துபாய்:பக்ரைனில், வீட்டு பணிப்பெண் உட்பட இந்திய பணியாளர்கள் தாங்கள் வேலை பார்க்கும் இடத்தில் உள்ள கொடுமைகளில் இருந்து காக்கும் வகையிலான ஒப்பந்தம் இருநாடுகளிடையே கையெழுத்தானது.இந்த ஒப்பந்தத்தில் மத்திய வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி மற்றும் பக்ரைன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மஜீத் அல் அலாவி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை தொடர்ந்து, இந்தியாவுடன் பணியாளர் மற்றும் மனித ஆற்றல் ஒத்துழைப்பு உடன்படிக்கை செய்து கொண்டுள்ள ஐந்தாவது நாடு பக்ரைன்’ என வர்த்தக அரேபியா தெரிவித்துள்ளது.
இது குறித்து, வெளிநாட்டு வாழ் இந்தியர் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி கூறியதாவது:
கடந்தாண்டு 31 ஆயிரத்து 924 பணியாளர்கள் பக்ரைன் சென்றுள்ளதாக பாஸ்போர்ட் சோதனை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தற்போது போடப்பட்ட ஒப்பந்தத் தில் இதுவரை பக்ரைன் நாட்டின் தொழிலாளர் சட்டத்தின் கீழ் வராத, வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் உட்பட அனைத்து வகை பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தம் நான் காண்டுகளுக்கு அமலில் இருக்கும்.தற்போது, பக்ரைனில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இந்திய பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
இவர்களில், பெரும்பாலானவர்கள் கட்டுமானப் பணிகளிலும், வீட்டு வேலைகளிலும் உள்ளனர். இந்த ஒப்பந்தம் இத்தகைய தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதோடு, இருநாட்டு ஒத்துழைப்பையும் வலுப் படுத்தும்.மேலும், போலியான ஏஜன்ட்களால் வெளிநாட்டிற்கு பெண்கள் கடத்தப்படுவதை தடுக்க, “விசிட்’ விசாவில் செல்பவர்கள், குடியேற்றத் துறை பாதுகாப்பாளரிடம் தடைநீக்கம் பெற வேண்டியது அவசியம்.இவ்வாறு வயலார் ரவி தெரிவித்தார்.
Leave a Reply