காவிரி பாசனப் பகுதியில் உள்ள அணைக்கட்டுகளில் தண்ணீர் இருப்பு குறைந்து வருவதால் தற்சமயம் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா தெரிவித்தார்.
காவிரி நீர்ப்பாசன கழகம், கர்நாடக நீர்ப்பாசன கழக அதிகாரிகளுடன் முதல்வர் எடியூரப்பா வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பிறகு நிருபர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
ஜூன் மாதம் பெய்ய வேண்டிய மழை இன்னும் பெய்யவில்லை. இதனால் காவிரி பாசனப் பகுதியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைக்கட்டுகளில் நாளுக்கு நாள் நீர் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. இதனால் குடிநீர்ப் பிரச்னையை சமாளிப்பதே கஷ்டமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தற்போது காவிரியில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலையில் கர்நாடகம் இல்லை. நல்ல மழை பெய்து அணைக்கட்டுகள் நிரம்பும் நிலை ஏற்படும்போது தமிழகத்துக்கு எப்போதும்போல் தண்ணீர் திறந்துவிடப்படும்.
இந்தப் பிரச்னையில் கர்நாடகத்தின் நலனை அரசு ஒருபோதும் விட்டுக் கொடுக்காது. அதுபோன்ற ஒரு முடிவை அரசு எடுக்காது. அணைக்கட்டுகளில் தண்ணீர் இல்லை; இதனால் தமிழகத்துக்குத் தண்ணீர் விடவில்லை. இதுதான் இப்போதுள்ள பிரச்னை என்றார் அவர்.
காவிரியில் தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக அரசிடமிருந்து கர்நாடகத்துக்கு கடிதம் ஏதும் வரவில்லை என்று அக்கூட்டத்தில் பங்கு கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடும் நிலையில் கர்நாடகம் இல்லை. காவிரியில் ஜூன் மாதம் தண்ணீர் திறந்துவிட வேண்டிய அவசியமும் இல்லை. ஜூலையில் நல்ல மழை பெய்தால் குறிப்பிட்டபடி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என்றார்.
Leave a Reply