இலங்கையில் முகாமிலுள்ள தமிழர்களுக்கு உதவ அனைத்து கட்சிகளும் ஒன்றுபட வேண்டுமென்று தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இலங்கைக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் வணங்காமண் கப்பல் அனுமதிக்கப்படாமல் நிறுத்தப்பட்டது பற்றிய கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது நடந்த விவாதம் வருமாறு:-
சேகர்பாபு (அ.தி.மு.க.):- ஐரோப்பிய நாடுகளில் இருந்து இலங்கை மக்களுக்காக 800 டன்னுக்கும் அதிகமான மருந்து மற்றும் உணவு பொருட்கள் வணங்காமண் என்ற கப்பலில் அனுப்பப்பட்டது. ஆனால் அதை இலங்கை அரசு ஏற்க மறுத்து விட்டது. தற்போது சென்னை அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அந்த கப்பலில் 13 ஊழியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கூட உதவ நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
(இதைத் தொடர்ந்து சேகர்பாபு பேசிய ஒரு சில வார்த்தைகளுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். கடுமையாக வாக்குவாதம் செய்தனர். அ.தி.மு.க.வினர் கோஷம் எழுப்பியதால் கூச்சல்- குழப்பம் ஏற்பட்டது)
முதல் – அமைச்சர் கருணாநிதி:- இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்களை ஏற்றிச்சென்ற கப்பலுக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கவில்லை. இதுபற்றி கடந்த ஒரு வாரமாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் தமிழக அரசு மத்திய வெளியுறவு துறை மந்திரியுடன் தொடர்பு கொண்டு கப்பலை அனுப்ப எடுத்த நடவடிக்கை எல்லாம் உறுப்பினர்கள் தெரிந்ததுதான். ஆனால் அ.தி.மு.க. உறுப்பினர் சேகர்பாபு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறுகிறார். நாம் எடுத்து வரும் காரியத்திற்கு குந்தகம் ஏற்படாமல் பார்க்க வேண்டியது நமது கடமை. சேகர்பாபுவும், அமைச்சரும் ஒருவரையொருவர் கைநீட்டி குற்றம் சாட்டி பேசிக்கொண்டார்கள்.
இந்தப்பிரச்சினையை நாம் அனைவரும் ஒரே நிலையில் அணுக வேண்டும். எனவே சேகர்பாபுவும் அமைச்சரும் பேசிக்கொண்ட கருத்தினை அவைக் குறிப்பில் இருந்து நீக்க கேட்டுக் கொள்கிறேன்.
இலங்கையில் நடந்ததெல்லாம் நடந்து முடிந்து விட்டது. மீதம் உள்ளவர்கள் வாழ்க்கைக்காவது நாம் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
சேகர்பாபு:- நிவாரண பொருட்களுடன் வந்த கப்பலை இலங்கைக்கு அனுப்பி செஞ்சிலுவை சங்கம் மூலம் பொருட்களை வழங்கும் கோரிக்கையை ஏற்பதாக மத்திய மந்திரி கூறியுள்ளார். அது முறைப்படி நடக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஞானசேகரன் (காங்.):- இலங்கை தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் இலங்கை தமிழர்களுக்கு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பிரதமருக்கும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை தமிழர் பிரச்சினையில் ஒரு சிலர் அக்கறை இருப்பது போல் பேசுவது சரியல்ல. இதில் மத்திய-மாநில அரசுகள் அக்கறையுடன் செயல்படுகின்றன. ஆனால் இங்கு ஒற்றுமை இல்லை.
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் உரிய முறையில் கிடைக்கவும், மத்திய-மாநில அரசுகள் அறிவித்த உதவிகள் உடனே கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜி.கே.மணி (பா.ம.க.):- 84 டன் உணவு-மருந்து பொருட்களுடன் ஐரோப்பாவில் இருந்து தமிழர்கள் அனுப்பி வைத்த கப்பல் இலங்கை தமிழர்களுக்கு உதவி பொருட்களை வழங்க முடியாமல் 11/2 மாத மாக கடலில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இவை முறையாக போய்ச்சேர எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலை உள்ளது. என்றாலும் இன்று வந்துள்ள செய்தி மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கிறது.
ஆனால் இலங்கை அரசு அதை செய்யுமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ஐ.நா. சொன்னதையே ராஜபக்சே ஏற்கவில்லை. ராஜபக்சே பன்னாட்டு நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட வேண்டும். எஞ்சியுள்ள தமிழர்கள் உரிமை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உணவு பொருட்கள் முறையாக தமிழர்களை சென்றடைய ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதே கருத்தை வலியுறுத்தி சிவபுண்ணியம் (இந்திய கம்யூ.), ரவிக்குமார் (விடுதலை சிறுத்தை), நன்மாறன் (மார்க்சிஸ்ட் கம்யூ.) ஆகியோரும் பேசினார்கள்.
அதற்கு பதில் அளித்து முதல் – அமைச்சர் கருணாநிதி கூறியதாவது:-
இலங்கைக்கு நிவாரணப்பொருட்களை ஏற்றிச்சென்ற கப்பல் திரும்ப வந்து சென்னைத் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு விட்டது என்ற ஒரு செய்தி வந்ததும், அது குறித்து அந்தக்கப்பலை பொருட்களை அனுப்பிய வெளிநாட்டு, குறிப்பாக ஐரோப்பிய நாட்டுத் தமிழர்கள் தங்களுடைய கவலையைத் தெரிவித்து எங்களுக்கு உடனடியாக நிவாரணம் தேவை- அந்தக்கப்பல் இலங்கைக்குச் சென்று நாங்கள் அனுப்பிய பொருட்களை எல்லாம் உரிய முறையிலே பாதுகாப்பாக வழங்க வேண்டும் என்று தொடர்பு கொண்டு பேசினார்கள்.
அதையொட்டி இங்குள்ள அரசும் மத்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி அந்தக்கப்பலிலே உள்ள பொருட்களை 480 பெட்டிகளில் அடைக்கப்பட்ட பொருட்களை இலங்கையிலே பாதிக்கப்பட்ட – போரினால் அல்லல்பட்டு இன்னமும் அழுது கொண்டிருக்கின்ற ஏழை, எளிய அப்பாவித்தமிழர்களுக்கு வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர் களும், அரிசி, கோதுமை போன்ற உணவுப்பொருட்களையும், இதர மளிகைப்பொருட்களையும் திரட்டி- அவர்களும் 51 பெட்டிகளில் பிரான்ஸ் துறைமுகத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்கள்.
இந்தக்கப்பலில் 13 மாலுமிகளும், இங்கிலாந்து நாட்டு குடியுரிமை பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த டி.உதயணன் மற்றும் இலங்கையைச் சேர்ந்த கிருஸ்டன், குட்மன்சன் ஆகிய இரண்டு பயணிகளும் அந்தக்கப்பலில் இருக்கிறார்கள்.
அங்கிருந்து 7-5-2009 அன்று மறுபடியும் பயணத்தைத் தொடங்கி கருணைத் தூது என்ற இங்கிலாந்திலுள்ள அமைப்பின் ஆதரவோடு அந்தக்கப்பல் இலங்கைக்குச் சென்றது. அதுவும் கருணைத்தூது தான். இப்போது நடைபெறுவதும் Òகருணைத் தூது தான் என்பதும் உங்களுக்குத்தெரியும்.
இலங்கை கப்பற்படையினர் இந்தக்கப்பலை தங்களது பாதுகாப்பின்கீழ் கொண்டு வந்து 4-6-2009 முதல் 8-6-2009 வரை சோதனைகள் நடத்திய பிறகு – இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய விடாமல் திருப்பி அனுப்பி விட்டனர்.
அதன் பிறகு, இந்தக்கப்பலின் தலைமை அதிகாரி, கப்பலின் உரிமையாளருடன் தொடர்பு கொண்ட பின், அவரது ஆணையின் பேரில் சென்னையைச் நோக்கிப் பயணமானார்.
12-6-2009 அன்று, இக்கப்பல் சென்னை துறை முகத்திற்கு வெளியே சுமார் நான்கு கடல் மைல்கள் – நான்கு மைல்கள் என்று சொல்லவில்லை- நான்கு கடல் மைல்கள் தொலைவிலே நங்கூரமிடப்பட்டு நிறுத்தப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து பொருட்களை ஏற்றி வரும் எந்தவொரு கப்பலும் சுங்கச் சோதனை மற்றும் குடியேறுதல் குறித்த சோதனை முடித்த பின்னர் தான் – அந்தக்கப்பலிலுள்ள ஆவணங்களின் அடிப்படையில் துறைமுகத்திற்குள் சரக்குகளை இறக்க அனுமதிக்கப்படும். இந்த நெறி முறைகளின்படி அந்தப் பயணம் அமையாததால் சென்னை துறைமுகத்திற்குள் நுழைய அனுமதிக் கப்படவில்லை என்று கூறப்பட்டது.
