விஞ்ஞானம் -விஞ்ஞான உணர்வு – விஞ்ஞான நோக்கங்கள் – இவை இன்றைய வாழ்வில் அடிப்படையாய் இருக்கின்றன. உண்மையைக் கண்டறியும் வேட்கையும், மனிதகுல முன்னேற்றத்திறகான முயறசியும் விஞ்ஞானத்தின் அடிப்படையாய் இருக்கின்றன.
இன்றைய விஞ்ஞான வளர்ச்சியைப் பற்றிப் பெருமிதம் கொள்ள மனித சமுதாயத்துக்கு முழு உரிமை இருக்கிறது. ஆனால், இந்தச் சாதனைகள் வருங்காலத்தில் மனதி மனத்தின் வளர்ச்சியைக் குறைப்பனவாக இருக்குமானால், நிச்சயமாக இந்த சாதனைகளில் எங்கோ தவறு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
விஞ்ஞானம் ஒன்றின் மூலமாகத்தான் – இல்லாமை, – ஏழ்மை, அழுக்காறு – அறியாமை, மூட நம்பிக்கைகள் கேடு தரும் பழக்க வழக்கங்கள், உற்பத்தியாகும் பொருள்கள் ஒரு பயனும் இல்லாமல் வீண்டிக்கப்படுகிற கொடுமை, வளமிக்க பெரிய நாடு பசியால் வாடும் மக்கள் நிறைந்ததாக இருக்கின்ற பரிதாபம், – ஆகிய எல்லாப் பிரச்சினைகளுக்கும் பரிகாரம் காண முடியும்.
விஞ்ஞானத்தைப் பெரும் அளவுக்கு நம்புகிறேன். விஞ்ஞான லட்சியங்கள் உலகைத் தலைகீழாக மாற்றியுள்ளன. இன்றைய உலகின் பல பிரச்சனைகளை விஞ்ஞானத்தின் மூலமாகத்தான் தீர்க்க முடியுமே தவிர விஞ்ஞானத்தை விலக்கி விட்டு, அவற்றிறகுப் பரிகாரம் காண நிச்சயமாக முடியாது.
மனிதன் இயற்கையை ஆராயக் கற்றுக் கொண்டு விட்டான். இயற்கையை அடக்கியாளவும், தனக்குச் சாதகமாக அதைப் பயன்படுத்திக் கொள்ளவும் கற்றுக் கொண்டதன் மூலம் பல புதிய சக்திகளை மனிதன் பெற்றிருக்கிறான். ஆனால், துரதிருஷ்டவசமாக, அவன் தான் பெற்றிருக்கிற இந்தப் புதிய சக்தியை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாது திகைக்கிறான். பல சமயங்களில் தவறான வழிகளிலேயே அவற்றைப் பயன்படுத்துகிறான். தான் பாடுபட்ட உருவாக்கிய நாகரிகத்தையும் சமுதாயத்தையும் அழிக்கவும், தன்னுடைய சகோதரர்களை இரக்கமின்றிக் கொல்லவுமே விஞ்ஞானமும் அதன் கண்டு பிடிப்புகளும் அவனுக்கு உதவியாய் இருக்கின்றன.
விஞ்ஞானம் தனது வியத்தகு சாதனைகளை எண்ணிப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்றாலும், கடல் போலப் பரந்திருக்கிற அறிவின் முன் – இன்னும் கண்டுபிடிக்கப் படாதிருக்கிற உண்மைகளை நினைத்து அது அடக்கமாகவே இருக்கிறது. மேதை தான் அறிந்தது மிகக்குறைந்ததே என்று எண்ணுவான். முட்டாள் தான் எல்லாம் கற்றவன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வான். விஞ்ஞானமும் அப்படித்தான். எடிங்டன் குறிப்பிட்டதைப் போல, விஞ்ஞானத்தின் வளர்ச்சி எத்தனை புதிர்களுக்கு விடை கிடைக்கிறது என்பதிலே இல்லை; இன்னும் எத்தனை புதிர்கள் உருவாகின்றன என்பதிலேதான் இருக்கிறது.