திண்டுக்கல்: திண்டுக்கல் அருகேயுள்ள சின்னாளபட்டியில் தமிழுக்கு கோவில் கட்டப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி காந்தி கிராம பல்கலை அருகே, தமிழன்னை திருக்கோவில் அறக்கட்டளை சார்பில், தமிழுக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது.
இது குறித்து தமிழன்னை திருக்கோவில் அறக்கட்டளை தலைவர் யோகநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஒரு கோடி ரூபாய் மதிப்பில் இதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இங்கு மூலவராக தமிழன்னை சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
முத்தமிழ் அரங்கம், பெரு நூலகம், இலவச சித்த மருத்துவ நிலையம், தமிழ் தியாகிகள் நினைவுத் தூண் அமைக்கப்படும்.
தமிழன்னைக்கு தினமும் தமிழின் உயிரெழுத்துக்களால் அர்ச்சனையும், பிரசாதமாக தேன், தினைமாவு, கனிகள் வழங்கப்படும். ஆனால், மத அடிப்படையில் எந்த வழிபாடும் நடத்தப்படமாட்டாது.
ஆண்டுதோறும் பொங்கல் அன்று செங்கரும்பு பந்தலிட்டு தமிழர் திருநாள் கொண்டாடப்படும். திருவள்ளுவர் தினத்தன்று தமிழுக்கு தொண்டாற்றிய சான்றோர்களுக்கு நினைவுத்தூண் மூலம் போற்றல் நிகழ்ச்சி நடைபெறும்.
தமிழ் விழாக்கள், பொதுநல விழாக்கள், ஏழை வீட்டு திருமணங்கள் இலவசமாக நடத்தப்படும்.விடுமுறை நாட்களில் பள்ளி மாணவர்களுக்கு தமிழ் இசை, பா புனைதல், இலக்கண வகுப்பு, தமிழ் வழிக்கலைகள் கற்றுத்தரப்படும். புதிய தமிழ் இலக்கிய படைப்புகள் அரங்கேற்றப்படும்.
ஆண்டுக்கு ஒருமுறை தமிழ் திருவிழாவும், இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை உலகளாவிய தமிழ் பெருவிழாவும் நடக்கும் என்றார்.
உலகத்தில் மொழி்க்கு என்று கோயில் கட்டப்படுவது தமிழகத்தில் தான். அதுவும் தமிழுக்குத்தான் என்பது குறிபிப்பிடதக்கது.
Leave a Reply