நாடு முழுவதும் 9 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி

03-sez200டெல்லி: தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், உயிரித் தொழில் நுட்பப் பூங்காக்கள் உள்ளிட்ட 9 புதிய சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

2006ம் ஆண்டு நாடு முழுவதும் 568 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது. இவற்றில் 315 மண்டலங்களுக்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. ஆனால் விளைநிலங்கள் குறித்த விதி மற்றும் உற்பத்தி சார்ந்த இடச் சிக்கல்கள் இருந்ததால் பல பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான விதிகளில் சில புதிய திருத்தங்களை சமீபத்தில் மத்திய அரசு மேற்கொண்டது. அதன்படி அருகருகே உள்ள சிறிய அளவிலான சிறப்புப் பொருளாதார மண்டலங்களை இணைத்து உருவாக்கப்படும் பேரளவு மண்டலங்களுக்கு உடனடி அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல, விளைச்சல் அல்லது உற்பத்தி சார்ந்த இடங்கள் எவை என்பதைத் தெளிவாக்கும் விதியையும் இணைத்துள்ளது அரசு.

இதனால் சில நிறுவனங்கள் கூட்டு ஒப்பந்த அடிப்படையில், 5000 ஹெக்டேருக்கும் குறைவாக உள்ள தங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஒன்றிணைத்துள்ளதாக அறிவித்து உடனடி அனுமதி பெற்றுள்ளன.

கல்ஃப் ஆயில் கார்ப்பரேஷன், எல் டி எம்மார், எம்ஜிஎஃப் மற்றும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா டெக் ஆகியன மும்பை, பெங்களூர் மற்றும் கேரளத்தில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைக்க அனுமதி பெற்றுள்ளன.

பெங்களூர் மற்றும் ஆந்திர மாநிலம் அனந்தபூர், மகாராஷ்டிரத்தில் ரத்னகிரியில் உயிரி தொழில்நுட்பப் பூங்காக்கள் அமைப்பதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கொடமண்டல் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இரண்டு பன்முக சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைகின்றன.

2008-09ம் நிதியாண்டில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதி வருவாய் ரூ. 90,416 கோடி. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 36 சதவீதம் கூடுதலாகும்!.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *