தத்துவ மேதை அரிஸ்டாட்டில்
உலகின் மிகச்சிறந்த தத்துவஞானிகளில் தலை சிறந்தவர் அரிஸ்டாட்டில் என்று குறிப்பிடுவர்.
மாசிடோனிய மன்னன் அமென்டால் என்பவனுக்கு மருத்துவராகப் பணியாற்றிய ஸ்நிக்கோ மாக்கஸ் என்பவரின் மகனாக ஸ்டஜிரா என்ற மாநிலத்தில் அரிஸ்டாட்டில் கி.மு. 384-ல் பிறந்தார்.
தந்தையிடம் மருத்துவக் கல்வியைப் பயின்று வந்தபோது கலை, தத்துவம் ஆகியவற்றிலும் அரிஸ்டாட்டில் ஈடுபாடு கொண்டார்.
சாக்ரடீஸின் மாணவரான பிளாட்டோவின் புகழ் அப்போது மாசிடோனியாவிலிருந்து அரிஸ்டாட்டிலையும் கவர்ந்தது. கலை, இலக்கியம், தத்துவம் ஆகியவற்றில் வல்லுனராகத் திகழ்ந்த பிளட்டோவிடம் கல்வி பயில வேண்டுமென்று அரிஸ்டாட்டில் விரும்பினார்.
ஆனால் தமது தந்தை அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார் என்பதை அறிந்து, அந்த ஆசையை அரிஸ்டாட்டில் மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டார்.
சிறிது காலத்தில் அரிஸ்டாட்டிலின் தந்தை மறைந்தார். தனது அறிவுத் தாகத்திற்கு பிளாட்டோவிடம் கல்வி பயில்வதே சிறந்தது என்று எண்ணியிருந்த அரிஸ்டாட்டில், பிளாட்டோவைச் சந்திக்க ஏதென்ஸ் நகரத்திற்குச் சென்றார்.
பிளாட்டோவைச் சந்தித்து தம்மை மாணவனாக ஏற்றுக்கொள்ளும்படி அரிஸ்டாட்டில் வேண்டினார். அரிஸ்டாட்டலின் புத்திக் கூர்மையையும், தத்துவ ஞானத்தையும் கண்டறிந்த பிளாட்டோ மகிழ்ந்தார்.
சுமார் இருபது ஆண்டுகள் அரிஸ்டாட்டில் ஏதென்ஸ் நகரிலேயே தங்கி பிளாட்டோவின் மாணவராக இருந்து கல்வி பயின்றார்.
கி.மு. 347-ல் பிளாட்டோ மறைந்தார். தம் ஆசிரியர் மறைவிற்குப் பின் ஏதென்ஸ் நகரத்தில் வாழ அரிஸ்டாட்டில் விரும்பவில்லை.
சைராகஸ் மன்னன் ஹர்மியாஸ் என்பவன் அரிஸ்டாட்டிலைத் தம் நாட்டிற்கு அழைத்துக் கொண்டான்.
மன்னன் ஐர்மியாஸின் சகோதரி பைத்தியஸ் என்ற அழகியை அரிஸ்டாட்டில் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். சிறிது காலத்தில் மன்னன் ஹரமியாஸ் மரணத்தைத் தழுவியதால் அரிஸ்டாட்டில் என்ன செய்வதென்று திகைத்தார்.
அப்போது அரிஸ்டாட்டிலின் அறிவாற்றலைக் கேள்வியுற்ற மாசிடோனியா மன்னன் பிலிப், தம் மகனுக்குக் கல்வி கற்றுக் கொடுக்க அரிஸ்டாட்டிலை அழைத்தான்.
அதனால் தாம் பிறந்த மாசிடோனியாவுக்கு அரிஸ்டாட்டில் சென்றார். மாசிடோனியாவின் மன்னரான பிலிப்பின் மகனும் எதிர்காலத்தில் மாவீரனாகத் திகழ்ந்தவனுமான அலெக்சாண்டருக்கு ஆசிரியர் பொறுப்பை அரிஸ்டாட்டில் ஏற்றார்.
பன்னிரண்டு ஆண்டுகள் அலெக்சாண்டருக்கு நண்பராகவும், ஆசிரியராகவும் அரிஸ்டாட்டில் செயல்பட்டார்.
விலங்குகளைப் பற்றி முதன் முதலாக ஆய்வு செய்த அறிஞர் அரிஸ்டாட்டில்; விலங்குகள் பற்றி மக்களிடமிருந்த தகவல்களைத் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டவரும் அரிஸ்டாட்டில்தான்.
454 விலங்கினங்களின் வாழ்க்கை முறையையும், பழக்க வழக்கங்களையும், உணவு முறைகளையும் சேகரித்து, அவற்றைத் தொகுத்தவரும் அரிஸ்டாட்டில்தான். அதனால்தான் அவர் ‘விலங்கினங்களின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார்.
அலெக்ஸாண்டர் உலகையே வெல்லும் பேரார்வம் கொண்டு படையெடுத்தான். இதில் விருப்பமில்லாத அரிஸ்டாட்டில் மீண்டும் ஏதென்ஸ் நகருக்குச் சென்றார். அங்கு ஒரு பள்ளிக்கூடத்தை நிறுவி மாணவர்களுக்கு கல்வி போதித்து வந்தார்.
பிதியாஸ் என்ற பெண் குழந்தையைப் பெற்றெடுத்த அரிஸ்டாட்டிலின் மனைவி சிறிது காலத்தில் இறந்தார். அதன்பின் ஹெர்ஃபிலிஸ் என்ற பெண்ணுடன் அரிஸ்டாட்டிலுக்கு தொடர்பு ஏற்பட்டது.
இந்த உறவில் பிறந்த குழந்தை நிக்கோமக்கஸ் என்று அழைக்கப்பட்டான். இவனும் சிறு வயதிலேயே மரணத்தைத் தழுவினான்.
மனிதன், இறைவன், அரசியல், என மூன்று பிரிவுகளையும் அலசி ஆராய்ந்து தமது த்த்துவ தரிசனமாக உலகிற்கு வங்கினார் அரிஸ்டாட்டில்.
“இந்த உலகம் இறைவனால் தோற்றுவிக்கப்படவில்லை. ஆனால் இந்த உலகை இயக்குபவன் இறைவனே!”
“மனிதன் தனிமனிதச் சிந்தனை கொள்ளாமல், சமூகச் சிந்தனையோடு வாழ வேண்டும்.”
“அரசியல் அதிகாரம் என்பது ஒருவரிடமோ, அல்லது சிலரிடமோ இல்லையெனில் பலரிடமோ இருக்கலாம். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது நன்மைக்காகப் பாடுபட வேண்டும். அப்போதுதான் சரியான அரசியல் நடப்பதாகப் பொருள். அதை விடுத்து அதிகாரத்தில் இருப்பவர்க்களின் நலன் மட்டுமே பேணப்படுமாயின் அது மோசமான நிலமைக்குக் கொண்டு செல்லும்.”
இது போன்ற கருத்துக்களை அரிஸ்டாட்டில் தமது நூல்களில் பதிவு செய்தார்.
அலெக்ஸாண்டர் மறைந்த பின் ஏதென்ஸ், நகர மக்களுக்கும் மாசிடோனியா மக்களுக்கும் பகை உணர்ச்சி வளர்ந்தது.
அரிஸ்டாட்டில் மாசிடோனியாவில் பிறந்தவர் என்பதாலும், அலெக்ஸாண்டருக்கு ஆசிரியர் என்பதாலும் எதென்ஸ் மக்களின் கோபம் அரிஸ்டாட்டில் பக்கம் திரும்பியது.
ஏதென்ஸ் இளைஞர்களைத் தவறான வழிகளில் அரிஸ்டாட்டில் அழைத்துச் செல்கிறார் என்றபொய்யான குற்றச்சாட்டும் அவர்மீது சுமத்தப்பட்டது.
தமக்கும் அரசியலுக்கும் எந்தவித்த் தொடர்பும் இல்லையென்றும், அலெக்ஸாண்டர் உலக நாடுகளைக் கைப்பற்ற எண்ணம் கொண்டதும் தாம் மாசிடோனியாவை விட்டு வெளியேறிவிட்டதாகவும் அரிஸ்டாட்டில் வாதாடினார்.
ஆனால் ஏதெனஸ் அரசு அரிஸ்டாட்லுக்கு மரண தண்டனை விதித்தது.
பிளாட்டோவின் ஆசிரியர் சாக்ரடீஸூக்கும் மரண தண்டனை. பிளாட்டாவின் மாணவர் அரிஸ்டாட்டிலுக்கும் மரண தண்டனை.
இந்த ஒற்றுமையை நினைத்து நல்லவர்கள் கவலை கொண்டனர்.
ஆனால் சிலரின் உதவி கொண்டு ஏதென்ஸ் நகரைவிட்டு அரிஸ்டாட்டில் தப்பினார்.
இருப்பினும் சால்சிஸ் என்ற தீவில் கி.மு.. 322-ல் அரிஸ்டாட்டில் மரணத்தைத் தழுவினார்.