மதுரை: “டிரைவிங் லைசென்ஸ் பெறும் முன் ஓட்டுநர் பழகுநர் உரிமம் (எல்.எல்.ஆர்.,), பெற்றவர் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் நஷ்டஈடு வழங்க வேண்டும்,’ என மதுரை ஐகோர்ட் கிளை குறிப்பிட்டது.
தூத்துக்குடியை சேர்ந்த சொர்ணபாண்டியின் மைனர் மகன் ராஜேஷ் மணிராஜ். 2002 டிச., 5ல் பாளையங்கோட்டை ரோட்டில் பைக்கை ஓட்டிச் சென்றார். பைக் மோதியதில் எதிரில் வந்த முதியவர் இறந்தார். அவரது குடும்பத்தினர் நஷ்டஈடு கோரி தலைமை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். “முதியவர் குடும்பத்தினருக்கு ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 66 ரூபாய் ஓரியன்டல் இன்சூரன்ஸ் வழங்கவும், அதை இன்சூரன்ஸ் நிறுவனம், ராஜேஷிடம் வசூலித்து கொள்ளவும்,’ கோர்ட் உத்தரவிட்டது. அதை எதிர்த்து ராஜேஷின் தாய் ஞானசெல்வம் சீராய்வு மனு செய்தார். மனு நீதிபதி கிருபாகரன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல், “”நஷ்டஈட்டை ராஜேஷிடம் வசூலிக்க உத்தரவிட்டது தவறு. அவர் எல்.எல்.ஆர்., வைத்துள்ளார்,” என்றார்.
இதற்கு இன்சூரன்ஸ் நிறுவன வக்கீல் பாஸ்கரன் ஆட்சேபம் தெரிவித்தார். சீராய்வு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, “”எல்.எல்.ஆர்., விதியின்படி டூவிலரை ஓட்டுபவரின் பின்னால் லைசென்ஸ் பெற்றவர் அமர்ந்து செல்ல வேண்டும். விபத்து, நஷ்டஈடு போன்று மோட்டார் வாகன விதிகளும் முக்கியமானவை. விபத்திற்குள்ளான பைக்கில் பின்னால் லைசென்ஸ் பெற்றவர் யாரும் செல்லவில்லை. பைக்கை ஓட்டியவரிடம் இன்சூரன்ஸ் நிறுவனம் நஷ்டஈட்டை வசூலிக்கலாம்,” என்றார்.
Leave a Reply