இசை ஞானி மொசார்ட்

உலகத்தில் சில அதிசயச் செயல்கள் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இவையெல்லாம் உண்மைதானா? என்று ஆச்சரியப்படத்தக்க செயல்கள். அவ்வப்போது பத்திரிக்கைகளில் வந்து கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால், மூன்று வயதிலேயே ஒருவர் இசைக்கருவியை மீட்டினார். அதுவும் மற்றவர்கள் வியக்கும் வண்ணம் மீட்டினார் என்றால் நம்புவது சிரமம்தான். ஆனால் நடந்தது!

நடத்திக்காட்டியவர் தான் மொசார்ட்!

இவருடைய இயற்பெயர் ‘ஷல்ஃப்காங் அமாடியஸ் மொசார்ட்.’

லியோபால்டு – அன்னாமரிய மொசாட் தம்பதிக்கு ஏழாவது குழந்தையாக 1756 ஐனவரி 27-ல் பிறந்தார்.

மூன்று வயதில் இசைக்கருவியை மீட்டுதல்;

நான்கு வயதில் இசை நூல்களை கற்றல்;

ஐந்து வயதில் தாமே பாடல்களை இயற்றி இசை மீட்டுதல்;

ஏழு வயதில் ‘சொனாட்டக்களை எழுதுதல்;

எட்டு வயதில் சிம்பனிக்களை எழுதுதல்

இவற்றையெல்லாம் எட்டு வயதிற்குள் மொசார்ட் செய்து காட்டிய இசை அற்புதங்கள்.

மொசார்ட்டுக்கு முன்பும், பின்பும் எந்த இசை மேதையும், இந்தச் சிகரங்களை இத்துணை சிறிய வயதில் செய்து காட்டியதாக வரலாறில்லை.

மொசார்ட்டின் தந்தை மிகச்சிறந்த வயலின் மேதை. ஆனால் மொசார்ட் தமது பத்தாம் வயதுக்கு உள்ளேயே அனைத்து இசைக் கருவிகளையும் இசைக்கின்ற அளவுக்கு தேர்ச்சி பெற்றார்.

மொசார்ட்டின் இசைத்திறன் உலக நாடுகள் பலவற்றைத் தொட்டது.

இரவு, பகல் என்று இவரது இசை நிகழ்ச்சிகள் நடந்தன. உறங்கும் நேரமும், உண்ணும் நேரமுமே இவரது ஓய்வு நேரங்களாயின.

இசை இவருக்கு உணவாவனது.

இசை இவருக்கு உயிரானது என்று சொல்லும் அளவுக்கு இசையோடு மொசார்ட் இணைந்தார்.

மொசார்ட்டின் இசைத் திறமையைக் கேட்டறிந்த வியன்னா மகாராணி, அவரைத் தமது அரண்மனைக்கு அழைத்து இசை மீட்டச் சொன்னார்.

இசையை மொசார்ட் மீட்ட மீட்ட மகாராணி தன்னையே மறந்தார்… தன் அந்தஸ்தை மறந்தார். இசையில் ஒன்றினார்… இறுதியில் மெசார்ட்டைப் பாராட்ட வார்த்தை கிடைக்காத ராணி, அவரை அள்ளி எடுத்துத் தமது மடியில் வைத்து முத்தமிட்டு மகிழ்ந்தார். அப்போது மொசார்ட்டுக்கு வயது பத்து.!

ஜெர்மனி, ரைன்லாண்டு, பிரான்ஸ், இங்கிலாந்து, இத்தாலி போன்ற நாடுகளில் எல்லாம் மொசார்ட் இசை நிகழ்ச்சி நடத்தினார். உலகின் பல பாகங்களில் மொசார்ட்டின் இசை ஆற்றல் பேசப்பட்டது.

உலகத்தின் பல திசைகளில் வாழுகின்ற இசை வாணர்கள் எல்லாம் மொசார்ட்டின் பெயரை உச்சரித்தினர். அப்போது மொசார்ட்டின் வயது பதினான்கு!

போப்பாண்டவர் முன் இசை நிகழ்ச்சி நடத்தி, அவரிடமிருந்து செவாலியர் விருதை மொசார்ட் பெற்றார்.

1781 – இல் கான்ஸ்டன்ஸ் என்ற பெண்ணை மொசார்ட் மணந்தார்.

இந்தத் திருமணம் தான் மொசார்ட்டின் வாழ்கையைத் திசை திருப்பியது.

மொசார்ட்டைப் பற்றியும், அவரது ஆற்றல் பற்றியும், இசையால் உலகைத் திரும்பிப் பார்க்கச் செய்த அவருடைய பேராற்றல் பற்றியும் கான்ஸ்டன்ஸ் அறியாதவள் அல்ல. ஏனெனில் வியன்னாவில் இருந்த வெப்பர் என்ற இசைமேதையின் மகள்தான் கான்ஸ்டன்ஸ். இருப்பினும் மேதை மொசார்ட்டின் மேன்மையை அவள் உதாசினப்படுத்தினாள்.

மரட்டுக்குணமும், பிடிவாதப் போக்கும், தன்னுடைய சுகதுக்கங்களை மட்டுமே நேசிக்கும் மனோபாவமும் அவள்கொண்டிருந்தாள். அவளைத் திருத்திவிடலாம் என்று மொசார்ட் நினைத்தார். அந்த வழிகளில் முயன்றார். முடிவில் தோற்றார். கடைசியில் கவலையில் மூழ்கினார். உடல்நிலை பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் கிடந்தார்.

ஓயாத ஆராய்ச்சி, ஓய்வில்லாத இசை நிகழ்ச்சி, புதிய புதிய இசை வடிவங்ளைக் கண்டுபிடித்தல் என இசைக்காகவே மொசார்ட் வாழ்ந்தார்.

எந்த நேரமமும் இசை.

எந்த இடத்தில் இசை

என்று மொசார்ட் உழைத்ததால், உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கையில் கிடந்தார். அப்போதும் அவர் அருகில் ஏதாவது ஒரு இசைக்கருவி இருக்கும். இப்படித்தான் உடல் நிலை பாதிக்கப்பட்ட நாட்களிலும் மொசார்ட் செயல்பட்டுக் கொண்டிருந்தார்

புதிய புதிய பாடல்களை எழுதிக்குவித்தார். தன்னை உடல் நலம் விசாரிக்க வரும் நண்பர்களிடமெல்லாம் அந்தப் பாடல்களைக் கொடுத்துப்பாடச் சொன்னார். அதைக் கேட்டு ரசித்தார்

1791-டிசம்பர் 4-ல் இசை உலக மேதை என்று உலகமெல்லாம் பேசப்பட்ட மொசார்ட் இறுதியில் தமது மனைவியைப் பற்றிய கவலையில் கண்மூடினார்.

தமத இசை ஞானத்தால் உலகத்தையே திரும்பிப் பார்க்கச் செய்த மொசார்ட்டின் பிரேதம், அனாதைப் பிணங்களை அடக்கம் செய்யும் கல்லறையில்தான் அடக்கம் செய்யப்பட்டது.