கடந்த ஆண்டு தொடக்கத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மிகவும் அதிகரித்து வந்தது. ஜூலை மாதம் ஒரு பீப்பாய் எண்ணை 142 அமெரிக்க டாலராக அதிகரித்தது. இதனால் கடந்த ஆண்டு பல முறை பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தப்பட்டது.
ஆனால் சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் கச்சா எண்ணை விலை திடீர் வீழ்ச்சி அடைந்தது. கடந்த டிசம்பர் மாதம் 32.40 டாலர் அளவுக்கு மிகவும் குறைந்தது.
இதனால் மத்திய அரசு 2 முறை பெட்ரோல், டீசல் விலையை குறைத்தது. சமையல் கியாஸ் விலையும் குறைக்கப்பட்டது. இதன்படி பெட்ரோல் 1 லிட்டருக்கு 10 ரூபாயும், டீசல் 6 ரூபாயும் குறைக்கப்பட்டன. இப்போது கடந்த 4 மாதங்களாக கச்சா எண்ணை விலை ஏறுமுகமாக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 15 டாலர் வரை அதிகரித்து உள்ளது. இப்போது ஒரு பேரல் கச்சா எண்ணை 70 டாலராக உள்ளது.
இதனால் இந்திய எண்ணை நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றன. எண்ணை நிறுவனங்களுக்கு ஒரு லிட்டர் டீசலுக்கு 2 ரூபாய் 96 காசும், பெட்ரோலுக்கு 6 ரூபாய் 8 காசும், மண்எண்ணைக்கு 12 ரூபாய் 65 காசும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு 69 ரூபாய் 49 காசும் இழப்பும் ஏற்பட்டு வருகிறது.
மொத்த பெட்ரோலிய பொருள் உபயோகத்தில், டீசலின் பங்கு 39 சதவீதமாகும். எனவே டீசல் மூலம் தான் அதிக இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இதன்படி எண்ணை நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.135 கோடி இழப்பு ஏற்படுகிறது. இந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ.38 ஆயிரத்து 700 கோடி நஷ்டம் ஏற்படும் என்று கணக்கிடப்பட்டு உள்ளது.
இவ்வளவு பெரிய நஷ்டத்தை தாங்கி கொள்ள முடியாமல் எண்ணை நிறுவனங்கள் தவிக்கின்றன. எனவே பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக உயர்த்தும் படி எண்ணை நிறுவனங்கள் மத்திய அரசிடம் வற்புறுத்தி வருகின்றன. மத்திய பெட்ரோலிய மந்திரி முரளி தியோரா இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சமீபத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருப்பதாக கூறினார்.
எனவே எந்த நேரத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு அறிவிப்பு வெளிவரலாம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோலுக்கு 6 ரூபாயும், டீசலுக்கு 3 ரூபாயும் உயர்த்தப்பட இருப்பதாக எண்ணை நிறுவன அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.
கச்சா எண்ணை உயர்வால் தனியார் பெட்ரோல் நிறுவனமான எஸ்ஸார் ஆயில் நிறுவனம் டீசல் லிட்டருக்கு 1 ரூபாய் முதல் 2 ரூபாயும், பெட்ரோலுக்கு 1 ரூபாய் முதல் ரூ.2.50 வரையிலும் உயர்த்தி உள்ளது.
Leave a Reply