கால் விரலால் தேர்வு எழுதிய மாணவி வெற்றி – 65.8% பெற்று சாதனை

posted in: கல்வி | 0

விழுப்புரம்: பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் கால் விரல்களால் தேர்வு எழுதிய மாணவி வித்யாஸ்ரீ 65.8 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

விழுப்புரம் அடுத்த ஆற்காடு குளத் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை. கூலித் தொழிலாளி. இவரது மகள் வித்யாஸ்ரீ (18).

பிறவியிலேயே இவருக்கு இரு கைகளும் இல்லாமல் பிறந்தார். ஆனாலும் இவர் படிப்பதில் தீவிர ஆர்வம் காட்டி னார்.

இதனால், உளுந்தூர்பேட்டையில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி மதியனூர் ஆதி திராவிடர் நலப் பள்ளியில் 8 -ம் வகுப்பு வரை படித்தார்.

மற்ற மாணவர்களை போல் எழுத முடியவில்லையே என்ற ஆதங்கப்பட்ட மாணவி வித்யாஸ்ரீ தனது இடது கால் விரலால் எழுத பழகினார்.

நாளடைவில் மற்ற மாணவர்கள் கையால் எழுதுவது போன்று கால் விரலால் எழுதி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 25 -ம் தேதி துவங்கிய 10 -ம் வகுப்பு பொதுத் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினார்.

மற்ற மாணவர்களை போலவே வித்யாஸ்ரீக்கும் தேர்வு நேரம் ஒதுக்கப்பட்டது. சிறப்பு சலுகை ஏதும் வழங்கப்படவில்லை.

நேற்று வெளியான தேர்வு முடிவில் மாணவி வித்யாஸ்ரீ 329 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

தமிழ் – 57, ஆங்கிலம் -77, கணிதம் -66, அறிவியல் -69, சமூக அறிவியல் -60 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தேர்வில் இவர் 65.8 சதவீத மதிப்பெண் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

மாணவி வித்யாஸ்ரீ -க்கு அவருடன் படித்த மாணவிகள் நேரில் சென்று வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்தனர்.

மன உறுதி இருந்தால் எந்த துறையிலும் வெற்றி பெறலாம் என்பதற்கு வித்தாயஸ்ரீ சிறந்த உதாரணமாக திகழ்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *