“தமிழக உரத்தொழிற்சாலைகளில் நாப்தா மூலம் உரங்களைத் தயாரிப்பதற்கு பதிலாக, இயற் கை எரிவாயு மூலம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் பேசி, கேஜி பேசினில் கிடைக்கும் எரிவாயுவை தமிழகத்திற்கும் வழங்க வேண்டுமென கேட்க இருக்கிறேன்’ என்று அமைச்சர் அழகிரி தெரிவித்தார்.
மத்தியில் மன்மோகன் சிங் அரசு இரண்டாம் முறையாக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, 100 நாள் செயல் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில், மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் 100 நாட்கள் செயல் திட்டத்தை, அமைச்சர் அழகிரி நேற்று டில்லியில் அறிவித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: மூடப்பட்டுள்ள ஹிந்துஸ் தான் பெர்டிலைசர்ஸ் மற்றும் பெர்டிலைசர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களைத் திறந்து இயங்க வைக்க, ஆகஸ்ட் 30ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். உர வினியோகத்தைக் கண்காணிக்கும் திட்டம் மேம்படுத்தப்படும். யூரியா, பொட்டாஷ், பாஸ்பேட் உரங்கள் உற்பத்தியில் முதலீடுகள் அமைய புதிய கொள்கைகள் வகுக்கப்படும். பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை மையம் கவுகாத்தியில் துவங்கப்படும். சாதாரண குடிமக்களுக்கு ஏற்ற விலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க ஏதுவாக கொள்கை முடிவுகளும், செயல் திட்டங்களும் வகுக்கப்படும். கடுமையான நோய்களுக்கு தேவையான முக்கிய மருந்துகள் அனைத்தும் மக்களுக்கு தடையின்றி கிடைக்க ஏதுவாக, புதிய மருந்து கொள்கை உருவாக்கப்படும். தேசிய பார்மாசூட்டிகல் படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் ஆறு இடங்களில் துவங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தைப் பொறுத்தவரை உரத்தட்டுப்பாடு எக்காரணம் கொண்டும் ஏற்படாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. போதுமான அளவு உரம் கையிருப்பு உள்ளது. இந்த ஜூன் மாதம் மட்டும் 80 ஆயிரம் டன் அளவுக்கு உரம் தேவையாக உள்ளது. கையிருப்பாக 65 ஆயிரம் டன் உள்ளது. தவிர, தூத்துக்குடி மற்றும் சென்னை துறைமுகங்களில் இரண்டு உரக் கப்பல்கள் நிற் கின்றன. இவை, உரிய இடங்களுக்கு விரைவில் அனுப்பப்படும். எனவே, உரத் தட்டுப்பாடு குறித்து விவசாயிகள் கவலைப்படத் தேவையில்லை. கடந்த மே மாதம் 60 ஆயிரம் டன் வரை உரம் தேவைப் பட்டது. ஆனால், 62 ஆயிரம் டன் வரை கையிருப்பு இருந்தது. ஏப்ரல் மாதத்தில் 55 ஆயிரம் டன் தேவைப்பட்ட போதிலும், கையிருப்பாக 65 ஆயிரம் டன் வரை இருந்தது. எனவே, தற்போதும் போதுமான அளவு உரம் கையிருப்பு இருப்பதால், வரும் மாதங்களிலும் உரத்தட்டுப்பாடு என்பது தமிழகத்திற்கு வரவே வராது. இவ்வாறு அழகிரி கூறினார்.
பின்னர், தமிழக உரத்தொழிற்சாலைகளுக்கு மானியம் அறிவித்து இருந்த போதிலும், அங்கு நாப்தாவிற்கு பதிலாக எரிவாயு பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அமைச்சர் அழகிரி, “உரத்தொழிற்சாலைகள் மீண்டும் பொலிவு பெற வேண்டுமென்பதற்காக முதல் நடவடிக்கையாக மானியம் வழங்கப்பட்டுள்ளது. நாப்தாவின் விலை அதிகம். இதனால், உற்பத்தி செலவு கூடுதலாகி நிதி நிலைமையை சிக்கலாக்கி விடுகிறது. நாப்தாவைக் காட்டிலும் விலை மிகவும் குறைவானது இயற்கை எரிவாயு. இதனால், எரிவாயுவை தமிழகத்துக்கு கொண்டு வருவது குறித்து யோசித்து வருகிறேன். ஆந்திராவில் உள்ள கேஜி பேசினில் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எரிவாயு தயாரிப்பு நிலையம் உள்ளது. விரைவில் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேசி, தமிழகத்துக்கும் எரிவாயு வழங்கும்படி கேட்க இருக்கிறேன்’ என்று பதிலளித்தார்.
Leave a Reply