தந்தை பெரியாரின் சிந்தனைத் திரட்டு

1. மதமும் மனிதனும்

இவ்வுலத்திலுள்ள உயிரினங்களுள் ஒரு இனம் மனித இனம். மனிதனுடைய அறிவு, காலத்திற்கேற்ப மாறும் ஆற்றலை உடையது. அவனுடைய அறிவின் ஆற்றல் ஒவ்வொரு நாளும் தன்னுடைய நலத்தை பெருக்கிக்கொள்ளவும்,தன்னை வளர்த்துக் கொள்ளவும், தனக்கு வேண்டிய வசதிகளைச்செய்து கொள்ளவும் வல்லது. இவ்வாறு தன் பகுத்தறிவைக்கொண்டு சிந்தித்தது, ஒரு முடிவுக்கு வந்து செயலாற்றுபவனே மனிதனாவான்.
மதம் என்பது பலவகையான உள்ளது. ஆயினும் மதம் என்பது மனித வாழ்விற்காக, மனித நடைமுறைக்காக, மனிதனுடைய முடிவான குறிக்கோளை அடைவதற்காக ஏற்படுத்தப்பட்ட ‘விதிகள்’ அல்லது ‘முறைகள்’ என்று கூறலாம்.

2. பின்னுக்குத்தள்ளும் புலவர்கள்

மேலை நாடுகளிலுள்ள புலவர்களெல்லாம் அந்தந்த நாட்டு இலக்கிய வளர்ச்சிக்காக நூல்கள் இயற்றி, அந்தந்த நாட்டு மக்களை முன்னேற்றப் பாதைக்ககு அழைத்துச் செல்கின்றனர். ஆனால், நம் நாட்டுப்புலவர்களோ அப்படி அல்லர். நம்மக்களை எவ்வளவு தூரம் பின்னுக்கு இழுத்துச் சென்று – நம் மக்களை சிந்திக்கச் செய்யாமல் காட்டுமிராண்டிகளாக ஆக்கமுடியுமோ, அந்த வேலையைச் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.

3. இராசாசி ஒரு ஆபத்பாந்தவர்

உண்மையில் நான் ஆச்சாரியாருக்கு விரோதியல்லேன், அவரிடம் எனக்கு விரோதமோ, குரோதமோ கிடையாது. அவருக்கும் இருக்காது. இருக்க நியாயமில்லை என்றுதான் கருதுகிறேன்.
அவர் பார்ப்பனர் எனும் விஷயத்தில் தவிர, மற்ற காரியங்களிலும், நிர்வாகத்திலுர் ஏனைய காங்கிரஸ்காரர்களைவிட நாணயத்தில் எவ்வளவோ மேலானவர்தான். ஆனால், தேவர்களுக்கு மகாவிஷ்ணு எப்படியோ அப்படி அவர் பார்ப்பன சமுதாயத்திற்கு, ஆபத்பாந்தவர் ஆவார்.

4. மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?

இராமயணத்திலும், மாகபாரதத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. இது ‘மந்திர சக்தி’யால் ஓடியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் ஆகாய விமானம் பற்றிய விளக்கம் இருக்கிறது. இது ‘இயந்திர சக்தியால் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?

5. வேதங்கள்

வேதங்களெல்லாம் கடவுளாலேயே கூறப்பட்டன என்று மனப்பூர்வமாக அறிந்த எவனும் – சந்தேகத்துக்காவது ஆளான எவனும் வேதங்கள் கடவுள் வாக்கல்ல என்று மறுக்கவும் துணியமாட்டான். வேதங்கள் எல்லாம் தெய்வ்வாக்கு என்று கூறுவதற்கு வெறும் குருட்டு நம்பிக்கையும், நிர்பந்தமுமே ஆதாரமாக இருக்கின்றனவே ஒழிய, எவ்வித ருசுவோ, பிரத்தியட்சப் பிரமாணமோ ஒன்றும் இல்லை.

6. தொழில் பழகு

நமது கல்விமுறை மாறவேண்டும். படிக்கும்போதே அத்துடன் தொழிலும் பயிலவேண்டும். எந்த வகுப்பில் ஒருவன் படிப்பை நிறுத்தினாலும், அவன் தொழில் செய்து பிழைக்ககூடியவனாக இருக்கவேண்டும். மக்கள் அத்தனைபேரும் தொழில் பழகியவர்களாக இருக்க வேண்டும்.

7. மதச்சார்பற்ற சர்க்கார்

பெண்கள் ஒரு மாநாடு நடத்துகிறார்கள். அந்த மாநாட்டில் உள்ள பெண்கள் அத்தனை பேரும், பெண்கள் பதிவிரதைகளாக நடந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானித்துவிட்டு – பதிவிரதை என்றால் எல்லா ஆண்களையும் தங்கள் கணவனைப்போல் கருதி நடந்துகொள்ள வேண்டும் . அதுதான் பதிவிரதத்தன்மை என்று அர்த்தம் கொள்வது எவ்வளவு அயோக்கியத்தனமானதோ, அதைவிட அயோக்கியத்தனமாகும் ‘மதசார்பற்ற’ என்பதற்கு எல்லா மதங்களையும் ஒன்று போலக்கருத வேண்டும் என்பது! எனவே, ‘மதசார்பற்ற’ என்றால் எந்த மதத்தையும் சாராத என்பதுதான் பொருள். இந்த சர்க்கார் மதச்சார்பற்ற சர்க்காரானதால், அரசியலில் மதச்சார்புள்ள சாதனங்களான கடவுள் முதலிய படங்களை நீக்க வேண்டுமென்கிறது.

8. தியாகமும், சத்யாக்கிரகமும்

அநீதியும், அக்கிரமும் தொலைய வேண்டுமானால், வெறும் சட்டங்களாலும் , எழுத்தாலும், பேச்சாலும் முடியாதென்றும், சத்யாக்கிரகமும், தியாகமுமே உற்ற சாதனமாகுமென்று பலமுறை வற்புறுத்தியிருக்கிறோம். நமது நாட்டில் சாதிக்கொடுமையும், பிறவியினால் உயர்வு – தாழ்வு என்னும் அகங்காரமும் உடனே தொலையவேண்டியது அவசியமாகும். இக்கொடுமைகளை ஒரு பக்கத்தில் வைத்துக்கொண்டே ஜம்பமாகத் தென் ஆப்பிரிக்கா இந்தியருக்காகப் பரிந்து பேசுவதும், எழுவதும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களின் நன்மையையே பெரிதும் கவனிப்பதுபோல் நடித்து நீலிக்கண்ணீர் விடுவதும், தன் மனசாட்சி அறிய செய்யும் அக்கிரம்மேயன்றி வேறல்ல.

9. கற்கால எண்ணங்கள்

மனித சமுதாயம் மடமையானது கடவுளினால்தான். மனித சமுதாயம் இழிதன்மை அடைந்ததும் கடவுளினால்தான். இந்த கடவுளும் , மதமும் சாஸ்திரங்களும் 2000, 3000 ஆண்டுகளுக்கு முன்பாக மனிதன் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில் ஏற்பட்டவையாகும்.

10. யதார்த்த நாடகம் தேவை!

மக்களின் நன்மைக்காக ஆடப்படும் ஒரு நாடகத்தைப் பார்த்துவிட்டுச் செல்லும்போது நல்ல புத்தியோடு போவார்கள். நல்ல அறிவுரைகள் நாடகத்தில் இருந்தால், பார்த்துச் சென்ற மக்கள் மனதில் அது ஓரளவு நிலைத்து நிற்கும, எனவே, அது போன்ற நடிகவேள் ராதாவின் நாடகம் போன்றவைகளுக்கு சர்க்கார் முதலிடம் அளிக்க வேண்டும். மனித சமுதாயத்தின் நல்வாழ்வுக்கும், முன்னேற்றத்திற்கும், நல்லறிவு பெறுவதற்கும் நம் நாட்டில் இலக்கியம், நாடகம் முதலியவை தேவை!

11. வாழ்வின் அடையாளம் எது?

ஒவ்வொரு மனிதனும் செத்துப்போவது உண்மைதான் என்றாலும் அவனோடு அவனுடைய முயற்சிகளும் – அவன் துவக்கிய காரியமும் செத்துப் போய்விடுவதில்லை. அதுவும், அவனுடைய எண்ணத்தை அவனால் கூடுமான அளவுக்கு, அவனைச் சூழ்ந்துள்ள மக்களிடையே பரப்பிவிட்டால் – அந்த எண்ணம் ஒருபோதும் அழியாது, அடக்கிவிட முடியாது. என்னுடைய முயற்சியெல்லாம் மக்கள் எதையும் சிந்திக்கவேண்டும் என்பதுதான். அவர்கள் எதையும் கண்மூடித்தனமாக நம்பிவிடக்கூடாது என்பதுதான். இது போதுமான அளவுக்கு மக்களிடையே வேரூன்றிவிட்டது. இனியும் தொடர்ந்து எனது உயிருள்ளவரையில் நான் இதைத்தான் கூறிவருவேன்.

12. முதலாளி -தொழிலாளி

தொழிலாளிகளை மோசம் செய்யும் முதலாளிகளின் செயல்கள் யாவும் தொழில் திறமையாகவும், நிர்வாகத் திறமையாகவும் கருதப்படுகிறது; முதலாளியைத் தொழிலாளி ஏமாற்றுவது நாணயக் குறைவானது, நம்பிக்கைத் துரோகமானது, திருட்டுக்குற்றத்தில் சேர்ந்தது என்பதாக ஆகிவிடுகிறது. இதற்குக்க் காரணம் எல்லாவித முதலாளிமார்களின் ஆட்சி வலுத்திருப்பதுதான்.

13. பதவி சொகசு

நம் உத்தியோகஸ்தர்கள் பணி கிடைக்கும் வரை ‘நான் தமிழன்’, ‘தமிழன்’ என்று உரிமை கொண்டாடி, வேலை கிடைத்ததும் பதவி சொகுசில் தனைனை வேறு சாதியனாக்க் காட்டிக்கொண்டு, தான் இன்னும் மேலே போவதற்காக உண்மையில் வேறு சாதியாளாகவே ஆகிவிடுகிறார்கள்.

14. நியாயம் எங்கே?

ஜீவன் என்றால் பிறத்தல், தன் நலனுக்காக வாழ்தல், இனத்தைப் பெருக்குதலை, இறத்தல் ஆகியவைகளைக் கொண்டதேயாகும். இந்தத் தத்துவங்களைப் பார்த்தால் செத்த மனிதர்களும், இருக்கும் மனிதர்களும், ‘முக்காலே மூன்று வீதம் முக்காணி அரைக்காணி’ பேரும் அதற்கு மேற்பட்ட எண்ணிக்கை உடையவர்களும், மேற்கண்ட குணங்களையுடைய ஜீவப்பிராணி என்பதில் சேர்ந்தவர்களாகாமல், அவைகளினின்றும் உயர்ந்தவர்களாகக் கருதப்பட வேண்டிய மனிதத் தன்மை உடையவ்ர்களாக இருக்க நியாயம் எங்கே இருக்கிறது?

15. துக்கமயமாக்கும் மதம்

மதமானது இன்று உலகில் மனித சமுதாயத்தின் வாழ்வைத் துக்கமயமாக்கி, ஜீவராசிகளில் மனிதனுக்கென்றுள்ள பகுத்தறிவை அடிமையாக்கி, ஒற்றுமையைக் குலைத்து மனிதனுக்கு மனிதன் வெவ்வேறு இனம் என்று எண்ணும்படி செய்து வருகின்றது.

16. மனத்திருப்தியும் ஆறாவது அறிவும்

வாழ்க்கையில் பேத நிலையும், போதவில்லை என்கின்ற மனக்குறையும், தனிப்பட்ட சுயநலப் போட்டித் தொல்லையும் எந்த நாட்டிலாவது இருக்குமானால், அந்த நாட்டு மக்களுக்கு முழுப்பகுத்தறிவு இல்லை என்றும், எந்ந நாட்டிலாவது அவை இல்லாமல் வாழ்வில் மக்கள் மனத்திருப்தியுடன் இருப்பார்களானால் – அந்த நாட்டில் ‘பகுத்தறிவு’ ஆட்சிப்புரிகிறது என்றுதான் அர்த்தம்.

17. நம்பிக்கைக்காரர்கள்

ஒரு தேவதாசியை விபச்சாரி என்று சொன்னதற்காக அவள் கோபித்துக்கொள்வது போலும், ஒரு ‘வக்கீலை’ அவர் காசுக்குப் பேசுகிறவரேயொழிய, நேர்மைக்காகப் பேசுகிறவல்லர் என்று சொன்னால் அவர் கோபித்துக் கொள்வது போலும், ஒரு வியாபாரியை பொய்பேசுகிறவர் என்று சொன்னால் அவர் கோபித்துக்கொள்வது போலும் -கடவுள் நம்பிக்கைகார்ர்களை ‘முட்டாள், அயோக்கியன், காட்டு மிராண்டி’ என்று சொன்னால் அவர்கள் கோபித்துக கொள்கிறார்கள்.

18. புத்தனின் முதல் கருத்து

புத்தர் பிரான், வருணாசிரம தர்மத்தையோ இந்த வருணாசிரம தேவர்களையோ ஏற்றுக்கொண்டவர் அல்லர்; அவற்றை ஒழிப்பதே புத்தமதத்தின் உட்கருத்து; முதல் கருத்து!

19. சமுதாய நலன்

மூடநம்பிக்கை, முட்டாள்தனம், இழித்தன்மை என்பவை எந்த முறையிலும் பார்ப்பனரல்லாதாருக்கு ஏற்றது என்றால் – பார்ப்பனரல்லாதார் சமுதாயம் ஒழிந்து போவதே மேல்; அல்லது பார்ப்பனரலாதார் அடிமையாக இருப்பதே மேல். இப்படிப்பட்ட பார்ப்பனரல்லாதார் சமயம், சமுதாயம் நமக்ககு வேண்டாம். இவையெல்லாம் ஆரியர் நலனுக்காக வேண்டி ஏற்ப்ட்டவைகளும், ஏற்பாடு செய்யப்பட்டவைகளுமாகும். இவற்றாலே பார்ப்பனர் நிலை இவ்வளவு கெட்டியாய் இருக்கிறது. இந்த சமயத்தை விட்டு நீங்கிய தமிழர்கள் வாழமுடியவில்லையானால், மானமுள்ளவர்கள் வேறு சமயத்தைத் தழுவிக்கொள்வதே மேலாகும். இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் நீக்கிவிட்டு, அதில் காணும் கடவுள்களையும் இகழ்ந்து ஒதுக்கிவிட்ட நம் திராவிட மக்களில் ஒரு சார்பான இசுலாமியர்கள் மான வாழ்வும், ஒற்றுமை வாழ்வும் வாழாமல் போய்விடவில்லை.

20. உலகச் சிற்பிகள் உருவாக!

பாமரனின் ஞானசூனியம், சுயநலக்காரனின் எதிர்ப்பு என்னும் இரண்டு பெரிய விரோதிகளைக் கண்டு கலங்காமல் வேலை செய்வோரே இனி வரும் உலகச் சிற்பிகளாக ஆகமுடியும்.

21. கடவுள் – பொதுப் பித்தலாட்டமான சொல்

எஜமான்ன் – சம்பளக்காரன், முதலாளி – தொழிலாளி, பண்ணையார் – கூலிக்காரன் என்கிற முறை அமுலில் இருக்கும் நாட்டில் சுதந்திரம், சமத்துவம் என்று பேசுவதேல்லாம் புரட்டும் மோசடியும் அல்லாமல் அதில் உண்மை இருக்க முடியுமா? அதுபோல்தானே ஜனநாயகமும் நடந்துவருகிறது.
‘கடவுள்’ என்பது ஒரு பொதுப் பித்தலாட்டமான சொல்; இந்தப்பித்தலாட்டத்தில் எல்லோருக்கும் பங்கு வரும். ‘ஜனநாயகம்’ என்கிற பித்தலாட்டச் சொல் அப்படி அல்ல; தந்திரகாரனுக்கு – அயோக்கியனுக்கு – இவர்களைச் சேர்ந்த கோஷ்டிக்குந்தான் பங்கும், பயனும் உண்டு. போக்கற்ற ஆளுக்கெல்லாம், பித்தலாட்ட வாழ்வு கோஷ்டிக்கெல்லாம் பிழைக்கும் வழி – ஜனநாயகம்தான்.

22. புத்தனின் கேள்வி

சரித்திர சம்பந்தமாக எவராவது மனிதனில் கீழ்சாதி, மேல்சாதி என்பது பற்றி கேட்டாரா என்றால், புத்தர் ஒருவர்தான் கேட்டார். அவர் ஒரு ராஜாவின் மகன்; அவர் பலவற்றைப்பற்றிக் கேட்டார். ”அவன் ஏன் கிழவனாக உள்ளான்? இவன் ஏன் வேலைக்காரனாக உள்ளான்? இவனுக்கு ஏன் கண்கள் குருடு?” என்று கேட்டார். அதே புத்தர்தான் கேட்டார் ” இவன் ஏன் கீழ் சாதி” என்று அழைக்கப்படுகிறான? ”அது கடவுளால் பிறப்பிக்கப்பட்டது” என்றனர். அப்படிக் கீழ்சாதியாய் பிறப்பித்த கடவுள் எங்கேயடா? என்றார். ஆத்மா பற்றிக் கூறினார்கள். அது என்ன? அப்படி ஒன்று இருப்பதாகக் காணோமே என்றார். அப்படி கேள்விகள் கேட்டவரையேஇந்நாட்டைவிட்டுத் துரத்தினார்களே!

23. விஞ்ஞான வளர்ச்சி எப்போது வரும்?

இந்த நாடு முன்னேற வேண்டுமானால், எந்த மொழியினாலும் சரி, விஞ்ஞான அறிவு, விஞ்ஞான வாழ்வு இவற்றால் முடியும்.

24. பொதுச்சொத்து

செல்வம் என்பது உலகின் பொதுச்சொத்து. அதாவது மக்கள் அனைவரும் அனுபவிக்க உரிமையுள்ள சொந்தமான சொத்தாகும். அதை யார் உண்டாக்கியிருந்தாலும், உலக்த்தில் உள்ளவரை எவருக்கும் அது பொதுச்சொத்தாக்மு. அனுபவிக்கும் உரிமைபோல அதை அழியாமல் பாதுகாக்கவும் உரிமை உண்டு.

25. வெறுக்கப்படும் நாத்திகம்

உலகத்திலேயே ”நாத்திகம்” என்று சொல்லப்படும் வார்த்தையானது அனேகமாய் பெரும்பான்மையான மக்களால் வெறுக்கப்படக்கூடியதாக இருந்து வருகின்றது. காரணம் என்னவென்று பார்ப்போமானால், அவ்வார்த்தையில் ‘கடவுள் என்பது இல்லை’ என்கின்ற பொருள் அடங்கி இருப்பதாகக் கொள்வதேயாகும்.

26. மனிதப்பிறப்பு

மனிதனுக்கு மிக அருமையான அறிவும், பகுத்தறிவும், ஆழ்ந்து சிந்திக்கும் தன்மையும், அனுபவத்திற்கு ஏற்ப நடக்கும் உரிமையும் இருக்கும்போது கடவுள் எதற்கு?
இந்தக்கடவுள், மத உணர்ச்சி இல்லாமல் இருந்தால்தான் மனிதப்பண்பு, மக்கள் யாவரையும் ஒன்றுபோல் கருதும் உணர்ச்சி, நேர்மை, நல்லதைப் போற்றவும், தீயதைக் கண்டிக்கவுமான துணிவு, யாவரையும் ஒன்றுபோல் கருதிச்செய்தும் பொதுத்தொண்டு உணர்ச்சியும் ஏற்பட முடியும். இன்று இவை சுத்தமாய் இல்லாததற்குக் காரணம் – இந்தக்கடவுள், மதம், மனித்த்தன்மைக்கு மேற்பட்ட தன்மையுள்ள மனிதப்பிறப்பு என்கின்ற உணர்ச்சிதான் என்பது எனது தாழ்மையான் முடிவு!

27. புரட்சி தேவை!

சகல முதலாளி வர்க்கமும் சர்வ சமயங்களும் அடியோடு அழிந்து, மக்கள் யாவரும் சுயமரியாதையுடன் ஆண், பெண்அடங்கலும் சர்வ சமத்துவமாய் வாழச் செய்யவேண்டும் என்பதற்காகப் புரட்சி செய்யவே ‘புரட்சி’ தோன்றியிருக்கிறது. அது உயிருள்ளவரையும் தன் கடமையை செய்துக் கொண்டிருக்கும். ஆதலால் புரட்சியில் ஆர்வம் உள்ளவர்கள் புரட்சியை ஆதரிக்க வேண்டுகிறோம்.

28. பொருளாதாரப போட்டி

செல்வம் (பணம்) தேட வேண்டும் என்று கருதி அதில் இறங்கியனுடைய வேலை, அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டுவிடுகிறது. பணம் சம்பாதிப்பதில் போட்டி, பணக்காரன் என்று காட்டிக்கொள்வதில் போட்டி, அதற்கேற்ப புகழ் சம்பாதிப்பதில் போட்டி, இத்யாதி போட்டிகள் அவனது ஊக்கத்தையெல்லாம் கொள்ளை கொண்டுவிடுகின்றன.

29. சோம்பேறி எண்ணம்

ஒரு தகப்பன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளுக்கு எப்படி சம அந்தஸ்தும் சம உரிமையும் உள்ளதோ, அப்படியே ஒரு தேசத்தில் பிறந்தவர்களுக்கும் இருக்கவேண்டியது அவசியமாகும். அப்போதுதான் மக்கள் சுலபமாக வாழமுடியும். ஏதோ தான் பிறந்த வேளையின் பலன் கஷ்டத்தை அனுப்பவிக்க வேண்டிதுதான்; மற்றொருவன் சுகத்தை அனுபவிக்க பாத்தியதை உடையவன்தான் என்னும் சோம்பேறி எண்ணமே மக்களை அழித்து வருவதற்கு முக்கிய கருவியாய் இருக்கிறது. இந்த எண்ணம் மாறுபடவேண்டியது அவசியமாகும். இதற்காக எவ்வளவு தியாகம் செய்தாலும் அது வீணாகாது. மக்களின் மனோபாவமும் வாழ்க்கையை நடத்தும் முறையும் மாறினாலொழிய வேறு ஒரு முறையானாலும் நன்மை உண்டாகாது என்பது திண்ணம்.

