பெரியார் பதிற்றுப் பத்து
கல்வி
1. கற்பதன் நோக்கம் அல்லது கல்வியின் பயன் என்று அய்யா எதைக் குறிப்பிடுவீர்கள்?
கல்வி என்பது ஒரு மனிதனுக்குக் கற்பிக்கப்பட வேண்டிய அவசிய மெல்லாம், ஒருவன் தனது வாழ் நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்குத் தகுதிப்படுத்துவது என்பதேயாகும். அல்லது, உலகில் நல் வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்க்உவது என்பதாகும். அதாவது, ஒவ்வொரு காரியத்துக்கும் மற்றவர்களை எதிர் பார்த்தோ, மற்றவர்கள் ஆதிக்கத்தில் இருந்தோ அல்லது தனக்கு மற்றவர்கள் வழி காட்டக்கூடிய நிலையிலோ மனிதன் இல்லாமல் சுதந்திரத்தோடும் சுய அறிவோடும் வாழத் தகுதியுடைவர்களாக வேண்டும்.
2. கல்வி கற்க இத்தனை ஆண்டுகள் தேவைதானா அய்யா?
பொதுப் படிப்புக்காக ஒரு பையன் 15 வருடம் அதாவது வருடத்திற்கு ஒரு வகுப்புத் தேறினாலும் பி.ஏ. முடிக்க 15 வருடம் படிக்க வேண்டுமென்றால் இது மிகவும் அநீதியான காரியமாகும். ஏனெனில் 6ஆம் வயதில் பையன் படிக்கத் துவங்கினால் பி.ஏ., க்கு 21 வருடம் ஆகி விடுகிறது. அப்புறம் தொழில் படிப்புப் படிக்க 3,4,5 வருடங்கள் தேவைப்படுகின்றன. பிறகு அவன் அதில் அனுபவம் பெற்றவனாவதற்கு 4,5 வருடமாகும். இவற்றால், பைய்னின் நல்ல மூர்த்தண்யமான ஆயுட்காலம் வீணாகப் போகிற தல்லாமல் பெற்றோர்களுக்கும் எவ்வளவு பணம்; எவ்வளவு நாளைச் செலவிட வேண்டியிருக்கிறது. எத்தனைக் காலத்தை மாணவ வாழ்க்கையில் கழிப்பது? காலம், பணம் செலவழித்தவனுக் கெல்லாம் உத்தியோகம் கிடைக்கின்றதா? ஆதலால் ஒரு அளவுக் கல்வி வரை பொதுக் கல்வியாக எல்லாச் சமுதாய மக்களும், படிக்கும் வயது வந்த 100 க்கு 100 பேரும் படுக்கும் படியாகச் செய்துவிட்டு, உத்தியோகத்திற்கும், தொழிலுக்கும் அவசியமான அளவுக் கல்வியை மாத்திரம் சாதி வகுப்புப் பிரிவு மக்கள் எண்ணிக்கைப்படி கொடுத்து வரலாம். சர்க்கார் பொதுப் படிப்புக்கு அல்லாமல் அதற்கு வேண்டிய மக்கள் எண்ணிக்கைக்கு அல்லாமல் மேல் படிப்பு என்பதற்கு மக்கள் வரிப் பணத்தில் ஒரு காசும் செலவு செய்யாமல் இருக்க வேண்டும்.
3. தேர்வுகள் பற்றிய தங்களின் அரிய கருத்தைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
பகுத்தறிவும், உடல் சக்தியும், உலக ஞானத்திறமையும், நல்ல பரம்பரையும், இயற்கை நற்கணமும் முக்கியப் பரீட்சையாக இருக்க வேண்டும். அந்தப் பரீட்டையும், உத்தியோகம் கொடுக்கப்படும் காலத்தில்தான் பரீட்சிக்கப்பட வேண்டுமே ஒழிய, பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு வருடமும் பரீட்சை என்பது தேவயில்லாததாகும்.
4. இன்று, கற்பதற்கும் அதற்குத்தக்க நிற்பதற்கும் இடையே ஏதேனும் பொருத்தம் உள்ளதா?
ஆசிரியன் பள்ளிக்கூடத்தில் பாடம் சொல்இக் கொடுக்கும் போது கிரகணம் எப்படி உண்டாகிறது என்பதை விஞ்ஞான அறிவு கொண்டு விளக்குவான். ஆனால், அதே ஆசிரியன் வீட்டுக்குப் போய்ப் பார்த்தால் கிரகணத்தினால் தோஷம் ஏற்படாமலிருக்க மூக்கைப் பிடித்துக் கொண்டு மந்திரம் செபிப்பான். ஆசிரியர்கள் விளக்கு ஏற்றி வைப்பது இருளைப் போக்க என்று கூற வேண்டுமே யொழிய விழுந்து கும்பிட அல்ல என்று கற்பிக்க வேண்டும்.
5. மாணவரின் இயல்பு பற்றிய பெரியாரின் கருத்து யாதாயிருக்குமோ?
கெட்டியான வஸ்துக்கள் சுலபத்தில் தீப் பற்றுவதில்லை. தீப்பற்றி விட்டால் சுலபத்தில் அணைவதில்லை; நெடு நின்று எரியும் சக்தி உள்ளவை. சீக்கிரத்தில் தீப்பிடிக்கும் வஸ்துக்களோ கெட்டியான வஸ்துக்களைப் போல் அதிக நேரம் எரிவதில்லை. சிறிது நேரத்திலேயே அணைந்து போகும். அப்படிப்பட்ட தன்மைக்குச் சமமான மாணவர்களைக் கூறலாம். எதையும் உடனே நம்பும் சுபவம் மாணவர்களுடையது. மாணவர்களின் உள்ளம் கெட்டியானதல்ல இலேசானதாக இருக்கும். அதுவும் தூய்மையானதாக இருக்கும். பட்டதும் பிடிக்கக் கூடிய தன்மை உள்ளது.
6. மதக்கல்வி இன்றியமையாத்தாயின் அது எப்படி அமையலாம்?
அறிவு வேறு, மதம் வேறு என்று பிரித்துவிட வேண்டும். அறிவை உண்டாக்கி விட்டுப் பிறகு அந்த அறிவின் மூலம் மதத்தைக் கொள்ளும்படிச் செய்ய வேண்டும். அப்படிக் கில்லாமல் மதத்தைப் புகுத்தி அதன் மூலம் அறிவை வளர விடாமல் செய்துவிட்டால் சுதந்திர ஞானம் எப்படி ஏற்படும்?
7. கல்வி பற்றிய நம் மக்களின் குறிக்கோள் யாது என்று அய்யா கூறுவீர்களா?
பொதுவாக நான் சொல்லுவேன். நம் மக்களுக்குக் கல்வி கற்பதில் இலட்சியம் ஒன்றுமே கிடையாது. யார் எதைப் படிக்க வேண்டும். படித்த படிப்பு எதற்குப் பயன்படும் என்கிற ஒரு யோசனையே பெற்றோர்களுக்குக் கிடையாது. படிப்பு என்பது, எதையோ படிப்பதும், படிப்பு வரக்கூடிய பிள்ளையாயிருந்தால் படித்துக் கொண்டே போவதும், படிப்பு வராவிட்டால் அன்று முதலே வேலை தேடித் திரிவதும், ஏதோ கிடைத்த வேலையை ஒப்புக் கொண்டு அதன் மூலம் வாழ்க்கை நடத்துவதும், தன் தனிப்பட்ட குடும்பம் முன்னுக்கு வரப் பார்ப்பதும், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வதும் ஆகிய இவை தான் கல்வியின் தன்மையாய் இருக்கின்றன.
8. கல்விக்கும் சுரண்டலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?
இன்றைக்கு நாம் அனுபவிக்கும் தொல்லைகளுக்கு அதாவது மக்கள் அனுபவிக்கும் தொல்லைகளுக்குப் படித்தவர்கள் படிப்பு காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆடு நரிக்குப் பயன்படிவது போல் படிக்காதவன் படித்தவனுக்குப் பயன்படுகின்றான். நன்றாகச் சொல்ல வேண்டுமானால் படித்தவன் படிக்காதவனை ஏமாற்றிச் சுரண்டுகிறான் என்பதைத் தவிரப் படிப்பு என்பது எதற்குப் பயன்படுகிறது?
9. நம் கல்வித் திட்டத்தில் திருக்குறளுக்குத் தரப்பட வேண்டிய இடம் யாதாயிருக்கலாம்?
மூட நம்பிக்கை யொழிந்து அழிந்து செம்மைப்படத் திருக்குறள் செம்மையான வழிவகுத்துக் கொடுக்கும். குறள் கருத்துக்கள் நன்கு நாடெங்கும் பரப்பப்படுதல் வேண்டும். க்லவி என்றாலே திருக்குறள் கல்வி; அறிவு என்றாலே திருக்குறள் அறிவு என்றதான் கருதப்பட வேண்டியுள்ளது. இது தவிர்த்த அறிவு விளக்க இலக்கியம் வேறுண்டா?
10. அரசுக்குத் தாங்கள் ஒரு பொதுக் கல்வித் திட்டத்தை வகுத்துத் தரக்கூடாதா?
இந்த நாட்டில் இன்று கல்வி என்னும் பேரால் பல கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்து பல்கலைக் கழகம், கல்லூரி, உயர்தரப்பள்ளி என்பதாகப் பல ஆயிரக்கணக்கான பள்ளிகளை வைத்துக் கல்வி கற்பிப்பதைவிடப் பகுத்தறிவுப் பள்ளிகள் என்னும் பேரால் ஒரு சில கள்ளிகளை மாத்திரம் வைத்து நிர்வாணமான சிந்தனா சக்தி தரும் படிப்பைக் கொடுத்து மக்களை எதைப் பற்றியும், எந்தப் பற்றும் அற்ற வகையில், செல்லும்வரை சிந்தித்து முடிவுக்குவரக் கற்பிப்போமானால், நாட்டில் இன்றைய வீணாகும் செல்வம், அறிவு, ஊக்கம், நேசம் முதவியவை பெரும் அளவுக்க்உ மீதமாகி, மக்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, ஒழுக்கம், நேர்மை, நல்லெண்ணம், மனிதாபிமானம், அன்பு, பரசுபர உதவி முதலியவை தானாக வளர்ந்து இவைகளுக்குக் கேடான தன்மைகள் மறைந்து, எல்லா மக்களும் குறைவற்ற செல்வத்துடனும், நிறைவுள்ள ஆயுளுடனும் வாழ்வார்கள் என்பது உறுதி.
ஒழுக்கம்
1. ஒழுக்கம் என்பதை ஒரு குணம் என்று உரைக்கலாமா?
ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடி நடப்பதும் நடந்தபடி சொல்லுவதுமே ஒழிய தனிப்பட்ட குணம் அல்ல.
2. ஒழுக்கத்திற்கு ஓர் இலக்கணம் வகுத்துக் கொடுங்களய்யா?
நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ அதேபோல் நாம் பிறரிடம் நடந்து கொள்வதுதான் ஒழுக்கம் எனப்படும்.
3. பொதுவாக உலகில் ஒழுக்கம், ஒழுக்கக் கேடு என்பன எவ்வாறு முடிவு செய்யப்படுகின்றன?
உலகில் ஒழுக்கமான காரியம் அல்லது ஒழுக்க ஈனமான காரியம் என்பன யெல்லாம் அவைகளைச் செய்கின்ற மதிக்கப்படுகின்றதேயல்லாமல், வெறும் காரியத்தைப் பற்றி மாத்திரம் முடிவு செய்யப்படுவதில்லை.
4. பாவம் என்னும் உணர்வின் மூலம் ஒழுக்கத்தைப் காப்பது ஏற்கத்தக்கதா?
பாவத்திற்குப் பயந்து திருடாதவனும், காவலுக்குப் பயந்து திருடாதவனும், உதைக்குப் பயந்து திருடாதவனும், மானத்திற்குப் பயந்து திருடாதவனும் ஒரே யோக்கியதை உடையவனாவான்.
5. அய்யா எது குற்றம் என்று பொது வரையறை ஒன்றைத் தாங்களால் ஏற்படுத்த முடியுமா?
குற்றம் என்பது நிர்ப்பந்த மில்லாமலே, ஒரு மனிதன்தான் எதை எதைச் செய்யப் பயப்படுகிறானோ, மறுக்கிறானோ, அதை மற்றொரு மனிதன் செய்தால்தான் குற்றம்.
6. ஒழுக்கம் கெடுவதற்கு ஏதேனும் பொதுக்காரணம் உண்டா அய்யா?
ஒழுக்கக் குறைவாய் ஒருவன் நடக்க வேண்டுமானால், அதனால் அவனுக்கு, ஒழுக்கமாய் நடப்பதன் மூலம் கிடைக்காத ஏதாவது லாபமோ திருப்தியோ ஆசைபூர்த்தியோ ஏற்பட வேண்டும். தன்னிலும் மேலாகவோ தன்னிடமிருப்பதைவிட அதிகமாகக் கொண்டோ வேறொருவன் இருக்கிறான் அனுபவிக்கிறான் என்கின்ற உணர்ச்சி ஏற்படும் போதுதான் அதிருப்தியும் மனக்குறைவும் ஏற்படும். அதை நிவர்த்தித்துக் கொள்வதற்குத்தான் எந்த மனிதனும் ஒழுக்கக் குறைவாய் நியாய விரோதமாய்க் கட்டுத்திட்டத்துக்கு மீறி நடக்க வேண்டயவனாகலாம். புதிய உலகில் தனிப்பட்டவர் தேவைக்கும் தனிப்பட்டவர் மனக் குறைவுக்கும் ஏங்கித் திரியும் ஆசைக்கும் இடமே இருக்காது.
7. ஒழுங்கு, கடவுள், மதம், சாத்திரம் ஆகியவைகளைப் பொருத்திப் பார்க்க முடியுமா?
ஒழுங்காக ஒரு முறை இருந்தால் அரசாங்கம் வேண்டாம்; சாத்திரம் வேண்டாம்; கடவுளும் வேண்டாம். ஒழுங்கிற்கு விரோதமான இடங்களுக்குத்தான் இயற்கைக்கு மாறான இடங்குளுக்குத்தான் இவைகள் எல்லாம் தேவை. அதனாலேதான் சற்று ஒழுங்கு இருக்கிற இடத்திலே அரசன் இருப்பதில்லை; மற்றும் மதம், சாத்திரம் இவைகள் எல்லாம் இருப்பதில்லை.
8. ஒழுக்கத்திற்கும் மானத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா அய்யா?
ஒழுக்கக்கேடு என்பது மானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒழுக்க முள்ளவேன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான்.
9. சிலவற்றை ஒழுக்கமா ஒழுக்கக் கேடா என்று முடிவு செய்ய முடிவதில்லை. அதற்கு ஏதேனும் ஓர் அளவுக் கருவியை அய்யா தரக்கூடாதா?
எந்தக் காரியங்களை ஒரு மனிதன்; தான் அப்படிச் செய்ய நினைத்ததும், மற்றவர்கள் அறியாதபடி செய்த்தும், வேறுபல நிர்ப்பந்தங்களால், இச்சைக்கு விரோதமாய்ச் செய்ய முடியாமல் இருந்ததுமாய் இருக்கின்றனவோ, அந்தக் காரியங்களை மற்றவர்கள் செய்தால் அது எப்படுப்பட்ட காரியமானாலும் ஒருக்காலமும் குற்றமாகாது.
10. ஒழுக்கமா? பக்தியா? எது வேண்டும்? என்னும் வினாவுக்கு அய்யா பெரியார் தெளிந்த விடையொன்று தந்தால் பெரும் பயன் விளையுமே.
பக்தி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒழுக்கம் இருக்க வேண்டும். பக்தி தனி மனிதனைப் பொறுத்தது. ஒழுக்கம் இல்லாது ஒருவன் இருந்தால் அது பிறரையும் பாதிக்கும். ஒழுக்கம் இல்லாதவனால் அயலார்க்குத் தொல்லை ஏற்படும். எனவே சமுயதாய வாழ்க்கையில் ஒழுக்கம் பக்தியைவிட முதன்மையானது; இன்றியமையாதது.
திருமணம்
1. மனித வாழ்வியல் வரலாற்றில் எக்காலக்கட்டத்தில் திருமண முறை ஏற்பட்டிருக்கக் கூடும் என்று அய்யா கருதுகிறீர்கள்?
என்று தனக்கென்று பொருள் சேமுத்து வைத்துக் கொள்ள உரிமை ஏற்பட்டதோ அதன் பிறகுதான் திருமணமுறையும் ஏற்பட்டிருக்க வேண்டும். பொருள் தேடிச் சேமித்து வைக்கும் உரிமை ஏற்பட்டபிறகுதான் வெளியே பொருள் தேடச் செல்லும் போது தான் சேமித்து வைத்துள்ள பொருளைப் பாதுகாக்கவும், தான் வந்த போது தனக்குச் சிரம்ப்பரிகாரம் செய்யவும் ஒரு ஆள் தேவையாயிருந்தது. எந்த ஆணும் மற்றொரு ஆணுக்கு இவ்விதமான உதவி செய்யமுன் வந்திருக்கமாட்டான். எனவை இவ் வேலைக்கு ஒரு பெண்ணைத்தான் நாட வேண்டியிருக்கிறது. முதலில், பெண் ஒருவனது ஒத்துக்குப் பாதுகாப்பாக அமைந்து பிறகு அவளே அவனுக்குச் சொத்துமானாள். பிறகு அந்தச் சொத்துக்கு வாரிசு தேட வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. வாரிசு தேட ஆரம்பித்த காலத்தில்தான் அவளைத் தனக்கே உரிமையாக்கிக் கொள்ளவும், அவளைத் தன்னையன்றி வேறு புருடனை நாடாமல் இருக்கும் படிச் செய்யவுமனா நிர்ப்பந்தம் ஏற்பட்டது. மனிதச் சுபாவம் இப்படித்தான் இருக்கும்; அதாவது, தான் தேடிய பொருளைத் தனது இறப்புக்குப் பிறகு அனுபவிக்கப்போகும் வாரிசு, தனக்கே பிறந்ததகா – தன் இரத்தத்திலிருந்து தோன்றியதாக இருக்க வேண்டும் என்று நினைப்பது இயற்கையின் பாற்பட்டதே ஆகும்.
2. திருமணத்தின் அடிப்படைத் தேவை பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
கல்யாணம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் கூடி இயற்கை இன்பத்தை நூகரவும், ஒருவரை ஒருவர் காதலித்து ஒருவருக்கொருவர் வாழ்க்கைப் போட்டியில் ஏற்படும் சிரமத்துக்கு இளைப்பாறவும், ஆயாசம் தீர்த்துக் கொள்ளவும், ஆணுக்கு ஒரு பெண்ணும், பெண்ணுக்கு ஒரு ஆணும் வேண்டியிருக்கிறது என்பதைப் பெரும்பாலோர் சிந்திப்பதே இல்லை.
3. திருமணம் பற்றிய தங்களின் விழுமிய கொள்கையை அறிவித்தருள வேண்டுகிறோம்.
திருமணத்தின் அடிப்படையே இதை நடத்திக் கொடுக்க யாரும் தேவையில்லை என்பதுதான். மண மக்கள் தாங்களாகவே முடித்துக் கொள்ள வேண்டிய காரியம். பிற்கால வாழ்க்கையை இருவரும் சிநேகிதர்களாய் இருந்து அன்புடனும், ஒத்துரிமையுடனும் ஒருவருக்கொருவர் பழகிக் கூட்டு வாழ்க்கை ஏற்படுத்திக் கொள்ளத் தொடங்கும் இந்தக் காரியம் மணமக்களுடைய சொந்தக் காரியம் என்பது எங்கள் கொள்கை. இதில் மற்றவர்களது பிரவேசமே இருக்கக் கூடாது என்பது எங்களுடைய அடுத்த கொள்கை.
4. வாழ்க்கைத் துணைவர்களின் உறவு எங்ஙனம் அமைதல் நலம் என்பதை விளக்கியருள வேண்டுகிறோம்.
மனிதன் ஒருவனே இருந்து காரியம் ஆற்றுவது என்பது இயலாத காரியம் ஆகும். ஆகவே வாழ்வுக்கு ஒரு துணை வேண்டியுள்ளது. அந்தத் துணையினைத் தேடிக் கொள்வதுதான் திருமணம். வெறும் துணை என்று மட்டும் வைத்தால் பலன் தராது. துணை என்றால் நட்பு முறையில் இருக்க வேண்டும். நண்பனுக்கு அடியவன் என்ற நிலையில் இருக்க வேண்டும். உண்மையான நட்புக்கு இருவரும் ஒன்றாக வேண்டும். பேதம் ஏற்படுமேயானால் ஒத்துப் போக ஒருவரை ஒருவர் முந்த வேண்டும். அப்போதுதான் உண்மையான நட்பு மலரும். அதுதான் உண்மையான துணைவர்களுக்கு இருக்க வேண்டும். துணைவர்கள் என்றால் சம உரிமை உடைய துணைவர்களாக இருக்க வேண்டும்.
5. தாங்கள் வகுத்துள்ள திருமண முறைப்படி நிலவக்கூடிய மணமக்களின் உரிமை எத்தகையதோ?
நாங்கள் செய்து வைக்கும் திருமணத்தில் மணமகளும் மணமகனும் சம உரிமை உடையவர்கள். இருவரும் சினேகிதர் மாதிரி. இருவரிலும் உசர்வு தாழ்வு இல்லை. உதாரணமாக இரண்டு பேர்கள் சேர்ந்து பகுதி பகுதி முதல் போட்டு ஒரு வியாபாரத்தைத் தொடங்குகின்றார்கள். இந்த வியாபாரத்தில் இரு வருக்கும் எப்படிச் சம உரிமையும், இடமும், லாப நஷ்டத்தில் சமபங்கும் இருக்கின்றதோ அது போலத்தான் வாழ்க்கைத் துணை ஒப்பந்தம் செய்து கொண்ட மணமக்கள் இருவருக்கும் உள்ள உரிமை யாகும்.
6. தாங்கள் கூறும் காதல் அல்லது காதல் பாதை யாதோ?
ஒரு பெண்ணும் ஆணும் சேர்ந்து பழகி ஒருவரை யொருவர் அறிந்உத கொண்ட பிறகுதான் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். ஆண்களோடு சாதாரணமாகப் பெண்களைப் பழகச் சொல்ல வேண்டும். யோக்கியனா? குடிகாரனா? கோபக்காரனா? பைத்தியக்காரனா? வேடக்காரனா? என்று பெண்ணுக்கு முன்னரே தெரிய வேண்டாமா? பழகினால் தானே தெரியும். திடீரென்று ஒருவரையொருவர் முடிச்சு போடலாமா? அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகளை உணர்ந்து ஒருவருக்கொருவர் நண்பர்களாகப் பழகவேண்டும். உடல் சேர்க்கை வேண்டும் என்று நான் கூறவில்லை. இதுதான் நான் சொல்லும் காதல் – ஆசை – இஷ்டம்.
7. எக்கருத்துக்கும் விருப்பு வெறுப்பற்றும், நுணுகி நாடியும், சரியாக முடிவு கூறும் தாங்கள் காதலின் நிலைபேறு பற்றித் தெளிவளிக்க வேண்டுகிறோம்.
உண்மையாகவே ஒருவன் ஒருத்தியுடன் காதல் கொண்டு விட்டான் ஆனால் அவள் வேறு ஒருவனிடம் காதல் கொண்டு விட்டதாய்க் கருத நேர்ந்தால் – அது பொய்யாகவோ மெய்யாகவோ இருந்தாலும் – தன் மனத்துக்குச் சந்தேகப்படும்படி ஆகிவிட்டால் அப்போதுகூட காதல் மாறாமல் இருந்தால்தான் உண்மைக் காதலா? அல்லது தன் மனம் சந்தேக்ப்பட்டால் அதிருப்தி அடைந்தால் நீங்கிவிடக் கூடியது கற்றமான காதலா எனபதற்கு என்ன மறு மொழி பகர முடியும்? காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப் பான்மை, பக்குவம், இலட்சியம் ஆகியவைகள் ஒரு மாதிரியாக இருக்கலாம். பிறகு கொஞ்சக் காலம் கழிந்த பின் இயற்கையாகவே பக்குவம், நிலைமை, இலட்சியம் மாறலாம். இந்த மாதிரிச் சந்தர்ப்பங்களிலும் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துக் கொண்டு சதா அதிருப்தியில் துன்பத்தில் அழுந்த வேண்டியதுதானா என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாத்தையும் அது பயன்படாததையும் காணலாம்.
8. காதல் என்பதற்கும் நட்பு, ஆசை போன்றவற்றுக்கும் உண்மையிலேயே ஏதேனும் வேறுபாடு உண்டா?
காதல் என்பது ஆசை, காமம், நேசம், மோகம், நட்பு என்பவைகளைவிடச் சிறிது கூடச் சிறந்தது அல்ல… அதற்கு ஏதேதோ கற்பனைகளைக் கற்பித்து ஆண் – பெண்களுக்குள் புகுத்தி வட்டதால், ஆண் – பெண்களும் தாங்கள் உண்மையான காதலர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டுமென்று கருதி எப்படிப் பக்திமான் என்றால் இப்படி எல்லாம் இருப்பான் என்று சொல்லப் பட்டதால் அனேகர் தங்களைப் பக்திமான்கள் என்று பிறர் சொல்ல வேண்டுமென்று கருதிப் பூச்சுப் பூசுவதும், பட்டை நாம்ம் போடுவதும், சதா கோவிலுக்குப் போவதும், பாட்டுகள் பாடி வழுவதும், வாயில் சிவ சிவ என்று சொல்லிக் கொண்டிருப்பதுமான காரியங்களைச் செய்தும் தங்களைப் பக்திமான்களாகக் காட்டிக் கொள்கின்றார்களோ – அதுபோலவும், எப்படிக் குழந்தைகள் தூங்குவதுபோல் வேசம் போட்டுக் கண்களை மூடிக் கொண்டிருந்தால் பெரியவர்கள் குழந்தைகளின் தூக்கத்தைப் பரிசோதிப்பதற்காகத் தூங்கினால் கால் ஆடுமே என்று சொன்னால் அந்தக் குழந்தை தன்னைத் தூங்குவதாக நினைத்துக் கொள்ள வேண்டுமென்று கருதிக் காலைச் சிறிது ஆட்டுமோ அது போலவும்; எப்படிப் பெண்கள் இப்படி, இப்படி இருப்பதுதான் கற்பு என்றால் பெண்கள் அதுபோலெல்லாம் நடப்பது போல் நடப்பதாய்க் காட்டித் தங்களைக் கற்புள்ளவர்கள் என்று காட்டிக் கொள்ளுகிறார்களோ அதுபோலவும், உண்மையான காதலர்களானால் இப்படியல்லவா இருப்பார்கள் என்று சொல்லிவிட்டால், அல்லது அதற்கு இலக்கணம் கற்பித்துவிட்டால், அது போலவே நடந்து காதலர்கள் என்பவர்களும் தங்கள் காதலைக் காட்டிக் கொள்ளுகின்றார்கள். இதற்காகவே அவர்கள் இல்லாத வேடத்தை யெல்லாம் போடுவார்கள். ஆகவே, ஆசையைவிட, அன்பைவிட, நட்பைவிடக் காதல் என்பதற்காக வேறு ஒன்றும் இல்லை.
9. காதல் என்பதன் பெயரால் சிக்கலில் மாட்டிக்கொண்டு தவிப்போர் பற்றிய தங்களின் சரியான கருத்தைத் தெரிவிக்க வேண்டுகிறோம்.
திடீரென்று காதல் கொள்வது, பிறகு கஷ்டப்படுவது, கேட்டால் காதலுக்காக என்று சொல்வது; என்ன நியாயம்? இது பலமற்ற சபலத்தனம். காதலுக்காகத் துன்பத்தை அடைவது முட்டாள்தனம். காதலும் கடவுளும் ஒன்று என்று சொல்வது இதனால்தான். காதலும் கடவுளும் ஒன்று என்றால் – காதலும் பொய் கடவுளும் பொய் என்றதான் அர்த்தம்.
10. பதிவுத் திருமணத்திற்கும் தாங்கள் வகுத்தளித்துள்ள சுயமரியாதைத் திருமணத்திற்கும் ஏதேனும் வேறுபாடு உண்டா அய்யா?
பதிவுத் திருமணத்தில் ரிஜிஸ்ட்ரார் முன்னிலையில் நாங்கள் சட்டப்படிக் கணவனும் மனைவியுமாக ஏற்று நடக்கச் சம்மதிக்கிறோம் என்ற மட்டும்தான் சொல்கிறார்கள். நாம் நடத்தும் திருமணத்தில் நாங்களிருவரும் ஒருவருக் கொருவர் துணைவர்களாக வாழ்க்கை ஒப்பந்தம் செய்து கொள்வதோடு ஒருவருக் கொருவர் எல்லாத் துறையிலும் இன்ப – துன்பங்களில் சமபங்கு அளித்துச் சமமாக ஒத்து வாழ உறுதி கூறுகின்றோம்’ என்று சொல்லும் முறையைக் கையாள்கிறோம். நம்முடையது சம உரிமைத் திருமணம் அல்லவா?
சாதி
1. உண்மையாகச் சொல்லுங்களையா? சாதி இருப்பதற்கு எந்தக் காரணமும் இல்லையா?
பேசும் சக்தியோடும் கை, கால், கண், மூக்கு, வாய்களான பஞ்சேந்திரியங்களோடும் காணப்படும் மக்கள் யாவருமே மனிதர்கள்தான். இவர்களைக் கடவுள் என்றாலும், தேவர் என்றாலும், ராட்சதர் என்றாலும், மனிதர் என்றாலும், பேய் பிசாசு என்றாலும் மற்றும் வேறு எந்தப் பெயரால் அழைக்கப்பட்டாலும் இப்படிப்பட்ட எல்லோருமே மனிதர்கள்தான்; மனிதப் பிறவிதான்; மனிதச் சுபாவ கணம் உள்ளவர்கள் தான். இப்படிப்பட்ட இவர்களிடம் எந்தவித்ப பேதங்களும், உயர்வு தாழ்வுகளும் கிடையாது. கண்டிப்பாய்க் கிடையாது. இருக்கிற தென்றால் அது வேத, சாத்திர, புராண, இதிகாச கற்பனைப் புரட்டுகள் தான். இது வாய்மை, மெய்ம்மை, உண்மை, சத்தியம், தத்துவம் ஆகும். நம்புங்கள்!
2. இந் நாட்டு மக்களைச் சாத்திரம் சட்டம் போன்றவை சூத்திரர் என்கின்றன; ஆகவே சூத்திரன் என்பதன் சரியான பொருளைத் தக்க ஆதாரத்துடன் தர வேண்டுகிறோம்?
சூத்திரன் நிலை
1. பிராமணன் கூலி கொடுத்தும் கூலி கொடுக்காமலும் சூத்திரனிடத்தில் வேலை வாங்கலாம். (மனு; அதி.8. விதி 43)
2. பிராமணனால் கூலி கொடுக்கப்படாவிட்டாலும் வேலையிலிருந்து நீக்கப்பட்டு விட்டாலும் சூத்திரன் தான் வேலை செய்ய வேண்டிய பொறுப்பிலிருந்து நீங்கியவனாக மாட்டான். (மனு ; அதி. 8. விதி 414)
3. சூத்திரன் பொருள்கள் எதுவாய் இருந்தாலும் அது பிராமணனுக்கே சொந்தமானதாகும். (மனு. அதி. 8. விதி 416)
4. சூத்திரனின் பொருள்கள் யாவற்றையும் பிராமணன் சிறிதும் தயக்கமின்றிப் பலாத்காரமாகக் கைப்பற்றிக் கொள்ளலாம். சூத்திரர்களுக்குத் தொண்டுதான் சொந்தமே ஒழிய பொருள்களுக்குக் கொஞ்சமும் அவன் உரிமைக்காரன் அல்ல (மனு அதி 8. விதி 417)
5. சூத்திரனைப் பிராமணனுக்கே தொண்டு செய்யும் படி அரசன் கட்டளையிட வேண்டும். (மனு. அதி 8 விதி 418)
3. ஆதித் திராவிடர் என்பது போன்ற பெயர் மாற்றத்தால் ஏதேனும் பயன் ஏற்படுமா?
பறையர்கள் என்ற பட்டம் மாறி. ஆதித் திராவிடர்கள் ஆகி இப்போது அரிசனங்கள் என்கின்ற பட்டம் வந்தது போல் வேறு ஏதாவது ஒரு பெயர் ஏற்படலாமே ஒழியக் குறையும் இழிவும் நீங்கிவிடாது. விபச்சாரிகளுக்கும், குச்சிக்காரிகளுக்கும், தேவதாசி, தேவ அடியாள் என்கின்ற பெயர்கள் இருப்பதால் அவர்களுக்குச் சமூகத்தில் இழிவு இல்லாமல் போய்விடவில்லை.
4. செல்வர்கள் சாதியை ஆதரிப்பதேனோ?
அரசனும் செல்வந்தனும் சாதி வித்தியாசத்தை ஆதரிக்க வேண்டியவர்களாகின்றார்கள். ஏனெனில், பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்றால் பணத்திலும் உயர்வு, தாழ்வு இல்லாமல் போய்விடுமே என்று பணக்காரன் பயப்படுகிறான்.
5. இந்து மதத்திலிருந்து கொண்டே சாதியை ஒழிக்க முடியாதா அய்யா?
சாதி இருப்பதனால் தான் நீ இந்து; உன் மதம் இந்து மதம்; உனது சாத்திரம் மனுதர்மம், உஉபநிடதம் என்று இருக்கிறது. இவைகளை யெல்லாம் ஏற்றுக் கொண்டுவிட்டுப் பிறகு நான் எப்படிச் சூத்திரன் என்றால் உலகத்தார் சிரிக்க மாட்டார்களா? சூத்திரன் என்பதை உள்ளபடியே நீ வெறுப்பதானால் இந்து மதத்தைவிட்டு வெளியேற வேண்டாமா?
6. சாதியைக் கடவுள் தான் படைத்தார் என்கிறார்களே! அது உண்மையானால் சாதியை ஒழிக்க நாங்கள் என்ன செய்ய முடியும்?
இந்தச் சாதி இழிவிற்குக் காரணம் கடவுள்தான் என்று உங்களுக்குத் தோன்றினால் அந்தக் கடவுளுக்கு உடனே நோட்டீசு கொடுங்கள். “கடவுளே, நாங்கள்தான் உனக்கும், உன்னைக் குளிப்பாட்டிவரும் உனது அர்ச்சகனுக்கும் அன்றாடம் படி அளந்து வருகிறோம். பாடுபடாத உன்னையும், பாடுபடுகிற என்னையும் ஏமாற்றுகிற அவனை உயர் சாதியாக்கி விட்டாய். ஆகவே ஒன்று இனி மக்களில் உயர்வு தாழ்வு இல்லை என்றாவது கூறு; அல்லது நீ யல்ல அதற்குக் காரணம் என்றாவது ஒப்புக் கொண்டுவிடு. இந்த நோட்டீசு விண்ணப்பத்தை அறிந்து இரண்டு வாரத்திற்குள் நீ ஏதாவது ஒரு முடிவான பதில் தெரிவிக்காவிட்டால் உன் கோயிலை இடித்துவிடுவோம்” என்று எச்சரிக்கை செய்யுங்கள். கடவுள் என்று ஒன்று அந்தக் குழவிக் கல்லில் அடைந்திருக்குமானால் அது வாய் திறந்து பேசட்டும்! இன்றேல் அதை உதறித் தள்ளுங்கள்.
7. சித்தர்கள், கபிலர் போன்றவர்கள் எல்லாம் சாதியில்லை என்று கூறியிருந்தும் அது ஒழியாததற்கு உரிய காரணம் எதுவாக இருக்கக் கூடும்?
தங்களுக்குள் சாதி பேதம் இல்லை என்று வாயில் சொல்லுவார்கள். கபிலர் சொன்ன வாக்கும், சித்தர்கள் – ஞானிகள் சொன்ன வாக்குகளும் பேச்சளவில் மாத்திரம் போற்றப்படுகின்றன. ஆனால் காரியத்தில் சிறிதுகூட லட்சியம் செய்யப்படுவதில்லை. இந்நிலையில் எப்படிச் சாதி ஒழியும் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள்.
8. நாடு விடுதலை யடைந்தும் நம் சாதி இழிவு போகவில்லையே! அது ஏன்?
உண்மைச் சுய ஆட்சி வரவில்லை; இன்று வந்திருப்பது இடைக்கால வர்ணாசிரம ராச்சியந்தான். உண்மைச் சுய ஆட்சியில் பிராமணன், சூத்திரன், பஞ்சமன் இருக்க முடியாது; இருப்பதைச் சுய ஆட்சி என்று கூற முடியுமா?
9. மக்கள் பிறக்கும் போதே பிறந்து விடும் சாதியை ஒழிக்க முடியுமா அய்யா?
நாம் பிறக்கும் போது இந்துச் சம்பிரதாயப்படிக் கீழ்ச் சாதியாய்ப் பிறந்தது என்னமோ உண்மைதான். அந்த இழிவுக்கு நாம் பொறுப்பாளியல்ல. அதை மாற்றிக் கொண்டு பிறக்கவும் நம்மிடம் யாதொரு சக்தியும் இருந்ததில்லை. ஆனால், நாம் சாகும்போது இழிவான சாதியாய் இல்லாமலும் நம் பின்சந்ததி இழிவான பிறப்பாய்க் கருத்ப்படாமலும் இருக்கும்படியாக நடந்துகொள்ளத் தக்க சக்தி நம்மிடம் இருக்கிறது. அதை நாம் செய்யாவிட்டால் நாம் இழிவை நீக்கிக் கொள்ள ஆசைப்பட்டவர்களாவோமா?
10. எப்போதுதான் சாதி ஒழியுமோ?
உண்மையில் எனது தொண்டு சாதி ஒழிப்புத் தொண்டுதான் என்றாலும், அது நமது நாட்டைப் பொறுத்தவரையில் கடவுள், மதம், சாத்திரம், பார்ப்பனர் ஒழிப்புப் பிரச்சாரமாகத்தான் முடியும். இந்த நான்கும் ஒழிந்த இடம்தான் சாதி ஒழிந்த இடமாகும். இவற்றில் எது மீதி இருந்தாலும் சாதி உண்மையாலேயே ஒழிந்ததாக ஆகாது.
சுயமரியாதை
1. மனிதனின் பிறப்புரிமை என்று அய்யா பெரியார் எதைக் குறிப்பிடுவீர்கள்?
மனிதச் சீவனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியாக, மான அவமானம் என்னும் தன்மானமாகிய சுய மரியாதையைத்தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியுருக்கின்றது. ஏனெனில், மனிதன் மானிடன் என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத் தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கிறான்.
2. மானம், கல்வி ஆகிய இவற்றுள் எது மேலானது?
மானத்தைப் பற்றிக் கவலை இல்லாதவன் எவ்வளவு படித்தவனானாலும் அவன் தாசிக்குச் சமமானவனே ஆவான்; அவனது படிப்பும் மானாபிமான முள்ளவர்களுக்கு ஆபத்தாகவே முடியும்.
3. மானமற்றோரைப் பற்றிய தங்களின் மதிப்பீட்டைத் தெரிந்து கொள்ள விழைகிறோமையா?
மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்; மானமற்ற ஒருவனுடன் போராடுவது கஷ்டமான காரியம்.
4. அரசியல் இயக்கங்கள் நாட்டுக்கு முதன்மை தர வேண்டுகின்றன. அதனைச் சுயமரியாதை இயக்கம் அப்படியே ஏற்குமா?
அரசியல் இயக்கம் முதலில் நாங்கள் இந்தியர்கள்; பிறகுதான் பார்ப்பனர்கள் – பறையர்கள் என்று பார்க்க வேண்டும் என்ற சொல்லுகின்றது. ஆனால் சுயமரியாதை இயக்கமோ, முதலில் நாங்கள் மனிதர்கள்; பிறகுதான் இந்தியர்கள்; அய்ரோப்பியர்கள் என்று பார்க்க வேண்டும் என்பதாகச் சொல்லுகின்றது.
5. பக்தி, அடிமைத்தன்மை ஆகிய இவற்றுள் எது மிக மட்டமானது?
பக்தி என்பதே அடிமையைவிட மோசமான வார்த்தை என்று எண்ணுகிறேன். அடிமை என்பது சரீரத்தால் மாத்திரம் தொண்டு செய்யக் கடமைப்பட்டவனாவான். பக்தி என்பது சரீரத்தினால் தொண்டு செய்ய வேண்டியதுடன் மனத்தினாலும் செய்ய வேண்டும். ஆகவே மனத்தைச் சுவாதீன மற்றதாக்கிக் கொள்ள வேண்டும். ஆகவே, சுதந்திரத்தையும், சுய மரியாதையையும் எதிர்பார்க்கும் மனிதன் யாருக்கும் பக்தனாயிருக்க முடியாது. யாரையும் பக்தியாயிருக்கச் சொல்லவும் முடியாது.
6. திருவள்ளுவர் மானத்திற்காக ஒருவன் தன் உயிரையும் இழக்கலாம் என்கிறார். தாங்கள் பொதுமானம் தனிமானம் இவற்றுள் எதற்கு முதன்மை தரவேண்டும் என்கிறீர்கள்?
ஒரு நாட்டின் மானத்தைக் காப்பாற்றவோ, ஒரு சமுதாயத்தின் சுய மரியாதையைக் காப்பாற்றவோ ஒரு சிலராவது மான மிழந்தால் அதில் ஒன்றும் குற்றமில்லை.
7. கடவுள் நம்பிக்கை உடையவன் சுயமரியாதைக் காரனாக இருக்க முடியுமா?
சுயமரியாதை உள்ள ஒருவன் கடவுள் நம்பிக்கை இல்லாமல்தான் இருக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவன் ஒரு பகுத்தறிவு வாதியாக இருக்க வேண்டும் என்று கூறுகிறேன்.
8. தாங்கள் சுயமரியாதைக்கு மாறானது என்று எதைக் குறிப்பிடுவீர்கள்?
உங்கள் பகுத்தறிவினாலும், உங்கள் அனுபவ உண்மையாலும் உங்களுக்கு தோன்ற – உலகப் பழக்கவழக்கத்துக்கு, சாத்திரத்துக்கு, மதக் கட்டுப்பாட்டுக்கு என்கின்ற நிர்ப்பந்தத்தின் மீது, அதற்கு மாறாய் நீங்கள் நடக்க வேண்டிய அடிமைத் தன்மை ஏற்பட்டால், அதைத்தான் சுய மரியாதைக்கு விரோதம் என்று சொல்லுகின்றோம்.
9. சுயமராயாதை இயக்கம் மதமறுப்பியக்கந்தானே?
சுய மரியாதை இயக்கமானது – வெறும் நம்பிக்கையை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட எந்த மதத்திற்கும் விரோதமானதுதான்.
10. கடவுள் ஒழிப்பு சுயமரியாதைக்காரர்களின் பணியா?
சுய மரியாதைக்காரர்கள் கடவுளை ஒழிப்பதில்லை. என்றைய தினம் மனிதனுக்கு ஆராச்சி அறிவு ஏற்பட்டதோ அன்றே கடவுள் செத்துப் போய்விட்டது. ஆனால், நமது நாட்டில் அந்தச் செத்த பிணம் அழுகி நாறிக் கொண்டிருப்பதை எடுத்துப் புதைத்து நாறின இடத்தை லோசன் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கின்ற வேலையைத்தான் சுய மரியாதைக்காரர்கள் செய்கின்றார்கள்.
பகுத்தறிவு
1. அறிவு என்பதற்கும், பகுத்தறிவு என்பதற்கும் ஏதேனும் வ