சென்னை: எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சிக் கழகம், எஸ்.ஆர்.எம்., பல்கலைக் கழகம் மற்றும் ராஜிவ் இளைஞர் மேம்பாட்டுக் பல்கலைக் கழகம் இணைந்து, “இந்திய அறிவியல் காங்கிரஸ்’ என்ற அமைப்பை உருவாக்கி, அதன் சார்பாக, பருவநிலை மாற்றம் தொடர்பாக, ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் இளைஞர் மேம்பாட்டுக் பல்கலைக் கழகத்தில், ஜூன் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை இளம் விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களுக்கான அறிவியல் கூட்டம் நடைபெறுகின்றது.
“உலக சுற்றுச் சூழல்’ தினமான ஜூன் 5ம் தேதி இந்திய இளைஞர் காங்கிரஸ் அமைப்பு சார்பில் அறிவியல் கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க, இதுவரை 403 மாணவர்கள் பதிவு செய்து உள்ளனர். இதில் 261 இளநிலை, முதுநிலை மாணவர்களும், 19 பயிற்சியாளர்களும், 36 ஸ்காலர்களும் மற்றும் 87 எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி கழகத்தின் மாணவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தின் போது 50 பேர் பேச்சு மூலம் தங்களது விளக்கங்களை எடுத்துரைக்க உள்ளனர். இந்த கூட்டத்தில் சிறப்பாக செயல்படும் எட்டு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசுகளும் அளிக்கப்பட உள்ளன.
இந்தக் கூட்டம் “வீடியோ கான்பரன்சிங்’ மூலம் நாடு முழுவதும் உள்ள ஒன்பது மையங்களுடன் இணைக்கப்பட்டு, அங்கு உள்ளவர்கள், இங்கிருக்கும் விஞ்ஞானிகளிடம் கலந்துரையாடலாம். இதுகுறித்து எம்.எஸ்.சுவாமிநாதன் கூறுகையில், “”இந்திய மக்கள் தொகையில், 70 சதவீதத்தில் 35 சதவீதம் பேர் இளைஞர்களாக உள்ளனர். இவர்கள் தான் வருங்காலத்தில் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள போகிறவர்கள். பருவநிலை மாறுவதால், கடல்மட்டம் உயர்ந்து, பூமியின் பகுதிகள் மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால் இளம் விஞ்ஞானிகள், மற்றும் மாணவர்களுக்கு பருவநிலை மாற்றத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதனால் அறிவியல் ரீதியாக எதிர்கால மாற்றங்களை பற்றிய விஷயங்களை இந்த கூட்டத்தில் விவாதிக்க உள்ளோம்,” என்றார்.
Leave a Reply