வாஷிங்டன்: இலங்கையில் விடுதலைப் புலிகள் மிரட்டல் இன்னும் முழுமையாக நீங்கவில்லை. எனவே அங்கு அமெரிக்கர்கள் போவதைத் தவிர்க்க வேண்டும். அப்படியே செல்வதாக இருந்தாலும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு கண்டிப்பாக போக வேண்டாம் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அமெரிக்கர்களுக்கான பாதுகாப்பு நடைமுறை எச்சரிக்கை செய்தியில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான இலங்கை அரசின் போர் முடிந்த பின்னர் எந்தவிதமான தீவிரவாத தாக்குதல்களும் இலங்கையில் நடைபெறவில்லை.
சண்டைகள் ஓய்ந்து விட்டாலும் கூட விடுதலைப் புலிகளின் சிதறிய குழுவினர் மீண்டும் திரும்பச் சேரும் அபாயம் உள்ளது.
இலங்கை அரசே கூட போர் முடிந்த பின்னரும் கூட தனது நாட்டில் அவசர நிலையை நீக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அது கடைப்பிடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வட பகுதிகள், கண்டி, பொலனருவா உள்ளிட்ட பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் செல்வதைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
வட பகுதிகள் உள்ளிட்ட சில பகுதிகளுக்கு செல்வதை இலங்கை அரசே தடுத்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கையைப் பூர்வீமாகக் கொண்ட அமெரிக்க குடிமக்களும் கூட கூடுதல் பாதுகாப்புடன் செயல்படுவது அவசியம் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கண்டனம்:
இதற்கிடையே, அமெரிக்கா விடுத்துள்ள இந்த எச்சரிக்கைக்கு இலங்கை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இலங்கை வெளியுறவுத்துறை செயலாளர் பலித கொகனா கூறுகையில், விடுதலைப் புலிகள் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். இதைப் புரிந்து கொள்ளாமல் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இவ்வாறான ஒரு அறிவுறுத்தலை அமெரிக்கா வெளியிட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்துகின்றது.
கடந்த காலங்களில் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பு சிறிலங்கா படையினரால் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறலாம் எனத் தெரிவித்திருப்பது கள நிலைமைகளைப் போதுமான அளவுக்குப் புரிந்துகொள்ளாத தன்மையைத்தான் வெளிப்படுத்துகின்றது என்று கூறியுள்ளார்.
Leave a Reply