சினிமாவில் புகை பிடிக்கும் காட்சி : தடை விதிக்க குலாம் நபி ஆசாத் மறுப்பு

posted in: அரசியல் | 0

புதுடில்லி : “சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகள் மற்றும் மது அருந்தும் காட்சிகளுக்கு தடை விதிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றது’ என, மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.

முந்தைய மத்திய அரசில் சுகாதார அமைச்சராக இருந்த அன்புமணி, சினிமாக்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். குறிப்பாக, ஹீரோக்கள் புகை பிடிப்பது மற்றும் மது அருந்துவது போன்ற காட்சிகளில் நடிப்பதால், அதைப் பார்த்து இளைய சமுதாயத்தினரும் அந்த பழக்கத்திற்கு ஆளாவதாக அவர் கூறினார். சினிமா நடிகர்கள், தயாரிப்பாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இந்நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள மத்திய அரசில் குலாம் நபி ஆசாத் சுகாதார அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.சினிமாக்களில் புகை பிடிக்கும் மற்றும் மது அருந்தும் காட்சிகளுக்கு தடை விதிக்கப்படுமா என்பது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

அவர் அளித்த பேட்டி:எந்த வகையான கொள்கை மற்றும் திட்டங்களை நடைமுறையில் அமல் படுத்த சாத்தியம் உள்ளதோ, அந்த வகையான கொள்கைகளை மட்டுமே பின்பற்ற வேண்டுமென விரும்புகிறேன். சாத்தியமற்ற திட்டங் களை நடைமுறைப்படுத்துவது என்பது கடினமானது. திரைப்படங்களில் கற்பழிப்பு, வன்முறை போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன. புகை பிடிக்கும் காட்சிகளை விட, கற்பழிப்பு, வன்முறை போன்ற காட்சிகள், அதை பார்ப்போரிடையே அதிக தீமையை ஏற்படுத்தக் கூடியதாகும். இது போன்ற காட்சிகளுக்கு தடை விதிக்க முடியாத போது, புகை பிடிக்கும் காட்சிகளுக்கும் தடை விதிக்க முடியாது.

பொது இடங்களில் புகை பிடிப்பது மற்றும் சிகரெட் விளம்பரங்கள் போன்றவற்றை தடை செய்வது அவசியம். கொலை செய்வது, கற்பழிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கும் நடிகர்கள் மீதும், அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் மீதும் ஏன் நடவடிக்கை எடுக்க முடியவில்லை? எனவே, நடைமுறைப்படுத்த முடியாத திட்டங் களை செயல்படுத்த முடியாது. அதற்காக, எந்த ஒரு தரப்பையும் திருப்திபடுத்த வேண்டும் என்பதற்காக இதை நான் கூறவில்லை. இவ்வாறு குலாம் நபி ஆசாத் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *