இந்தோனேஷியன் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்னா நெக்வால் சாம்பியன் பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்தார்.
இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் நடந்து வந்த இந்தப் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில், உலக அளவில் 8 ஆம் இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நெக்வாலும், 3ஆம் நிலை (சீனா) வீராங்கனை வாங்கும் மோதினர்
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 21-12 என்ற கணக்கி்ல் வாங் கைப்பற்றினார். பின்னர் எச்சரிக்கையுடன் ஆடிய சாய்னா,
அடுத்த இரு செட்களையும் கைப்பற்றி (21-18, 21-9) வெற்றி அடைந்தார். இந்த வெற்றியை அவர் 49 நிமிடங்களில் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் சூப்பர்சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் முதல் இந்தியர் என்ற பெருமையை சாய்னா பெற்றார்.
சாய்னாவின் வெற்றியை பாராட்டியுள்ள இந்திய பேட்மிண்டன் சங்கம் அவரை கெளரவிக்கும் வகையில் ரூ.2 லட்சம் ரொக்க பரிசையும் அறிவித்துள்ளது.
வெற்றி குறித்து சாய்னா கூறுகையில், ”இவ்வெற்றியின் மூலம் என்னுடையக் கனவு நிஜமாகிவிட்டது. சூப்பர் சீரிஸ் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்பது லட்சியமாக இருந்தது. ஆனால், இளம்வயதிலேயே வெல்வேன் (19 வயது) என்று நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை” என்று நெகிழ்கிறார் சாய்னா.
Leave a Reply