கடலும் மலையும் சூழ்ந்த கவின்பெறு நாடு நமது தாயகம். இமயமும் -இரு பக்கம் கடலும் சூழ்ந்த இந்திய நாடு என்றும் தனித்து இருந்ததில்லை. உலக நாடுகளோடெல்லாம் உறவு கொண்டிருந்தது.
துன்பத்தில் துயரச் சுமையில் அழுந்திக் கிடந்தாலும் இந்தியா தனது பழம் பெரும் புகழை இழந்துவிடவில்லை.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் இந்த நாட்டின் வரலாறு இந்த நாட்டில் ஒற்றுமையைப் போற்றிப் பாதுகாத்திருக்கிறது. மாறுபட்ட நிகழ்ச்சிகள் பல வளர இடம் அளித்திருக்கிறது. பல மதக் கருத்துடையவர்கள் இந்த நாட்டில் வாழ்கின்றனர். பல மொழிகள் பேசப்படுகின்றன, என்றாலும், இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்ட ஓர் ஒற்றுமை உணர்வு நம்மை ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கிறது. பல தலைமுறைகளாக நமது பண்பாட்டிற்கும், முன்னேற்றத்திற்கும் அடிப்படையாய் அமைந்த சகிப்புத் தன்மயையும் ஒற்றுமை உணர்வையும் வளர்க்க உழைப்பதன் மூலம்தான் நாம் நமது எதிர்காலத்தை இனிமை நிறைந்ததாக்கிக் கொள்ள முடியும்.
உலக வரலாற்றில் ஆரம்ப காலந்தொட்டே அறியாமையை உதறித் தள்ளிய நாடு என்ற பெருமைக்கு உறவு கொண்டாட, இந்தியாவுக்கு நிச்சயமாக உரிமை உண்டு. மனித சமுதாயத்தின் லட்சியங்களை உருவாக்கிய – பிரதிபலிக்கிற – புகழ்மிக்க நாடுகளில் ஒன்றாக இந்தியா வந்திருக்கிறது.
பொதுப் பணியில் நாணயமும் நேர்மையும் வேண்டும். இது வெறும் பேச்சளவில் இருக்கக் கூடாது. நம் ஒவ்வொருவர் செயலிலும் இவை இடம் பெற்றிருக்க வேண்டும்.
நள்ளிரவு பனிரெண்டுமணி – உறக்கத்தில் உலகம் ஆழ்ந்திருக்கையில், இந்தியா சுதந்திரமும் – சுக வாழ்வும் பெற விழித்தெழுகிறது. வரலாற்றிலே அரிதாக வரக்கூடிய இந்தச் சந்தர்ப்பம் இன்று வந்திருக்கிறது. பழமையை வீட்டு விலகி புதுமையில் அடியெடுத்து வைப்பது; ஒரு யுகம் முடிந்து புது யுகம் பிறப்பது; நீண்ட நெடுங்காலமாக அழுத்தி – அடக்கி வைக்கப்பட்ட ஒரு நாட்டின் சுதந்திரக் குரலை உலகம் கேட்பது; வரலாற்றில் அடிக்கடி நிகழக்கூடியதல்ல – அபூர்வமாகவே நிகழக் கூடியது.
மற்ற நாட்டின் ஆதிபத்ய உரிமைகளை மதித்தல், ஆக்கிரமிப்பு செய்யாதிருத்தல், தலையிடாக் கொள்கை, சமத்துவம், சமாதான சகவாழ்வு போன்ற பஞ்சசீலப் பண்புகள் ஒப்புக்கொள்ளப்பட்டு உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டால், உலகை அச்சுறுத்தி வருகின்ற போரபாயம் நீங்க வழி பிறக்கும்.
உலகத்தின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்பதை யாராலும் கூற முடியாது. எனவே இன்று நமக்குள்ள பிரச்சினை, திட்டங்கள்,- உடனடியாக செய்ய வேண்டிய சாதனைகள், கோடிக்கணக்கான இந்திய மக்களின் நல்வாழ்வுக்கு உழைப்பதன் மூலம்தான் நாம் உலக முன்னேற்றத்திற்குப் பாடுபட முடியும். தேசத்தை உருவாக்கிய வீர்ர்களின், மேதைகளின் நினைவுச் சின்னங்களைப் பார்வை இடுவதை நான் வெறும் சம்பிரதாயமாக்க் கருதவில்லை. நீண்ட நெடுங்காலமாகவே என் இதயத்தில் குடிகொண்ட அவர்களின் லட்சியங்களால், என் நாட்டவரைப் போலவே நானும் எழுச்சி பெற்றிருக்கிறேன். இத்தகைய நினைவுச் சின்னங்கள்தான், மனித சமுதாயம் வந்து மரியாதை செலுத்தக் கூடிய உண்மையான கோயில்கள் ஆகும். அப்படிச் செய்வதன் மூலம் ஒரு நாடு மட்டுமல்ல, உலகம் முழுமையும் ஒளிபெற விடுதலை விளக்கைத் தூக்கிப் பிடித்த அந்த மனிதர்களின் உள்ளத்திலே கனன்று கொண்டிருந்த, சுதந்திரச் சுடரின் சிறு பொறியையாவது நாம் பெற முடியும்! ஏன் உலக முழுமைக்கும் என்று சொல்கிறேன் என்றால், உண்மையிலேயே மேதைகளின் போதனைகள், ஒரு குறிப்பிட்ட நாட்டின் எல்லைக் கோடுகளுக்குள்ளே நின்று விடுவதில்லை; அவை உலகம் முழுமைகும் சொந்தமானவை.
இந்தியாவின், மதம், கலாச்சாரம், பண்பாடு த்ததுவம், எல்லா சகிப்புத் தன்மையையும் சக வாழ்வையும் ஆதாரமாக்க் கொண்டவை. ‘இஸ்லாம்’ இந்த நாட்டிலே பரவ ஆரம்பித்த போது உண்டான குழப்பங்களுக்குக் கூடக் காரணம் அரசியல்தானே தவிர, மதம் அல்ல!
கங்கைக் கரை பல போர்க்களங்களைக் கண்டிருக்கிறது. இந்திய மண்ணின் கலாச்சாரம் பண்பாடு வரலாறு இவற்றோடு கங்கை ந்தி இரண்டறக் கலந்திருக்கிறது. போர் வென்ற பல வரலாறுகள் கங்கைக் கரையின் புகழ்பாடுகின்றன. கிரேக்கர்களின் படையெடுப்பை சந்திர குப்த மௌரியன் சந்தித்த சரித்திரப் பிரசித்திப் பெற்ற சம்பவம் கங்கைக் கரையில்தான் நடந்திருக்கிறது.
இந்தியாவுக்குச் செய்கின்ற சேவை என்பது துன்பத்தால் துடிக்கின்ற கோடிக்கணக்கான மக்களுக்குச செய்கின்ற சேவையாகும். இல்லாமையை, ஏழ்மையை, அறியாமையை, பிணியை, பாரபட்சம் காட்டுகின்ற மனப்பான்மையை, அழித்தொழிக்கச் செய்கின்ற சேவையாகும்.
காலம் – ஒரு அற்புதமான மாயம்! நம் கைக்குள் அகப்படுத்த முடியாத விசித்திரம்! நம்முடைய நினைவற்றலோ இன்னும் விசித்திரமானது. பல நாட்களுக்கு முன் நாம் பார்த்து மறந்து போனவைகள் திடீரென்று மனத்திரையில் ஓவியமாகப் படரும்! தேய்ந்த பழங்கால நினைவுகளிலே நம் மனம் சென்று திரும்புவது – இழிந்த நிகழ்கால மனிதவர்க்கத்தின் நினைவிலே சென்று லயிப்பதும் மனம் புரியமு மாய வித்தைகள். மனிதர்கள் நாம் மிகவும் முதுமையானவர்கள். ஆதிமனிதன் பாடிய சங்கீதம் இன்னும் நம் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. அவனுடைய லட்சியங்கள் – கனவுகள் இன்னும் நம்மை இயக்கிக் கொண்டுதான் இருக்கின்றன.
ஒரு நாட்டின் மீது படையெடுத்துச் செல்கின்ற வேற்று நாட்டினர், அந்த நாட்டைக் கொள்ளை அடிப்பதோ மகளைக் கொல்லுவதோ மதமாச்சரியத்தினால் அல்ல! படையெடுப்பாளர்களின் தன்மையே அப்படிப்பட்டதுதான். வலிமையைக் காட்டி மிரட்டி, மக்களைப் பணியவைக்க நினைப்பது ஆதிக்க வெறியர்களின் செயல்தானே தவிர மதத்தின் தன்மை அல்ல.
இந்தியா பூகோள பொருளாதார நிலைப் பேற்றை உடையது. பல்வேறு வேறுபாடுகளுக்கிடையேயும் கலாச்சார ஒருமைப்பாடு உடையது. பல்வேறு முரண்களின் தொகுதி, ஒற்றுமை உணர்வென்னும் வலிமைமிக்க – கண்ணுக்குத் தெரியாத நூலிழையால் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கிறது. அடுத்தடுத்து வந்த ஆக்கிரமிப்புகளால் இந்தியாவின் இந்த ஒற்றுமை உணர்வு வெல்லப்படவில்லை – வீழ்த்தப்படவில்லை! கனவாய்க் கற்பனையாய்க் காட்சியளிக்கும் இந்தியத் தாய் நிசமாய் நித்தியமாய் எங்கும் நிறைந்திருக்கிறாள். அந்தகாரத்திற்கு இட்டுச்செல்லும், பயங்கர இருள் எங்கும் நிறைந்து இருப்பதாகத் தோன்றினாலும்; காலை இளவெயிலின் ஒளியும் உணர்வும் கூடவே இருக்கிறது. பல மேதைகளையும் வீரர்களையும் பெற்றெடுத்த இந்தியத் தாய், மாறிவரும் கால மாறுதல்கேற்ப மாறிக் கொண்டிருந்தாலும் – மாறாத பழம்பெருமையின் சின்னமாக இன்னும் இருந்து கொண்டிருக்கிறாள்.
அனைத்துலக நாடுகளிடையே மிக நெருங்கிய கூட்டுறவும் நல்வாழ்வும், பாதுகாப்பும் நிலவ நாம் வைத்துள்ள நம்பிக்கைகளின் இருப்பிடமாக ஐக்கிய நாடுகள் சபை இருக்கிறது. சுதந்திரம், சமத்துவம், சமாதானம், இன்னும் மனித குலத்தின் ஆசைக் கனவுகள் – அவற்றின் விளைவான உயர்ந்த லட்சியங்கள், இவற்றிற்காக உழைக்க அது தன்னையே அர்பணித்துக் கொண்டிருக்கிறது. தொல்லையும் துயரமும் நிறைந்த இன்றைய வாழ்க்கையை விட்டு – வாழ்வும் வளமும் நிறைந்த தநிலையான எதிர் காலத்துக்கு – அது நம்மை அழைத்துச் செல்கிறது.
உலகம் ஒன்றாகிக் கொண்டு வருகிறது. நாடுகளுக்கிடையே உள்ள தடைகள் – தடுப்புச் சுவர்கள் இன்று ஒரு பொருட்டாக இல்லை. சுதந்திரமும் சமாதானமும் பிரிக்க முடியாத நெருக்கம் உடையவையாகி விட்டன. இந்த உலகின் ஒரு பகுதி சுதந்திரத்தோடும், இன்னொரு பகுதி அதை விட்டுவிலகி இருப்பது என்பதும் முடியாத காரியம்.
நாட்டைத் திருத்தி அமைப்பது – முற்றிலும் புதிதாக உருவாக்குவது என்பது மிகப் பெரிய காரியம். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு மட்டும் போதாது. புத்துணர்ச்சியும், தீமையை எதிர்த்துப் போராடும் மனப்பாங்கும் வேண்டும்.
வயல்களிலும் ஆலைகளிலும் தொழிற்சாலைகளிலும், இருந்து செல்வ்வளம் பொங்கிப் பொழிய வேண்டும் – கோடிக்கணக்கான இந்திய மக்களிடம்போய்ச் சேர வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டை வளமுள்ளதாகச் செய்ய, நாம் கண்ட கனவுகள் நிறைவேறியதாகும்.
விரைந்து தொழில் மயமாகிக் கொண்டு வரும் இந்த நாட்டின் வளர்ச்சியில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தொழில் முன்னேற்றத்தின் மூலமாகத்தான், ஏழ்மையை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ளவும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் முடியும் என்று நான் நினைக்கிறேன்.
ஒவ்வொரு நாட்டுக்கும் முக்கிய கடமை ஒன்றுண்டு. பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாப்பதும் பலப்படுத்துவதுந்தான் அந்தக் கடமை. மற்ற காரியங்களுக்கு முதலிடம் கொடுத்துவிட்டு, சுதந்திரத்தைப் புறக்கணிக்க ஆரம்பித்தால் நாம் எல்லாவற்றையுமே இழந்து விடுவோம்.
பல போராட்டங்கள் – படையெடுப்புகளுக்கிடையேயும் நமது பண்பாடு அழியாமல் இருந்து வந்திருக்கிறது. இந்தியத் தாயின் ஆடை கிழிந்து கந்தலாகப் போய்விட்டது. எனவே இன்றைய சிந்தனைக்கும் நிலைமைக்கும் ஏற்ற வகையில் புதிய உடை அணிவிக்க வேண்டும்.
நாடு துன்பத்தில் துடித்துக் கொண்டிருக்கையில், அதன் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும், ஆணாயினும் – பெண்ணாயினும், அச்சமின்றி – பயனை எதிர் பார்க்காமல், நாட்டிற்குச் சேவை செய்ய முன்வர வேண்டும்.
இந்திய மண்ணைப்பாதுகாக்க – எல்லைப் புறத்திலே வந்து நிற்கும் – பகையை – போரபாயத்தை எதிர்நின்ற தாக்க; அஞ்சா நெஞ்சத்தோடு மலை முகடுகளில் அணிவகுத்து நிற்கும் நமது படை வீர்ர்களை எண்ணிப்பாருங்கள், அவர்களுக்கு உணவும் உடையும் போவது தடைபடவேண்டும் – அதுதானே வேலை நிறுத்தத்தின் வெற்றி! நாட்டிற்குத் தேவையான இடங்களுக்கு உணவுப் பொருள்கள் செல்வது தடைப்பட வேண்டுமா? இன்னும் தொழில் விவசாயம் போன்றவற்றிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களின் நடமாட்டம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் இல்லையா? நாட்டின் மீதும், மக்களின் மீதும் தொடுக்கப்பட்டிருக்கிற இத்தாக்குதலை – வேலை நிறுத்தத்தை எப்படி நீங்கள் நியாயம் என்று சொல்கிறீர்கள்? ஏழ்மைப் படுகுழியில் இருந்து விடுபட்டு, இன்ப நலம் என்னும் சூரிய ஒளியில் திளைக்க, மக்கள் ஒவ்வொருவரின் கடுமையான ஒத்துழைப்பையும் நமது ஐந்தாண்டுத் திட்ட்கள் எதிர்நோக்கிக் கொண்டிருக்கையில், நம்முடைய கனவுகளை எல்லாம் பாழடித்து விடும் வேலை நிறுத்தத்தையோ நீங்கள் அதற்குப் பதிலாகத் தர விரும்புகிறீகள்? எந்த வகையிலே பார்த்தாலும் வேலை நிறுத்தம் நிச்சயமாக நியாயத்தின் பாற்பட்டதாகாது
மதச்சார்பற்ற நாடு இந்தியா என்று நாம் சொல்லி இருக்கிறம். எந்த மதப்பற்றும் இல்லாதவர்கள் நாம் என்பது இதற்கு அர்த்தமல்ல. எல்லா மதக் கொள்கைகளுக்கும், அவற்றைப் பின்பற்றும் எண்ணற்ற கோடி மக்களுக்கும் – இங்கே இடம் உண்டு – சம வாய்ப்புக்கள் உண்டு என்பதையே சுட்டிக்காட்ட விரும்புகிறோம். இதுவே நமது பண்பாட்டின் மிகப் பெரிய குறிக்கோள்.
அரசாங்கத்திற்கு அதன் அலுவலர்களிடையே ஒரு கடனையுண்டு. அலுவலர்களுக்கும் பெருமளவுக்கும் நாட்டு மக்களிடமும் – அதே போல் அரசாங்கத்திடமும் ஆற்ற வேண்டிய பணி உண்டு. ஏனெனில் அவர்கள் வெறும் கூலியாட்கள் – சம்பளத்துக்கு உழைக்கும் ஏவலர்கள் அல்ல! புதிய இந்தியாவை நிர்மாணிக்கும் பாபெரும் பணியில் ஈடுப்பட்டிருப்பவர்கள் என்ற் பெருமைக் குரியவர்கள் அவர்கள். எனவே அவர்கள் தங்கள் கடமைகளை – இந்த வகையிலே – தேசத்துக்குச் செய்கின்ற சேவை என்கின்ற முறையில் எண்ண வேண்டும். தங்களுடைய சுதுக்கங்களை நாட்டின் சுகதுக்கங்களோடு வைத்துப் பார்க்க வேண்டும்! அப்படி இல்லாமல் கணப் பொழுது, அவர்கள் நாட்டையும் – நாட்டின் நலனையும் மறந்துவிட்டு, குறுகிய நோக்கத்தோடு நாட்டின் நலத்தை இழந்தாவது கிடைக்கிற அற்ப லாபத்தைப் பெரிதாக நினைப்பார்களானால், அவர்கள் – தங்கள் பணியின் மேன்மையைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள்- தங்களுக்குத் தாங்களே தவறிழைத்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.
உலகில் உள்ள எந்த நாட்டு மக்களையும் விட இந்தியர்கள் பெருந்தன்மை மிக்கவர்கள், இயல்பாகவே அவர்கள் சமாதானத்தை விரும்புபவர்கள், வன்முறைச்செயல்களை மனிதர்களிடத்திலே மட்டுமல்ல – மிருகங்களிடத்திலே கூட காட்ட விரும்பாதவர்கள்.
ஏழை தன்னுடைய ஏழ்மையின் காரணமாக நன்றாகவும் திறமையாகவும் உழைக்க முடியாது. எனவே, அவனுடைய உழைக்கு சக்தி நாளுக்கு நாள் குறைகிறது. ஏழ்மை அவனை வறுமையில் ஆழ்த்துகிறது – வளர முடியாமல் தடுக்கிறது. இதற்கு மாறாக, செல்வமும், கல்வியும், வளமான சூழ்நிலையும் உள்ளவர்கள் திறமை வளர்வதோடு உற்பத்தியும் மேலும் மேலும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் பொருளாதார ரீதியில், இடையேயுள்ள இடைவெளி அகலமாகிறது. ஏழ்மை மண்டிக்கிடக்கும், இந்த நிலை ஒழிய வேண்டும்.
நாடுகளுக்காகட்டும், தனி மனிதனுக்காகட்டும், பயத்தைப் போல தீமை தருவது வேறில்லை. அநேகமாக எல்லாத் தீமைகளும் பயத்தினாலேயே உண்டாகின்றன. இதிலே வியக்கத்தக்க செய்தி என்னவென்றால், போர்த்திட்டங்களிலும், பாதுகாப்பு முயற்சிகளிலும், அளவற்ற பலம் பெற்றிருக்கிற நாடுகளே பயத்தால் துடிக்கின்றன – ஒன்றைக் கண்டு ஒன்று அச்சம் கொள்கின்றன.
ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி என்னிடம் சொல்கிறவர்கள் நீங்கள் மிகவும் பேராசைக்காரராய் இருக்கிறீர்கள் என்று சொல்கிறர்கள். நாம் எப்போதும் பேராசைக்காரர்களாகவே இருப்போம் என்பதுதான் நான் அவர்களுக்குச் சொல்கின்ற பதில். அந்த மனோபத்தைத்தான் நாம் இன்று நாட்டிலே உற்பத்தி செய்ய விரும்புகிறோம். பயந்து பயந்து நிதானமாகப் போகின்ற மனோபாவம் நமக்குத் தேவையில்லை. நம்முடைய லட்சியம் மிக உயர்ந்தது. ஊர்ந்து செல்வதன் மூலம் நாம் பந்தயத்தில் தோற்றுப் போனாலும் போகலாம். எனவே மெதுவாகச் செல்லத் தேவை இல்லை.
துர்அதிர்ஷ்ட வசமாக விஞ்ஞானம் இன்று சமாதானத்தின் பிடியில் இருப்பதைவிட சண்டையின் கைக்குள்ளே சிக்கி முன்னேற்றம் அடைந்துள்ளது. ஆனால் இன்றைய உலகில், எந்ந நாடும் நவீன தொழில் விஞ்ஞான அறிவைப்பெறாமல், சண்டையிலானாலும், சமாதானச் செயல்களினாலும் முன்னேற முடியாது.
விஞ்ஞான வளர்ச்சியில் முன்னேறி வருகிற நாம், மனிதனுடைய மனமும் அறிவும், விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களைவிட, மிகவும் சக்திவாய்ந்தை என்பதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏனேனில் விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள் மனித அறிவு கண்டு பிடித்தவைகள்தான். எனவே, நேர்மையும் – மனவலிமையும் உடைய மனித சக்தி, அது கண்டுபிடிக்க இருக்கிற படைக் கருவிகளைவிட பலம் வாய்ந்ததாகும்.
போர் பயங்கரமானது. கோடிக்கணக்கான உயிர்களைக்கொல்லக்கூடியது. பல அழிவுகளை விளைவிக்கக்கூடியது. மரணம் எல்லார்க்கும் இயல்பாக வரக்கூடியதுதான். அந்த மரணமும் கொஞ்சம் முன்னதாக, ஒரு புனித காரியத்திலே ஈடுபட்டிருக்கும் போது வருகிறதென்றால் வருத்தப்படத் தேவையில்லை. வீரர்களைப்போல் நாம் அதை வரவேற்க வேண்டும். நண்பர்களையும், தோழர்களையும் பிரிய நேருகிறது என்றாலும், ஒரு நல்ல காரியத்திற்கு உயிரைக் கொடுப்பது வருந்தத்தக்கதல்ல.
இந்த அணுயுகத்தில் இன்று நமக்கு முன்னே உள்ள பிரச்சினை, உள்ளத்தையும் உணர்வையும் நாகரீகப் பண்பாடுகளையும் அடியொடு அழித்துக்கொள்வதா, அல்லது ஏதாவது ஒருவகையில் நாடுகளுக்கிடையே சமாதான சகவாழ்வை உண்டாக முயல்வதா, என்ற இரண்டிலொன்றுதானே தவிர வேறு எதுவும் இல்லை. போரென்னும் பெருங்கொடுமை ஒழிய வேண்டும் என்று விரும்பினால், அதற்கேற்றவகையில் நமது சிந்தையும் செயலும் இருக்கப் பார்த்துக்கொள்ள வேண்டும். இது கடினமான காரியமாக இருக்கலாம். ஆனால் போரபாயத்தை நீடிக்க விடுவது இதைவிடக் கடனமானதாகத் – தீயதாகப்போய்விடும். எனவே சமாதானத்தை அடைய, சமாதானத்திற்கான சூழ் நிலையை உருவாக்க வேண்டும் – சகிப்புத் தன்மையை வளர்க்க வேண்டும். வெறுப்பையும் பயத்தையும் உண்டாக்கும் பேச்சுகளையும் செயல்களையும் விட்டொழிக்க வேண்டும்.
இந்த நாட்டில் வாழும் ஆண்களும் பெண்களும் அமைதியை விரும்புகிறவர்கள். போர் நமது இயல்புக்கு முற்றிலும் புறம்பானது. எனவே, எல்லையில் – நமது பகுதிகளில் ஆக்கிரமிப்பு நடந்தபோதுகூட நாம் சமாதான வழிமுறைகளைப் பின்பற்றினோம். கண்ணியமிக்க – சமாதானப் பேச்சு வார்த்தைகளுக்கு வழிவகுத்துத் தந்தோம். போரின் விளைவுகளைப் – பயங்கரங்களை நாம் நன்றாக அறிவோம்; எனவேதான், உலகத்தைப் பிளவுப்படச் செய்யும் போரினைத் தடுக்க நம்மால் இயன்றவரை முயன்றோம். ஆனால் நமது எல்லைப் பிரச்சினையைப் பொறுத்தவரை எல்லாம் பயன்றறுப் போய்விட்டன. சமாதானத்தையோ – சமாதான வழிகளையோ சற்றும் லட்சியம் செய்யாத இரக்கமற்ற எதிரிகள் எலைப்புறத்தை அச்சுறுத்தும் காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நம்முடைய, மக்களின் – நாட்டின் – சுதந்திரத்துக்கு அடுத்தப்படியாகத்தான் நமக்கு மற்றவைளகள் எல்லாம். தேவையானால் இந்த நெருக்கடி தீர நாம் எதையும் தியாகம் செய்யச் சித்தமாய் இருக்க வேண்டும். சுதந்திரத்தைக் காக்க நாம் எந்த விலையும் உயர்ந்ததென்று சொல்ல முடியாது. எனவே, எந்த மத – வகுப்பைச் சேர்ந்த மக்களாயினும், இந்த நெருக்கடியைப் போக்குகின்ற பணிக்கு உதவக் கேட்டுக் கொள்கிறேன். எதுவரினும் நிமிர்ந்து நிற்போம்! நேர்கொண்டு நோக்குவோம். நாட்டின் வளமான எதிர்காலத்திலே கொண்டுள்ள நம்பிக்கையிலே அசையாத பற்று வைப்போம்.
நான் எந்த நாட்டில் இருந்தாலும் என் கவனம் எல்லாம் மக்களின் மேலேயே இருக்கின்றது. அவர்கள் முகங்களை உற்று நோக்கி, அன்பும் பாசமும் த்தும்பும் அவர்கள் கண்களை ஊடுறுவிப் பார்க்கிற போது எனக்கு மகிழ்ச்சியும், மனச்சாந்தியும் மட்டும் உண்டாக வில்லை. அவை, எனக்கும் அவ்களுக்கும் இடையே ஒருவகை உறவை அல்லது பிணைப்பை உண்டாக்கி விடுகின்றன.