புதுடில்லி: லோக்சபாவின் முதல் பெண் சபாநாயகராக மீராகுமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரின் பெயரை அனைத்து கட்சி உறுப்பினர்களும் முன்மொழிந்து, வழிமொழிந்தனர். பிரதமர் மன்மோகன்சிங்கும் எதிர்கட்சித் தலைவர் அத்வானியும் புதிய சபாநாயகரை அவருடைய இருக்கைக்கு அழைத்துச் சென்று அமர்த்தினர். பின்னர் அவரை வாழ்த்தி பிரதமரும் மற்ற உறுப்பினர்களும் பேசினர்.
லோக்சபா சபாநாயகர் தேர்தல் இன்று நடந்தது. இதில், மீராகுமார் பெயரை முன்மொழிந்து 13 மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. காங்கிரஸ் சார்பில் சோனியா, பா.ஜ., சார்பில் அத்வானி, தி.மு.க., சார்பில் டி.ஆர்.பாலு, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா, ஐக்கிய ஜனதா தளம் சார்பில் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார் மற்றும் இ.அகமது, பரூக் அப்துல்லா, திருமாவளவன் என 13 தலைவர்கள் கையெழுத்திட்டு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இவர்கள் அனைவருமே மீரா குமாரை முன்மொழிந்து மனு தாக்கல் செய்திருந்ததால் இன்றைய தேர்தலில் மீராகுமார் புதிய சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன்மூலம் நாட்டின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அதிலும் தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண், லோக்சபாவுக்கு சபாநாயகராக தேர்வாகி உள்ளார்.
துணை சபாநாயகர்: துணை சபாநாயகர் பதவிக்கு யாரை நிறுத்துவது என்பது குறித்து பா.ஜ., பார்லிமென்ட் குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியது. பின்,பா.ஜ., பொதுச் செயலர் அருண் ஜெட்லி கூறியதாவது: துணை சபாநாயகர் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஆறு முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவருமான கரியாமுண்டாவை தேர்வு செய்வது என பார்லிமென்ட் குழு ஒருமனதாக முடிவு செய்தது. பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதற்காக மட்டும் அவர் தேர்வு செய்யப்படவில்லை. பார்லிமென்டில் நீண்டகால அனுபவம் உடையவர் என்பதற்காகவும் அவர் துணை சபாநாயகர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார். துணை சநாநாயகர் பொறுப்பேற்றுக் கொண்டார் கரியா முண்டா.
இது குறித்து கரியாமுண்டா கூறியதாவது: துணை சபாநாயகர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, பழங்குடியின சமூகத்தவருக்கு இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும். சபாநாயகர் பதவிக்கு மீரா குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 15வது லோக்சபாவில் படித்தவர்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளனர். எனவே, கூட்டத் தொடர் அமைதியாகவும், எவ்வித பிரச்னையும் இன்றி நடக்கும் என நம்பிக்கை உள்ளது. இவ்வாறு கரியாமுண்டா கூறினார்.
பா.ஜ., சார்பில் துணை சபாநாயகர் பதவிக்கு அறிவிக்கப்பட்டுள்ள கரியாமுண்டா, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர். லோக்சபாவுக்கு ஆறு முறை எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 72 வயதாகிறது. மொரார்ஜி தேசாய், வாஜ்பாய் தலைமையிலான அரசுகளில் அமைச்சராக பதவி வகித்தவர். துணை சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் யாரும் நிறுத்தப்பட மாட்டார்கள் என்பதால், கரியாமுண்டா போட்டியின்றி அந்த பதவிக்கு தேர்வு செய்யப்படவுள்ளார்.
கருணாநிதி பாராட்டு: சபாநாயகராக பொறுப்பேற்க உள்ள மீரா குமாருக்கு முதல்வர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன் முறையாக, ஒரு பெண், லோக்சபா தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்தச் செய்தி நம் செவிகளில் எல்லாம் தேனாகப் பாய்கிறது. அதுவும், அவர் நீண்டகாலம் மத்திய அமைச்சரவையில் பங்கு பெற்று பெரும்பணியாற்றிய ஜெகஜீவன்ராமின் மகள் என்பது, நம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறது. பார்லிமென்டிலும், மாநிலங்களில் சட்டசபைகளிலும் பெண்களுக்கான ஒதுக்கீடு சட்ட வடிவம் பெறப்போகும் இந்த அருமையான காலகட்டத்தில், அதற்கு முன்னோடியாக ஐ.மு.கூ., வழிகாட்டும் தலைவராக சோனியா பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்த நல்ல நேரத்தில், ஒரு பெண் இந்தியாவின் லோக்சபாவுக்கு தலைவராவது, நாம் அனைவரும் பாராட்டி மகிழக் கூடிய நிகழ்வு. இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.
Leave a Reply