சென்னை: “கல்லூரியிலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கு கட்டணம் மற்றும் “டிசி’யை திருப்பித் தர மறுக்கும் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்’ என, ஏ.ஐ.சி.டி.இ., எச்சரித்துள்ளது.
அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.,) உறுப்பினர் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்பக் கல்வி வர்த்தகமாக்கப்படுவதை தடுக்க ஏ.ஐ.சி.டி.இ.,க்கு அதிகாரம் உள்ளது. ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் கல்வியாண்டிற்கு நீண்ட நாட்கள் முன்பே மாணவர்களை சேர்ப்பதாகவும், அம்மாணவர்களிடமிருந்து முழு கல்விக் கட்டணத்தையும் வசூலிப்பதாகவும், “டிசி’யை வாங்கி வைத்துக் கொள்வதாகவும் புகார் வந்துள்ளது. குறிப்பிட்ட தேதிக்குள் வகுப்பில் சேராத மாணவர்கள் செலுத்திய முழு கட்டணமும் திருப்பித் தரப்படுவதில்லை என்றும், மாணவர்களை வகுப்பில் சேர வற்புறுத்துவதற்காக ஒரிஜினல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்வதாகவும் புகார்கள் வந்துள்ளன. மற்ற கல்லூரிகளில் சேராமல் தடுக்க, வகுப்பில் சேர்வதற்கான கடைசி நாள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் புகார் வந்துள்ளது.
வகுப்பு துவங்கும் முன், மாணவன் அப்படிப்பிலிருந்து வெளியேறினால், காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவனுக்கு அந்த இடத்தை வழங்கலாம். வெளியேறிய மாணவன் செலுத்திய கட்டணத்தில் ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல், பரிசீலனைக் கட்டணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீத கட்டணத்தை மாணவனிடம் திருப்பித் தர வேண்டும். மாணவர்களின் “டிசி’யை வைத்துக் கொள்ள கல்லூரிகளுக்கு உரிமை இல்லை. வகுப்பு துவங்கிய பின் ஒரு மாணவன் வெளியேறி, அந்த இடம் மற்றொரு மாணவனால் நிரப்பப்பட்டால், மாதக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு மீதமுள்ள தொகையை திருப்பித் தர வேண்டும். ஏ.ஐ.சி.டி.இ.,யின் இந்த உத்தரவை மீறி செயல்படும் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏ.ஐ.சி.டி.இ., தானாகவோ, புகார்களின் அடிப்படையிலோ இந்த நடவடிக்கைகளை எடுக்கும். பாதிக்கப்பட்ட பெற்றோர், மாணவர்கள் ஏ.ஐ.சி.டி.இ., துணை இயக்குனரை (பொது குறைதீர்ப்பு) தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply