சென்னை: தேசியக் கொடியை எரிக்க முயன்ற தமிழ் தேசிய விடுதலை இயக்கம், தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்தவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வித்தியாசமான நிபந்தனையுடன் ஜாமீன் அளித்தது.
இந்த அமைப்புகளின் சார்பில், மே 24ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அப்போது சிலர் தேசியக் கொடியை எரிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் தலையிட்டு தமிழரசன் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனர்.
இவர்கள் எட்டு பேருக்கும் உள்ளூர் கோர்ட்டுகளில் ஜாமீன் கிடைக்கவில்லை. இதையடுத்து உயர்நீதிமன்றத்தை அணுகினர்.
வழக்கை நீதிபதி ரகுபதி விசாரித்தார். பின்னர் வித்தியாசமான நிபந்தனையுடன் அவர்களுக்கு ஜாமீன் அளித்தார்.
அந்த வித்தியாசமான நிபந்தனை என்னவென்றால், எட்டு பேரும் ஒரு மாதத்திற்கு தங்களது வீடுகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை தேசிய கொடியை ஏற்ற வேண்டும்.
ஒரு வாரத்திற்கு, தினமும் 3 மணி நேரம் அனாதை இல்லத்திற்கு சென்று பொது சேவை செய்ய வேண்டும் என்பதே அந்த நிபந்தனை.
கொடியை எரிக்க முயன்றவர்களுக்கு அந்தக் கொடியை ஏற்றி வர வேண்டும் என வித்தியாசமான தண்டனை கொடுத்தது நீதிமன்றத்தில் பலரையும் வியப்படைய வைத்தது.
Leave a Reply