தமிழீழத்தை நோக்கிய பயணத்திற்கு மலேசிய தமிழர்கள் எப்பொழுதும் ஆதரவாகவே இருப்பார்கள்: பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி

posted in: மற்றவை | 0

ramasamyதமிழீழத்தை நோக்கிய தூரநோக்குப் பயணத்திற்கு மலேசியத் தமிழர்கள் எப்பொழுதும் ஆதரவாகவே இருப்பார்கள் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதாக மலேசியா நாட்டின் பினாங்கு மாநில துணை முதல்வரான பேராசிரியர் இராமசாமி கூறியுள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருப்பதாவது:-

உலகமெங்கும் பரவிக்கிடக்கும் தமிழர்களின் ஒரே கனவு கண்டிப்பாக தமிழீழத்தை நோக்கியதாகவே இருக்கும் என்பதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது.தற்போதைய சூழ்நிலையில் ஆயுதப்போராட்டம் தணிந்த நிலையில் இருப்பது போன்ற ஓர் தோற்றம் ஏற்பட்டுள்ளதால் தமிழீழத்தை நோக்கிய பயணம் மழுங்கி விட்டதென்ற எண்ணம் ஏற்படக்கூடாது.

தமிழினத்தின் தானைத்தலைவன் பிரபாகரனின் கனவு இலட்சியம் எல்லாம் எப்பொழுதுமே தமிழீழத்தை நோக்கியதாகவே இருந்துள்ளது. இனியும் அது அப்படியே தொடரும். போராட்டத்தின் வழிமுறைகள் மாறலாம். போராட்டம் ஓயாது என்பதை உலகத்தமிழர்கள் உணர்ந்தாக வேண்டும்.

தற்போதைய கால சூழ்நிலையில் உலகமெங்கும் பரவிக்கிடக்கும் தமிழின பற்றாளர்களின் ஆதரவோடு வெளிநாட்டிலிருந்து இயங்கும் தமிழீழ அரசாங்க கட்டமைப்பை உருவாக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கட்டமைப்பின் உருவாக்கத்தில் உலகின் பல பகுதிகளிலும் பரவியிருக்கும் புலம்பெயர் தமிழர்களின் பங்களிப்பானது இன்றியமையாததாக அமையவேண்டும்.

தமிழீழ தேசத்தை நோக்கிய பயணமானது அகிம்சைப் போராட்டத்தில் தொடங்கி ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது. ஆயுதப் போராட்டத்திலிருந்து தற்பொழுது இராஜதந்திர நகர்வுகளை நோக்கிய போராட்டமாக மாறுதல் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுப்பதால் தமிழீழ தாயகத்தை நோக்கிய புலிகளின் ஆயுதப் போராட்டம் ஓய்ந்து விட்டது என்றும், தமிழர்களின் சுயநிர்ணய கோரிக்கைகள் அடக்கப்பட்டு விட்டன என்பன போன்ற தவறான கண்ணோட்டங்கள் ஏற்பட்டுவிடக்கூடாது.

தமிழீழ தேசத்தை நோக்கிய பயணம் எப்பொழுதும் இல்லாத வண்ணம் ஒரு புதிய பரிணாமத்தில் பயணிக்கப் போகின்றது. ஆயுதப் போராட்டமும் அமைதிப்போராட்டமும் இணைந்த இராஜதந்திர நகர்வுகள் நிறைந்த ஒரு புதிய போராட்ட பரிணாமம் தலையெடுக்கப் போகின்றது.

தற்போதுள்ள சூழ்நிலையில் தமிழீழ சுதந்திரப் போராட்டம் உலக அங்கீகாரத்தை நோக்கிச் செயல்பட வேண்டியது மிக அவசியம். உலக அங்கீகாரத்தை நோக்கி நாம் செல்லும் இந்தக் காலகட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் தமிழீழ அரசாங்கத்திற்கு ஒரு வலுவான தலைமைத்துவத்தை ஏற்படுத்தி காரியங்களை செவ்வனே செயற்படுத்தி நமது தலைவனின் இலட்சியக்கனவை நனவாக்குவோம்.

கடந்த காலங்களில் உலகின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்ட சுதந்திரப் போராட்டங்களில் வெளிநாட்டிலிருந்து இயங்கும் அரசாங்கக் கட்டமைப்பு மிக முக்கிய பங்காற்றியுள்ளதை அந்தந்தப் போராட்டங்களை உற்றுநோக்கினால் காணமுடியும்.

ஆச்சே விடுதலைப் போராட்ட இயக்கமானது சுவீடனிலிருந்து தனது இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுத்ததை இவ்வேளையில் மிகச்சிறந்த உதாரணமாகக் கூறலாம். அதேபோன்ற ஓர் கட்டமைப்பை ஏற்படுத்தித்தான கிழக்கு திமோர் சுதந்திரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அனைத்துலக அங்கீகாரத்தைப் பெறுவதில் இது போன்ற வெளிநாட்டிலிருந்து இயங்கும் அரசாங்கக் கட்டமைப்புகள் மிக முக்கிய பங்காற்றியுள்ளன. திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா முன்னெடுத்த திபெத் அங்கீகாரப் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது அனைவரும் அறிந்த உண்மை.

தற்போதைய காலகட்டத்திலும் தமிழீழ சுதந்திரப் போராட்டத்தை நோக்கிய பயணம் தமிழர்களுக்குச் சாதகமாகவே உள்ளது. இனிவரும் காலகட்டங்களில் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுக்கப்போகும் போராட்டத்தின் வழிமுறைகள்தான் தமிழீழ தேசிய கனவை நனவாக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

வெளிநாட்டிலிருந்து இயங்கும் தமிழீழ அரசாங்க கட்டமைப்பின்மூலம் உலகநாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி அரசியல் பேச்சுவார்த்தைகளின் மூலமும் மனித உரிமை விவாதங்களினூடாகவும் தமிழீழ தேசம் அமைய வேண்டிய அவசியத்தை உலக நாடுகளுக்கு எடுத்துரைப்பதில் மிக முக்கிய பங்காற்றமுடியும்.

கடந்த காலங்களில் ஒரு சுதந்திர தேசத்திற்கான அனைத்து அத்தியாவசியங்களையும் உள்ளடக்கி தலைவர் பிரபாகரனின் தலைமையின் கீழ் கிளிநொச்சியை மையமாகக்கொண்ட தமிழீழ தேசம் எவ்வாறு சிறப்பாகச் செயற்பட்டது என்பதை உலகத் தமிழர்கள் அறிவார்கள். ஆகவே தனித்தேசத்தை கட்டியெழுப்பி ஆளும் தகுதிகள் அனைத்தும் தமிழர்களுக்கு உள்ளது என்பதை தலைவர் நிரூபித்துள்ளார்.

இலங்கையின் வடகிழக்கில் வாழும் தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளை முன்னிறுத்தி தங்களின் பிறந்த மண்ணில் அனைத்து அடிப்படை உரிமைகளையும் பெற்று ஈழத் தமிழர்கள் கெளரவமான வாழ்க்கை வாழ தமிழீழ தேசம் மட்டுமே தீர்வாக அமையும்.

இலங்கையின் வடகிழக்கில் தமிழீழம் அமைக்க வெளிநாட்டிலிருந்து இயங்கும் தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்படவேண்டியது மிக அவசியம். அவ்வாறு அமைக்கப்படும் தமிழீழ அரசாங்கத்திற்கு அனைத்து விதமான ஒத்துழைப்புக்களையும் ஆதரவுகளையும் வழங்க வேண்டிய கடப்பாடு உலகத் தமிழர்களுக்கே உள்ளது.

கண்டிப்பாக மலேசியாத் தமிழர்கள் தமிழீழ தேசியத்திற்கான போராட்டத்திற்கு எப்பொழுதும் பக்கபலமாக இருப்பார்கள் என்பதை இவ்வேளையில் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேராசிரியர் இராமசாமி
பினாங்கு மாநில துணை முதல்வர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *