திருக்குறள் நுண் ஒலி பேழை ஒன்று சென்னையில் முதல் தடவையாக வெளியிடப்பட்டுள்ளது.
“தமிழனுக்கு – தமிழனால் – தமிழருக்காக திருக்குறள் கலைஞர் உரை” என்ற மகுடத்தில் அழகான முகப்பில் இந்த நுண்ஒலிப் பேழை வெளிவந்திருக்கின்றது.
இதன் மூலம் திருக்குறள் வாசகங்களையும் அவற்றுக்கான விளக்கவுரையையும் நாம் ஒலி நாடாவில் செவிமடுக்கலாம். விளக்கவுரையைத் தருபவர் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி.
குறள்களைப் பாடியிருக்கின்றார் பத்மஸ்ரீ கலைமாமணி டாக்டர் சீர்காழி கோ. சிவசிதம்பரம்.
கலைஞர் தரும் விளக்க உரையை அழகு தமிழில் வாசிக்கின்றார் கலைமாமணி திருமதி சாரதா நம்பிஆரூரன்.
பாடல்களுக்கு இசைவடிவம் தந்திருப்பவர் சிக்கில் பாலசுப்பிரமணியம். இயக்கம் : தமிழ் ஆசிரியர் ஜெயராமன். தயாரிப்பு : கலைமாமணி திருமதி முத்தரசி ரவி.
மேற்படி நுண் ஒலி பேழை குறித்து தெரிவிக்கப்படுவதாவது :
உலகப் பொதுமறை திருக்குறளைப் பற்றி அறியாதவர் யாரும் இலர். எழுத்து வடிவில் உருவான இந்த உரை கற்றவர் கைகளில் மட்டும் தவழாமல் மற்றவர்களும், கல்வி அறிவற்றவர்களும் தெரிந்து, புரிந்து, நடந்து கொள்வதற்கு உதவும் வகையில் உருவான முயற்சியே இந்த திருக்குறள் நுண் ஒலிப் பேழை.
இது மின்சாரத்தில் இயங்கக் கூடியது.
“கற்றலின் கேட்டல் நன்று” என்ற சொற்தொடருக்கு ஏற்ப, இந்த நுண் ஒலிப் பேழை வடிவின் மூலம் அய்யனின் பாக்களும் அதற்குரிய முதல்வர் கலைஞர் அவர்களின் விளக்கங்களும் பாமரனுக்கும், செவி மூலம் சிந்தைக்குச் சென்றடையும் என்பது திண்ணம்.
அறம்,பொருள், இன்பம் என்னும் முப்பாலுக்கும் உரிய 1330 குறட்பாக்கள் இசைவடிவிலும் அதன் விளக்கங்களும் அடங்கிய இந்த நவீன பேழையில் நீங்கள் தேர்வு செய்யும் அதிகாரத்தையோ அல்லது தனிக்குறட்பாக்களையோ கேட்டு அறிந்து கொள்ளலாம்.
உலக வாழ் தமிழ் மக்கள் அனைவருக்குமே இனிய தமிழ் மொழியை மென்மேலும் கற்க வேண்டும் அது பற்றி அறிய வேண்டும் என்ற பேராவல் உள்ளது.
நமது எதிர்காலச் சந்ததியினர் தமிழ் மொழியை ஒருவேளை தமது வாழ்வில் மறந்து விடலாம். அதே வேளை, தமிழ் இலக்கியத்தையும் கவிதைகளையும் உள்வாங்கிக் கொள்வதற்கு எமது சமுதாயம் இன்னமும் முயன்று கொண்டுதான் இருக்கின்றது என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.
திருக்குறள் மிகமிகப் பிரபலமானது. மனித வாழ்வுக்கு அச்சாரமானது. வாழ்க்கை நெறிகளை உள்ளடக்கியது திருக்குறள் என்றால் கூட அது மிகையல்ல.
இன்றைய நாளில் எமது இளம் சமுதாயத்தினருக்கு வாசிப்பு என்பது சற்று சிரமமான ஒரு காரியமாகவே இருப்பதை நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. எனவே தான் திருக்குறளை இலத்திரனியல் வடிவில் வெளியிட நாம் முன்வந்தோம்.
இவ்வாறு வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply