கர்நாடக மாநிலம் தார்வார் அருகே கெய்காவில் உள்ள அணு மின் நிலையத்தில் பணியாற்றி வந்த சென்னையைச் சேர்ந்த விஞ்ஞானி மகாலிங்கம் திடீரென மாயமானதாக இந்திய இணையத்தளம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அவரை யாரேனும் கடத்தியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
அச்செய்தியில் மேலும்,
சென்னை அண்ணா நகரைச்சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கர்நாடக மாநிலம் தார்வார் அருகில் உள்ள கெய்கா அணு மின் நிலையத்தில் அணு சக்தி விஞ்ஞானியாகப் பணி புரிந்து வந்தார். அங்குள்ள குடியிருப்பில் மனைவி விநாயகசுந்தரியுடன் வாழ்ந்து வந்தார்.
தினமும் காலையில் மகாலிங்கம் ‘வோக்கிங்’ செல்வார். கடந்த திங்கட்கிழமையும் அவர் வழக்கம் போல ‘வோக்கிங்’ போயிருந்தார். ஆனால் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது மனைவி விநாயக சுந்தரி பொலிஸில் புகார் செய்திருக்கின்றார்.
விஞ்ஞானி மகாலிங்கம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. யாரேனும் அவரைக் கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மகாலிங்கம் குறித்து அவரது மனைவியிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது,
“எனது கணவர் மிகவும் அமைதியானவர். யாருடனும் பிரச்சினை செய்ய மாட்டார். குடும்பத்திலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
யாரிடமிருந்தும் இதுவரை அவருக்கு மிரட்டல் எதுவும் வந்ததில்லை” என்று கூறியுள்ளார்.
மகாலிங்கம் முக்கியமான பொறுப்பில் இருந்து வந்த அணு சக்தி விஞ்ஞானி என்பதால் பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மகாலிங்கம் வசித்து வந்த குடியிருப்புக்கு அருகில் அடர்ந்த காடுகள் உள்ளன. கிட்டத்தட்ட 1000 ஏக்கர் பரப்பளவிலான இந்தக் காட்டுக்குள் சிறுத்தைகள் உள்ளன.
இந்தக் காட்டுப் பகுதியில், தேடுதல் வேட்டை நடத்தப் பொலிஸார் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அங்கு பருவ மழை பெய்து வருவதால் காட்டுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. எனவே நிதானித்துச் செல்ல பொலிஸார் திட்டமிட்டுள்ளனர்.
Leave a Reply