இந்திய மக்கள் என்னிடம் அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்கள். அவர்களின் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் நான்பாத்திரமாக இருந்தேன். இனிவரும் ஆண்டுகளிலும் அவர்களின் நினயன்புக் குரியவனாக நடப்பதென்பதே எனக்குள்ள ஆசையாகும்! என்னுடைய மறைவிற்குப் பின் எனக்குச் சமயச் சார்புடைய சடங்குகள் எதையும் செய்ய வேண்டாம். அவற்றில் எனக்கு நம்பிக்கை இல்லை.
இந்தியா வளங்கொள்ளப்பாய்ந்து வரும் ஜீவந்தி கங்கை நதியாகும். அந்த ஆறு பல மன்னர்களின் நினைவுகள் – மக்களின் ஆசாபாசங்கள் – அவர்களுடைய வெற்றி தோல்விகள் ஆகியவற்றோடு தொடர்புடையது. நமது பழம் பெரும் பண்பாட்டிற்கும் – நாகரீக வளத்துக்கும் அது ஒரு அடையாளச் சின்னம். பனி படர்ந்த இமயச் சிகரங்களை, பள்ளத் தாக்குகளை, என் வாழ்வு வளமாகக் காரணமான சமவெளிகளை கங்கையாறு எனக்குக் கவனமூட்டிக் கொண்டே இருக்கிறது.
இறந்த பிறகு என் உடலைக் கொளுத்திவிட வேண்டும் என்பதே என் ஆசை. வெளிநாடுகளில் நான் இறக்க நேரிட்டால் என்னுடைலை அங்கேயே எரித்துவிட்டு, சாம்பலை மட்டும் தாயகம் கொண்டுவர வேண்டும் அலகாபாத்தில் ஓடும் கங்கையில் என் சாம்பலின் ஒரு பகுதியைப் போட வேண்டும். அலகாபாத்தில் ஓடும் கங்கை, யமுனை மீது நான் சிறுவயது முதலே பற்றும் பாசமும் வைத்திருக்கிறேன்.
பழங்கால பழக்க வழக்கங்களையும் மரபுகளையும் நான் விட்டொழித்துவிட விரும்புகிறேன். இந்தியாவும் தன்னைப் பிணைத்துள்ள தளைகளை விட்டொழிந்து விட்டு, வெளிப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
காலைக் கதிரொளியில், எழில் சிந்திச் சிரிக்கும் சின்னஞ்சிறு பெண்ணாக கங்கையாறு இருக்கிறது. மாலை இருள் மண்டிய இரவில் மனதைப் பயமுறுத்தும் கங்கையே, கார்காலத்தில் அருவி போல் ஓடி உவகை ஊட்டுகிறது. மழை காலத்தில் கடல் போலப் பரந்து, கரைபுரளப் பேரிரைச்சலோடு ஓடுகிறது. எப்படி இருந்தாலும் இந்தியாவின் கடந்த காலக் கவினாவாகவும், நிகழ்கால நிசமாகவும், எதிர்காலக் கனவாகவும் இருக்கும் கங்கையாறு என்றும் இளமை மாறாத கன்னியாகவே காட்சி அளிக்கிறது.
புகழ்மிக்க ஒரு பாரம்பரியத்தின் வழித்தோன்றலாக நான் வந்திருப்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். இந்திய மண்ணின் புகழுக்கும் பெருமைக்கும் நான் செய்யும் இறுதி வணக்கமாகவே என்னுடைய சாம்பலின் ஒரு பகுதியை, அலகாபாத்தில் ஓடும் கங்கை யமுனை சங்கமத்தில் கலக்கச் செய்ய வேண்டும் என்று நான் குறிப்பிட்டேன். கங்கையோடு சென்று அவை கடலலைகளிலே கலக்கும். என்னுடைய சாம்பலின் மீதிப் பகுதியை வானில் இருந்து கீழே, இந்த நாட்டின் வளமிக்க வயல்களிலே விழும்படித் தூவிவிட வேண்டும் என்பதும் என் ஆசையாகும். இந்த நாட்டின் மண்ணோடு, பிரிக்க முடியாதவாறு இரண்டறக் கலந்துவிடவே நான் விரும்புகிறேன்.