கல்வி கட்டணம் ரத்து செய்தும் பயனில்லை: வசூலில் தீவிரம் காட்டும் உதவி பெறும் பள்ளிகள்

posted in: கல்வி | 0

கல்வி கட்டணம் ரத்து செய்த பின்னரும் கூட, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதிக கல்வி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பள்ளிகளில் சிறப்பு கட்டணம் உட்பட கல்வி கட்டணத்தை அரசு ரத்து செய்தது.

இதைத் தொடர்ந்து மாணவர்கள் செலுத்த வேண்டிய கல்வி கட்டணத்தை பள்ளிகளுக்கு அரசே செலுத்தியது. இருந்தாலும் இந்த ஆண்டும் சென்னை, கோவை, மதுரை என பல்வேறு நகரங்களிலும் பள்ளிகள் கட்டண வசூலிப்பில் கண்டிப்புடன் நடந்து கொள்வதாக புகார் எழுந்தன. இதைத் தொடர்ந்து முன்னாள் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் விஜயகுமார், மெட்ரிக்., கல்வி இயக்குனர் மணி மற்றும் உறுப்பினர்கள் அடங்கிய குழுவை அரசு அமைத்துள்ளது. இந்தக்குழு பள்ளிகளில் ஆய்வு நடத்தி கல்வி கட்டணம் வசூல் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான பள்ளிகள் வியாபார நோக்கில்தான் நடக்கின்றன. அரசு உதவி பெறாத மெட்ரிக்., பள்ளிகளில்தான் இந்த நிலை என்றால், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இது தொடர்கிறது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கு தமிழ் வழியென்றால் ஆயிரம் ரூபாய் வரையும், ஆங்கில வழியென்றால் 7 ஆயிரம் ரூபாய் வரையும் வசூலிக்கின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பலவற்றில், ஆங்கில வழிக் கல்விக்கும் சேர்த்தே அரசு நிதி வழங்குவது குறிப்பிடத்தக்கது. இருந்தும் மாணவர்களிடம் கட்டாயமாக கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.

பள்ளிகளில் 6 முதல் 10 வரை அரசு உதவி பெறும் வகுப்புகள் உள்ளன. மேல்நிலை பள்ளிகளில் சில பிரிவுகள் உதவிபெறும் பிரிவாகவும், சில சுயநிதி பிரிவாகவும் செயல்படுகின்றன. ஆனால் சுயநிதி பிரிவாக காட்டி அனைத்து பிரிவுக்கும் கட்டணம் வசூலிப்பது தொடர்கிறது. பெற்றோருக்கு எது அரசு உதவி பெறும் வகுப்பு, பிரிவு என தெரியாது என்பதால் கட்டண வசூலிப்பு எளிதாகிறது. இதனை தவிர்க்க அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுயநிதி வகுப்புகள், பிரிவுகள் எவை எவை என தெளிவாக தகவல் பலகையில் எழுதும்படி அறிவுறுத்த வேண்டும். இப்பள்ளிகள் கட்டண வசூலிப்பில் ஈடுபடுவதை, கண்காணிக்க மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும்.

கட்டணம் வசூலிப்பது குறித்து யாரிடம் தெரிவிக்க வேண்டும் என போன் எண்களை வெளியிட வேண்டும். கட்டண வசூலிக்கும் பள்ளிக்கு மாணவர்களுக்காக அரசு வழங்கும் கல்வி கட்டணம், சிறப்பு கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சுயநிதி பிரிவுகளுக்கு இவ்வளவுதான் கட்டணம் என நிர்ணயம் செய்ய வேண்டும். இவை பற்றியெல்லாம் விஜயகுமார் தலைமையிலான குழு அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *