சென்னை : “”பொறியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கட்டணமே இந்த ஆண்டும் தொடரும் என, நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி நிர்ணயித்துள்ளது,” என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, “ரேண்டம்’ எண் வழங்கும் நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டார்.
பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இந்த ஆண்டு 80 ஆயிரத்து 891 ஆண்கள், 51 ஆயிரத்து 373 பெண்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 264 மாணவர்கள், பொறியியல் கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பித்துள்ளனர். புதிதாக உருவாக்கப்படும் ஐந்து அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளையும் சேர்த்து, 85 ஆயிரம் இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படவுள்ளன. ஏ.ஐ.சி.டி.இ., புதிதாக பல கல்லூரிகளுக்கு அனுமதி கொடுத்துள்ளது. இக்கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக இணைப்பு வழங்கப்பட்டால், இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சம் இடங்கள் இருக்கும். பொறியியல் கல்லூரிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க அமைக்கப்பட்ட நீதிபதி பாலசுப்ரமணியன் கமிட்டி, தனது அறிக்கையை அரசுக்கு கொடுத்திருக்கிறது. அரசின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையே இந்த ஆண்டும் தொடர கமிட்டி முடிவு செய்துள்ளது. அரசு ஒதுக்கீட்டில் தரச்சான்று பெறாத படிப்புகளில் சேரும் மாணவர்களிடம் 32 ஆயிரத்து 500 ரூபாயும், தரச்சான்று பெற்ற படிப்புகளில் சேரும் மாணவர்களிடம் 40 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கப்படும். நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களிடம் 62 ஆயிரத்து 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் வரும் கல்லூரிகளுக்கு உடனடியாக குழு சென்று ஆய்வு நடத்தும். வரும் 23ம் தேதி உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது, நன்கொடை மற்றும் அதிக கட்டணம் தொடர்பான புகார்கள் குறித்து அரசு எடுத்த மற்றும் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் பற்றி அறிவிக்கப்படும். முதல்வரின் உத்தரவுப்படி, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபிலை நானும், உயர்கல்வித்துறை செயலர் கணேசனும் நாளை சந்தித்து, நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், மாணவர் சேர்க்கை, கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கவுள்ளோம். ஒருமை பல்கலைக் கழகங்கள் குறித்து, மானியக் கோரிக்கையின் போது தெரியவரும்.
சிறுபான்மை பொறியியல் கல்லூரிகள் தங்கள் கல்லூரியில் எத்தனை சிறுபான்மை மாணவர்களை சேர்த்துள்ளனர் என்ற விவரத்தை 10 நாட்களுக்குள் தெரிவிக்குமாறு தொழில்நுட்ப கல்வி இயக்குனரத்திலிருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. “கவுன்சிலிங் முடியும் வரை தனியார் பொறியியல் கல்லூரிகளை அணுகாமல் இருந்தால், கவுன்சிலிங்கிலேயே இடம் கிடைக்கும்’ என, பெற்றோர்களை வேண்டுகிறேன். கவுன்சிலிங் நடைபெறும் நாட்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டிலிருந்து பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதற்கும், பொறியியல் கவுன்சிலிங் துவங்குவதற்கும் இடையே உள்ள இருமாத இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதனால், பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு ஏற்படும், “டென்ஷன்’ குறையும். இவ்வாறு பொன்முடி கூறினார்.
Leave a Reply