சென்னை: “மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயர் சூட்டினால் அந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு அளிக்கப்படும்’ என, சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பை வழங்கும் திட்டத்தை துணை முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு துவக்கி வைத்தார்.
இதுவரை 11 ஆயிரத்து 367 குழந்தைகளுக்கு பரிசுப் பை வழங்கப்பட்டுள்ளது. பரிசுப் பையில் குழந்தைகளுக்கான சட்டை, டர்க்கி டவல், சோப் பவுடர் ஆகியவை இருக்கும். சென்னை மாநகராட்சியின் சைதாப்பேட்டை, பெருமாள் பேட்டை ஆகிய இடங்களில் செயல்படும் மருத்துவமனைகள் மட்டும் 24 மணி நேரமும் செயல்பட்டு வந்தது. இப்போது மாநகராட்சியின் 10 மண்டலங்களிலும், மண்டலத் திற்கு ஒரு மருத்துவமனை என்ற வகையில், 10 மருத்துவமனைகள் 24 மணி நேரமும் செயல்படும்.
“ஏசி’ வசதியுடன் கூடிய அறைகளில் ஸ்கேன், இ.சி.ஜி., போன்ற அனைத்து வகை பரிசோதனைகளும் செய்யப்பட்டு வருகிறது. ஒருமுறை மட்டுமே பயன் படுத்தக்கூடிய நவீன பிரசவ சாதனங்கள் அனைத்து மருத்துவமனைகளுக்கும் 7,000 கருவிகள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 7,000 கருவிகள் வாங்கப் படும். மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 24 மணி நேரத்தில் பிறப்பு சான் றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயர் சூட்டி பதிவேடுகளில் பதிவு செய்தால், தங்க மோதிரம் பரிசு அளிக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, நாளை காலை 6 மணி முதல் பிறக்கும் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் பெயர் சூட்டினால் அந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசு அளிக்கப்படும். குழந்தைகளுக்கு சூட்டப் படும் பெயர்களை ஆராய்ந்து, நல்ல தமிழ் பெயர் தானா என்று சான்று கொடுக்க, தமிழறிஞர்கள் கொண்ட குழு அமைக்கப்படும். அந்த குழுவினர் தேர்ந் தெடுக்கும் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை விழா நடத்தி தங்க மோதிரம் பரிசு அளிக்கப்படும்.
முதல் விழாவில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசு அளிப்பார். மாநகராட்சி மருத்துவமனைகளில் தற்போது ஆண்டுக்கு 15 ஆயிரம் குழந்தைகள் பிறக்கின்றன. இனி மாநகராட்சி மருத்துவ மனைகளில் பிறக்கும் குழந்தை களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு மருத்துவமனையிலும் தமிழ் பெயர் கொண்ட புத்தகம் வைக்கப்பட்டு இருக்கும். அதை பெற்றோர் வாங்கி படித்து, அதில் உள்ள பெயர்களை சூட்டலாம்.
மழைக் காலத்திற்கு முன் 10 மண்டலங்களிலும் மழை நீர் வடிகால் கால்வாய்கள் தூர் வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாலைகள் சீரமைக்கும் பணிக்கு 30 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் கொடுக்கப்பட் டுள்ளன. இவ்வாறு மேயர் கூறினார். கமிஷனர் (பொறுப்பு) ஆசிஷ் சட்டர்ஜி, துணை கமிஷனர்கள் ஜோதி நிர்மலா, பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
sakthivel
தமிழ் பெயர் வேண்டும் சு வில் ஆரம்பிக்கும் வார்த்தை வேண்டும்