தமிழகம் நோக்கி படையெடுக்கும் தொழில் நிறுவனங்கள்!

சென்னை: ஒரு சின்ன சறுக்கலுக்குப் பின் மீண்டும் இந்தியத் தொழில் துறையில் க்ரீன் சிக்னல் தெரியத் துவங்கியுள்ளது.

சர்வதேச பொருளாதார மந்தத்தால் பல நாடுகளும் தங்கள் முதலீட்டை திரும்பப் பெற்றுக் கொண்டிருந்த நிலையில், இந்திய தொழில் துறையும் தடுமாற்றத்துக்கு உள்ளானது. பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் புதிய திட்டங்களைத் தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.

ஆனால் இந்திய மார்க்கெட்டின் உறுதித் தன்மை மற்றும் விரிவடையும் இயல்பைப் பார்த்து அசந்துபோன அந்நிய முதலீட்டாளர்கள் மீண்டும் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.

குறிப்பாக தமிழகத்தைக் குறிவைத்துள்ளனர் இந்த முதலீட்டாளர்கள்.

செய்யாறு புதிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் செயின்ட கோபெய்ன், டெல்பி டிவிஎஸ், போர்டு இந்தியா போன்ற நிறுவனங்கள் தங்களது புதிய தொழிற்சாலைகள் மற்றும் விரிவாக்க யூனிட்டுகளைத் துவங்க அடுத்த வாரம் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளன.

தைவானின் பெங் டாய் குழுமம் கூட இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய தொழிற்சாலையைத் திறக்கிறது. இதற்கான ஒப்பந்தமும் அடுத்த வாரம் தமிழக அரசுடன் கையெழுத்தாகிறது. செய்யாறு மாங்கால் கூட்டுரோடு அருகே இந்த தொழிற்சாலைக்காக 275 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 5000 தொழிலாளர்களுடன் பணியைத் துவங்கவிருக்கும் பெங் டாய், அதற்கு அடுத்த ஆண்டே 15000 தொழிலாளர்களுடன் இயங்கப்போகிறது.

இந்த நிறுவனங்களைத் தவிர மேலும் 5 நிறுவனங்கள் வரும் வாரங்களில் தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்யவிருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *