உலகம் போற்றி பாதுகாக்க விரும்புகிற, மனித சிந்தனையை உருவாக்கிய ஒப்பற்ற தலைவர்களில் ஒருவர் அபிரஹாம் லிங்கன். சாதாரண மனிதப் பண்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட, ஆனால் மனித சமுதாயத்தின் ஒரு அங்கமாகத் திகழ்ந்த அபிரஹாம் லிங்கனைப் பற்றி நினைக்கிற போதெல்லாம், நம்முடைய நெஞ்சிலும் நினைவிலும் புத்துணர்ச்சி பொங்கிப் பாய்கிறது. நம்முடைய இதிகாசக் கதைகளிலும் புராணங்களிலும் புனித லட்சியங்களுக்குத் தன்னை அர்பணித்துக் கொண்ட மேதைகள், – தாங்கள் மேற்கொண்ட காரியங்களுக்கு அப்பாற்பட்டவர்களாக, அத்தகைய காரியங்களைக் கட்டி ஆள்பவர்களாக, அந்தக் காரியங்களால் கட்டுப்படுத்த முடியாதவர்களாய்; வெற்றி – தோல்வி எதுவரினும் நிலை குலையாது – இருப்பார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேதைக்குரிய இந்த லட்சணங்கள் பெருமளவுக்கு வாய்க்கப் பெற்றவர் லிங்கன்.