சென்னை: தமிழகத்தில் 1000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரமாண்டமான சிறப்பு ஐடி பொருளாதார மண்டலத்தை நிர்மானிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் திட்ட இயக்குநர் வில்லிங்டன் கூறுகையில்,ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த சிறப்பு ஐடி பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும்.
இந்த மண்டலத்தில் 1 லட்சம் கோடி அளவிலான முதலீடுகளைக் கவர முடியும். இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தை ஐடி முதலீட்டு பிராந்தியமாக நாங்கள் அறிவிக்கவுள்ளோம்.
இதுதொடர்பான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது. இரண்டு கட்டங்களாக இந்தத் திட்டம் நிறைவேற்றப்படும். இந்த ஆண்டு இறுதிக்குள் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அதன் பின்னர் முதல் கட்டப் பணிகள் தொடங்கும்.
சென்னை புறநகரின் வட பகுதியிலிருந்து காஞ்சிபுரம் வரையிலும், செங்கல்பட்டிலிருந்து கிழக்குக் கடற்கரை வரையிலும் இந்த ஐடி முதலீட்டு பிராந்தியம் அமையும்.
முதல் கட்டப் பணிகள் ஐந்து ஆண்டுகளில் முடியும். அடுத்த கட்டப் பணிகள் 15 முதல் 20 ஆண்டுகளில் முடிவடையும்.
இந்த ஒட்டுமொத்த ஐடி முதலீட்டு பிராந்தியமும், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தைப் போல ஒரு பிரத்யேக வளர்ச்சிக் குழுமத்தால் நிர்வகிக்கப்படும் என்றார் அவர்.
Leave a Reply