தங்கமான சென்னை மக்கள்!

posted in: மற்றவை | 0

சாலையோரம் கொட்டிக்கிடந்த செம்பு துகள்களை தங்கம் என்றெண்ணி, ஆவலாய் சேகரித்த சென்னை மக்கள் ஏமாற்றமடைந்தனர். இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளானது.

நேற்று காலை 10 மணியளவில், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை- வானகரத்தில் இருந்து வேலப்பன் சாவடி வரையிலான சாலைகளின் ஓரமாக, தங்க துகள்கள் சிதறிக் கிடப்பதாக பொதுமக்களிடம் தகவல் பரவியது.

அப்பகுதி மக்கள் சாலைகளில் குவிந்தனர். தேடிய அனைவருக்கும் ஒன்றிரண்டு குண்டூசி அளவில் துண்டுகள் கிடைத்தன. உடனே, ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு தகவல் கொடுத்து, அப்பகுதிக்கு வழைத்தனர். இதனால், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் சாலையோரங்களில் குவிந்தனர். சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் நின்று வேடிக்கை பார்த்தனர். இதனால், அப்பகுதி போக்குவரத்து நெருக்கடிக்குள்ளானது. தகவலறிந்த திருவேற்காடு மற்றும் மதுரவாயல் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களை அப்புறப்படுத்தினர் போக்குவரத்தை சரிசெய்தனர். அந்த இடத்தை காலி செய்தது போல தெரிந்தாலும் பொதுமக்கள் நேற்று மாலை வரையில் தங்கம் என்றெண்ணி, செம்பு துகள்ளை சேகரித்தபடியே இருந்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ”அம்பத்தூர் தொழிற்பேட்டையில், செம்பு உருக்காலை நிறுவனங்கள் உள்ளன. அதற்கு வேண்டிய செம்பு துகள்களை லாரிகளின் மூலம் எடுத்து செல்வர். அப்படி, ஒரு லாரியில் வைக்கப்பட்டிருந்த மூட்டை கிழிந்து இருக்கிறது. வழியெங்கும் அந்த லாரி செம்பு துகள்களை கொட்டி சென்றுள்ளது. அதைதான் பொதுமக்கள் தங்கம் என்றெண்ணி கண்டெடுத்துள்ளனர்’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *