உத்தரபிரதேச மாநிலம் கார்டோய் மாவட்டத்தில் உள்ள பஹாலி என்ற கிராமத்தைச்சேர்ந்தவர் ராஜூ. இவரது 8 வயது மகன் ஜகன்நாத் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜூ வீட்டுக்கு அருகே ஒரு காலி நிலம் உள்ளது. அந்த நிலத்தை பங்கீட்டு கொள்வது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று 2 குடும்பத்தினரும் மோதிக்கொண்டனர். மரக்கட்டை மற்றும் இரும்புகள் போன்ற வற்றால் தாக்கி கொண்டனர். இதை தொடர்ந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் ராஜூவின் வீட்டுக்குள் புகுந்து பொருட்களை அடித்து நொறுக்கினார்கள்.
வீட்டில் இருந்தவர்களையும் அடித்து உதைத்தனர். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் தகராறில் ஈடுபட்ட 2 குடும்பத்தினரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். ஆனால் ராஜூவின் மகன் ஜகன்நாத்தை மட்டும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பக்கத்து வீட்டுக்காரர்கள் மீது எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
இது குறித்து ஜகன்நாத்தின் தந்தை ராஜூ போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளார். தனது மகனுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புவதாக அவர் கூறினார்.
குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறுவன் கைது செய்யப்பட்ட விவகாரம் உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Leave a Reply