டாக்டர்கள் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த அன்புமணி கோரிக்கை

posted in: மற்றவை | 0

27-anbumani-200சென்னை: டாக்டர்களின் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக தமிழக அரசு டாக்டர்களுக்கும் சலுகைகளை வழங்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது…

சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மேம்பாட்டில் தமிழகம் இந்தியாவின் சிறந்த மாநிலங்களில் ஒன்றாக விளங்குகின்றது. மத்திய அரசில் நான் நல்வாழ்வுத்துறை மந்திரியாக பொறுப்பேற்று செயல்பட்ட காலக்கட்டத்தில், தொடங்கப்பட்ட தேசிய ஊரக சுகாதார திட்டம் இதற்கு ஒரு காரணம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

தமிழகத்தில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் மேம்பட்டு, பல்வேறு நல்வாழ்வு குறியீடுகளில் தமிழகம் முன்னணி மாநிலமாக விளங்குவதற்கு இன்னொரு முக்கிய காரணம் மருத்துவ துறையில் பணியாற்றுகின்ற நமது டாக்டர்கள் என்பது உண்மை.

இதனை அங்கீகரிக்கும் வகையில் தான் மாநில அரசு டாக்டர்களுக்கு மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் குறித்த மத்திய கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

அந்த வகையில், தமிழக அரசு டாக்டர்களுக்கு, மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என்று மத்திய அரசு அதன் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு அறிவித்த உடனேயே நீங்கள் அறிவிப்பு செய்திருக்கிறீர்கள். நானும் ஒரு டாக்டர் என்ற முறையில் இதற்காக, உங்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மத்திய அரசு டாக்டர்களுக்கு சமமான ஊதியத்தை மாநில அரசு டாக்டர்களுக்கு தருவதாக சொன்னாலும், நடைமுறையில் இந்த இருவருக்கும் இடையிலான ஊதிய விகிதத்தில், பெருமளவில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்பது உண்மை. ரூ.20 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் வரையில் மத்திய அரசு டாக்டர்கள் நமது மாநில அரசு டாக்டர்களைவிட அதிக ஊதியம் பெறுகிறார்கள்.

தனியார் மருத்துவமனை நடத்தி, மருத்துவம் பார்க்காமல் இருப்பதற்காக தரப்படுகிற படி மத்திய அரசு டாக்டர்களை பொறுத்தமட்டில் அடிப்படை ஊதியத்தில் 35 சதவீதமாக இருக்கிறது.

இந்தப் படி அடிப்படை ஊதியத்தில் இணைக்கப்பட்டு விடுவதால், அதற்கேற்றார் போல, ஊதியத்தில் அனைத்து கூறுகளும் உயர்ந்து ஊதிய வேறுபாடு மிக அதிகமாக இருக்கிறது.

அத்துடன், பயணப் படி, செய்தித்தாள் படி, ஆபத்தான பணி என்பதற்கான படி, சிற்றூர்ப்புற சேவைக்கான படி, மருத்துவக் கருத்தரங்கம் செல்ல படி, அவசர அழைப்புக்கான படி, இரவு நேரப் பணிக்கான படி, செயல் அலுவலர்களுக்கான படி என பல்வேறு சிறப்பு ஊதியம் மத்திய அரசு டாக்டர்களுக்கு இருக்கிறது. இவை அனைத்தும் தமிழக அரசு டாக்டர்களுக்கு இல்லை.

முதுகலை படிப்புக்கான சிறப்பு படி, ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கான சிறப்பு படி, பிரேத பரிசோதனைக்கான படி, மலைப்பிரதேச பணிக்கான படி, சீருடைப் படி போன்றவை மத்திய அரசு டாக்டர்களைவிட நமது மாநில டாக்டர்களுக்கு மிகக் குறைவாகவே வழங்கப்படுகிறது.

அரசு பணியாளர்களிடம் எப்போதும், தனி அன்பு காட்டும் நீங்கள் இந்த வேறுபாடுகளை எல்லாம் களைந்து, சிறந்த முறையில் பணியாற்றுகின்ற நமது மாநில அரசு டாக்டர்களுக்கு உண்மையிலேயே மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான ஊதியம் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அத்துடன் மத்திய அரசு டாக்டர்களுக்கு காலமுறை பதவி உயர்வு தரப்படுகிறது. நமது மாநிலத்தில், அரசு டாக்டர்களுக்கு அத்தகைய பதவி உயர்வு தரப்படுவதில்லை. இதனால், மன வருத்தமும், பணியில் மனநிறைவும் இல்லாத நிலை ஏற்படுகிறது. இந்த குறைபாடுகளும், நிவர்த்தி செய்யப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்.

டாக்டர்களை பொறுத்தவரையில் வயது உயர உயர அவர்கள் அனுபவம் மிக்கவர்களாகவும், திறமை மிக்கவர்களாகவும் மாறுகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இதனை கருத்தில் கொண்டு தான் மத்திய அரசு டாக்டர்களுக்கு ஓய்வு பெறும் வயது 65 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், நமது மாநிலத்தில் டாக்டர்களின் ஓய்வு பெறும் வயது 58 என்ற அளவில் இருக்கிறது. இதனால், அனுபவம்மிக்க, திறமையான டாக்டர்களின் சேவையை அவர்களது வாழ்வில் சிறந்த நேரத்தில் நாம் இழந்து வருகிறோம். இதைக் கருத்தில் கொண்டு டாக்டர்களின் சிறப்பான சேவை மக்களுக்கு கிடைக்கும் வகையில் அவர்களது ஓய்வு பெறும் வயதை மத்திய அரசைப்போல 65 ஆக உயர்த்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக மக்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டு விடுக்கப்பட்டுள்ள இந்த வேண்டுகோள் மீது நல்ல முடிவுகளை மேற்கொள்வீர்கள் என்றும் இப்போது, நடைபெறுகிற சட்டப்பேரவை கூட்டத் தொடரிலேயே அதற்கான அறிவிப்புகளை வெளியிடுவீர்கள் என்றும் நம்பிக்கையோடு இந்த கடிதத்தை எழுதுகிறேன் என்று கூறியுள்ளார் அன்புமணி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *