கொடிதான இனப்படுகொலைகள் நடத்தப்பட்டு இப்போது அந்த மண் இரத்தம் படிந்த மேற்தரைகளோடு அமைதியாக இருக்கின்றது. அந்த மண்ணின் மக்கள் மட்டுமல்ல இலை, செடி, கொடி மரம் மிருகங்கள் என்று அனைத்துமே கருகிப்போயுள்ள அந்த பிரதேசம் இப்போது பேய்கள் உலாவும் மயானங்களாகவே உள்ளன.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்று நீங்கள் அதற்கு பெயர் சூட்டி அழைத்தாலும் அங்கு பெருமளவில் இடம்பெற்றது இனப்படுகொலைகளே.
மிகுந்த மூர்க்கத்தனத்தோடு நடத்தப்பட்ட மேற்படி படுகொலைகளைச் செய்ய நீங்கள் எத்தனை பேர் அந்த மண்ணில் நின்றீர்கள்? சுமார் 30 நாடுகளின் கூட்டுப் பங்களிப்பு அல்ல கூடாத பங்களிப்பு அது. அதிலும் வேடிக்கை என்னவென்றால் எதிரிகளாக தங்களுக்குள் மோதிக்கொண்ட பல நாடுகளே அங்கு மறைமுகமாக கைகோர்த்து நின்றன. நாங்கள் நன்றாகவே பார்த்தோம். உங்கள் பகைமைகளை மறைத்தபடியும் தற்காலிகமாக மறந்த படியும் அந்த மண்ணில் வந்து நின்று கொடிய சங்காரத்தை நடத்த வேண்டிய அவசியம் என்னதான் உங்கள் அனைவருக்கும் இருந்தது. காரணம் இருந்தது. அந்த சிறியதொரு தீவுக்குள் பெரியதொரு விடுதலை இயக்கம். முப்பது ஆண்டுகளாக முப்பதாயிரத்தை நெருங்கும் மாவீரர்களை மண்ணுக்கு விதையாகக் கொடுத்திருந்தாலும் இன்னும் பின்னடைவையே மனதாலும் எண்ணிப்பார்க்காத துணிவு. மூன்று படைகளையும் தங்களால் முடிந்த அளவிற்கு ஆரம்பித்து அவற்றின் வெற்றிகளை பல தடவைகள் பரீட்சித்துப் பார்த்த இராணுவ பலம். தென்கிழக்கு ஆசியாவின் நிலப்பரப்பிற்குள் இன்னுமொரு புதிய நாடு உருவாகுவதா? அதுவும் ஆயுதப் புரட்சியின் மூலம் அது சாத்தியமாவதா? ஆபத்தான விடயம் இது என்ற தவறான கணிப்பு. இவைதான் உங்கள் சங்காரத்திற்கு நீங்கள் கற்பித்துக் கொண்ட காரணங்கள்.
இந்தியாவே உன்னை நோக்கிய எத்தனை கோரிக்கைகளை நீ உதாசீனம் செய்தாய். உலகின் பலமான ஒரு விடுதலை அமைப்பை அழிப்பது என்ற உன் தீர்மானத்திலிருந்து சற்றும் விலகவில்லை. ஆனால் மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிப்பது போல பாசாங்கு செய்தாய். தமிழ் நாட்டில் தமிழ்த் தலைவர்களுக்கிடையே நீண்ட பகையை ஏற்படுத்த தீவிரமாகச் செயற்பட்டாய். மேற்குலக நாடுகளிலிருந்து வீதிகளில் இறங்கி மன்றாட்டமாக கேட்டுக் கொண்ட தமிழர்களின் அவலக் குரல்கள் கேட்டும் கேட்காத செவிடன் போல உன் செயற்பாடுகள் இருந்தன.
தீங்கு செய்ய முயன்ற உனக்கு நீ தவறுகள் செய்வதை உணர முடியவில்லை. உன்னைச் சுற்றியுள்ள பாகிஸ்தான், சீனா ஆகியவை இரண்டும் உன் பரம விரோதிகள். உன்னை அழித்து உன் வளர்ச்சியை சிதைக்க எந்த நாட்டோடும் கூட்டுச் சேர்வதற்கு தயாரான நாச நாடுகள் அவை. இது உனக்கு நன்கு தெரியும். ஆனால் தமிழர்களின் கண்ணீருக்கும் செந்நீருக்கும் காரணமாக அமைந்து விட்டது உன் கபடநாடகம்.
இந்தியாவிற்காக யுத்தத்தைதான் நாம் நடத்தினோம் என்று இலங்கை கூறியபோது உன் வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் அதை ஆமோதித்துள்ளார். ஆமாம் இந்தியாவிற்குரிய யுத்தத்தைத்தான் இலங்கைப் படைகள் நடத்தின என்று இலங்கையின் கூற்றை அவர் ஆமோதித்தார். நான் நடத்த வேண்டிய யுத்தத்தை எனக்காக எனது நண்பன் இலங்கை செய்தான் என்று நீ இன்று கூறுகின்றாய். இறுமாப்புக் கொள்கின்றாய். ஆனால் எங்கோ மேற்குலக நாடொன்றின் உனக்கெதிரான யுத்தத்தை உனது அண்டை நாடுகளான பாகிஸ்தானும் சீனாவும் நாளையோ அன்றி மறுநாளோ செய்கின்ற ஒரு காட்சியை நாம் மனக் கண் கொண்டு பார்க்கின்றோம். அந்த கொடிய யுத்தம் தொடங்கி உனது மக்களும் படைகளும் வளங்களும் அழிக்கப்படுகின்றபோது உனக்காக அனுதாபம் காட்ட ஒருவருமே இருக்கமாட்டார்கள்.
இன்று வன்னி மக்களின் வளத்தையும் உயிர்களையும் அழிக்க உன்னோடு ஒன்றாய் நின்ற அந்த 30 நாடுகளும் மறுபுறத்தே நின்று உன்னை அழித்து நிற்கப்போகின்றன. அப்போது ஈழத்தமிழகத்தில் அழுவதற்கு தமிழர் இல்லாவிடினும் உனக்காக உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை மறந்து உனக்காக குரல் கொடுப்பார்கள்.
உலகெங்கும் புலனாய்வு வேலைகளை செய்யும் உனது றோவிற்கு நிச்சயம் தெரிந்திருக்கும் இந்த விடயம். சீனாவும் பாகிஸ்தானும் உனது எல்லையை நோக்கிய பிரதேசங்களில் தங்கள் படைகளையும் பயங்கர ஆயுதங்களையும் குவித்துள்ளன. இன்னும் எத்தனை மாதங்களோ அன்றி எத்தனை ஆண்டுகளோ அந்த இரண்டு கொடியவர்களாலும் நீ குறிவைக்கப்படுவாய். குதறப்படுவாய். பல துறைகளில் முன்னேற்றம் கண்ட உன் வளங்கள் உன் கண் முன்னால் அழிக்கப்படும். அப்போதுதான் நீ உணர்வாய். அந்த கொடுமைகளை தாங்கும் சக்தியை உனக்கு தரவல்லவர்கள் யார் உள்ளார்கள் என்று நீ நிச்சயம் ஏங்கித் தவிப்பாய். நேற்று நீ செய்த நாச வேலைகளுக்கு உடனேயே தண்டனை கிடைத்து விட்டது என்று உன் தேச மக்கள் கண்ணீர் வடிப்பார்கள். ஈழத்தமிழர்கள் விட்ட கண்ணீரும் சிந்திய செங்குருதியும் உன் கண்களின் முன்பாக தோன்றி மறையும் நமது மக்களின் சடலங்களின் தடயங்களை அழித்துவிடலாம். ஆனால் அவைகள் பற்றிக்கொண்டிருக்கும் உண்மை வெளிப்பட்டே தீரும். அன்றைக்கு தான் இனப் படுகொலைக்கு துணை போன உன் நாட்டுத் தலைமையின் நாகரீகமற்ற நடவடிக்கைக்காக இந்தியா என்ற நாடு வெட்கித் தலை குனியும் நாள் வரும்.
Leave a Reply