சென்னை: தமிழக போக்குவரத்துத் துறை ஆகஸ்ட் 1ம் தேதி முதல் சாலைப் பாதுகாப்பு வரியை வசூலிக்கவுள்ளது.
சாலை விபத்துக்களில் உயிரிழப்போருக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்குவதற்காக இந்த வரி விதிப்பு அமல்படுத்தப்படவுள்ளது.
தற்போது சாலை விபத்துக்களில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் இழப்பீடாக, ரூ. 10,000ம் முதல் ரூ. 25,000 வரை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், இரு சக்கர வாகனங்களுக்கு சாலை பாதுகாப்பு வரி ரூ. 250 ஆக இருக்கும். இலகு ரக வாகனங்களுக்கு ரூ. 1,500ம், கனரக வாகனங்களுக்கு ரூ. 2,000மும் பாதுகாப்பு வரியாக வசூலிக்கப்படும்.
தமிழகத்தில் தினசரி சராசரியாக 3,815 வாகனங்கள் பதிவாகின்றன. சென்னையில் மட்டும் 1,900 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இவற்றில் 70 சதவீதம் இரு சக்கர வாகனங்களாகும்.
தமிழக அரசு புதிதாக 3,500 பேருந்துகளை வாங்கவுள்ளது. தமிழக அரசின் 7 போக்குவரத்து கழகங்களும் இந்த பேருந்துகளை வாங்கும்.
மத்திய அரசு நிதி மற்றும் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை நிதிக் கழகத்தின் நிதியுதவியுடன் புதிய பேருந்துகள் வாங்கப்படும்.
தமிழக அரசின் ஏழு போக்குவரத்துக் கழகங்களும் கடந்த நிதியாண்டில் ரூ. 710.14 கோடி நஷ்டத்தை சந்தித்தன. ஆனால் ஒரு ஆண்டுக்கு முன்பு இது ரூ. 379.57 கோடியாக மட்டுமே இருந்தது. என்றார் நேரு.
Leave a Reply