்மனையாள் தானும்
நன்மனம் நிறைவுற் றோமே!
நீங்கிலா நினைவு பூண்டு
நித்தமும் நினைப்ப தோடு
ஓங்குமுன் புகழைக் கேட்டு
உள்ளமும் மகிழ்வுற்றோமே!
எண்ணிய கருத்தைத்தாங்கள்
எவரெல்லாம் எதிர்த்த போதும்
திண்ணிய மாகச் சொல்லும்
திறத்தினை எண்ணி எண்ணிச்
சிறியனேன் இறும்பூ தெய்தித்
திளைத்திடல் இன்றும் உண்டே!
உத்தமி நாகம் மாவும்
உயிருடன் இருந்த காலை
எத்தனை நாட்கள் அங்கு
இன்னமுது உண்டோம் நாங்கள்
அத்தனே! அந்த நாட்கள்
அருந்தவப் பேறாம் அன்றோ!

இத்தரை மீதில் சாதி
இழிபடும் சமயம் சாமி
முத்திரை கிழக்கும் போரில்
முற்றிலுமோடு நின்றேன்
எத்தனை துன்ப மேற்று
இடர்ப்பட நேரிட்டாலும்
சுத்த தன் மானம் காக்கத்
தொடர்ந்துயிர் ஈவே னய்யா!
……………… ……… ……….
………… …………. …
பன்னெடுங்காலம் தங்கள்
பகுத்தறிவு வியக்கம் வாழ்ந்து
நன்னெறி சூழ்ந்து மக்கள்
நலமுடன் வாழ்க! வாழ்க!

பெரியாரை முழுப்புரட்சியாளராக ஆக்கியது என்று நாம் எண்ணலாம். சாதி சமயம் இவையொட்டிய மூடப்பழக்க வழக்கங்கள் ஆகியவைகளை ஒழிக்கும் போரைத்தான் தன்னுடைய முழுப்புரட்சியாக அய்யா நடத்தினார்.

இவ்வளவு கடுமையான எதிர்ப்புக்கும் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆட்பட்டுக் கொண்டும் கைக்காசைச் செலவு செய்து கொண்டும் பொதுத் தொண்டு புரிதல் என்பதைச் சற்று எண்ணிப் பாருங்கள்! யாரும் இந்த வழியில் போக மாட்டார்கள். கடந்த 3 ஆயிரம் ஆண்டுகளாக யாரும் செல்லாத வழி பெரியார் வழி. இனித்தான் யாராவது செல்ல இயலுமா? என்று எண்ணுகின்ற எமக்கு ஏக்கம்தான் விடையாக்க் கிடைக்கின்றது. திருவாய்மொழி விரிவுரையாளர் கூறுகிறபடி, “அவ்வழி (பெரியார் வழி) போவாரின்மையால் புல்லெழுந்து போயிற்றுக்காணும்” என்று கூற வேண்டியதுதான். நமக்கென்ன என்று ஆட்டு மந்தைகள் போலச் சென்ற வழியே செல்வது என்பதுதான் மனித இயல்பு. இவ்வாறு சிந்தனை சிறிதுமின்று சென்றுகொண்டிருந்த கோடிக்கணக்கான மக்களைச் சிந்திக்க வைதார். இத்தகைய முழுப்புரட்சியை அய்யாதான் செய்தார்.

மற்றவர் கூறிய புரட்சிக் கருத்தின் இயல்

மற்றவர்கள் யாரும் சொல்லவில்லையா? என்று சிலர் எண்ணலாம். நீதி, – நியாயம்-அறம் என்ற பெயரில் சிலர் சொல்லியுள்ளனர் என்பது உண்மைதான். அவர்கள் சொல்லியுள்ளமையும் ஆங்கொன்றும் ஈங்கொன்றுமாக அமைந்தவை. மனித வாழ்வின் தாழ்வுகட்கான ஒரு முழுமையான மருந்து என்று நம்மால் எண்ண முடியில்லை. புத்தர் போதனைகளையும், வள்ளுவர் வழங்கியுள்ள சில கருத்துகளையும் இந்த அளவில்தான் நம்மால் எண்ண முடிகிறது. வள்ளுவர் சில பல கருத்துகளை எழுதிவைத்துள்ளார். மக்களை அன்றாடம் சந்தித்து அவர்கள் மொழியில் விளக்கினாரா? இல்லையென்றுதான் கூற வேண்டும். புத்தர் மக்களிடத்தும், மன்னரிடத்தும் தம்முடைய புரட்சிக்கருத்துக்களை விளக்கமாகப் பேசினார் என்று அறிகின்றோம். இங்கு நாம் புத்தருக்கு இயல்பில் அமைந்த சில பல பின்னணிகளை எண்ண வேண்டும். புத்தர் மன்னர் மரபில் பிறந்து, வளர்ந்து, சிறந்தவர். அக்கால நோக்கில், மக்கள் கூட்டத்தில் அவருடைய உரைக்கு மிக்க செல்வாக்கு ஏற்பட்டதில் வியப்பில்லை. மேலும் புத்தருடைய வாழ்வில், அவருக்குத் துன்பம் என்ன? என்பதை அறியாமலேயே வாழ்வின் முற்பகுதியில் வளர்ந்தவர். அதனால் அவர், புரட்சிக்கவிஞர் பாடியதுபோல்,


“வையமல்ல இன்பக் கடலிது
வாழ்க்கையல்ல அன்பின் தொடர்பிது”

என்று எண்ணி எண்ணி இறுமாந்து கிடந்தார். இந்த உலகத்தை நாம், வையகம் அல்லது வையம் என்று கூறுகின்றோம். உண்மையில் நாம் இதில் அடையும் இன்ப்ப் பெருக்கினை எண்ணும்போது, இதற்குப் பெயர் வையகம் அல்ல. வேறு என்ன பெயர் இடவேண்டுமென்றால் “இன்பக்கடல்” என்று கூறவேண்டும். உயிரினங்கட்கு இன்பம் என்பது உலகத்தில் கடல்போப்பரந்தும், விரிந்தும், ஆழ்ந்தும் கிடக்கின்றது. ஆகவே, ‘இன்பக் கடல்’ என்றுதான் கூறவேண்டும். அதே போலத் தாய்-தந்தை-மனைவி-மக்களோடும், உற்றார் உறவினரோடும் வாழும் வாழ்வை “வாழ்க்கை” என்று கூறக்கூடாது. அதன் உண்மை இயல்பைக்குறித்துப் பெயரிடுவதாயின் ‘அன்பின் தொடர்பு’ என்றுதான் சொல்ல வேண்டும். இத்தகைய கருத்தாழம் புரட்சிக் கவிஞரின் மேற்காட்டிய பாட்டில் பொதிந்து கிடக்கின்றது. இது உலக வாழ்வில் நாமடையும் இன்பத்தின் உச்சக்கட்டம்.

இதனைப்போலவே இரண்டாவதாக்க்கூறியது மனித வாழ்வின் அன்புப் பிணைப்பின் உச்சக்கட்டம். இவ்வாறு கவிஞன் கண்ட உலக இன்பத்தின் உச்சக்கட்டத்திலும், அன்பின் தொடர்பாக விளங்கும் மனித வாழ்வின் உச்சக்கட்டத்திலும், வாழ்ந்து திளைத்தவர் புத்தர். இத்தகைய புத்தருக்கு உண்மையான உலகு என்பது இன்பக்கடலாக இல்லாமல் துன்பக் கடலாகப்பிறகுதான் தெரிந்தது. இத்தகைய புத்தருக்கு உண்மையான உலகு என்பது இன்பக் கடலாக இல்லாமல் துன்பக் கடலாகப் பிறகுதான் தெரிந்தது. மனித வாழ்வும் அன்பின் தொடர்பாக இல்லை. அது வெறுப்பு, சஞ்சலம், இவற்றின் தொடர்பாகப் பிறகுதான் தெரிந்தது. தெரிந்தவுடன் உலகத்தை இன்பக் காடலாக ஆக்குவது எப்படி? வாழ்க்கையை அன்பின் தொடர்பாக ஆக்குவது எப்படி? என்று எல்லா துன்பங்களுக்கும் தன்னைக்கொள்கலமாக ஆக்கிக் கொண்டு உறுதியான உள்ளத்துடன் தன்னுடைய இன்ப வாழ்வைத் துறந்து வெளியேறினார். புத்தருக்கு உலக வாழ்க்கையைத் துன்பக்கடலாக மாற்றியது எது? எதுஎது இன்பம் என்று பட்டதோ அது அதுதான் துன்பமாக மாற்றியது என்பதைப் பெரியாரும் கண்டார். அன்பின் தொடர்பான மனித வாழ்வை வெறுப்பின் தொடராக ஆக்கியது எது? எது? என்பதைப்புத்தரைப்போலவே இவரும் கண்டார். ஆனால், புத்தரின் பேச்சு அல்லது உபதேசம் மக்களிடையே செல்வாக்குப்பெறுவதற்கு அவர் மன்னர் மரபினர் என்பது பெரிய அளவில் உதவியிருக்குமென நாம் எண்ணலாம். அவர் பேசிய கருத்தில் மக்களுக்கு நாட்டம் இருந்ததைவிடப் புத்தரின் குடிமரபுப்பெருமைதான் மக்களுக்கு மிகுதியாகப் புலனாகியிருந்திருக்க வேண்டும். அதனால்தான் அவர் இறந்ததும் அவரது கருத்துகளும் மங்கிவிட்டன. புத்தருக்கு பின்னே வாழ்ந்த புத்த நெறியினரும், அவர் கருத்துவேறுபாடு கொள்ளுகின்ற ‘மதம்’ என்ற நிலைக்கு ஆக்கிக் கருத்துவேறுபாடு கொள்ளுகின்ற அளவிற்குக் குழப்பிவிட்டனர். இத்தகைய காரணங்களால், அவர் கொள்கைகள் மக்களின் நடைமுறை வாழ்வில் நிலைபெறாது அழிந்தன அல்லது அழிக்கப்பட்டன.

சித்தர்கள்

சித்தர்கள், பெரியாரைப் போல பல கருத்துக்களைப் பாடலாகப் பாடியுள்ளார்கள். சித்தர்களில் பலர் கடவுளை நம்புகிறவர்கள். கடவுள் – ஆன்மா இல்லை என்ற கோட்பாடு உடையவர்கள் அல்லர்; அவர்களின் மற்றைய கோட்பாடுகளும் ஒருமைப்பாடு உடையதாய் ஓர் இயக்கமாக உருப்பெறவில்லை. மேலும் இவர்களுடைய பாடல்களில், சில பாடல்களில் கருத்துக்கள் வெளிப்படையாக இல்லை. குழுக்குறிபோல பாடிச் செல்கின்றனர். கடவுள் பெயரால் நிகழும், சடங்குகளைக் கண்டித்தார்கள் என்று கூறலாம். அடுத்து இவர்கள் தங்கள் கருத்துக்குப்பொறுப்பேற்றுக்கொண்டு பாடியும் பேசியும் மக்களிடையே பரப்பவில்லை. “ஓடிவிட்டுப்போகிறவன் பாடிவிட்டுப் போனான்” என்உற பழமொழிப்படி புலம்பிச் சென்றனர் என்று கூறலாம். இதனால் இவர்களுடைய கருத்தை யாரும் எடுத்துக் கொள்ளவில்லை. அரைப்பைத்தியம் என்று ஒதுக்கிவிட்டனர். கடந்தகால மனித இயல்பையும் முற்றக்கண்டு, தீமைகள் இவை; இவை; அவைகளைப்போக்கும் வழிமுறைகள் இவை;இவை;என்று முழுப்பொறுப்பேற்றுக்கொண்டு பேசியும், எழுதியும் நடந்து காட்டியும் முழுப்புரட்சி செய்தார் என்று நாம் உறுதியாக எண்ணலாம்.

