சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தியது சரியா?-நல்லகண்ணு கேள்வி பேசத் தெரிந்தவர்கள் காங்கிரசில் விலாசமற்று போவார்கள்!: தமிழருவி மணியன் பஞ்ச்

posted in: அரசியல் | 0

tamilaruvi-manian1சென்னை: ஒரே மேடையில் வைத்துதான் இந்த கேள்வியும் பஞ்ச்சும் காங்கிரஸ் கட்சியின் மார்பில் குத்தப்பட்டன. ஒருவர், எப்போதும் குத்தும் கட்சிக்காரர். மற்றொருவர், அவ்வப்போது குத்தும் சொந்தக் கட்சிக்காரர்.

”மத நம்பிக்கை ஒன்றை மட்டும் வைத்து சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தியிருப்பது சரியா?” என்ற கேள்வி ஒன்றை நல்லகண்ணு வீசியுள்ளார்.

மாநிலத் திட்டக்குழு உறுப்பினரும், எழுத்தாளரும், பேச்சாளரும் காங்கிரஸ் கட்சிக்காரருமான தமிழருவி மணியன் எழுதிய ‘கனவு மெய்ப்பட வேண்டும்’ புத்தக வெளியீட்டு விழா சென்னை பிலிம் சேம்பர் அரங்கில் நேற்று நடந்தது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஆர்.நல்லக்கண்ணு புத்தகத்தை வெளியிட, மாநில திட்டக்குழு துணைத்தலைவர் எம்.நாகநாதன் பெற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் ஆர். நல்லக்கண்ணு பேசுகையில்,

”பாரதியாரை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் தமிழருவி மணியன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகம் பொருத்தமானது. பாரதியார் வாழ்ந்த நாளில் சந்தோஷமாக வாழ்ந்தது கிடையாது. பாரதியார் வறுமையில் வாழ்ந்தபோதும் கொள்கை உறுதியோடு இருந்தார். ஆனால், அவர் இறந்த பிறகும், விமர்சனம் என்ற பெயரில் பிரேத பரிசோதனை நடத்துகிறார்கள்.

சிலருக்கு எழுத்து வரும், பேச்சு வராது. சிலருக்கு பேச்சு வரும் எழுத்து வராது. சிலருக்கு இரண்டும் வந்தாலும் கருத்து இருக்காது. எழுத்தும் பேச்சும், ஒன்றாக வருவது திரு.வி.க.வுக்கு. அடுத்து தமிழருவி மணியனுக்குத்தான்.

1860இல் சேது சமுத்திரத் திட்டம் போடப்பட்டது. அப்போதுதான் சூயஸ், பனாமா கால்வாயை வெட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. தற்போது சேது சமுத்திரத் திட்டம் வெட்டும் முயற்சி எடுக்கப்பட்டு அதற்காக பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் திட்டம் இன்று நிறுத்தப்பட்டு உச்சநீதிமன்றத்தில் உள்ளது.

இந்த வழக்கில் முன்னாள் முதல்வர், ராம கோபாலன், சுப்பிரமணிய சாமி ஆகியோர் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி வாதாடி இருக்கிறார்கள்.

வக்கீல்களிடம் பேசிய நீதிபதி ‘மரத்தையும் தெய்வமாக வணங்குகிறார்களே’ என்று கேட்டிருக்கிறார். இதைக் கேட்டதும் இவ்வளவு ஆழமாக சிந்திக்கிறார்களே என்று நினைத்தோம். ஆனால், அகழ்வாராய்ச்சியை நிரூபிக்க சொல்லியிருக்கிறார்கள்.

1,300 கோடி ரூபாயை கடலில் போட்டாச்சு. நம்பிக்கை ஒன்றையே வைத்து சேது சமுத்திரத் திட்டத்தை நிறுத்தியிருப்பது சரியா?.

பாரதியார் புராணங்களை கட்டுக் கதைகள் என்று கூறியிருக்கிறார். பாரதி போன்ற ஆன்மிகவாதியை புறந்தள்ளிவிட்டு முட்டாள்தனமான நம்பிக்கையை வைத்து நல்ல திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடுவது, நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியை எழுப்புகிறது” என்றார்.

தமிழக அரசின் சுற்றுலாத்துறைச் செயலாளர் இறையன்பு பேசுகையில்,

”ஆங்கிலத்தில் பல சொற்களை உருவாக்கியவர் ஷேக்ஸ்பியர். அதே போல் நவீன தமிழுக்கு தடம் போட்டு கொடுத்தவர் பாரதியார். கவிதை இலக்கியத்திற்கு வழித்தடம் அமைத்து கொடுத்தவர் அவர். ‘தமிழ்நாடு’ என்று முதலில் எழுதிய பெருமை அவரையே சேரும் என்றார்.

விழா இறுதியில்ஏற்புரையாற்றி தமிழருவி மணியன் பேசுகையில்,

”பாரதியையும், விவேகானந்தரையும் இளைஞர்கள் படிக்க வேண்டும். என் இயக்கத்தில் உள்ளவர்களே என்னைப்பற்றி குறை சொல்கிறார்கள். காமராஜரை பற்றி சொல்லாத குறையா? என் வாழ்வின் இறுதி வரை நேர்மையுடனும், தூய்மையுடனும் வாழ்வதே எனது தவம்.

பேசத் தெரிந்தவர்கள் காங்கிரசுக்கு போனால் விலாசமற்று போவார்கள் என்று எனக்குத் தெரியும். காமராஜருக்காக, காந்திக்காக அந்தக் கட்சிக்கு போனேன்.

காங்கிரசில் உள்ள தலைவர்கள் நான் எப்போது கட்சியை விட்டு போவேன் என்று நினைக்கிறார்கள். அதனால் தான் நானே அவர்களை விட்டு விலகி இருக்கிறேன். எத்தனை காங்கிரஸ்காரர்களுக்கு காந்தீயத்தை பற்றி தெரிகிறது.

ஆட்சி கவிழ்ந்தாலும் பரவாயில்லை, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூறியிருந்தால், நான் காங்கிரஸ்காரன் என்று மார்தட்டி பேசியிருப்பேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *