தவறு செய்யும் சிறை அதிகாரிகள், அதே சிறையில் கைதியாகும் சூழ்நிலை ஏற்படும். சட்டத்திற்கு பயந்து நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என சிறைத்துறை, புது, கூடுதல் டி.ஜி.பி., ஷியாம் சுந்தர் கூறினார்.
சிறைத்துறை, புது, கூடுதல் டி.ஜி.பி., யாக நேற்று காலை பொறுப்பேற்ற ஷியாம் சுந்தர் நிருபர்களிடம் கூறியதாவது:
”பாதுகாப்பான இடமாக சிறை இருக்க வேண்டும். தேவையற்ற பொருட்கள், தேவையற்ற மனிதர்களை சிறைக்குள் அனுமதிக்கக் கூடாது. சிறைக்குள் செல்லும் போதும், வெளியே வரும் போதும் சோதனையிட வேண்டும். இதில், கடுமையான நடைமுறையைப் பின்பற்றினால் பாதி பிரச்னை தீர்ந்து விடும். சோதனையிட மின் இயந்திரங்களை பொருத்த வேண்டும். மின் சப்ளை இல்லாத போது, பயனற்றதாகி விடுகிறது. இதற்கு சிறைக் காவலர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.
சிறைக்குள் இருக்கும் பொருட்களை ஆயுதமாக்கி விடுகின்றனர். கொலை செய்ய வேண்டுமென ஒரு கைதி முடிவு செய்துவிட்டால், இரு கைகள் மட்டுமே போதுமானது. சாப்பிடும் தட்டை உடைத்து, கூர்மையாக்கி கத்தியாக்கி விடுகின்றனர். அதற்காக, சாப்பிட தட்டு கொடுக்காமல் இருக்க முடியாது. இப்பிரச்னைகளைத் தீர்க்க, அவ்வப்போது சிறைக்குள் திடீர் சோதனைகளை நடத்த வேண்டும். சிறைக்குள் அத்துமீறும் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளை தண்டிக்க சட்டம் இருக்கிறது. அதை நடைமுறைப்படுத்துவதில் தான் வேறுபாடு உள்ளது. சிறைக்குள் நடக்கும், நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை உளவுப்பிரிவினர் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். உளவுப்பிரிவினர் கோட்டை விட்டாலோ, தவறு செய்யும் அதிகாரிகளுடன் கை கோர்த்துக் கொண்டாலோ, உண்மை தகவல் வெளியில் வராது. சிறை அதிகாரிகள் சட்டத்தை மதித்து, நியாயப்படி நடந்து கொள்ள வேண்டும்.
ஆறாவது சம்பளக் கமிஷனால், கை நிறைய சம்பளம் கிடைக்கிறது. அதுவே போதும் என ஏற்றுக்கொள்ள வேண்டும். கைதிகள் தரும் பணத்திற்கு ஆசைப்பட்டு, தவறுகள் செய்யக்கூடாது. சிறையில் கைதிகளுக்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள், அதே சிறையில் கைதியாக மாறும் சூழ்நிலை ஏற்படக்கூடும். இந்த நிலைமை ஏற்படாதவாறு சிறை அதிகாரிகள் பணியாற்ற வேண்டும். தவறு செய்யும் சிறைத் துறையினர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
Leave a Reply