ஜோஹன்னஸ்பர்க்: ஐபிஎல் 20-20 சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி அபாரமாக ஆடி பெங்களூரை தோற்கடித்து பட்டத்தைத் தட்டிச் சென்றது.
டெக்கான்சார்ஜர்ஸும், பெங்களூர் ராயர் சேலஞ்சர்ஸும் கடந்த போட்டித் தொடரில் கடைசி இடங்களைப் பெற்ற அணிகள். ஆனால் இவை இரண்டும் இந்த முறை எதிர்பாராதவிதமாக அபாரமாக ஆடி இறுதிப் போட்டிக்குள் வந்து விட்டன.
நேற்று ஜோஹன்னஸ்பர்க் நகரில் இறுதிப் போட்டி நடந்தது. முதலில் பேட் செய்த டெக்கான் சார்ஜர்ஸ், தனது முதல் விக்கெட்டாக கில்கிறிஸ்ட்டை இழந்தது. டக் ஆனார் கில்கிறைஸ்ட். ஆனால் இன்னொரு தொடக்க ஆட்டக்காரரான கிப்ஸ் சிறப்பாக ஆடி 53 ரன்கள் குவித்தார்.
அடுத்து வந்தவர்களில் சைமன்ட்ஸ் 33 ரன்களைக் குவித்தார். ரோஹித் சர்மா 21 ரன்கள் எடுத்தார்.
பெங்களூர் அணி கேப்டன் கும்ப்ளே சிற்பபாக பந்து வீசினார். தொடக்கப் பந்து வீச்சாளராக களம் இறங்கிய அவர் 4 ஓவர்கள் வீசி 16 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார்.
20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 143 ரன்களை எடுத்தது ஹைதராபாத்.
பின்னர் வந்த பெங்களூர் அணியி்ல் வான்டெர்மெர்வ் மட்டுமே சற்று சிறப்பாக ஆடினார். 32 ரன்களை எடுத்தார் மெர்வ். கல்லிஸ் 16 ரன்களுடன் வெளியேறினார். ராஸ் டெய்லர் வழக்கம் போல சிறப்பாக ஆடி 27 ரன்களைச் சேர்த்தார்.
பிற வீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. டிராவிட் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில் 19.6 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து பெங்களூர் அணி 137 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பெங்களூர் அணி தோற்றாலும் அந்த அணியின் கேப்டன் கும்ப்ளே தனது சிறப்பான பந்து வீச்சுக்காக ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் கேப்டன் கில்கிறைஸ்ட் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர். கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஷான் வார்னும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரு போட்டித் தொடர்களிலும் இந்திய கேப்டனைக் கொண்ட அணியால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply