சென்னை:இயற்பியல், வேதியியல் பாடங்களை போல, கணித பாடத்திற்கும் செய்முறை தேர்வு மதிப்பெண் வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது” என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.தமிழகத்தில் முதல்முறையாக சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாநில மாதிரி கணித ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான திறப்புவிழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:கடந்த இரு ஆண்டுக்கு முன், அமராவதியில் உள்ள சைனிக் பள்ளிக்கு சென்றபோது, அங்கு, கணித பாடத்தை பல்வேறு உபகரணங்களை கொண்டு மாணவர்களுக்கு விளக்கினர். அதைபார்த்து தான் கணித ஆய்வகம் அமைக்கும் எண்ணம் வந்தது.இயற்பியல், வேதியியல் பாடங்களுக்கு உள்ளதைபோல கணிதப் பாடத்திற்கு ஆய்வுக்கூடம் இல்லை. மற்ற பாடங்களை போல கணிதப் பாடம் எளிதானதாக இருப்பதில்லை.
கணித பாடத்திற்கு பயந்தே, கிராமப்புற மாணவர்கள் மேற்படிப்புகளுக்கு செல்வதில்லை. அதைபோக்கும் வகையில், தேற்றங்கள் உட்பட அனைத்து வகையான கணிதத்தை விளக்குவதற்காக இந்த ஆய்வகம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள அனைத்து பாடத்திட்டத்திற்கும், 81 பன்முக கணித உபகரணங்களும், 276 செயல்முறைகளும் கற்பிக்கப்பட உள்ளன.
இத்திட்டத்தை 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இயற்பியல், வேதியியல் பாடங்களை போல கணித பாடத்திற்கும் செய்முறை தேர்வு மதிப்பெண் வழங்குவதற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.தற்போது, பள்ளிஆசிரியர்களுக்கு மட்டும் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப் படுகிறது. வருங்காலத்தில், ஆசிரியர் பயிற்சி பள்ளிகளிலும் இதுபோன்ற ஆய்வகம் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்கள், மலைகிராமங்கள், தேர்ச்சி குறைவாக உள்ள கல்வி மாவட்டங்கள் என அனைத்து பகுதிகளும் பயன்படும் வகையில், இந்தாண்டு முழுவதும் 200 அரசுப் பள்ளிகளில் கணித ஆய்வகம் செயல்பட உள்ளது.இவ்வாறு தங்கம் தென்னரசு பேசினார்.மேலும் விழா முழுவதுமே, அமைச்சருடன் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துரையாடும் நிகழ்ச்சியாக அமைந்திருந்தது.
Leave a Reply