மும்பை: உலகிலேயே இந்தியாவில் தான், உள்நாட்டிற்குள் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் அதிகம் உள்ளன. உலகின் பல்வேறு நாடுகளில் ஏராளமான பயங்கரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. இவற்றில் சர்வதேச அளவிலான அல்-குவைதா போன்ற பயங்கரவாத அமைப்பு களும் அடக்கம்.
இது தவிர, அந்தந்த நாடுகளில் மட்டும் சில பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவில் சமீபத்தில் சி.பி.ஐ., மாவோயிஸ்ட் அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு தடை செய்யப்பட்டது. இதையடுத்து, இந்தியாவில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ள அமைப்புகளில், அல்-குவைதா மற்றும் விடுதலைப் புலிகள் போன்றவை சர்வதேச அளவிலானவை. லஷ்கர், ஹர்கத்துல் முஜாகிதீன் உள்ளிட்ட ஐந்து அமைப்புகள், பாகிஸ்தானை மையமாகக் கொண்டு இந்தியாவில் பயங்கரவாதச் செயல் களில் ஈடுபட்டு வருபவை. இது தவிர, மாவோயிஸ்ட், உல்பா, சிமி போன்ற 27 அமைப்புகள் உள்நாட் டில் மட்டும் செயல்பட்டு வருபவை.
உலகிலேயே இந்தியாவில் தான், உள்நாட்டில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் அதிகம் உள்ளன. உலகில் அதிக அளவாக அமெரிக்கா மற்றும் கனடாவில், 40 பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றுக்கு அந்நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை பெரும்பாலும் சர்வதேச அளவிலான அமைப்புகள். அமெரிக்கா மற்றும் கனடாவில் மட்டும் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு தான். இதுகுறித்து உளவுத்துறை நிபுணர் ராமன் கூறியதாவது: இந்தியா பல்வேறு கலாசாரங்களை உடைய மிகப் பெரிய நாடு. இதில் குறைகள் அதிகம் இருக்கும். இது போன்ற காரணங்களால், உள்நாட்டை மட்டும் மையமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் அதிகம் உள்ளன. நல்ல பொருளாதார வளர்ச்சியுடைய வளர்ந்த நாடுகளில், உள்நாட்டு பயங்கரவாத அமைப்புகள் அதிகம் உருவாவதற்கு வாய்ப்பு இல்லை என்றார்.
Leave a Reply