பெரியார் மேற்கொண்ட புரட்சியின் இயல்

பெரியார் மேற்கொண்ட முழுப்புரட்சி என்பது உலகில் நிகழ்ந்த புரட்சிக்கு வேறானது. நீடித்து நின்று நிறை பயனை மக்களினத்துக்கு நல்க வல்லது. பெரியார் கண்ட முழுப் புரட்சியில் அடிதடியில்லை. கொலை, களவு இல்லை. பொருட்களை நாசமாக்கும் செயல்களுக்கு இடமில்லை. வன்முறை என்பதில் அவருக்கு அறவே நம்பிக்கையில்லை. தனி மனித வெறுப்பில்லை. மூடக்கொள்கை, மூடக் கோட்பாடு இவைகளை வெறுப்பார். அக்கொள்கை உடையோரை வெறுக்கமாட்டார். அவர்கள் நிலைக்கு வெட்கி இரக்கப்படுவார். பெரியாருடைய முழுப்புரட்சி என்பது முழுக்க முழக்க மனித அறிவில் அடிப்பைடியில் அமைக்கப்பட்டது. மனிதனுக்கு அமைந்த அறிவு நிலையானது. ஆற்றலுடையது.

அது சரியாக்கப்படுமானால், மனித வாழ்வின் எல்லா நிலைகளும் தானாகவே சீர்பட்டுவிடும்-என்ற திடமான நம்பிக்கை உடையவர் பெரியார். அவர் பேச்சு வன்மையாக இருக்கும். அவர் எழுந்து கடுமையாக இருக்கும். செயலளவில் வருகின்றபோது அது எளிமையாகிவிடும். பகையாக அல்லது எதிராக உள்ளவொன்றை வன்முறையால் அழித்தொழிப்பதை விட அது இன்னின்ன காரணங்களால், அழித்தொழிக்கத் தக்கது, போற்றிப்புகழ்ந்து கொண்டாடத் தக்கது அன்று என்று மக்கள் உணரும்படிச் செய்துவிட்டால் போதும். எவ்வளவு வன்மையோடு எவ்வளவு காலமாக உள்ள பகையும் தானாகவே அழிந்து போகும் என்ற திடமான கருத்துடையவர் பெரியார். பொதுவாக எல்லா மனிதருக்கும் நல்லது இது… கெட்டது இது… என்று புரிந்துகொள்ளச் செய்துவிட்டால் நிச்சயம் கெட்டவற்றில் மனிதன் ஈடுபடமாட்டான். மனிதன் இயல்பில் நல்லவனே. சூழ்நிலைகள் அவனைக்கெட்டவனாக்குகின்றன என்பதை தெள்ளத் தெளிய கண்டவர் பெரியார். பெரிய பெரிய எதிர்ப்புகளையெல்லாம் அவர் எப்படிச் சமாளித்தார்? அவருக்கு எதிர்ப்பு எவ்வளவு பலமாக ஆகிறதோ அந்த அளவுக்கு அதனை எதிர்க்கும் ஆற்றலும் வன்மை பெற்றுவிடும். அவருடைய எதிர்க்கும் வன்மை என்ன? ஆட்கள் பலமா? ஆயுதங்கள் பலமா? பண பலமா? பின்பற்றுவோர் பலமா? அவருக்கிருந்த எதிர்ப்பின் வன்மைக்கு முன்னே பெரியாருக்கமைந்த ஆள்-ஆயுதம்-பணம்-பின்பற்றுவோர் ஆகிய வன்மைக்கூறுகள் சிறிதும் போதா. இவைகளை நம்பியிருந்தால் பெரியார் எப்பொழுதோ அழிக்கப்பட்டிருப்பார்-அல்லது அழிந்திருப்பார். பிறகு என்ன? இங்குதான் நாம் சிந்திக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.

பெரியார் தன்னுடைய வாழ்நாள் முழுமையிலும் தான் எடுத்துக்கொண்ட எக்காரியமானாலும் யாரிடமிருந்தும் எதனையும் எதிர்ப்பார்த்துச் செய்வதில்லை. அதாவது தன்னலம் என்பது அறவே இருக்காது. தான் எதிர்க்கும் கருத்து-அல்லது நடைமுறை அவர் கருத்துப்படி வெற்றி பெற்றுவிட்டால் பெரும்பாலான மக்களுக்கு நன்மையாக முடியும். தான் எதிர்க்கும் கருத்து அல்லது நடைமுறைகளைப் பின்பற்றுவதால் இன்னின்ன தீங்குகள் ஏற்படுகின்றன என்பவைகளைத் தெள்ளத்தெளிய மக்கள் புரிந்துகொள்ளும் வண்ணம் அவர்கள் மொழியில் உணர்ச்சியைக் கலந்து வெளிப்படையாக அய்யத்திற்கு இடமின்றி அழுத்தம் திருத்தமாகப் பேசிவிடுவார். அவருடைய இத்தகைய உரையைக் கேட்ட மக்கள் தங்களால் பின்பற்ற முடியவில்லையென்றாலும் அந்த மனிதன் சொல்லுவது நியாயம்தான் என்று சொல்லும்படிச் செய்துவிடுவார். இதற்கேற்ற இயல்புகளை அவர் கருவிலேயே குறைவறப் பெற்றுக்கொண்டு பிறந்துவிட்டார். தன்னுடைய உலகம் தழுவிய பட்டறிவுகளால் அவ்வியல்புகளை வளர்த்துக் கொண்டார். ஆகவேதான் யார் வருகிறார்கள்? யார் போகிறார்கள்? யார் பின்பற்றுகிறார்கள்? என்று அவர் கவலைப்பட்டது கிடையாது. அவர் தன்னுடைய பேச்சை பின்வருமாறு தொடங்குவார்.

“ஏ மனிதனே! என்னுடைய கருத்தை நான் சொல்ல எனக்கு உரிமை உண்டு. என்னுடைய கருத்தைக் கொள்ளவோ அல்லது தள்ளவோ உனக்கு உரிமையுண்டு. நான் சொல்லுவதெல்லாம் நீ நம்ப வேண்டுமென்றோ அல்லது பின்பற்ற வேண்டுமென்றோ யான் கூறவில்லை. உன்னுடைய அறிவைக் கொண்டு சிந்தித்துப்பார். தக்கது என்று பட்டால் ஏற்றுக்கொள். தகாத்து என்று பட்டால் தள்ளிவிடு” -என்றுதான் பேச்சைத் தொடங்குவார். தன்னுடைய பேச்சை முடிக்கும் போதும் மறந்துவிடாமல் இக்கருத்தைக் கூறுவார். இந்தத் தொடக்கமும் முடிவும் எதனைக் காட்டுகின்றது? மானிடத் தன்மையில் பெரியாருக்கிருந்த ஈடுபாட்டையும் நம்பிக்கையையும் இது நன்கு விளக்குகின்றது.

“சிந்தித்துப்பார்! உன்னுடைய அறிவுக்கு முதலில் நீ விடுதலை கொடு! முன்னோர் சொன்னது, முன்னோர் நடந்தது என்று எதனையும் நம்பாதே! உன்னுடைய அறிவுக்கும், கண்கூடான அனுபவத்துக்கும் ஒத்து வருகின்றதா? என்று ஆராய்ந்து பார்! ஒத்து வந்தால் ஏற்றுக்கொள். ஒத்துவராத எதனையும் எவர் சொன்னாலும் கேளாதே!

நாலாம் சாதியாய் நாயினும் கீழாய் நின்று நலியும் மனிதனே! நீயும் மனிதன்தான், மண்ணன்று, உணர்ச்சியற்றுக் கிடக்க. கண்களைத் திற! இமைகளை விலக்கு! விழித்த உன்னுடைய விழியால் இந்த உலகுக்கே ஒளி செய்! இங்கு பேதம் இல்லை. பிரிவில்லை. யாரும் நிகர். அனைத்தும் சரிபங்கென்று ஆக்கு! உழைப்பவனே! உலகம் உன்னுடையது. உழைப்பை வழிவழியாக வெறுத்து மற்றவர் உழைப்பில் வாழ்ந்த உலுத்தர் கூட்டம் கடவுள்- மதம்- சாத்திரம் முதலிய பொய்களை விரித்துப் புலன்களை மறைத்துவிட்டனர். அறிவுக்கு தளையிட்டு அடிமைகளாக்கிவிட்டனர்.

ஆண்டே என்றும் சாமி என்றும் கூனிக்குறுகிக் கும்பிட வைத்துவிட்டனர். முதலில் இத்தளைகளை அகற்ற முயற்சி செய்! அன்னியர் ஆட்சி தானே அகலும். அன்னியர் ஆட்சி இந்நாட்டில் அமையவும் அது நெடுங்காலம் நிலைதிருக்கவும் வழிசெய்தவை மக்களுக்குள் அமைந்திருக்கும் சாதிப்பிரிவுகளும் சமயப்பிரிவுகளும்தான் என்பதை உணர்ந்துகொள். ஆயிரம் உண்டிக்கு சாதியென்று பாட்டுப் பாடுகின்றாயே! ஆயிரம் சாதியுள்ள நாட்டில் அன்னியன் வராமல் என்ன செய்வான்? இந்த அன்னியம் போனால் இன்னொரு அன்னியன் வருவான். அவனும் இலையென்றால், உள்நாட்டில் பெரும்பான்மையான உழைப்பாளி மக்களை நாலாம் சாதியாக்கிய அன்னியன்தான் ஆளுவான். அன்னிய ஆதிக்கமும் மத ஆதிக்கமும் ஒரே அடிப்படையில் அமைந்தவை என்பதை அறிந்துகொள்” என்று மகள்ள் பேசும் மொழியில் உணர்ச்சியையும் உள்ளக்குமறலையும் தன்னுரையோடு கலந்து ஊர்தோறும் நாடுகள் தோறும் நகரங்கள்தோறும் முழங்கினார். ஊரும் நாடும் உலகும் ஒருவாறு அமைதியடைந்து, அவர் உரையைக் கேட்பது; அவர் எழுத்துக்களைப் படிப்பது என்ற நிலைக்கு வந்தது.

இதுகாறும் வரைந்தவற்றால்பெரியார் இயலையும் அவர் செய்த முழுப்புரட்சியின் இயலையும், அதன் எதிர் விளைவுகளையும் ஒருவாறு கண்டோம். இனி அவர் எவ்வெற்றாறு முழுப்புரட்சியாளராக மாறினார் என்ற உண்மைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொள்வோம்.

பெரியார் முழுப்புரட்சியாளர் ஆனதற்குப் பல முதல் நிலைகள் உண்டு. எல்லாவற்றிலும் சிறந்து முன்னிற்பது அவருடைய அறிவு வன்மையேயாகும். மனிதன் அறிவு பெறுவதற்கு 2 வாயில்கள் உள்ளன. முதல் தான் காணும் அல்லது துய்க்கும் பொருள்களைக்கொண்டு அறிவு பெறுவது மற்றொன்று தான் காதால் கேட்கும் பொருள்கள், செய்திகள் இவைகளைக்கொண்டு அறிவு பெறுவது. இவை இரண்டும் தவிர பிறவாயில்கள் இல்லை. இது வள்ளுவர் கருத்து. அறிவு பெறுதல் என்றால் தன்னிடத்தில் இல்லாத ஒன்றைப் பெற்றுக்கொள்வது என்பதில்லை. தன்னிடத்தில் இயல்பாக அமைந்த ஒன்றைப்புதுபித்துப் பட்டை தீட்டிக்கொள்ளுதல் என்று கூறலாம்.

காண்தலாலும், கேட்டாலும் அறிவைப் பெற்றான் என்றால், அவன் உள்ளத்தில் இயல்பாக அமைந்த அறிவடைதற்கான இயற்கைக்கூறுகள் உள்ளது. சிறத்தலாக்க் காண்டலாலும் கேட்டலாலும் சிறந்து வெளிப்பட்டுத்தோன்றின என்பதே கருத்தாகும்.

இந்த அடிப்படையில் சிந்திக்கின்ற நமக்கு, ஒரு மனிதன் முழுப் பகுத்தறிவாளராக வளர்ந்து சிறத்தற்கு வேண்டிய அவ்வளவு வாய்ப்புகளையும் வசதிகளையும் பெரியார் குறைவறப் பெற்றுச் சிறந்தார் என்று உறுதியாக முடிவுகு வரலாம். முழுப் பகுத்தறிவாளராக ஆவதற்கு பெரியாருக்கு இயல்பில் வந்தமைந்த வாழ்வின் எல்லை (Range) மிகப் பெரியது.

விரிந்து பரந்து விளங்கும் மனித வாழ்வின் கூறுகள் (Aspects) பலவாகும். நுண்ணறிவினரும் நிலையா நீந்தா அலையாழியாக விளங்கும் மனித வாழ்வுக்கூறுகளில் நிலைத்தும் நீந்தியும் வெளிப்போந்தவர்பெரியார் என்று கூறலாம்.

பெரியார் அளவுக்கு ஒருவர் கண்டும் கேட்டும் அறிவு பெற நிறைய செல்வம் வேண்டும். செல்வம் இருப்பவருக்கு மனித வாழ்வுக்கான பொதுக்காரியங்களில் ஈடுபடுதற்குரிய மனநிலை வேண்டும். செல்வமும் வாய்த்து மனநிலையும் அமைந்து விடுவதாக வைத்துக்கொள்வோம். பட்டன்-பதவி- செல்வம் போன்றவற்றில் பற்றற்ற மனநிலையும் இதன் காரணமாக நடுவு நிற்கும் உளத்திண்மையும் வேண்டும். யாம் மேலே குறித்த அளவுகோல்களைக் கொண்டு நம்நாட்டில் பொதுவாழ்வில் ஈடுபட்டோர் அனைவரையும் ஒவ்வொருவராக அளந்து பார்த்தால் ஒருவர் அல்லது இருவர் கூடத் தேறமாட்டார்கள் என்பது தெற்றென விளங்கும்.

இக்காலத்தில் தமிழ்நாட்டு அரசியலையும், இந்திய நாட்டு அரசியலையும் பதவிப் பித்தர்கள் படுத்தும்பாடு யாவரும் அறிந்த ஒன்றாகும். பதவி கிடைக்கும் என்றால் எதனையும் செய்யத்துணியும் எத்தர்கள் சூழ்ந்த இடமாக இந்திய நாட்டு அரசியல் விளங்குகிறது. பெரியார் கருத்தை மாற்றிக் கொள்ளுதல் என்பது பற்றிப்பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.

“ஒன்றை ஒப்புக்கொள்ளுகிறேன். அதாவது நான் பல விஷயங்களில் அறிவுக்குறைவு உள்ளவனாக இருக்க்கூடும். பல தவறுகள் செய்திருக்கக்கூடும். பல கருத்துக்களை மாற்றியும் இருக்கின்றேன். இவைகள் எல்லாம் எ