ஏடுகளின் வாயிலாக இந்தச்செய்தி, இந்த அரசுக்குக்கிடைத்தவுடன், பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களுக்கு உதவ மனி தாபிமான அடிப்படையில் ஐரோப்பிய தமிழர்களால் அனுப்பப்பட்ட நிவாரணக்கப்பலை இலங்கை அரசு அனுமதிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி 19-6-2009 அன்று நான் மத்திய வெளி விவகாரத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு நீண்ட தொரு கடிதம் எழுதி- அதனை தமிழக அமைச் சர் பொன்முடி மற்றும் மத்திய அமைச்சர் ஆ.ராஜா ஆகியோர் மூலமாக நேரடியாக மத்திய அமைச்சர் கிருஷ்ணாவிடம் கொடுக்கச்செய்து, நிலைமைகளை விளக்கி அந்தச்செய்தி தமிழகத்திலே உள்ள எல்லா ஏடுகளிலும் வெளி வந்துள்ளது.
எந்த முயற்சியும் செய்ய வில்லை இந்த அரசு என்று நண்பர் கோ.க.மணி சொன்னது எவ்வளவு தவறான வாதம் என்று சொல்ல மாட்டேன். சரியில்லாத வாதம் என்பதை நான் ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர் இப்போது கோ.க.மணியாக இருக்கிறார். உண்மைதான். ஜி.கே.மணியாக இருந்தபோது உண்மைகளைப்பேசினார். இப்போது அவர் நம்மோடு கோக்கா மணியாக இருக்கின்ற காரணத்தால் அவர் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று சொன்னார்.
நான் 19.6.2009 அன்று எழுதிய கடிதத்திற்கு நம்முடைய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா எந்த அளவிற்கு மரியாதை கொடுத்து – கவலை தெரிவித்து இந்தப்பிரச்சினையை உடனடியாக அணுகினார் என்பதை மறந்துவிடக்கூடாது.
இந்தக்கடிதத்தை நான் அவருக்கு எழுதியதோடு விட்டு விடவில்லை. நிவாரணக்கப்பலிலே வந்தவர்களுக்கு தண்ணீர், மருந்து போன்றவைகள் கிடைக்கவில்லை என்ற தகவல் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி வாயிலாக எனக்கு கிடைத்தவுடன், பொதுத்துறை செயலாளரோடு உடனடியாக பேசி இந்தப் பிரச்சினையில் தமிழக அரசின் சார்பில் மனிதாபிமான நோக்கத்தோடு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுமாறு கூறினேன்.
பொதுத்துறை செயலா ளர் மேற்கொண்ட நடவடிக் கையின் அடிப்படையில் இந்தக் கப்பலில் உள்ள மாலுமிகள் மற்றும் பணியா ளர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட் களான உணவு, மருத்துவ உதவி மற்றும் குடிநீர் ஆகியவை இந்தக்கப்பலுக்கு நியமிக்கப்பட்ட முகவர்கள் மூலமாக அனுப்பப்பட சென்னை துறைமுக நிர்வாகம் அனுமதி அளித்தது. பத்திரி கைகளிலும் குடிநீர் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட செய்தி வெளி வந்துள்ளது.
மேலும் நேற்று மாலையில் டெல்லியில் வெளி உறவுத்துறை அமைச் சர் கிருஷ்ணாவை இலங்கை தூதுவர் குழு ஒன்று – பாசில் ராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, லலித் வீரா துங்கே ஆகியோர் சந்திக்கவிருக்கம் தகவல் எனக்குக் கிடைத்தவுடன், டெல்லியிலிருந்த மத்திய அமைச்சர் ஆ.ராஜாவை நான் தொலைபேசியிலே தொடர்பு கொண்டு, இலங்கை குழுவினர் மத்திய அமைச்சரைச் சந்திப்பதற்கு முன்பே, நமது வெளி உறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவை நேரில் சந்தித்து நிவாரண கப்பல் குறித்த நிலைமைகளை விளக்கிட வேண்டுமென்றும், அப்போதுதான் மத்திய அமைச்சர் இலங்கை குழு வினரிடம் இன்று மாலை யில் இதுபற்றி தெளிவாக விவாதிக்க இயலுமென்றும் நான் கூறச்செய்ததின் பேரில், நமது மத்திய அமைச்சர் ஆ.ராசா வெளி விவகாரத்துறை அமைச்சரைச் சந்தித்து – விளக்க கடிதம் ஒன்றையும் கொடுத்து நான் எடுத்துச்சொன்ன நிலைமைகளையும் விளக்கி இருக்கிறார்.
அது மாத்திரமல்ல, இந்த அரசு எடுத்துக்கொண்ட தொடர் முயற்சிகளின் விளைவாக – நேற்று மாலையில் மத்திய வெளி உறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தொலை பேசி வாயிலாக என்னோடு பேசினார். அப்போது அவரிடம் நிலைமைகளையெல்லாம் நான் விளக்கியிருக்கிறேன்.
நான் எழுதிய கடிதம் பற்றியும், அமைச்சர் ராஜா சந்தித்து விளக்கியது பற்றியும் என்னிடம் அவர் பகிர்ந்து கொண்டதோடு- அந்தக்கப்பலிலே உள்ள நிவாரணப்பொருட்களை செஞ்சிலுவை சங்கம் போன்ற பொது அமைப்பின் மூலமாக இலங்கைத் தமிழர்களுக்கு சென்றடைய முயற்சிகளை மேற்கொள்வதாக என்னிடம் கூறினார்.
அது சரியாக இருக்குமா என்றும் என்னுடைய கருத்தைக் கேட்டார். எப்படியாவது பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு ஐரோப்பியத் தமிழர்கள் அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்கள் சேதாரம் இல்லாமல் சென்றடைய வேண்டு மென்றும், அதற்கு மத்திய அரசு தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினேன். அவரும் ஏற்றுக் கொண்டார்.
நாம் கேட்டபடி எஸ்.எம்.கிருஷ்ணா மேற்கொண்ட முயற்சியின் பலனாக அவரைச்சந்தித்து ஆலோசனை நடத்தியதற்குப்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாசில் ராஜபக்சே – ராஜபக்சேவின் சகோதரர்- ஐரோப்பிய வாழ் தமிழர்களால் இலங்கைத்தமிழர்களுக்கு அனுப்பப்பட்ட பொருட்களை இலங்கை அரசு பெற்றுக்கொள்ளும் என்றும், இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை இலங்கை அரசு இன்றைக்கு வெளியிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்குப்பிறகு நாம் இதை நம்பாமல் இருக்க முடியாது. இதற்கு மீறி அவை திரும்ப அனுப்பப்படுமேயானால் கண்டிக்கத்தக்கது. அது நம்பிக்கை துரோகம். இது ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்கு மேலும் மேலும் துன்பத்தை, துயரத்தை, வேதனையை, விசாரத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்பதை இந்த அவையிலே உள்ள எல்லா உறுப்பினர்கள் மூலமாகத் தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.
நான் இன்றைக்கு எல்லாம் முடிந்து விட்டதாக கருதப்படுகிற நேரத்திலே கூட நாம் இந்த நிவாரணப்பொருட்களை இலங்கையிலே இருக்கின்ற தமிழர்கள் பெறுவதற்கான ஒரு முயற்சியினை அந்தக்கப்பலை இலங்கைத் துறைமுகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்கின்ற அளவில் நாம் இங்கே நிறைவேற்றுகின்ற இந்தத்தீர்மானத்தில் கூட எல்லோரும் ஒரே கருத்திலே இல்லாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.
ஆரம்பத்திலேயேலிருந்து இலங்கைத்தமிழர்கள் பிரச்சினையிலே நாம் ஒன்றுபட்ட கருத்தைக் கொள்ளாத காரணத்தால் இன்றைக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த விளைவுகளையெல்லாம் நாம் சந்தித்திருக்கிறோம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது. நம்மிடத்திலே இலங்கைத் தமிழர்களைக்காப்பாற்றுவதிலே கூட ஒருமித்த கருத்து இல்லை. நாம் அனைத்துக்கட்சி சார்பாக கூட்டங்கள் போட்டபோது, அது அனைத்துக் கட்சிக்கூட்டமாக இல்லை.
சில கட்சிகள் கலந்து கொள்ளாத கூட்டமாகத் தான் இருந்தது. மனிதச் சங்கிலியை இலங்கைத் தமிழர்களுக்காக நடத்திய போது அது அனைத்துக் கட்சிகள் நடத்திய மனிதச்சங்கிலியாக இல்லை. சில கட்சிகள் ஒதுங்கித்தான் இருந்தன.
எனவே, எப்படியாவது இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற வேண்டுமென்ற அந்த உணர்வோடு நாம் ஒற்றுமாக இருந்து இனிமேலாவது அந்த நிலையைக் கடைப்பிடித்து இலங்கையிலே உள்ள தமிழர்களுக்கு மாத்திரமல்ல- எந்தக்கண்டத்திலே உள்ள தமிழர்களாக இருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுகின்ற பணியிலே நாம் வெற்றி பெற வேண்டு மேயானால் ஒற்றுமை தேவை.
நான் அந்த ஒற்றுமையை – நம்முடைய கட்சிகளுக் கிடையே ஏற்பட வேண்டிய அரசியல் ஒற்றுமை – தேர்தல் ஒற்றுமை என்ற கண்ணோட்டத்திலே பார்க்க வில்லை. இன உணர்வு ஒற்றுமை வேண்டும். அந்த ஒற்றுமையைக் கடைப்பிடிக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதை இந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மூலமாக நான் வெளியிடுகின்ற கருத்தாக எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இந்த அளவில் என்னுடைய விளக்கத்தை நிறைவு செய்கின்றேன்.
இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி கூறினார்.
Leave a Reply