30. பித்தலாட்டம்

ஜோசியன், மந்திரவாதி, சாமியாடி, அர்ச்சகன், வைத்தியன் ஆகிய அய்வரும் ‘பித்தலாட்ட வாழ்வு’ என்னும் ஒரு மரத்தின் வெவ்வேறு கிளையில் காய்த்த காய்கள், என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம். இப்படியாக ஏற்பட்ட கற்பனைகளுக்கு ஏற்பத்தான் கோயில், குளம், மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் முதலியவைகள் உண்டாக்கப்பட்டும் இருக்கின்றன.
உலகின் அர்ச்சகன், மாந்திரிகன், ஜோதிடன் இவர்களைவிட பித்தலாட்டத்தில் கைதேர்ந்தவர்கள் கிடையாது.

31. கலைஞர்கள்

சுயமரியாதைக்கார்ர்கள் காரியம் போதிய வெற்றிப்பெறாமல் தடைப்படுவதற்குக் காரணமே இந்தக் கலைவாணர்கள்தான்! மணிக்கு இவ்வளவு ரூபாய் என்று ரேட்டு வாங்கிக்கொண்டு ‘முருகா! இராமா! கிருஷ்ணா!’ என்று பாடுவதும், இந்தக் கடவுள்கள் தங்கள் மனைவி, வைப்பாட்டிமார்களுடன் நடத்திய லீலைகளை வர்ணிப்பதும்தான் இக்கலைகளின் பயன்! இவ்வளவு பணச்செவுகளுக்கும் இதுதானா பிரயோஜம்!

32. சட்டச் சிக்கல்

நான் சாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன். இந்திய அரசியல் சட்டத்தில் சாதிக்கும், அதை உண்டாக்கிய மத்ததுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவில்லை. அச்சட்டத்தைத் திருத்தக்கூடய வசதி தமழர்களுக்கு இல்லை.

33. திருவள்ளுவர் கூறியது சரியே!

பிச்சைக்கரன் இருப்பதும் அவர்கள் பிச்சை எடுப்பதும் ஜனசமுகத்துக்கு ஒரு பெரும் தொல்லையும், இழிவுமாகும் என்பதோடு, ஒரு கடவுள் இருந்தால் – அக்கடவுளுக்கு மிகுந்த அவமானமும், அயோக்கியத்தனமான காரியமுமாகும்.
இந்தக் கருத்தை வைத்தே திருவள்ளுவரும் ‘பிச்சை எடுத்து வாழவேண்டிய மனுதனைக் கடவுள் சிருஷ்டிருப்பாரேயானால் அக்கடவுள் இல்லை என்றுதான் அர்த்தம். அவன் இருந்தாலும் ஒழிய வேண்டியது அவசியம்’ என்று சொல்லியிருக்கிறார்.
திருவள்ளுவர் நூலில், முன்னுக்குப்பின் முரண்கள் பல இருந்தாலும், அவர் ஒரு தனிமையுடமைக்காரரேயானாலும் இந்த ஒரு விஷயத்தில் தைரியமாகச் சொல்லியிருக்கிறார்.

34. பெண் விடுதலை

பெண்கள் தங்கள் ஜீவ சுபாவத்துக்காக தாங்களே, முயற்சியெடுத்து கட்டுப்பாடுகள் என்ற விலங்குகளைத் தகர்தெறிய முற்பட்டாலொழிய, தங்களை வாசனைத்திரவியங்கள் போலவும், உடையணிகள் போலவும் மதித்து அனுபவித்துக் கொண்டுவரும் ஆண்களாலும், எப்படிப்பட்ட சமதர்ம ஆட்சியாலும் பொதுவுடமைக்காரருடைய ஆட்சியாலும் விடுதலை ஏற்படாது.

35. கோடி கோடியாக சாப்பிடும் கடவுள் தேவையா?

ஆற்றிவுடைய மக்கள் உள்ள நாட்டில், மனித சமுதாயத்தில் ஒரு கடவுள், அதற்கு வீடு, சோறு, பெண்டாட்டி, பிள்ளை, சேலை, நகை, வைப்பாட்டி, விபச்சாரம் செய்தல், கோபம்-தாபம் , பழிவாங்குதல், கொல்லுதல்,போரில் அடிபடுதல், மூர்ச்சையாதல் மற்றுமெத்தனையோ கீழ்த்தர மக்களது தன்மைகளையெல்லாம் பொருத்தி – அந்தப்படி பொருத்தப்பட்ட கடவுளக்கு தேசப்பொருளை செல்வத்தை கோடி கோடியாகச் செலவழித்துப் பாழாக்குதென்றா, கடுகளவு சிந்தனை அறிவுள்ள யார்தான் இதை யோக்கியமான காரியம் என்றோ, உண்மையான நம்பிக்கையுடைய காரயமன்றோ கருதமுடியும்?

36. சுயமரியாதை பெறச்செய்யும் குறள்

திருவள்ளுவர் கூறியுள்ள கருத்துக்களுள் ஒன்றேனும் ஒழுக்கக் குறைபாடுள்ளதாக்க் காணப்படாது. அறிவுள்ளவர் யாரும் மறுக்க முடியாத – வெறுக்க முடியாத கருத்துக்களை அமைத்துத்தான் அவர் குறளை இயற்றியுள்ளார். குறளை படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள். அரசியல் ஞானம், சமூக ஞானம், பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கிவிடுகிறது.

37. பக்தி எது?

சமுதாயத்தில் பெரும் கேடு விளையக் காரணமாக இருப்பவர்களுள், பெரும் லஞ்சப்பேர்வழிகளும்தான் பூசை, பக்தி என்று பெரிதாக ஆர்ப்பாட்டம் செய்வார்கள். கடவுள் பக்தி இருப்பதெல்லாம், ஒருவித ஆசையைப் பூர்த்தி செய்து கொள்வதன் காரணமாக உண்டானதுதானேயொழிய மனிதர்களை ஒழுக்கம் உடையவர்களாக ஆக்கவோ, மற்றவர்களுக்குப் பயன்படும்படிச் செய்யவோ அல்ல!

38. தமிழ்க்கடவுள் எங்கே?

வழக்கத்திலுள்ள கடவுள்களில் எதுவும் தமழனுக்குச் சொந்தமானது கிடையாது. எல்லாம் வெளிநாட்டிலிருந்து இங்கு கொண்டுவரப்பட்ட கடவுளகேயாகும், சரஸ்வதி, இலட்சுமி, சிவன், விஷ்ணு, பிரம்மா, பிள்ளையார், அரங்கன், நடராசன், கந்தன், சுப்பிரமணியன், இராமன், கிருஷ்ணன், எல்லாம் வடமொழிச் சொற்களே தவிர, தமிழ்மொழி பெயருள்ள கடவுளகள் எதுவுமே கிடையாது. கருப்பண்ணன், காட்டேரி வேண்டுமானால் தமழ்ப் பெயருள்ளவைகளாக இருக்கலாம். அதுதான் தொலைகிறது. இந்தக்கடவுள்களின் கதையாவது நாணயம், நேர்மை, ஒழுக்கமுடையவைகளாக இருக்கின்றனவா?

39. பொதுவுடமை கருத்து

மனிதனுக்கு கவலைகள் நீங்கி, திருப்தி எண்ணம் ஏற்பட வேண்டுமானால், பொது உடைமைதான் அதற்கு மருந்து என்று கூறப்படுகிறது. ஏனென்றால், பொது உடைமைத் திட்டத்தில் மனிதர்களுக்குள் பேதம் இல்லாமல் செய்யமுடிகிறது.

40. மனித தர்ம நூல் குறள்

குறள், இந்து மதக் கண்டனப்புத்தகம் என்பதையும், இது சர்வ மதத்திலுள்ள கருத்துக்களையெல்லாம் சேர்த்து எழுதப்பட்டுள்ள ‘மனித தர்ம நூல்’ என்பதையும் எல்லோரும் உணரவேண்டும்.

41. வளர்ச்சி வந்த விதம்

இரண்டாயிரம் ஆண்டு இடைக்காலத்தில் மக்கள், தங்கள் சொந்த புத்தியை உபயோகிக்கும் உரிமையை முற்றிலும் இழந்திருந்தார்கள். ஏன், எதற்கு, என்ற கேள்விகளைக் கேட்கவே உரிமையில்லாதவராய், எழுதியதைப் படிப்பவர் சொல்லியபடி கேட்டனர். சிந்தித்தால், தர்க்கித்தால், சந்தேகித்தால் பாவம் என்று கூறி அமுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள், எனவேதான் அறிவு வளரவில்லை: சமுதாயம் மேலோங்கவில்லை.

42. எது சுயநலம்?

இன்பமடைவது, மனத்திருப்பியடைவது, இயற்கை உணர்ச்சிகள் சக்கி அடைவது, பழிவாங்குவது, எதிரியைத் தண்டிப்பது மூலம் திருப்தி அடைவது முதலியவை எல்லாம் சுயநலமேயாகும்.

43. கூட்டுறவு

சர்க்கார்தான் ஜனங்கள், ஜனங்கள்தான் சர்க்கார் என்பதை உணருங்கள். நமது சரீரத்தில் கஷ்டமேற்பட்டால் நமக்கென்னவென்று இருப்போமா? அதுபோல் நமது உணர்ச்சிகள் இருக்க வேண்டும். சிப்பியானது திறந்திருக்கும்போது மழைத்துளி விழும்போதுதான் முத்தாகிறது. அதுபோலத்தான் நமது உணர்ச்சிகளைப் பக்குவப்படுத்தி, சரிப்படுத்தி வைத்துக்கொண்டு தயாராகவே இருக்கவேண்டும். அப்பொழுது கண்டிப்பாக பலன் ஏற்பட்டுவிடும். நம்முடைய அபிப்பாரயந்தான் ஜனசமூக அபிப்ராயம் என்று தன்னம்பிக்கையுடன் நாம் வேலை செய்யவேண்டும். நமது உடலிலுள்ள பழைய ‘தனித்தனித் த்த்துவ’ ரத்தத்தை எடுத்துவிட்டு கூட்டுறவுத் தன்மை என்ற இரத்தத்தைப் பாய்ச்சச்(Inject) செய்ய வேண்டும். இது நம்மால் முடியுமா என்றிருக்க்கூடாது. கண்டிப்பாய் இது முடியாமல் போய்விடாது.

44. தொழிலாளித்தன்மை

நான் கூறுகிறேன், தொழிலாளர்கள் மோதிக் கொள்ளவேண்டிய இடம், முதலாளிகள் அல்ல; முதலாளிகளிடம் முறையிடுவதற்குப் பதிலாக மந்திரிகளிடம் முறையிடுங்கள். அவர்கள் வீட்டைக் கொள்ளையடிப்பதற்குப் பதிலாக, கஜானாக்களை கொள்ளையிடுங்கள். உங்களுக்கு பலாத்தகாரத்தில் நம்பிக்கை இருந்தால் அதை யோக்கியமான முறையில், வீரமான முறையில் செலுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தொழிலாளியின் கூலி உயர்ந்துவிட்டால் மட்டும் அவன் நிலை, அந்தஸ்து உயர்ந்துவிடாது; தொழிலாளித் தன்மை அடியோடு மாறிவிடாது.

45. ஒரே கட்சிக்காரர்கள்!

நாமும் இத்தன் நாட்களாகப் பார்க்கிறோமே! பார்பனர்களில் எத்தனையோ கொள்கை பேசுபவர்கள், புரட்சிக்காரர்கள், பெரிய பெரிய தலைவர்கள் என்பவர்களையெல்லாம் பார்த்திருக்கிறோமே! இவர்களில் எந்த பார்ப்பனராவது, எந்தப் பார்ப்பானையாவது எதிர்த்து இருக்கிறானா? எந்தக் கட்சியில் பார்ப்பான் இருந்தாலும், பார்ப்பான் சமுதாய விஷயத்தில் எல்லாப் பார்ப்பனர்களும் ஒரே கட்சிகாரர்கள்தானே!

46. சர்வதிகாரம்

சிலருக்கு, நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படுகிறேன் என்று தோன்றலாம். அது ஓரளவுக்குச் சர்வாதிகாரம் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் தோழர்களே! சிந்திக்கவேண்டும், இந்த சர்வாதிகாரம் எதற்குப் பயன்படுகிறது என்று. என்னுடைய சர்வாதிகாரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காக, பொது நன்மைக்காக பயன்படுத்திகிறேனே தவிர, எந்தச் சிறு அளவுக்கும் எனது சொந்தப் பெருமைக்காகவோ, ஒரு சிறு கடுகளவாவது சொந்த நனைமைக்காகவோ, பயன்படுத்திக்கொள்ளவில்லை என்படை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்துகொள்ள வேண்டுகிறேன்.

47. விளங்கிக்கொள்ளுங்கள்.

மனித ஜீவ வர்க்கத்திடமுள்ள சில குணங்கள் எப்படி மற்ற ஜீவராசிகளுக்கு இல்லையோ, அதுபோன்றே – மற்ற ஜீவராசிகளுக்கு உள்ள சில குணங்கள் மனித ஜீவ்வர்கத்திற்கு இல்லாமல் இருப்பதை நாம் பார்க்கிறோம். ஒரு கழுதைக்கும், ஒரு குரங்குக்கும் உள்ள வித்தியசத்தைக் கணக்குப் பார்த்து, ஒரு குரங்கும், ஒரு மனுதனுக்கும் உள்ள வித்தியாசத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பின்கண்ட வித்தியாசத்தின் அளவு அதிகமாய்க் காணமுடியாது. ஆகவே, மனித ஜீவன், ஜீவப்பிராணிகளிலெல்லாம் மேலானதென்றும், தனிப்பட்டதென்றும், அதற்கு மாத்திரமே சில தனித்துவங்களுண்டு என்றும், கருமம், மதம், மேலுலக வாழ்வு, கடவுள், கடவுள் தண்டனை, மன்னிப்பு, சன்மானம் ஆகியவை சொந்தமென்றும், மனிதனுக்கே சில தத்துவங்கள், கடமைகள், பிரார்த்தனைகள் முதலியவை உண்டென்றும் சொல்லுவதில் ஏதாவது அர்த்தமிருக்க இடமுண்டா என்று பார்த்தால் இவை வெறும் கற்பனைகளென்றே விளங்கும். மற்றும் கடவுளுக்கும், மனிதனுக்கும் இருக்கும் சம்பந்தமும், பொறுப்பும் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லை என்று சொல்லமுடியுமா என்பது விளங்கும். அது போலவே பாவமும், புண்ணியமும், சொர்க்கமும், கடவுள் பாதத்தை அடையக்கூடிய தன்மையும் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லையென்று சொல்லமுடியுமா? என்பதும் விளங்கும்.

48. அனுபவம்

அரசியலில் உழல்வதென்பது என்றைக்கிருந்தாலும் ஒரு நாளைக்காவது மனிதன் தன்னை அயோக்கியனாக்கிக் கொள்ளாமலும், தேசத்தையும், சமூகத்தையும் காட்டிக்கொடுக்காமலும் வாழும்படி செய்யவே முடியாது. இது நமது அனுபவத்திற்குச் சந்தேகமறத் தோன்றிவிட்டது.
சமுகத்தொண்டில் ஈடுபட விருப்பமுள்ளவர்களிடம் அரசியலில் அதைக் க்ண்டிப்பதைத் தவிர, மற்றபடி தான் நேரில் கலப்பதில்லை என்பதாக உறுதிபெற்றே அவர்களைச் சேர்த்துக்கொள்ளும் நிபந்தனை ஏற்படுத்தினால்தான் சமுகத்தொண்டு இயக்கம் நடைபெறவும், வெற்றிபெறவும் முடியுமென்றே இப்போது நினைக்க வேண்டியிருக்கிறது.

49. கிளர்ச்சியின் தத்துவம்

நீக்ரோக்களும், வெள்ளையருக்கும் உள்ள அளவு பிறவிபேதம், நிறபேதம், நாகரிகபேத்மு, நமக்கும், பார்ப்பனருக்கும், பூசாரிகளுக்கும் கிடையாது. அவ்வளவு பேதமுள்ள (மைனாரிட்டி) நீக்ரோக்கள் மெஜாரிட்டியான, ஆளும் சாதியாரான, பிரபுக்களான வெள்ளையர்களோடு – எல்லாத்துறைகளிலும் சரிசம்மாக்க் கலந்து, உண்பன, உறங்குவனு, பெண் கொடுத்தல், பெறுதல் உட்படக்கலந்து, புழங்குகிறார்கள். ஆனால், நம் நாட்டில் 100க்கு மூன்று பேரே உள்ள கூட்டம் பிச்சை எடுப்பதையும், உழைக்காத்தையும், கூலிக்குப் புரோகிதம் செய்வதையும் உரிமையாக்கிக்கொண்ட, பிழைப்பாய்க் கொண்ட கூட்டம் மற்றும் வாழ்வில் யோக்கியமாக, நேர்மையாக, நாணயமாக இருக்கவேண்டும் என்கின்ற தர்ம்ம் இல்லாத்தும், தாங்கள் எது வேண்டுமானாலும் செய்து பிழைக்கலாம், எப்படிவேண்டுமானாலும் நடக்கலாம் என்கின்ற அனுபவத்தில் இருக்கிற கூட்டம் – தங்களை ‘மேல்பிறவி’ என்றும் நம்மை ‘கீழ்பிறவி’ என்றும் -இழிபிறவி_ பொது இதமாகிய கடவுள் என்கின்ற கல் சிலையிருக்கும் இடத்தில் பிரவேசிக்கக்கூடாத மிகமிக இழி தன்மையானவர்கள் என்பதான நிபந்தனையை நம் பேரில் ஏற்றிக் கொண்டு – கட்டடத்திற்கு, அறைக்கு வெளியில் நின்று வணங்க வேண்டும் என்பதை – நிலைக்கவிடலாமா என்பதுதான் கிளர்ச்சியின் தத்துவமாகும்.

50. மாறுதல் வேண்டும்

நாமும், நமது நாடும் முன்னேற வேண்டுமானால், சமுதாயத்துறையிலே பெரும் மாறுதலை உண்டாக்கவேண்டுவது அவசியமாகும். அதன் பின்னரே, நல்ல ஆட்சியும் ஏற்படுத்த முடியும் என்பது திண்ணம். அவ்வாறு இல்லாது, இனைறைய சமுதாய அமைப்பைக்கொண்டே, யார் ஆட்சி செய்தாலும் மக்களுக்கு ஏற்பட்டுள்ள தொல்லைகள் ஒரு சிறிதும் நீங்குவதற்கு வழிஇல்லை; வழிவகையும் இருக்கமுடியாது.

51. மானமுள்ள மக்களாக

சூத்திர்ர் என்கிற இழிவை நீக்கக் கிளர்ச்சி செய்வது என்பது சமுதாய சம்பந்தமான (சோஷியலிச) காரியமே தவிர, இதில் அரசியல் ஏதுமில்லை; மற்றும் இதில் பலாத்காரம் என்பதுமில்லை.
அதிலும், இந்த இழிவுநீக்கக் கிளர்ச்சி என்பது, உலகில் எங்குமே இல்லாத அக்கிரமக்கொடுமையிலிருந்து மனிதன் விடுதலை, மானம் பெறவேண்டும் என்பதற்காக நடத்தப்படும் கிளர்ச்சியேயாகும். இதில் எவ்வித வகுப்புத் துவேஷமோ, வகுப்பு வெறுப்போ இல்லை. நம் நாட்டில் (இந்துக்கள் என்னும்) சமுதாயத்தில் 100 க்கு 97 பேர்களாக உள்ள மக்கள் – அதிலும் படித்தவர்கள், செல்வவான்கள், அய்க்கோர்ட் நீதிபதிகள், கலெக்டர்கள், உப அத்தியட்சகர்கள், மடாதிபதிகள், சமீப காலம்வரை மகாராஜாக்கள், அரசர்கள், ஜமீன்தார்கள், பல கோடி ரூபாய்க்குச் சொந்தக்கார்ர்கள் பிரபுக்களுட்பட இவர்கள் சமுதாயத்தில் கீழ்ப்பிறவியாக, கீழ்மக்களாக கடவுள் என்கிற (அதுவும் அவர்களுடைய கடவுள்) சிலையிடம் நெருங்க்கூடாதவர்களாக, அறைக்கு வெளியே நிற்க வேண்டியவர்களாகத் தலைமுறை தலைமுறையாகத் தடுக்கப்பட்டு, நிரந்தர கீழ்மக்களாக ஆக்கப்பட்டிருக்கும் கொடுமைக்கு, இழிவுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதிலிருந்து விலக்கி, மானமுள்ள மக்களாக ஆக்கப்பட வேண்டுமென்பதற்குக் கிளர்ச்சி செய்வதென்றால் – இது இதுவரை செய்யாமலிருந்ததுதான் மானங்கெட்ட தன்மையும், இமாலயத் தவறுமாகுமேயொழிய, இப்போது கிளர்ச்சி செய்வதென்பது ஒரு நாளும் ஒருவிதத்திலும் தவறாகவோ, கூடாததாகவோ ஆகாது; ஆகவே ஆகாது.

52. ஆசையின் உருவம்

உதாரணமாக, கால்கள் இருக்க, கட்டை வண்டிகள் இருக்க இயந்திரத்தின் மூலமாய்த்தான் – அதாவது இரயில் மூலம் பிரயாணம் செய்தோம்; மோட்டாரில் பிரயாணம் செய்தோம்; ஆகாயக் கப்பலிலும் பிரயாணம் செய்தோம்; அவைகளையே எல்லா மக்களும் போக வரப்போக்குவரத்து சாதனமாக்கவும் ஆசைப்படுகிறோம்; மற்றவர்களும் ஆசைப்படுகிறார்கள். ஆகவே, இதை மனித்த் தன்மையுடன் கூடிய குற்றமற்ற இயற்கை உணர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர, இது எவ்விதக் குற்றமுள்ளதும், அநியாயமானதும் என்று சொல்லி இதற்காக யாரையும் கண்டிக்கவும் முடியாது. ஜீவ சுபாவமே ஆசையின் உருவமாகும்.

53. தன்னலமற்ற மனிதர்கள் அதிகரிக்கவேண்டும்

தன்னலமற்ற பொதுத்தொண்டு செய்பவர்கள் – பிரதிபலன் கருதாது உழைக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை, நாட்டில் மேன