உலக சமாதானத்தை – நாகரிகத்தை வளமுறச் செய்வது நமது குறிக்கோள். இதை அடைய நாம் நமது வாழ்வை அற்பணிப்போம். ஒவ்வொருவருக்கும் இடையே உள்ள அன்பைக் கூட்டுறவைப் பலப்படுத்த முயலுவோம்.

உற்பாதங்கள் ஏற்பட்டு உலகம் அழிந்தாலன்றி, இந்தியாவையும் – உலகையும் சமாதானத்தை நோக்கிச் செல்வதில் இருந்து தடுக்க முடியாது.

உலக ரீதியில் சமாதானத்தின் அவசியம் உணரப்பட்டால்தான், சாந்தியும் சமாதானமும் – உலகில் நிலைக்க முடியும்.

நாடுகள் சுதந்திரம் பெற்று, நாடுகள் தோறும் உள்ள மக்கள், விடுதலையும், சம உரிமையும், பாதுகாப்பும் பெற்றால்தான் சமாதானம் நிலைக்க முடியும்.

வெறித்தனம் – வன்முறைச் செயல்கள், வெறுப்பையும் வேதனையையும்தான் வளர்க்குமே தவிர, சாந்தியையும் – சமாதானத்தையும் வளர்க்க மாட்டா.

இன்றைய உலகம் சண்டை சச்சரவுகள் நிறைந்ததாக இருக்கிறது. தேசீயம் – சர்வதேசம் பற்றி சண்டைகள், இன – மத சச்சரவுகள், வர்க்க -வகுப்புப் பூசல்கள் ஆகிய இவற்றை அலட்சியப்படுத்துவதோ, இல்லை என்று மறுத்துரைப்பதோ முட்டாள் தனமானது. இவற்றிற்கு நாம் சமாதான முறையிலேயே தீர்வுக்காண வேண்டும்.

போர்க் கருவிகள் தடைப்படுத்தப்பட வேண்டும். படைபலம் படிப்படியாகக் குறைக்கப்பட வேண்டும். என்ற தீர்மானம் உடனடியாக – ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப் பட்டாக வேண்டும். அதுதான் சர்வதேச நல்லுறவு நிலைக்கச் சரியான வழியாகும்.

எல்லா நாடுகளுடனும் நல்லுறவு கொள்ளுவது உலக சமாதானத்துக்காக உழைப்புத் என்பதுதான் நமது வெளிநாட்டுக் கொள்கை. ஒடுக்கப்பட்ட நாடுகளின் விடுதலைக்காக – நிறவெறிக் கொடுமைகளை நீக்குவதற்றாக நாம் பாடுபடுகிறோம்.

துன்பமும் துயரமும் நிறைந்ததாக இன்றைய உலகம் இருக்கிறது. அச்சமும், வெறுப்பும், சந்தேகமும் மனித மனத்தைக் கப்பிக் கொண்டிருக்கின்றன. இவைகளைப் போக்க நாம் எடுக்கிற ஒவ்வொரு முயற்சியும், உலக நன்மைக்காகச்செய்கிற சிறந்த காரியம் ஆகும்.

பல்வேறு பண்பாடுகளின் சங்கம பூமியாக இருந்த வந்த இந்தியாவின் சென்ற காலப்பெருமை இருந்ததைப் போலவே; இன்றும், எதிர்காலத்திலும் உலக ஒற்றுமைக்கும் – சமாதானத்தக்கும் இணைப்புப்பாலமாக இருபது இந்தியாவின் தனி உரிமையாகி விட்டது.

ஒன்றாகி வரும் இன்றைய உலகில், நம்முடைய ஒவ்வொரு முயற்சியாலும், சர்வதேச நல்லுறவை, நேச மனப்பான்மையை வளர்ப்பதுதான் உலக சமாதானத்தைக் காப்பதற்கான ஒரே வழியாகும்.

சமாதானம் ஒரு பண்பு. அது ஒரு மார்க்கம். அது ஒரு சாதனை – அடைய வேண்டிய ஒரு லட்சியம். ஆனால் சமாதானத்தைப் பற்றிப்பேசிக் கொண்டே சண்டைக்கு ஆயத்தம் செய்வோமானால், நாம் பேசிகிற சமாதானத்திலேயே ஏதோ தவறு இருக்கிறது என்றுதான் அர்த்தம்.

எல்லா நாடுகளிலேயும் உள்ள மிகப் பெரும் பான்மையான மக்கள், உலக சமாதானத்துக்காக நாம் உழைக்க வேண்டும் – வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறாரகள். நாம் சிறியவர்களாயினும், பெரியவர்களாயினும் சரி! மனித சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றி மிக முக்கியமான இந்தப்பிரச்சினையை நாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது. மற்ற எல்லாப் பிரச்சினைகளும், இந்தப் பிரச்சினைக்கு அடுத்தபடிதான். இந்தப் பிரச்சினையையும் நாம் போர் மூலமாகவோ போரை எதிர்நோக்கிச் செய்யப்படும் போர் முஸ்தீபுகள் மூலமோ தீர்த்துவிட முடியுமென்று, நான் நிச்சயமாக நம்பவில்லை.

நன்மைகள் பெற வேண்டுமானால் நல்ல வழிகளையே நாம் பின்பற்ற வேண்டும். நன்மைகள் தீய செயல்கள் மூலம் விளையமாட்டா!