மும்பை : அமெரிக்காவில் குறைக்கப்பட்டிருக்கும் ஆப்பிள் ஐ போன் விலை இந்தியாவில் குறைக்கப்படவில்லை. எனவே அதன் ஆரம்பகட்ட ஐ போனை இந்தியாவில் வாங்க வேண்டுமானால், அமெரிக்காவை விட ஆறு மடங்கு அதிக விலை கொடுக்க வேண்டும்.
ஆப்பிளின் ஆரம்ப கட்ட ஐ போனின் ( 8 ஜிபி மெமரி ) விலையை அமெரிக்காவில் அதிரடியாக குறைத்த அந்த நிறுவனம், இந்தியாவில் இப்போதைக்கு குறைப்பதாக தெரியவில்லை. இந்தியாவில் பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய இரு நிறுவனங்கள்தான் ஆப்பிள் ஐபோனை விற்கும் மொத்த விற்பனையாளர்கள். அவர்களுக்கு இதுவரை விலை குறைப்பு பற்றி எந்த வித தகவலும் வரவில்லை என்கிறார்கள். பார்தி ஏர்டெல் உயர் அதிகாரிகளிடம் இது பற்றி கேட்டபோது, எங்களுக்கு இதுவரை எந்த வித தகவலும் வரவில்லை என்கிறார். வோடபோன் அதிகாரிகளோ இது பற்றி எதுவும் சொல்லவில்லை. டில்லியில் ஐபோன்களை சில்லரை விற்பனை செய்யும் டஃப்பிஷ் டெலிகாம் என்ற நிறுவனத்தை சேர்ந்த சச்சின் சேத் இதுபற்றி கூறுகையில், அவர்கள் பழைய விலைக்கே தான் எங்களுக்கு ஐபோன்களை தருகிறார்கள் என்கிறார். மும்பை, சென்னை நகரங்களில் நாள் ஒன்றுக்கு 50 முதல் 100 ஐபோன்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களும் இதையே தான் சொல்கிறார்கள். எனவே அமெரிக்காவை விட ஆறு மடங்கு அதிக விலை கொடுத்தே இந்தியாவில் நாம் ஆப்பிள் ஐபோன்களை வாங்க முடியும். அமெரிக்காவில் இதுவரை 199 டாலருக்கு விற்றுக்கொண்டிருந்த ஆப்பிளின் ஆரம்ப கட்ட ஐபோனின் விலை, அங்கு 99 டாலர் ( சுமார் ரூ.5000 ) குறைக்கப்பட்டிருக்கிறது. எனவே அங்கு அதன் விலை 100 டாலர் ( சுமார் ரூ.5,050 ) தான். ஆனால் இந்தியாவிலோ அதன் விலை 660 டாலராக ( சுமார் ரூ.31,000 ) இருக்கிறது. ஆப்பிளின் உயர்ந்த ரக ( 16 ஜிபி மெமரி ) ஐபோனின் விலை, அமெரிக்காவில் 299 டாலராகவும், இந்தியாவில் 766 டாலராகவும் ( சுமார் ரூ.36,000 ) இருக்கிறது. ஏன் அமெரிக்காவில இதன் விலை குறைவாக இருக்கிறது என்றால், ஆப்பிள் நிறுவனத்திற்கு இந்த ஐபோன்களை தயாரித்து கொடுக்கும் ஏடி அண்ட் டி நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு மானியம் கொடுப்பதால் தான் விலை குறைகிறது . அவர்கள் ஐபோன் வாங்குபவர்களிடம் இரண்டு வருடங்களுக்கு சர்வீஸ் கான்ட்ராக்ட் போட்டுக்கொள்கிறார்கள். ஒரு வேளை அந்த கான்ட்ராக்டில் இருந்து அந்த வாடிக்கையாளர் விலகிக்கொண்டால், அதற்கு அபராத தொகையாக அவர் 175 டாலர் ( சுமார் ரூ.7,000 ) கட்ட வேண்டும். இது போன்ற காரணங்களால் அங்கு ஐபோனின் விலை குறைவாக இருக்கிறது. இந்தியாவில் இம்மாதிரியான சிரமங்கள் இல்லாததால் விலை கூடுகிறது என்கிறார்கள்.
Leave a Reply