மனிதன் என்றால் தன்னம்பிக்கை வேண்டும். நோயாளி என்றால் மருந்துக்கு பதில் தன்னம்பிக்கையை மாத்திரையாகக் கொடுத்தால் போதும் எழுந்து உட்கார்ந்துவிடுவான். இதற்கு உதாரணமாக திகழும் ஜான் மாத்யூஸ் அந்த தன்னம்பிக்கையையே காசாக்கி விட்டார் என்றால் அவருடைய திறமையை என்னவென்பது.?
இங்கிலாந்து பங்கிம்ஹாம்ஷையர் பகுதியைச் சேர்ந்தவர் 59 வயதான ஜான் மாத்யூஸ். நோய்வாய்ப்பட்ட அவர் கடந்த 2006 ஆண்டு மருத்துவமனையில் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள், அவரை புற்றுநோய் பீடித்திருப்பதாகவும் இன்னும் சில
மாதங்கள்தான் உயிருடன் இருப்பார் என்றும் தேதி குறித்துவிட்டார்கள்.
மருத்துவர்கள் என்ன கடவுளா தன்னுடைய வாழ்நாளை கணிக்க… என்று தோன்ற, உடனே ஜான் என்ன செய்தார் தெரியுமா? உள்ளூர் புக்கி ஒருவரிடம் சென்று, மருத்துவர்கள் தனக்கு உயிர் போகும் தேதி குறித்த தகவலைச் சொன்னதுடன், நான் அடுத்த வருடம் -2008 ஜூன் வரையில் உயிருடன் இருப்பேன். அதற்காக 100 பவுண்ட் பெட் கட்டுகிறேன் என்றார். புக்கியும் ஒப்புக்ககொண்டார். அதாவது அவர் கூறியபடி, அவர் உயிருடன் இருந்தால் 50 மடங்கு அதிகமாக தரவேண்டும். அதன்படி அவரும் உயிருடன் இருந்தார். கடந்த வருடம் அவருக்கு பரிசுப் ணமாக 5 ஆயிரம் பவுண்ட் கிடைத்தது.
அத்தோடு விட்டாரா அவர். தன் உயிர்மேல் இருக்கும் நம்பிக்கையில் 2009 ஜூன் வரை நிச்சயம் உயிர் வாழ்வேன் என்று மீண்டும் பெட் கட்டினார். இப்போதும் அவர்தான் ஜெயித்தார். அவருக்கு இப்போது பரிசுப்பணமாக மேலும் 5 ஆயிரம் பவுண்ட் பணம் கிடைத்துள்ளது. மொத்தம் 9 லட்ச ரூபாய்.
ஆகா, தன்னுடைய உயிருக்கு இவ்வளவு மதிப்பா என்று கணக்கு போட்டவர் சுடச்சுட பரிசுப்பணத்தைப் பெற்றுக்கொண்டு, 2010 வரைக்கும் நிச்சயம் சாகமாட்டேன் என்று பெட் கட்டியிருக்கிறார்.
இந்த சூப்பர் மனிதரிடம் பேசினால் தன்னம்பிக்கை அருவியாகக் கொட்டுகிறது.
”உலகிலேயே உயிர்மீது பெட் வைத்த முதல் மனிதன் நானாகத்தான் இருப்பேன். என்னை பரிசோதித்தபோது உயிரை நிச்சயம் காவு வாங்கிவிடும் மெசோதிலியோமா (ஒருவகை புற்றுநோய்) என்னை பற்றியிருப்பதாகக் கூறினார்கள்.
அதற்காக நான் கவலைப்படவில்லை. என்றைக்கு இருந்தாலும் இந்த உயிர் போகத்தானே போகிறது. ஆனால் எப்போ போகும் இன்றா, நாளை யா, அடுத்த வாரமா, அடுத்தமாதமா என்பது சஸ்பென்சாக இருந்தது” என்கிறார் ஜான்.
இவர் உயிர்மீதான பெட்டை ஏற்றுக்கொண்டு பரிசுப் பணம் வழங்கிய புக்கி வில்லியம் ஹில் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிரகாம் ஷெர்பே இதுகுறித்து கூறுகையில, ”எங்களுடைய 30 வருட அனுபவத்தில் இப்படியொரு பெட்டை சந்தித்தது இல்லை. பெட் தொகையை இத்தனை சந்தோஷமாகக் கொடுத்ததும் இல்லை. அடுத்து ஆண்டும் அவருக்கு 10 ஆயிரம் பவுண்ட் பணம் நிச்சயம் கொடுப்போம்” என்று மகிழ்ச்சிப் பொங்க கூறுகிறார்.
ஜான்மாத்யூ தனக்குக் கிடைத்த பரிசுப் பணம் முழுவதையும் நல்ல காரியங்களுக்கு செலவிடப் போகிறாராம். இதற்காகவே நீங்கள் நிறைய வருடங்கள் உயிருடன் இருக்கவேண்டும் மிஸ்டர் ஜான் மாத்யூ.
Leave a Reply